Visitors have accessed this post 479 times.

தமிழர்களில் இவர் மட்டும் தான் பெரியார்

Visitors have accessed this post 479 times.

ஈரோட்டில் தனவணிகர் குடும்பத்தில் பிறந்தவர் தான் பெரியார். அவரது தந்தை கூலி வேலை செய்து படிப்படியாக முன்னேறியவர். தீவிர வைஷ்ணவர். மதப்பற்று மிகுந்தவர், அவரது இல்லத்திலேயே பிராணப் பிரசங்கம் நடைபெறும். அன்றாடம் இதனைக் கேட்டுக் கொண்டு வந்த பெரியாரால் கடவுள் நம்மை படைத்தார் எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரகலாதனைப்போல் புரோகிதர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தார். அவர்கள் எல்லாவற்றுக்கும் சாஸ்திரத்தையே மேற்கோள் காட்டினார்கள். உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம் பெரியாருக்கு இருந்தது. எவ்வித குருட்டு நம்பிக்கைக்கும் மனதில் அவர் இடம் கொடுக்கவில்லை. அவர் சுயம்பு என்பதால் எல்லா பையன்களைப் போல் பள்ளிக்குச் சென்று பாடம் படிக்க முடியவில்லை. அவரது புத்திக்கூர்மைக்கு பள்ளிப்படிப்பு இடம் தரவில்லை. தனது பத்து வயதில்  படிப்பை நிறுத்தினார். எல்லோருடைய தந்தையைப் போலவும் பெரியாரின் தந்தை ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்றெண்ணி பெரியாரை வியாபாரத்தில் ஈடுபடுத்தினார். அப்போது பெரியாருக்கு வயது பன்னிரெண்டு.

 

வியாபாரத்தில்  நெளிவு சுளிவுகளை அறிந்து கொண்டார். பெரியாரின் தாய், தந்தை தனது கடமைகளைச் செய்ய முடிவெடுத்தனர். பத்தொன்பது வயதில் பெரியாருக்கு நாகம்மையை மணம் முடித்தனர். இருபத்து ஐந்து வயதில் பெரியாருக்கு வாழ்க்கை கசந்தது. காவி உடையணிந்து காசிக்குப் போனார். அங்கு தன்னை குருமார்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சுயஒழுக்கம் இல்லாதவர்களாக, பேய்களிலும் கீழ்த்தரமானவர்களாக இருப்பதைக் கண்டார். திரும்பவும் ஈரோட்டுக்கு திரும்பினார். பெற்றோர்கள் அவரை உச்சிமுகர்ந்து வரவேற்றார்கள். பதினைந்து ஆண்டுகாலம் வியாபாரத்துக்கு தன்னை அர்ப்பணித்தார். அந்த மளிகை கடையிலிருந்து ஆண்டுக்கு இருபதாயிரம் வருமானம் கிடைத்தது. அந்த பணத்துக்கு இன்றைய மதிப்பு இருபதுகோடி. பதவிக்கு அவர் அலையவில்லை. பதவி அவரைத் தேடி  வந்தது. 1918ல் ஈரோடு முனிசிபல் சேர்மனாக பதவி வகித்தார். அப்போது ராஜாஜி சேலம் முனிசிபல் சேர்மனாக இருந்தார்.

 

பெரியாரின் நிர்வாகத் திறமை ராஜாஜியை வியக்க வைத்தது. வரதராஜலுநாயுடு என்பவர் அப்போதைய காங்கிரஸின் முக்கியப் பிரமுகர். அவருக்கான வழக்கு ஒன்றில் ராஜாஜி ஆஜராகியிருந்தார். இருவரும் வழக்கு விசாரணைக்காக மதுரை செல்லும்போது ஈரோட்டில் பெரியாரை சந்தித்து பேசுவார்கள். ஒருசமயம் இருவரும் பெரியாருடன் பேசிக் கொண்டிருக்கும் போது சமூகப் பணியாற்றும் நீங்கள் காங்கிரஸில் இணைந்து நாட்டின் விடுதலைக்கு பணியாற்றக் கூடாதா என வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து அவர்களின் வற்புறுத்தலால் பெரியார் 1919ல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். தனக்கு வருமானம் அளித்து வந்த மளிகைக் கடையைும் மூடினார். 1919 – ஜாலியன் வாலாபாக் சம்பவம் நிகழ்ந்திருந்த காலகட்டம் அது. அதுவரையில் காங்கிரஸில் காந்தியின் ஆதிக்கம் இல்லை. அப்போதுவரை காங்கிரஸ் என்றால் பாலகங்காதரதிலகரும், அன்னிபெசன்ட் அம்மையாரும் தான். 1919ல் காங்கிரஸ் காந்தியின் தலைமையை ஏற்றது. பொது வாழ்வின் நேர்மை கருதி தான் வகித்து வந்த 29 பதவிகளை பெரியார் தூக்கி எறிந்தார். 1919 – 25 வரை தமிழக காங்கிரஸ் என்றால் பெரியார், பெரியார் என்றால் தமிழக காங்கிரஸ் என்று எண்ணும்படியாகத்தான் இருந்தது.

 

1920ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். அந்தப் போராட்டத்தில் தான் முதல்முறையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து அரசுக்கு எதிராக அணிதிரண்டனர். தான் ஒரு காங்கிரஸ்காரன் காந்தி வார்த்தையை மதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கை ஏற்று நடத்தாமல் தான் ஒருவருக்கு கடனாக கொடுத்திருந்த 50,000 ரூபாயை இழந்தார் தந்தை பெரியார். அதன் இன்றைய மதிப்பு 50 கோடி. காந்தி எதையும் பெற்றுக் கொள்பவரில்லை அதே சமயம் தனது செல்வத்தை பொது வாழ்க்கைக்கு பயன்படுத்துபவரில்லை. ஆனால் பெரியார் தான் சேர்த்து வைத்திருந்த சொத்தனைத்தையும் பொது வாழ்விற்காக இழந்தார். அவற்றை சுயமரியாதை இயக்கத்துக்கு அர்ப்பணித்தார். கள்ளுக்கடை மறியலே பெரியாரை காந்தி சந்தித்தபோது தான் உதயமானது. தான் காங்கிரஸ்காரன் என நிரூபிக்க பெரியார் தனது தோட்டத்திலுள்ள கள் இறக்கும் மரங்களான 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். கள்ளுக்கடை மறியலைப் பற்றி ஊடகங்கள் காந்தியிடம் கேட்ட போது அதை நிறுத்துவது தன் கையில் இல்லை ஈராட்டிலுள்ள இரண்டு பெண்கள் கையில் தான் இருக்கிறது என நாகம்மையையும், கண்ணம்மையைும் குறிப்பிட்டுச் சொன்னார்.

 

கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோவிலுக்கு எதிரே உள்ள தெருவில் உயர்ஜாதிக்காரர்கள் ஈழவர்களையும், புலையர்களையும் அனுமதிக்க மறுத்தார்கள். போராட்டம் வெடித்தது. கே.பி. கேசவன்மேனன் என்ற வழக்கறிஞர் போராட்டத்தை தொடங்கி வைத்தார். திருவாங்கூர் அரசு அவரை கைது செய்து சிறையில் தள்ளியது. போராட்டத்தை முன்னெடுக்க ஆள் இல்லாமல் போனது. போராட்டம் பிசுபிசுத்தது, உடனே மலையாளியான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜார்ஜ்ஜோசப் உள்ளிட்ட 17பேர் வைக்கம் புறப்பட்டனர். போராட்டத்தை முன்நின்று நடத்தியதற்காக அவர்களும் கைது செய்யப்பட உடனே ஜார்ஜ்ஜோசப் பெரியாருக்கு கடிதம் எழுதினார். கடிதம் கிடைத்தபோது பெரியார் மதுரையிலுள்ள பண்ணைப்புரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் வைக்கம் புறப்பட்டுச் சென்றார். பெரியாரின் குடும்பத்துக்கும் திருவாங்கூர் அரச குடும்பத்துக்கும் நெருக்கம் இருந்தது. அதன் பொருட்டு பெரியாரை வரவேற்று அரசு கொடுத்த அரசு மரியாதையை பெரியார் ஏற்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரை கைது செய்த அரசு அவரை ஒருமாதம் சாதாரண காவலில் வைத்தது. சிறையிலிருந்து வெளியே வந்த பெரியார் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்க அவரை அரசு கைது செய்து ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தது. செய்தி கேள்விப்பட்டு வந்த நாகம்மையும், கண்ணம்மையும் வைக்கம் போராட்டத்தில் இறங்கினர்.

 

திருவாங்கூர் மன்னர் திடீரென இறந்து போக பட்டத்துஅரசி அரியணையில் ஏறினாள். போராட்டத்தை கைவிடச் செய்ய ராஜாஜியின் உதவியை நாடினாள். ராஜாஜி காந்தியுடன் கேரளா வந்து இறங்கினார். அரசாங்கம் தன் நிலையிலிருந்து சற்றே இறங்கி வந்தது, வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்ல அனுமதி அளித்தது. அத்துடன் பெரியார் வைக்கத்தில் நுழையக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை விடுவித்தது. வைக்கம் போரில் பெரியாருக்கு வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கொள்கையைும், கதராடையையும் தமிழகத்தின் கடைக்கோடி வரை கொண்டு சேர்த்தவர் பெரியார். சேரன்மாதேவியில் வ.வே.சு ஐயர் நடத்தி வந்த குருகுலத்திற்கு நன்கொடையாக காங்கிரஸ் கமிட்டி 10,000 கொடுக்க முன்வந்த போது அங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவளிப்பதில் வருணாசிரம தர்மம் பின்பற்றப்படுகிறது என நன்கொடை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தவர் பெரியார். ஆனாலும் அவருக்குத் தெரியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் குருகுலத்திற்கு பணம் கொடுத்தனர்.

 

1919ல் திருச்சி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வரதராஜலுநாயுடுவின் பிராமண துவேஷத்தை சுட்டிக் காட்டி கண்டனத் தீர்மானத்தை அவருக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டுவந்தனர். பெரியார் அத்தீர்மானம் நிறைவேறாமல் முறியடித்துக் காட்டினார். அதைத் தொடர்ந்து ராஜாஜி, டி.எஸ்.எஸ் ராஜன், கே.சந்தானம், சாமிநாதசாஸ்திரி, வரதாச்சாரியார் இவர்கள் ஐந்துபேரும் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்தார்கள். காங்கிரஸ் பிராமண ஆதரவு அணி – பிராமண எதிர்ப்பு அணி என இரண்டாக உடைந்தது. அப்போது நீதிக்கட்சி ஆட்சியில் இருக்கும்போது பனகல்அரசர் அறநிலைய பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தார். இச்சட்டம் கோயில்கள் மீதும் மத நம்பிக்கைமீதும் நடத்தப்படும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் எனக் கூறி காங்கிரஸ் அதை எதிர்த்தது. அச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸில் இருந்து எழுந்த ஒரே குரல் பெரியாருடையது. பெரியார் இச்சட்டம் கடவுளுக்கோ மத நம்பிக்கைக்கோ எதிரானதல்ல கோயில் சொத்தை சொந்தம் கொண்டாடிக் கொண்டு வயிறு வளர்க்கும் நாசகாரக் கும்பலுக்கு எதிரானது என்று விளக்கம் தந்தார்.

 

ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் ஏற்றம்பெற சாதி எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப்பணி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பெரியார் தன் கருத்தை முன்வைத்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத்தர 5 ஆண்டுகாலம் போராடிப் பார்த்தவர் பெரியார். 1920 – திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் பெரியாரின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 1921 – தஞ்சை மாநாட்டில் தீர்மானம் கொண்டுவர முயன்ற போது ராஜாஜி குறுக்கிட்டு இதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளலாம் தீர்மானம் வேண்டாம் என்று நிராகரித்தார். 1922 – திருப்பூர் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தால் கைகலப்பு ஏற்பட்டு தீர்மானம் இறுதியில் கைவிடப்பட்டது. காங்கிரஸ் சமதர்மம் பற்றி பேசினாலும் வருணாசிரம தர்மத்தை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. 1924 – பெரியார் தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. 1925ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது.

 

தீர்மானத்தை கிடப்பில் போட ஏதுவாக தீர்மானம் கொண்டுவர 25 பிரதிநிதிகள் கையெழுத்து வேண்டும் என்றார்கள். பெரியார் பம்பரமாக சுழன்று 30 பிரதிநிதிகளின் கையெழுத்து வாங்கிக் கொடுத்தார். இறுதியில் ராஜாஜியின் ராஜதந்திரம் வெற்றி பெற்றது. ஏதேதோ நொண்டிச் சாக்கு சொல்லி தீர்மானத்தை சாகடித்தார்கள். பெரியார் வெகுண்டுஎழுந்தார் எப்போதும் உரிமைப்போர் என்பது தீர்மானத்தை சாகடிப்பதுடன் முடியாது. தான் முன்னேறாவிட்டாலும் மற்றவனும் முன்னேறிவிடக்கூடாது என்ற எண்ணம் மிகவும் பிற்போக்குத் தனமானது. எல்லோருமே ஈரைந்து மாதங்கள் தான் தாயின் கருவில் இருக்கிறோம். பிறந்த குலத்தால் எப்படி ஒருவன் உயர்ந்தவன் ஆகிறான். பொதுவாழ்வில் நேர்மை தானே உயர்வை நிர்ணயிக்கும். உலக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒடுக்கப்பட்ட இனங்கள் விஸ்வரூபம் எடுத்திருப்பதை அறியலாம். தமிழ்க்கடவுளுக்கு ஏன் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்கிறீர்கள் எனக் கேட்கக்கூடாது. வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதால் மட்டும் அது தேவபாஷை ஆகிவிடுமா? அப்படிப்பார்த்தால் திருக்குறள் இரண்டடியில் வாழ்க்கை நெறியையே பிட்டுப் பிட்டு வைக்கிறதே. இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை, நீங்கள் உயிரற்ற ஓலைச்சுவடிகளிலேயே இறைவனைத் தேடிக் கொண்டிருங்கள். நான் காங்கிரஸிலிருந்து விலகுகிறேன் என்று தனது முடிவை அறிவித்தார்.

 

1937ல் ராஜாஜி அரசு இந்தியை திணித்தபோது, பெரியார் மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்நின்று நடத்தினார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோஷம் அங்குதான் முன்வைக்கப்பட்டது. பெரியார் அன்று காங்கிரஸிலிருந்து விலகி இருக்கவில்லையென்றால் தமிழர்கள் இன்று தன்மானத்தோடு வாழ்ந்திருக்கவே முடியாது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam