Visitors have accessed this post 785 times.
நடிகர்கள்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ், ஃபஹத் பாசில், சமந்தா, தனஞ்சய், சுனில், அனுசூயா பரத்வாஜ், மைம் கோபி, அஜெய் கோஷ்; இசை: தேசி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: சுகுமார்.
சமீப காலத்தில் எந்த ஒரு தெலுங்குப் படமும் பல்வேறு மொழிகளில் இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில்லை.
படத்தின் கதை இது தான்:
தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டும் தொழிலாளிதான் புஷ்பா என்ற புஷ்பராஜ். ஆனால், சீக்கிரத்திலேயே அந்த மரங்களை காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாக துறைமுகம் வரை கடத்துவதில் தேர்ச்சிபெறுகிறார் புஷ்பா. ஏற்கனவே அந்தத் தொழிலில் இருந்த கொண்டா ரெட்டி, மங்களம் சீனு போன்றவர்கள் இவருக்கு எதிராக உருவெடுக்கிறார்கள்.
இதற்கிடையில், புஷ்பாவைப் பிடிக்க காவல்துறையும் முயற்சிகளை மேற்கொள்கிறது. சிலர் தோல்வியடைந்துவிட, அந்தப் பணிக்கு புதிதாகச் சேர்கிறார் பன்வீர் சிங் ஷெகாவத். செம்மரக் கடத்தல் தொழிலில் உருவாகும் எதிரிகளையும் புதிதாக வரும் காவல்துறை அதிகாரிகளையும் புஷ்பா எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் ஒரு பகுதி கதையோடு இந்தப் படம் முடிவுக்கு வருகிறது.
வைகுண்டபுரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான அல்லு அர்ஜுனுக்கு இந்தப் படத்தில் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோ பாத்திரம். யார் எதிர்த்து நின்றாலும் துவம்சம் செய்துவிடுகிறார். வழக்கமாக திரைப்படங்களில் மோட்டர் பைக்குகள், டாடா சூமோ வாகனங்கள் பறக்கும். இந்தப் படத்தில் லாரியைப் பறக்க வைக்கிறார் அல்லு அர்ஜுன். சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாது, மற்ற காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.
புஷ்பா படத்தின் இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரை, படம் உருவாக்கிய எதிர்பார்ப்பு படத்தின் மத்தியில் சலிப்பாக மாறிவிடுகிறது. ஃபஹத் பாசிலின் அறிமுகத்திற்குப் பிறகு வரும் காட்சிகள் இந்த சலிப்பைப் போக்கி மீண்டும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.