Visitors have accessed this post 642 times.
கிணற்றில் விழுந்த நரி
ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீர்ருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே… மே…ன்னு கத்திக்கொண்டே வந்தது.
உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே… தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே… சே… நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை.
உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே… இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே… உன்னை நம்பி வந்தேன் பாரு… இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்… கையை கொடு… என்னைச் சீக்கிரமா காப்பாத்து… என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.