Visitors have accessed this post 722 times.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

Visitors have accessed this post 722 times.

முன்னுரை :

     பெண்கள் இந்நாட்டின் வழிகாட்டிகளாய் பல காலங்கள் இருந்துள்ளனர்.  “பெண்களே இந்நாட்டின் கண்கள் “ என்னும் வாக்கியத்திற்கேற்ப பெண்கள் இப்பூவுலகின்  உன்னதமான வளர்ச்சியை நிலைநாட்டுகின்றனர்.  வாயிற்படி தாண்ட வாய்ப்பில்லாத பெண்கள் இன்று விண்வெளிப் பயணம் சென்று திரும்புகின்றனர்.  அவர்களில் கல்பனா சாவ்லா நம் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.  அவரைப்பற்றிய செய்திகளே இக்கட்டுரையாகும்.

 

இளமையும் கல்வியும் :

     கல்பனா சாவ்லா 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் பிறந்தார்.  அரசுப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.  பின்னாளில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் பட்டம் பெற்றார்.  அதன்பிறகு 1984ஆம் ஆண்டு டெக்ஸசாஸ் பல்கலைக் கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

 

முதல் விண்வெளிப்பயணம் :

     1995ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீரங்கணையாக தகுதிப்பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப்பயணம் 1997ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நிகழ்ந்தது.  பூமியைச் சுமார் 252 முறை சுற்றிய விண்ணகலத்தில் 10 மில்லியம் மைல் தொலைவு பயணம் செய்து வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பினார்.

 

இறுதிபயணம் :

     கொலம்பியா விண்ணகலத்தில் 2003 ஜனவரி 16ஆம் தேதி 6 விண்வெளி வீரர்களுடன் மீண்டும் பயணம் செய்தார்.  பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று தரையிறங்கத் திட்டமிட்டார்கள்.  பூமியைத் தொட 16நிமிடங்கள் இருந்தநிலையில் கொலம்பியா விண்கலம் வெடித்தது.  அவ்விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் அனைவரும் காற்றோடு கலந்தனர்.

 

விருதுகளும் அங்கீகாரங்களும் :

     1. நியூயார்க்கில் உள்ள ஒரு தெரிவிற்கு “கல்பனா-வே” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

     2. இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் கல்பனா சாவ்லா விருதினை வழங்குகின்றது.

     3. நாசா ஆய்வகம் கல்பனா சாவ்லாவின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு அதிநவீன கணினியை அர்பணித்துள்ளது.   

     4. இந்தியாவில் பல கல்வி          நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்குக் கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முடிவுரை :

     “சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” என்னும் பழமொழிக்கு ஏற்ப சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்குத் தூண்டுகோலாய் கல்பனா சாவ்லாவின்வரலாறு அமைந்துள்ளது.  மறைந்த பின்னும் அனைவரின் உள்ளத்திலும் நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிர்கிறார் கல்பனா சாவ்லா.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam