Visitors have accessed this post 649 times.

இந்திய தரப்பின் முன்னணி பேட்ஸ்மேன் விராட்கோலி?

Visitors have accessed this post 649 times.

விராட் கோலி: 100வது டெஸ்டில் விளையாடும் ஜாம்பவானின் கிரிக்கெட் பயணம்

 

விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை மொஹாலியில் விளையாடி வருகிறார். இந்த மைல்கல்லை எட்டிய 12வது இந்திய கிரிக்கெட் வீரர் இவர்.

 

இதுவரையிலான கோலியின் பயணம்

 

2014 ஆம் ஆண்டு இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது முத்திரையை பதிக்கத் தொடங்கியிருந்தார். அவர் நான்காவது நிலையில் பேட்டிங் செய்தார். அவரது செயல்திறன் தொடர்ந்து பிரமாதமாக இருந்தது.

 

அவரது உடற்தகுதி ஒப்பிடமுடியாததாக இருந்தது. இந்திய தரப்பின் முன்னணி பேட்ஸ்மேன் என்பதால் கோலி மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் விஷயம் மோசமாக மாறியது.

 

இங்கிலாந்தில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய கோலி பரிதாபமாக தன் முயற்சியில் தோற்றார். வானிலை மேகமூட்டமாக இருந்தது, ஆடுகளம் ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அனுபவம்மிக்க பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக பௌலிங் செய்தார். ஆண்டர்சன் தனது அவுட்-ஸ்விங்கர்களால் கோலியை திக்குமுக்காடச்செய்தார். அந்த தொடரின் எல்லா போட்டிகளிலும் அவர் கோலியை விரைவாக ஆட்டமிழக்கச்செய்தார். மட்டை வீச்சு நுட்பத்தில் தேர்ச்சி பெற்றதற்காகப் பாராட்டப்பட்ட அதே கோலிதானா இது என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

 

2014 இங்கிலாந்து சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு கோலி, இந்திய கிரிக்கெட்டில் ‘அடுத்து முன்னணிக்கு வரக்கூடியவர்” என்று கருதப்பட்டார். ஆனால், அவர் ஆண்டர்சனை எதிர்கொண்ட ஒவ்வொரு முறையும் தடுமாறிக்கொண்டே இருந்ததால், ஆங்கில ஊடகங்கள் அவரை கடுமையாக விமர்சித்தன.

 

“ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நாட்டில் கொடிகட்டிப்பறப்பார்கள், ஆனால் வெளிநாட்டு மண்ணில் தரமான பந்துவீச்சாளர்களை அதேபோன்ற திறமையுடன் எளிதாக எதிர்கொண்டு சிறந்த ஸ்கோரை அடிப்பவரே உண்மையான சிறந்த பேட்ஸ்மேன்,” என்று விமர்சனங்கள் எழுந்தன. அந்த சுற்றுப்பயணத்தில் தான் விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கோலி எடுத்த ரன்கள், 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 மற்றும் 20.

 

புடம்போட்ட தங்கமே மின்னும் என்று ஒரு பழமொழி உண்டு. கோலி விஷயத்தில் அது உண்மையானது. ஊடக விமர்சனங்களால் அவர் மனம் தளரவில்லை. இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, அவர் தனது மட்டைவீச்சு நுட்பத்தில் மேலும் பயிற்சி செய்து அதை மெருகேற்ற. முயன்றார். சச்சின் டெண்டுல்கரிடம் ஆலோசனை கேட்டார். தனது பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் மணிக்கணக்கில் பயிற்சி செய்தார். கடும் விமர்சனங்களுக்கு இடையே கோலி, இவை அனைத்தையும் செய்தார்.

 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் கசப்பான நினைவுகளை புறந்தள்ளிய கோலி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு சென்றார். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை அவர் எடுத்த முயற்சிகள் பலனளித்தன. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் கோலி சதம் அடித்தார். இங்கிலாந்தில் ஆண்டர்சனுக்கு முன்பாக சரணடைந்த கோலி, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுக்கு உதவிடும் ஆடுகளம் மற்றும் அவர்களின் ஆக்ரோஷமான வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியுமா என்று சிலர் சந்தேகம் எழுப்பினர்.

