Visitors have accessed this post 660 times.

சுவர்கம் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா?

Visitors have accessed this post 660 times.

     சுவர்கமும் நரகமும் வெளியில் எங்கோ இல்லை. அவை நமக்குள்தான் இருக்கின்றன. நமது நினைவுப் பதிவுகளில் இரண்டு கூடைகள் இருக்கின்றன, அவை நன்மைக் கூடை, அடுத்தது தீமைக் கூடை. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் எண்ணக் கதிரலைகள் மூலமாக காட்சிகளாக நமக்குள் பதிவு செய்யப் படுகின்றன. ஒவ்வொரு காட்சிகளும் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் இருந்து ஒரு நாட்டாண்மை தீர்ப்பு வழங்கி ஒவ்வொரு காட்சிகளையும் நன்மை அல்லது தீமை என்கிற கூடைக்குள் பதிவிடுகிறார். இவர் ஏற்கனவே நமது சிறுவயது பதிவில் இருந்து உருவானவர். இவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். இவரை நாம் கட்டுப்படுத்த முடியாது.இவரால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை தான் நாம். இவரை மனம் என்று அழைக்கிறோம். 

     இவர்  நாம் ஒரு காட்சியைக் காணும் போது அதை நன்மைக் கூடைக்குள் பதிவு செய்தால் நாம் சந்தோஷமாக இருப்போம், தீமைக் கூடைக்குள் பதிவு செய்தால் துக்கமாகிவிடுவோம். நம்மைப் பற்றி பீற்றிக் கொள்வதற்கு இங்கே வேறொன்றும் இல்லை. அவ்வளவுதான் நாம். உதாரணமாக நாம் சுந்தர் என்பவரை மனக் காட்சியில் காணுகிறோம், அவர் நமது பால்ய சினேகிதர் என்று மனம் நன்மைக் கூடையில் பதிவு செய்கிறது, நாம் சந்தோஷப் படுகிறோம், அவன் என்னிடம் வாங்கிய 20,000 ரூபாய் தராமல் ஏமாற்றிவிட்டான், இப்பொழுது மனம் தீமைக் கூடைக்குள் பதிவிடுகிறது, இப்பொழுது துக்கம் தொண்டையை அடைக்கிறது, இருந்தாலும் அவன் மனைவி என் முன்னால் காதலி… மனம் சந்தோஷத்தில் நிறைகிறது, பணம் போனால் பரவாயில்லை, அவள் இன்றும் அவள் என்னோடு கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாள். இப்பொழுது சந்தோஷம் உச்சமடைகிறது. இருந்தாலும் நாம் நண்பனுக்கு செய்வது துரோகமல்லவா? தெரிந்துவிட்டால் அவன் முகத்தில் எப்படி விழிப்பேன்…மனம் இப்பொழுது குற்ற உணர்ச்சியில் தள்ளி துக்கத்தை ஏற்படுத்துகிறது…இருந்தாலும் அவன் மனைவி ஒரு லட்சம் கேட்டு மிரட்டுகிறாள், இல்லாவிட்டால் சுந்தரிடம் தன்னை பலவந்தப்படுத்திவிட்டதாக சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறாள்…இப்பொழுது கோபம் கொப்பளிக்கிறது…இவ்வாறு எண்ணங்கள் மூலம் உருவங்களை ஏற்படுத்தி, நம்மை நன்மை தீமை கூடைக்குள் போட்டு 24 மணி நேரமும் நம்மை பந்தாடிக் கொண்டிருப்பதுதான் மனதின் வேலை. இந்த மனதின் பிடியில் இருந்து விடுபடுவது இயலாத காரியம். 

     நாம் எப்பொழுது நன்மை தீமை கூடைகளை அழிக்கிறோமோ அல்லது காலி செய்கிறோமோ அப்போதுதான் மனம் செயல்பட முடியாமல் போகிறது. ஏனினில் இந்த நன்மை தீமை கூடைகளில் இருந்துதான் மனதிற்கு சக்தி கிடைக்கிறது. இந்த சக்தியின் மூலமாகத்தான் மனம் நம்மை அடிமைப் படுத்துகிறது. மனம் தரும் சந்தோஷம் மேலோட்டமாக எண்ண அலைகளில் உருவாகும் உருவங்கள் மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அந்த சந்தோஷங்கள் மிகவும் அற்பமானது ஆகும், மனம் தரும் சந்தோஷம் ஒரு பாம்பின் வால் போன்றது, நாம் அந்த வாலைப் பிடித்து ஏறினால் நாம் பாம்பின் தலையை அடைந்து கடிபட நேரிடும். உதாரணத்திற்கு மனம் ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் காபி குடிப்பதாக கற்பனையில் சந்தோஷம் கொடுக்கும், ஆனால் அந்த காபியின் சுவையை உணர்வு நிலையில் அனுபவிக்க முடியுமே தவிர, மனதால் அது எப்படி இருந்தது என்பதை எடுத்துரைக்க முடியாது, ஏனெனில் உணர்வு நிலையில் மனதால் செயல்பட முடிவது இல்லை, உணர்வுக்கு பாஷை இல்லை, மனதிற்கு பாஷை உண்டு,அதனால் காபி எப்படி இருந்தது என்று கேட்டால் சுவையாக இருந்தது என்போம், ஆனால் அந்த சுவை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை விளக்க முடியாது. பூக்களின் சுவாசத்தை மனதால் விளக்க முடியாது, காதலி ஏமாற்றிவிட்டால் என்றால் வலிக்கிறது என்போம், அந்த வலி எப்படி உயிரைக் கொல்கிறது என்பதை மனதால் புரிய வைக்க முடியாது.

     சதாகாலமும் மனதை வென்று உணர்வு நிலையில் வாழ்பவர்கள் சுவர்கத்தில் இருக்கிறார்கள். இவர்களிடம் நன்மை தீமைக் கூடை இருக்காது. ஒரே உணர்வு நிலையில் இருப்பவர்கள்.  இவர்களிடம் மனம் அடங்கி இருக்கும். சதாகாலமும் நன்மையும் தீமையும் அவன் அருளே, என்று எது நடந்தாலும் இறைவன் அருளே என்று வாழும் அனைத்து மதத்தினரும் சுவர்கத்தில் இருப்பவர்கள் தான், என் வியாபாரம் லாபம் கொடுத்தாலும், நஷ்டமே வந்தாலும் அந்தத் தொழிலை சதாகாலமும் நேசிக்கிறவன் சுவர்கத்தில் வாழ்கிறான், என் மனைவி எனக்கு சந்தோஷம் கொடுத்தாலும், சாவைக் கொடுத்தாலும் அவளே என் தெய்வம் என்று வாழ்கிறவன் சுவர்கத்தில் இருக்கிறான், நன்மை தீமையை தூக்கி எறிந்த கலைஞன், அரசியல்வாதி, சமூக சேவகன், விஞ்ஞானி, ஞாபக சக்தி இழந்த கிழவன்….. ஏன் நன்மை தீமையை தூக்கி எறிந்த குடிகாரனும் சுவர்கத்தில் தான் இருக்கிறனர். ஆனால் இவர்கள் அனைவரின் பின்னாலும் ஒரு காரணம் தேவைப் படுகிறது…அதாவது கடவுள் உருவமோ,  காமமோ, சரக்கோ, கலையோ, வியாபாரமோ, மனைவியோ, போதை வஸ்துக்களோ..இவர்கள் எதை சுவர்கமாக நினைக்கிறார்களோ. அவற்றிற்கோ, தன் உடலுக்கோ ஏதேனும் அழிவு ஏற்பட்டால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கும், சதா பைத்தியம் பிடிக்கும் நிலையை அடைவதற்கும் வாய்ப்புண்டு.

     ஆனால் தனது சந்தோஷத்திற்கு எவ்விதமான காரணமும் இல்லாத மனதற்ற நிலையில் வாழும் மனிதர்கள் மட்டுமே சதா சர்வகாலமும் 24 மணி நேரமும் சுவர்கத்தில் இருக்கிறார்க்ள், இவர்களது சுவர்கத்தை யாராலும் பறிக்க இயலாது…இவர்கள் மரணம் ஏற்பட்டாலும் அதே நிலையில் இருப்பவர்கள், மனிதர்களில் மனவளர்ச்சியற்றவர்களும், தண்ணுணர்வு அடையாத குழந்தைகளும் சதாகாலமும் ஆனந்தத்தில் இறை சக்தியோடு இணைந்திருக்கின்றன. காரணமற்ற அன்பும் ஆனந்தமும் இவர்களிடம் இருக்கும். இவர்களிடம் மனம் சம்பந்தப்பட்ட பதிவுகள் வேலை செய்வது இல்லை…ஆனால் மனிதனைத் தவிர விலங்குகள், பறவைகள்..முதல் அனைத்து உயிரினங்களும் இதே மனமற்ற பரவச நிலையில் இறைசக்தியோடு ஒன்றினைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நல்லது. நாம் மீண்டும் வேறொரு தலைப்பில் சந்திக்கலாமா…வாழ்க வளமுடன்

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam