Visitors have accessed this post 724 times.

தைப் பொங்கலின் தனிச் சிறப்பு

Visitors have accessed this post 724 times.

” தை பிறந்தால் வழி பிறக்கும் ” என்பது ஆன்றோர் வாக்கு  அந்த நம்பிக்கையில் மக்கள் தை மாதம் முதல் புதுத் தெம்புடனும் , புதிய உற்சாகத்துடனும் இருப்பதைப் பார்க்கிறோம் .

 

தமிழகத்தில் பொங்கல் திருநாள் மிகவும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது . தைமாதம் முதல் தேதியன்று பொங்கல் பண்டிகை வருகிறது . அதற்கு முன்பே மக்கள் , குறிப்பாக கிராமத்தில் தங்கள் இல்லங்களை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தித் திண்ணைச் சுவருக்குக் காவி வர்ணம் தீட்டி அழகு படுத்துவார்கள் . வீட்டின் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தி வண்ணமிகு கோலங்களால் அலங்கரிப்பர் . தமிழகத்தில் தைப் பொங்கல் நாங்கு நாட்கள் சேர்ந்தாற்போல் கொண்டாடப் படுகிறது .

 

முதல்நாள் போகிப் பண்டிகை . இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகை . மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். நான்காம் நாள் கன்னிப் பொங்கல்.

 

துன்பங்களைப் போக்கும் போகிப் பண்டிகைpa

போகிப் பண்டிகை பொங்கலுக்கு முதல் நாள் தக்ஷிணாயத்தின் கடைசி தினமாக வரும் . ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தும் தக்ஷிணாயன கால பண்டிகைகள் எனப்படும் .

 

அதேபோல தை மாதம் முதல் ஆனி மாதம் வரை கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தும் உத்தராயண கால பண்டிகைகள் எனப்படும் . போகிப் பண்டிகை என்று அழைப்பதன் பொருள் நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங் களைப் போக்கி , தை மாதம் முதல் புது வாழ்வு ஏற்படப்போவதால் இந்நாளை ‘ போக்கி ” என்றனர் . அந்தப் போக்கி என்ற சொல் நாளடைவில் மருவி ‘ போகி ‘ என்று மாறியது .

 

போகிப் பண்டிகைக்கு இந்திர விழா என்ற பெயரும் உண்டு . பழந்தமிழர்கள் போகிப் பண்டிகையை ஆரம்ப காலத்தில் இந்திரவிழா என்றே கொண்டாடி வந்தனர் . இந்த விழாவின் போது இந்திரனுக்கு விசேஷ பூஜைகள் ஆலயங்களில் நடைபெறும் . இந்த விழா தொடிதோட் செம்பியன் என்ற சோழ மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.

 

சூரியனுக்கு உகந்த பொங்கல் பண்டிகை

போகிப் பண்டிகைக்கு மறுநாள் , தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை நாள் . அனைவரும் வைகறைத் துயிலெழுந்து நீராடிப் புத்தாடை உடுத்திக் கொண்டு ஆனந்தம் பொங்க பொங்கல் நாளை எதிர் கொண்டழைப்பர் .

 

கிராமப்புறங்களில் மக்கள் வீட்டின் முன்புறம் அல்லது முற்றத்தில் பெருக்கி மெழுகி கோலமிட்டு தோரணங்களால் அலங்கரித்து , முற்றத்தில் தாம்பாளத்தில் வெற்றிலை , பாக்கு , தேங்காய் , பழம் , புஷ்பம் , மஞ்சள்குலை , வாழை இலை , கரும்பு குத்து விளக்கு முதலியன வைத்து புதிய அடுப்பில் புதிய மண்பானையில் பூவும் பொட்டும் இட்டு , கரும்பும் மஞ்சளும் சேர்த்து மாலையாகக் கட்டி அறுவடை செய்த அரிசி , வெல்லம் , நெய் , பால் சேர்த்து பொங்கல் வைப்பர் .

 

பொங்கல் வைக்கும் நேரம் சூரியன் நடுவானில் வரும் நேரம் , பொங்கல் பொங்கிவர ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று கலம் பொங்க பெரியோரும் , சிறியோரும் கூறி வரவேற்பர் . சூரிய பகவானுக்கு விசேஷ பூஜை செய்து பொங்கலை நிவேதனம் செய்யும்போது தங்கமயமாய் தகதகவெனச் ஜொலிக்கும் சூரியன் அத்தனை பேரையும் செய்கிறார்.

 

மாட்டுப் பொங்கல் எனும் உழவர் திருநாள்

மாட்டுப் பொங்கல் எனும் உழவர் திருநாள் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் . உழவுக்கும் தொழிலுக்கும் காரணமாய் இருக்கும் மாடுகளைப் பூஜித்துக் கொண்டாடும் உழவர் திருநாள் மாட்டுப் பெங்கல் . பசு , எருமை , காளை மாடுகள் , குதிரை முதலியவற்றைக் குளிப்பாட்டி மாட்டின் கொம்புகளுக்கு வர்ணமிட்டு நெட்டி முதலிய மாலைகளால் அலங்கரித்துப் பூஜை செய்து பொங்கல் , வெல்லம் , கரும்பு முதலியவற்றைத் தீவனமாகக் கொடுப்ப்ர் . மாலையில் அவற்றை அலங்கரித்து வீடுவீடாக அழைத்து வருவர் . ‘ பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் ‘ என எழும் ஒசையும் ‘ சல் சல் ‘ என்ற சலங்கை ஒலியும் கேட்பதற்குப் பேரானந்தத்தைக் கொடுக்கும்.

 

மாடுகள் இதிகாச காலம் தொட்டே ஜீவனத்திற்கு இன்றியமையாதனவாக இருந்து வருகின்றன . பசுவைத் தாயாகக் கொண்டாடுகிறோம் . ” கோமாதா நம் குல மாதா ‘ என்று பசுவிற்குப் பூஜை செய்து வருகிறோம் . பசு காமதேனு . காமதேனுவின் உடலில் அத்தனை தேவர்களும் , தேவதைகளும் குடியிருக்கின்றன. பசுக்களைக் காப்பது ஓர் உத்தமமான தர்மம் ” என்று வேதம் சொல்லியுள்ளது . ஸ்ரீமகா லக்ஷிமியின் முழு சாந்நித்தியமும் பசுவிடம் உள்ளது . எல்லா உப நிஷத்துக்களும் பசுக்கள் அவற்றைக் கறக்கும் இடையன் ஸ்ரீ கிருஷ்ணன் . அப்பசுக்களின் கன்று அர்ச்சுனன் . கறந்த பால் கீதை . பாலைக் குடிப்பவர்கள் வித்வான்கள் ” எங்கிறது கீதா மங்கள சாசனம் .

 

திருவானைக் கோயில் அகிலாண்டேசுவரி ஆலயத்தில் பிரதி தினமும் நடுப் பகலில் கோ பூஜை நடைபெறுகிறது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மடத்தில் இன்றும் முதலில் கோ பூஜை செய்த பின்னரே சந்திரமௌலீஸ்வர பூஜையை ஆரம்பிக் கின்றனர் .

ஆதிகாலத்தில் பசுக்களை பண்டம் மாற்றும் முறைக்கு உபயோகித்து வந்தனர் . ‘ தசரத சக்ரவர்த்தி பத்து லட்சம் பசுக்களைத் தானமாக அளித்தார் ” என்று இராமாயணத்தில் கூறப்படுகிறது . வயதானவர்கள் காலமானால் கர்மாக்கள் செய்யப்படும்போது ” கோ தானம் ‘ மிகவும் சிறப்புடையதாக இன்றும் இந்துக் களிடையே கருதப் படுகிறது.

சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார் . ரிஷபம் , நந்திதேவராகச் சிவபெருமானுக்குத் தொண்டு ஆற்றி வருகிறது .

 

மனம் கவரும் மஞ்சு விரட்டு

மாட்டுப் பொங்கல் அன்று ” மஞ்சு விரட்டு ” நடைபெறும் . இதனையே ” ஜல்லிக் கட்டு ” என்றும் கூறுவர் . மாலையில் பசுக்களையும் , காளைகளையும் அலங்கரித்துத் துணியில் ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கழுத்தில் அல்லது கொம்புகளில் கட்டி வீதிகளில் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாய் அழைத்து வருவர்.

 

தமிழ் நாட்டில் மதுரை , திருநெல்வேலி , தஞ்சாவூர் மாவட்டங்களில் மஞ்சு விரட்டுத் திருவிழாவை நடத்துகிறார்கள் . தற்பொழுது அரசு சுற்றுலா நிகழ்ச்சியிலும் மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி இடம்பெற்று இருக்கிறது . காளைகளை விரட்டும் மைதானத்தைச் சுற்றிலும் மூங்கில் கம்பங்களால் கட்டி விடுவர் . சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவர் . கிராமங்களில் ஜல்லிக் கட்டுக்கென்றே காளைகளை வளர்த்து அவற்றின் கொம்புகளைச் சீவி கூர்மையான உலோகத்தாலான குமிழ்களை இட்டு அலங்கரிப்பர். பிறகு காளைகளை நன்கு மசாஜ் செய்து அவற்றின் கொம்பின் அடிப்புறத்தில் ரூபாய் நோட்டுக் கற்றைகளைக் கட்டி , அதைக் கழுத்துடன் இணைத்துக் கட்டிவிடுவர் .

 

சில சமயம் ஜரிகை போட்ட வேஷ்டிகளில் தேங்காய் , பழம் , தங்க மோதிரம் முதலியன வைத்துக் கட்டி விரட்டி விடுவர். தீரமுள்ள இளைஞர்கள் அத்துடன் சேர்ந்து ஒடி , காளையின் வாலையும் கொம்பையும் சேர்த்துப் பிடித்து அடக்கி , அதன் கழுத்தில் இருக்கும் பணத்தைப் பரிசாய் எடுத்துச் செல்வர் . காளைகளைப் பிடிக்கையில் சற்று அசாக்கிரதையாய் இருப்பின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் சம்பவமும் நடைபெறுவதுண்டு . இருப்பினும் இதை ஒரு வீர விளையாட்டாகவே கருதுகின்றனர் . அன்றைய தினம் மாடுகளை உழவுக்கும் , பாரம் சுமக்கும் தொழிலுக்கும் பயன் படுத்த மாட்டார்கள்.

 

கன்னிப் பெண்களின் கன்னிப் பொங்கல் மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கன்னியர்களுக்கு உகந்த நாளான கன்னிப் பொங்கல் கொண்டாடப் படுகிறது . இதனைப் பூப்பொங்கல் என்றும் கூறுவர் . இது பெண்களுக்கு ஒரு முக்கியமான பண்டிகையாகும் .

 

பொங்கல் தினத்தன்று பானையில் கட்டியிருந்த மஞ்சளை எடுத்துச் சென்று வயது முதிர்ந்த பெண்மணிகளிடம் கொடுத்து நெற்றியிலும் திருமாங்கல்லி யத்திலும் மும்முறை தேய்த்துக் கொள்வர் . அவர்களை வணங்கி ஆசி பெறுவர் . அன்று கனுப்பொடி வைத்து , முதல் நாள் வைத்த அன்னத்தில் மஞ்சள் சாதம் , சிகப்பு சாதம் , சர்க்கரைப் பொங்கல் , கரும்பு முதலியனவற்றை ஒரு மஞ்சள் இலையில் சூரியனுக்கு எதிராக வைத்து ஆறு , குளங்களின் படித்துறைகளில் வைத்துக் காக்கைகளுக்கு அளிப்பர் . பின் அங்கு கூட்டம் கூட்டமாய்க் கூடி கும்மி , கோலாட்டம் முதலிய கேளிக்கைகளை நடத்தி ஆனந்திப்பர்.

 

ஆறு குளங்கள் இல்லாத ஊர்களில் வீட்டின் முற்றத்தில்அல்லது பின்புறமுள்ள திறந்த வெளியில் வைத்து குளிக்கச் செல்வர் . குறிப்பாகக் கன்னிப் பெண்கள் இருக்கும் வீடுகளில் கன்னிப் பெண்களே மஞ்சள் இலையில் கனுப் பொங்கல் இடவேண்டும் . கனுப் பொங்கல் வைத்த பின்பே குளித்துப் புத்தாடை உடுத்திச் சூரியனை வழிபட்டு விருந்து உண்பர் . கன்னிப் பொங்கலுடன் பொங்கல் பண்டிகை நிறைவு பெறுகிறது .

 

தமிழகத்தில் பொங்கல் பணிடிகை கொண்டாடும் மகர சங்கராந்தி தினத்தில் தான் , கேரளத்தில் சபரிமலையில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி தரிசனம் அளிக்கிறார்.

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam