Visitors have accessed this post 431 times.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் – விமர்சனம்

Visitors have accessed this post 431 times.

 

 

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் விமர்சனம் :

 

பொன்னியின் செல்வன் திரைப்பட அறிமுகத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திர அடையாளத்தினை கொண்டு தமிழ் மொழியில் காட்டாமல் அதனை வடமொழியில் காட்டிய அடையாளத்தினை கண்டு பல தமிழ் மொழி பற்றாளர்கள் இதனை ஒரு குறையாக எண்ணியிருக்கலாம்.ஆனால் இக்குறைபாட்டினை முற்றிலும் நீக்கும் வகையில் இத்திரைப்படத்தில் வரும் மற்றொரு காட்சியில் திருமுறை கண்ட ராஜ ராஜ சோழனாகிய அருண்மொழிவர்மன் லேசான புன்னகையுடன் ஓலையில் உள்ள தமிழ் ஞானசம்பந்தனின் தேவார திருப்பாடலாகிய ‘தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்’ என்கிற வரிகளை வாசிக்கும்போது வருகின்ற ஒரு பெண்ணின் மென்மையான பின்னணி குரலை இனிய ராகத்துடன் செந்தமிழில் கேட்கும்போது இனிய தெய்வ மணம் வீசுவதை உணர முடிகிறது.மேலும் வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் நடிகர் கார்த்தியை படம் முழுவதும் நகைச்சுவையாகவே இயக்குனர் மணிரத்தினம் பயன்படுத்தியுள்ளார் என்று அர்த்தமில்லாமல் சிலர் விமர்சனம் செய்யும் கருத்துக்களை தவிர்த்துவிட்டு பார்த்தால்தான் வந்தியதேவன் போர் காட்சிகளிலும் மற்ற காட்சிகளிலும் தனது உடல் மொழியை அதற்கு ஏற்றார் போல் மாற்றிக்கோண்டு அக்கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார் என்பது புரியும்.வந்தியதேவன் ஆழ்வார்க்கடியானை இவர் போலி வைஷ்ணவர் என்று கூறும் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களில் லேசான சமய பேதம் இருப்பதாக தெரிந்தாலும் மற்றொரு இடத்தில் வந்தியதேவன் ‘அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில மண்ணு’ என்று ஆழ்வார்கடியானை பார்த்து சொல்லும் காட்சி நம்மை ரசிக்க வைக்கிறது.நந்தினி வந்தியதேவனை பார்த்து நீங்கள் மயங்கிவிட்டீர்களா என்று கேட்கும்போது அதற்கு வந்தியதேவன் கொஞ்சம் என்று பதில் சொல்லும் விதம் ரசிக்கும்படியாக உள்ளது.மேலும் வந்தியதேவன் ஆழ்வார்கடியானுடன் இலங்கையில் நடந்துவரும்போது ஆழ்வார்க்கடியான் அருண்மொழிவர்மனை யானையில் வருவதை பார்த்து வியந்து இங்கு யார் வந்து கொண்டிருக்கிறார் என்று பார்த்தாயா என வந்தியதேவனிடம் சொல்லும் அக்காட்சியில் அவர் கம்பீரமான வைணவ அரசன் சோழ நாரயாணன் வருகிறார் என்று நினைத்து வியந்தாரா அல்லது கம்பீரமான சைவ அரசன் சிவபாதசேகரன் வருகிறார் என்று நினைத்து வியந்தாரா என்கின்ற புரிதலை ரசிகர்களின் சமய கொள்கை விருப்பத்தின் படியே விட்டுவிடுகிறேன்.

 

அடுத்து குந்தவை கதாப்பாத்திரத்தில் வரும் நடிகை திரிஷா வந்தியதேவனை முதலில் சந்தித்து பேசிக்கொள்ளும் காட்சியும் அங்குள்ள மற்றொரு சோழநாட்டு பெண்மணி இலங்கையில் உள்ள இளம் அரசனாகிய அருண்மொழிவர்மன் மீது காதல் கொண்டு அக்காதலை வந்தியதேவனின் மூலம் வெளிப்படுத்தும் காட்சிகளும் ரசிக்கும்படியாக உள்ளது.முக்கியமாக அதில் வரும் பின்னணி இசையும் அக்காட்சிக்கு மேலும் அழகை சேர்க்கிறது.மற்றொரு காட்சியில் சோழ நாட்டு இளவரசியாகிய ‘குந்தவை’ பழுவூர் இளையராணியாகிய நந்தினியை முதல் முறையாக சந்தித்து அவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் காட்சியை பின்னணி இசையுடன் ரசித்து பார்க்கும்போது அழகின் வலிமை கூடுகிறது.மேலும் குந்தவை உலக அழகியாகிய நந்தினியை பார்த்து மொத்த அழகும் தஞ்சையில் இருக்கிறது என்றல்லவா நான் கேள்விப்பட்டேன் என்று சொல்லும் காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன.

 

ராஜ ராஜ சோழனாகிய அருண்மொழிவர்மன் கதாப்பத்திரத்தில் நடித்த நடிகர் ஜெயம் ரவியை பொருத்தவரையில் அவருடைய கதாப்பாத்திரத்தை ஓர் இளம் அரசனாக அளவான புன்னகையுடன் பல காட்சிகளில் உணர்ச்சிவயப்படாமல் அவ்வரசனுக்கு உரிய உடல்மொழியை பின்பற்றி  அக்கதாப்பாத்திரத்திற்கு பொருந்தும் வகையில் தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார் என்றே சொல்லலாம்.மேலும் அருண்மொழிவர்மனின் நேர்மைக்கு சிறந்த அடையாளமாக ஒரு அரசன் எல்லை மீறாமல் இரண்டு ஆணைக்கு கட்டுப்பட்டு நிற்க வேண்டும் ஒன்று தந்தையின் ஆணை மற்றொன்று அரசனின் ஆணை என்று சொல்லும் காட்சிகளில் இறைவனின் ஆணை என்கிற சொல்லை தனியாக பயன்படுத்தாமல் அதனை  தந்தையின் ஆணையுடன் ஒன்றாக இணைத்துவிட்டாரா என்கிற கேள்வியை எழுத்தாளர் ஜெயமோகனிடமோ அல்லது இயக்குனர் மணிரத்தினமிடமோதான் கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.இலங்கையில் புத்த துறவிகளை சந்திக்க வந்த சோழநாட்டு அருண்மொழிவர்மனை புத்த துறவிகள் அரியணையில் அமரும்படி கேட்டுக்கொண்டதை மறுத்து அவர்களிடம் அருண்மொழிவர்மன் நான் சோழநாட்டின் சேவகன் ஆகவே இவ்வரியணையில் அமர முடியாது என வேதத்தை ஏற்காத பெளத்த கொள்கையை நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு  சிவனின் ஆணையுடன் மறுத்து இக்காட்சியை இயக்குனர் மணிரத்தினம் அமைத்திருந்தால் மேலும் வலிமை சேர்ந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.ஆனால் அதே காட்சியில் அச்சோழநாட்டு மன்னனுக்குரிய மரியாதையும் அங்குள்ள புத்த துறவிகள் அளித்தனர் என்பதையும் பார்க்க முடிகிறது. மற்றொரு காட்சியில் அருண்மொழிவர்மன் வந்தியதேவனிடம் என்னை ஏன் ‘பொன்னியின் செல்வன்’ என்று அழைக்கின்றார்கள் தெரியுமா என்ற கேள்வியை கேட்டவுடன் வந்தியதேவன் நீங்கள் சிறு வயதில் படகில் செல்லும்போது பொன்னி நதியில் விழுந்துவிட்டீர்கள் அந்நதி உங்களை காத்தது அதனால் இந்த பெயர் உங்களுக்கு வந்தது என்று சொல்வான் அதற்கு அருண்மொழிவர்மன் என்னை காப்பாற்றியது அந்த நதியல்ல அந்நதியில் பெண் தெய்வம்  போல வந்து என்னை காத்தது ஊமை ராணிதான் என்று சொல்லும்போது ஊமை ராணியின் செயலில் உள்ள அறிவழகை நம்மால் உணர முடிகிறது.இவ்வறிவழகிற்கு அடையாளமாகவும் சிறந்த உதாரணமாகவும் வான்புகழ் வள்ளுவனின் இக்குறளையும் பொருத்தி பார்க்க முடிகிறது.

‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை’

 

மேலும் படகோட்டும் பெண்மணியாகிய வரும் பூங்குழலி இளம் அரசனாகிய அருண்மொழிவர்மனை நீண்ட நாள் கழித்து சந்திக்கும் காட்சியில் அவ்வரசன் மீது கொண்ட காதலால் பூங்குழலி அவனை கண்டு வெட்கபடும் காட்சியும் ரசிக்கும்படியாக உள்ளன.

 

பழூவூர் அரசராகிய பெரிய பழுவேட்டரையர் அரண்மனைக்கு வரும் காட்சியில் அவ்வரசரை போற்றி வேதியர்கள் திருநீறு அணிந்து கொண்டு மந்திரம் ஒதும் காட்சிகள் அற்புதம்.

 

ஆதித்த கரிகாலனின் கதாப்பாத்திரம் உணர்ச்சிவயப்படும் கதாப்பாத்திரமாகும் அக்கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விக்ரமின் நடிப்பில் காதல் மற்றும் வீரம் நிறைந்த போர் குணங்கள் தெரிகிறது.மேலும் அக்கதாப்பாத்திரத்திற்கு உண்டான அவரது உடல்மொழியும் சரியாக பொருந்தி போகிறது.

நவீன தொழில்நுட்பத்தை இத்திரைப்படத்தில் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில கடல் காட்சிகளும் பிரம்மாண்டத்தை காட்டுகிறது மற்றும் பழுவூர் இளையராணியாகிய நந்தினியிடம் அக்கதாப்பாத்திரத்திற்கு பொருந்தும் வகையில் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை காண முடிகிறது.

இத்திரைப்படத்தின் முதல் பாக முடிவில் அருண்மொழிவர்மனாகிய ராஜ ராஜ சோழனுக்கு என்ன ஆயிற்று என்று சிந்தித்து சிந்தித்து அவரது தந்தை சுந்தர சோழன் மனம் உடைந்து போகும் காட்சியும் அவரது மகளாகிய குந்தவை பொன்னியின் செல்வனுக்கு என்ன ஆயிற்று என்று ஏங்கும் காட்சிகளையும் பார்க்கும்போது அருண்மொழிவர்மன் சோழ நாட்டின் முக்கியமான பொக்கிஷம் என்பதை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

சில இடங்களில் சிறு சிறு திருத்தங்கள் தேவைபடுகிறது என்கின்ற விமர்சனங்கள் இத்திரைப்படத்தில் இருந்தாலும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் தரமான திரைப்படமாகவே உள்ளது.

நன்றி!!!

Leave a Comment

Write and Earn with Pazhagalaam