 

ஆனால் இந்த விமர்சனங்களுக்கு கோலி தனது பேட்டால் பதிலளித்தார். மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்டிலும் சதம் அடித்தார். 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு இடையிலான காலகட்டம், தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான நேரம் என்று கோலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் திறன் தனக்கு உண்டா என்ற சந்தேகம் கூட அவர் மனதில் அந்தநேரத்தில் எழுந்தது.

 

கோலி தனது தவறுகளை சரி செய்துகொள்ள கடுமையாக முயன்றார். பார்வையாளர்கள், ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் அவ்வளவாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்குப் பதிலாக, அவர் தனது பேட்டிங் நுட்பத்தின் மீது கவனம் செலுத்தினார். அவரது உடல் தகுதி ஏற்கனவே மிகச்சிறப்பாக இருந்தது. மேலும் தான் மனதளவிலும் வலிமையானவர் என்பதை கோலி நிரூபித்தார்.

 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு, கோலி திரும்பிப் பார்க்கவே இல்லை. கோலி, ஒரு நாள் போட்டி மற்றும் டுவன்டி20 வடிவங்களில் கடுமையாக விளாசும் நவீனகால கிரிக்கெட் வீரர் என்றாலும், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையும் விரும்புகிறார். ஒரு கிரிக்கெட் வீரரின் திறமை, மனத்திறன் மற்றும் உடல் வலிமை ஆகியவற்றை டெஸ்ட் வடிவம் சோதிக்கிறது என்று அவர் கருதினார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததை பெருமையாக கருதுவதாகவும் அவர் பலமுறை கூறியுள்ளார். தற்போது அவர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

 

ஒருநாள் போட்டிகள், 20-20, ஐபிஎல் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாடும் கோலியின் பெரும்பகுதி நேரம், நீண்ட பயணங்கள், பயிற்சி மற்றும் கட்டாய தனிமைப்படுத்தல் ஆகியவற்றிலும் செலவிடப்படுகிறது. இந்திய அணி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 365 நாட்களில் 330 நாட்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் விளையாடுகிறது. முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் அணியின் கேப்டனாக கோலிக்கு கூடுதல் பொறுப்புகள் இருந்தன. ஆனால், அவரது அற்புதமான உடற்தகுதி மற்றும் உச்சகட்ட நிலைத்தன்மை ஆகியவை 100வது டெஸ்ட் போட்டி என்ற மைல்கல்லை எட்ட உதவின.

 

இந்த சாதனையை எட்டிய 12வது இந்திய கிரிக்கெட் வீரர் இவர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமண், வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர், கபில்தேவ், திலீப் வெங்சர்கார், அனில் கும்ப்ளே, இஷாந்த் சர்மா மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற முன்னணி வீரர்களின் பட்டியலில் அவர் இணைகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி அறிமுகமானபோது ராகுல் டிராவிட் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் கோலி தனது வாழ்க்கையில் 100வது டெஸ்டில் விளையாடி வரும் நிலையில், டிராவிட் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியை வழிநடத்துகிறார்.

 

கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியை கிங்ஸ்டனில் 2011, ஜூன் 20 முதல் ஜூன் 24 வரை விளையாடினார். கோலியுடன் பேட்ஸ்மேன் அபினவ் முகுந்த் மற்றும் பந்து வீச்சாளர் பிரவீன் குமாரும் அதே போட்டியில் அறிமுகமானார்கள். ஆனால் அபினவ் இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளிலும், பிரவீன் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளிலும் மட்டுமே விளையாடினார்கள். மறுபுறம், கோலி தனது பேட்டிங்காலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் வரலாறு படைத்தார்.

 

கோலியின் திறமையான தலைமையின் கீழ் இந்திய U-19 அணி 2008 இல் , U-19 உலகக் கோப்பையை வென்றது. ஜூனியர் கிரிக்கெட்டில் பெற்ற வெற்றியை முக்கிய கிரிக்கெட்டுக்கு விரிவுபடுத்திய அரிய வீரர்களில் கோலியும் ஒருவர்.

 

ரன் குவிப்பு

கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால்,அவர் உள்நாட்டு மைதானங்களைப்போலவே வெளிநாட்டு மைதானங்களிலும் பிரமாதமாக பேட்டிங் செய்வார். தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் பிற நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் வெவ்வெறு தன்மை கொண்டவை. வெளிநாட்டு மைதானங்களில் விளையாடும் போது பேட்ஸ்மேன்கள், தங்கள் சொந்த மைதானங்களுக்கு பழக்கப்பட்ட ஆற்றல்மிக்க பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும் கோலி, தங்கள் சொந்த நாட்டில் விளையாடும் அபாரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தார். பல சிறந்த பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டு மைதானங்களில் விளையாடும்போது அவர்களின் சராசரி ஸ்கோர் குறைகிறது. ஆனால் கோலி தனது அபூர்வ திறமையை வெளிப்படுத்தினார். இந்திய மைதானங்களில் கோலியின் சராசரி ரன் விகிதம் 62 . பல்வேறு வெளிநாட்டு மைதானங்களில் சராசரியாக அவர் 44 ரன்களை அடித்துள்ளார்.

 

கோலி களத்தில் இறங்கியதுமே அவர் அதிக ரன் குவிப்பார் என்று அணி உறுதியாக உணர்கிறது. கோலி எளிதில் சரணடைய மாட்டார் என்பது எதிரணிக்குத்தெரியும். வேகப்பந்து வீச்சையும், சுழற்பந்து வீச்சையும் கோலி ஒரே போல எளிதாக எதிர்கொள்கிறார். அவர் ஆடுகளத்தை நன்கு உணர்ந்து, அடிக்கடி பவுண்டரிகளுடன் ஒன்று மற்றும் இரண்டு ரன்களை தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பார். இது இயந்திரத்தனமாக தோன்றினாலும், அவரின் விளையாட்டு கிரிக்கெட் கலையை வெளிப்படுத்துகிறது. பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதில் கோலி திறமையானவர். விக்கெட்டுகளுக்கு இடையே அவரின் ஓட்டம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

 

சிறப்பான வேகப்பந்து வீச்சு, துடிப்பான ஆடுகளங்கள், குளிர் காற்று அல்லது கொளுத்தும் வெயில் என்று எதுவாக இருந்தாலும், கோலி அர்ப்பணிப்புடன் ரன்களை குவித்தார். கோலியை ஆட்டமிழக்கச்செய்வதே எதிரணியின் முதன்மையான நோக்கமாக இருக்கும். கோலி 30 ரன்களை கடந்துவிட்டால் அவர் சதம் அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதுவே அவரது நிலைத்தன்மையின் சான்று!

 

தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 100வது டெஸ்டில் விளையாடும் கோலி இதுவரை அணியில் இருந்து நீக்கப்படவில்லை. இது அவரது சந்தேகத்திற்கு இடமில்லாத நிலைத்தன்மைக்கு மற்றொரு சான்று.

 

கேப்டன் கோலி

கோலி தனது பேட்டிங்கில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறாரோ அதே அளவுக்கு கேப்டன் பதவியிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சாத்தியமான தோல்விக்கு எதிராக தற்காத்துக் கொள்வதை விட வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வை கோலி வளர்த்தார். ஐந்து நாள் கிரிக்கெட்டை திறமையாக விளையாடக்கூடிய வீரர்களை உருவாக்கினார். உடற்தகுதியை உயர்த்துவதில் அவர் அணியை வழிநடத்தினார். ஒரு அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமானால், 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

 

கோலி கேப்டனாக ஆனபோது, அணியில் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் விளையாட விரும்பினார். அவரது மாதிரி அணியில், ஐந்து பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஐந்து பந்து வீச்சாளர்கள் இருந்தனர். பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மாற்றங்களைச் செய்வதிலும், குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களுக்குப் பொறி வைப்பதிலும், ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களை சீரான பந்துவீச்சினால் எரிச்சலூட்டுவதிலும் அவருக்கு உள்ளுணர்வுத்திறன் இருந்தது. அவரது அற்புதமான உடற்தகுதி அவரை ஒரு சிறந்த பீல்டராக ஆக்குகிறது.

 

வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது எந்த அணிக்கும் சவாலானது. ஆனால் கோலி இந்த சவாலை ஏற்றுக்கொண்டார். இவரது தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. கோலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணி, ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை எட்டியது.

 

‘ஃபேப் ஃபோர்’ என்ற கௌரவம்

இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் தனித்துவமான பாணிகளைக்கொண்ட சமகாலத்தவர்கள். ஆனால் ஒரு ஒற்றுமை அவர்களை ஒன்றாக இணைக்கிறது. அவர்கள் நான்கு பேருமே பிளந்துகட்டும் மட்டைவீச்சாளர்கள். நால்வருமே, குறுகிய காலத்தில் அந்தந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களாக ஆனார்கள். பின்னர் அணியின் கேப்டனாக ஆனார்கள்.

 

அவர்கள் தத்தமது அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். பல புதிய சாதனைகளை படைத்துள்ளனர். எனவே அவர்கள் உலக கிரிக்கெட்டில் ‘ஃபேப் ஃபோர்’ (அபரிமிதமான திறமையுள்ள நால்வர்) என்று அழைக்கப்படுகின்றனர். ஜோ ரூட் 100வது டெஸ்ட் போட்டியின் சாதனையை கடந்து இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் பெயர் எடுத்துள்ளார். ஆனால் ரூட் ஒரு நாள் மற்றும் 20-20 வடிவங்களில் அடிக்கடி விளையாடுவதில்லை. மேலும் அவர் ஐபிஎல்லில் விளையாடுவதில்லை. எனவே, அவரது விளையாட்டு வாழ்க்கை பெரும்பாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித், பந்தை தேய்த்து சேதப்படுத்த முயன்றதான புகாரின் பேரில் அவர் மீது தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கறை ஏற்பட்டது.

 

கேன் தனது சிறந்த பேட்டிங் மற்றும் மைதானத்தில் சிறந்த நடத்தைக்காக மதிக்கப்படுகிறார். ஆனால், நியூசிலாந்து அணி ஒப்பீட்டளவில் குறைவான கிரிக்கெட் விளையாடுகிறது. எனவே கேன் இன்னும் 100வது டெஸ்ட் போட்டி என்ற மைல்கல்லை எட்டவில்லை. இந்த நான்கு கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஃபேப் ஃபோரில், ரூட் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்த நால்வரில் அதிக ரன்கள் எடுத்தவரும் அவரே. சராசரியை பொருத்த வரையில் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கையில் கோலி மற்றும் ஸ்மித் முன்னணியில் உள்ளனர். இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களை அடித்துள்ளனர்.

 

தந்தையின் மறைவுக்குப் பிறகு மைதானம் திரும்பிய கோலி

2006-ம் ஆண்டு ஜூனியர் லெவல் கிரிக்கெட்டில் விளையாடிய போது கோலி தனது அரிய குணங்களை வெளிப்படுத்தினார். 2006ல் கர்நாடகாவுக்கு எதிராக டெல்லி விளையாடும் போது கோலிக்கு 17 வயது. போட்டி டெல்லியில் நடந்து கொண்டிருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தபோது, விராட் கோலி மற்றும் புனித், அவுட்டாகாமல் இருந்தனர். அன்றிரவு விராட்டின் தந்தை பிரேம் கோலிக்கு மூளை ஸ்ட்ரோக் ஏற்பட்டு அவர் காலமானார்.

 

கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது தந்தை பெரும் பங்கு வகித்துள்ளார். தந்தையின் திடீர் மரணத்தின் அதிர்ச்சியை உள்வாங்குவது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர் ஆட்டமிழக்காமல் கிரீஸில் இருந்தார். உறவினர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வந்தனர். ஆனால் அடுத்த நாள் ஆட்டத்தை தொடர விராட் முடிவு செய்தார். அப்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக சேத்தன் ஷர்மாவும், கேப்டனாக மிதுன் மன்ஹாசும் இருந்தனர். கோலியை குடும்பத்துடன் வீட்டில் இருக்குமாறு இருவரும் அறிவுரை கூறினர்.

 

ஆனால் போட்டியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கோலி பிடிவாதமாக இருந்தார். அந்த இன்னிங்ஸில் விராட் 90 ரன்கள் எடுத்தார். அப்போதைய கர்நாடக அணியின் கேப்டன் யெரே கெளட் மற்றும் அவரது அணியினரும், விராட்டின் ஈடு இணையற்ற தைரியத்தையும் அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டினார்கள். மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் விராட் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்யச் சென்றார். தந்தையின் திடீர் மரணத்திற்குப் பிறகு, விராட்டும் அவரது சகோதரரும் தங்கள் குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது.

 

கேப்டன் எனும் முள் கிரீடத்துடன் ரன்களை குவித்தார்

பல சிறந்த பேட்ஸ்மேன்கள் கேப்டன் ஆன பிறகு பின்னடைவை சந்திக்கின்றனர். ஆனால், கோலி விஷயத்தில் அது தலைகீழாக இருந்தது. தான் இதுவரை விளையாடிய 100 டெஸ்ட் போட்டிகளில், 68 போட்டிகளில் அணியை வழிநடத்திய கோலி, முன்னணி பேட்ஸ்மேனாகவும் உள்ளார். எனவே, அவர் இந்த இரண்டு பொறுப்புகளையும் சிறப்பாக வகித்தார்.

 

அணியின் கேப்டனாக இருந்தபோதும் ஒரு பேட்ஸ்மேனாக அவரது செயல்பாடு அற்புதமானது. 68 போட்டிகளில் 54.80 ரன்கள் சராசரியுடன் 5864 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு கேப்டன் தனது அணிக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். கோலி தனது முன்மாதிரியான ஆட்டத்தால் சக வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

 

சச்சினுடன் ஒப்பீடு

சச்சின் டெண்டுல்கரின் நிலைத்தன்மை மற்றும் ரன்களுக்கான தாகத்திற்காக விராட் தொடர்ந்து அவருடன் ஒப்பிடப்படுகிறார். சச்சின் டெண்டுல்கரைப் போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடப்படுவது, நிச்சயமாக பெருமையான விஷயம்தான். ஆனால் அது அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.

 

ஆனால் கோலி அத்தகைய அழுத்தங்களை மீறி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். சச்சினின் சில சாதனைகளை கோலி எப்படி முறியடிக்க முடியும் என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கோலி சச்சினிடம் ஆலோசனை பெற்று 2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு சச்சின் மீதான தனது அபிமானத்தை உலகிற்கு அவர் வெளிப்படுத்தினார்.

 

சதத்திற்கான காத்திருப்பு

2019ல் கொல்கத்தாவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சதம் அடிக்கவில்லை. அவர் ரன்களை குவித்து வருகிறார், ஆனால் சதம் அடிக்கவில்லை. 20-20க்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார். ஒரு நாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் கோலி விலகினார். அதனால், கேப்டன் என்ற அழுத்தம் இப்போது அவருக்கு இல்லை. 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தவர்கள் வெகு சிலரே. தனது குடும்பத்தினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் சதம் அடிக்க கோலிக்கு இப்போது சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது

Leave a Comment

Write and Earn with Pazhagalaam