Visitors have accessed this post 804 times.
மார்கழி மாதத்துக்கென்று தனி மணமும் குணமும் உண்டு. இந்த மணத்தினால் நாம் பரவசம் அடைவது மட்டுமின்றி நமது உள்ளமும் தூய்மை பெறுகிறது. பனி படர்கிற இளம் காலை நேரத்திலே பாடப்படும் பக்திப் பாடல்கள் நம் இதயத்தின் ஆழ்ந்த உணர்வுகளை உசுப்ப வல்லவை.
வீட்டு வாசல்களில் விளக்கொளியில் கோலம் போடுகிற பெண்கள்; சின்னச் சின்ன கோலம் போட்டால் மார்கழித் திங்களுக்கு மரியாதை இல்லை என்று எண்ணியோ என்னவோ பெரிய பெரிய கோலங்கள்; சில புள்ளி வைத்து வேயப்படுபவை; இன்னும் சிலவோ கம்பிகளால் பின்னப்படுபவை; நமது அழகுணர்வு, அழகியல் எளிய மக்களிடமும் ரசனையோடு பயிலப்பட்டதைச் சொல்லும் அந்த நுழைவாயில் ஓவியங்கள்.
கோயில் ஒவ்வொன்றிலும் இந்த மாதத்தில் காலை நாலு மணியிலிருந்தே பக்திப் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் இசைக்கப்படத் தொடங்குகின்றன. கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளின் வழியே பத்து பதினைந்து சிரோன்மணிகள் மேலாடையின்றி, கச்சம் கட்டிக்கொண்டு ஜால்ராவை கையில் வைத்துக்கொண்டு பஜனை பாடல்களை பாடி வருவார்கள். ஓரிருவர் மிருதங்கத்தையும் , ஹார்மோனியத்தையும் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டும், இசை எழுப்பிக்கொண்டும் வீதி வழி பவனி வருவார்கள். இந்த இனிமையான இறைவனின் நாம சங்கீர்த்தன பஜனை வீட்டிலுள்ளவர்களை எழுப்பி விடும் . இது இல்லத்தில் உள்ள அனைத்து பெரியவர்களையும், குழந்தைகளையும் உறக்கத்தினின்று எழுப்பி, பக்தி உணர்வை ஊட்டி விடும்.
சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் என குளிரை ஊடுருவிக் கொண்டு வரும் இசையைத் தொடர்ந்து கேட்பவர்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும். சஹஸ்ரநாமத்துக்குப் பின்னர் மனப்பாடமாய் அன்று எனக்கு தெரிந்தது திருப்பாவைதான்.
மாதங்களில் மார்கழி என்று போற்றினால், அந்த மார்கழிக்கு திருப்பாவையே மகுடமாகும். பாவை நோன்பு நோற்ற எளிய பெண்களின் பிரதிநிதியென்ற பாவனையில் ஆண்டாள் முப்பது பாடல்களின் வழியாக நமக்குப் பகிர்ந்த ஞானம் மிகப் பெரியது. காதலின் வழியாக, கவிதையின் வழியாக முக்தியை அடையும் உன்னத மார்க்கம் திருப்பாவை.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மார்கழி மாதத்தின் காலையொன்றை, 21-ம் நூற்றாண்டின் புலரும் காலையோடு, மாறாத ஒன்றோடு பிணைத்து நம்மைப் பீடித்திருக்கும் அஞ்ஞானத்தின் உறக்கத்திலிருந்து எழுப்பி விடுபவள் ஆண்டாள் என்ற அந்தக் கோதை நாச்சியார்.
பறவைகள் எழுந்து கூவிச் சத்தமிட்டுவிட்டன. கருடனை வாகனமாகக் கொண்ட விஷ்ணுவின் ஆலயத்தில் சங்கின் அழைப்பு கேட்கவில்லையா? இளம்பெண்ணே எழுந்திரு. பூதனை என்னும் அரக்கியை வதைத்து வஞ்சகமான சகடாசுரன் வண்டியின் உருவத்தை எடுத்து வந்தபோது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தவன் கிருஷ்ணன். பாற்கடலில் பாம்பின் மேல் வீற்றிருந்து உயிர்களுக்கெல்லாம் மூலமானவனை முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று சொல்லும் ஒலியைக் கேட்டு எமது உள்ளம் குளிர்ந்தது. பறவைகள் கூவிவிட்டன என்று சொல்லி, தனது தோழிகளை எழுப்புவதான பாவனையில் நம்மையும் எழுப்புகிறாள்.
இந்த மார்கழியில் நமது அரிதுயில் களைவோம்.
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலயோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்(து) அரியென்ற பேரரவம்
- உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.