Visitors have accessed this post 738 times.
*முதுகுவலியும்… தவிர்க்கும் வழிமுறையும்…*
ஆரோக்கிய அச்சுறுத்தலில் முதுகுவலிக்கு முக்கிய இடம் உண்டு. உடல் உழைப்பு குறைந்ததும், கம்ப்யூட்டருக்கு முன்னால் நாள் முழுக்க தவம் கிடக்கிற வேலைகளுமே முதுகுவலிக்கான காரணம் என மேலோட்டமாகப் புரிந்துகொள்ள முடியும்.
இளைஞர்களிடம் பொதுவாக கழுத்து மற்றும் அடிமுதுகுப் பகுதிகளில்தான் வலிகள் ஏற்படுகின்றன. இந்த இரண்டு வகை முதுகுவலிகளும் உட்காரும்முறை, நடக்கும்முறை, அதிக உடல் எடை போன்ற பழக்க வழக்கங்களினாலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன. அரிதாக அலர்ஜி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நடுமுதுகுப் பகுதியிலும் வலி ஏற்படலாம்.”
முதுகு வலி வருவதை தவிர்க்க படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூடாது. தூங்கும்போது மெலிதான தலையணைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் அதிகமான தலையணைகள் பயன்படுத்தக் கூடாது. கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப்பகுதி, வால் பகுதி என அந்தந்தப் பகுதிகளுக்கு என பிரத்யேகமாக பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு அதற்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்
”அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு அடிமுதுகுப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் ஜவ்வு தேய்மானம் அடைந்து இடம் மாறும். ஜவ்வில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிமுதுகுப் பகுதியில் வலி வரும்.
இந்த வலி அடிமுதுகிலிருந்து கால்களுக்கும் பரவும். நீண்ட நேரம் நிற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த அடிமுதுகுப் பகுதி வலி அதிகமாக ஏற்படுகிறது. இரவு நேரப் பணி, எப்போதும் ஏசியின் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டியை தரும் சூரிய ஒளி உடலில் படுவதில்லை.
எனவே, வைட்டமின் டி குறைபாடு இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதும் குறையும். எலும்புக்கு ஆதாரமான இந்த இரண்டு சத்துகளும் குறைவதால் தசைகள் பலவீனமடைந்து அடிமுதுகில் வலி ஏற்படும்.
நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் அடிமுதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததும் ஒரு முக்கியக் காரணம். சமீபத்திய ஆய்வுகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு ஜவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகு வலி வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.”
”நீண்ட தூரப் பயணங்களாக இருந்தால் ரயிலில் செல்வது சிறந்தது. பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், முன்பகுதியிலேயே அமர வேண்டும். பின்பக்கம் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட தூரப் பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வேகத்தடைகளில் நிதானமாகச் செல்வதும், பழுதடைந்த சாலைகளைத் தவிர்ப்பதும் நல்லது. சீக்கிரம் செல்லலாம் என்று குண்டும் குழியுமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது முதுகுவலியை வரவழைக்கும்.
இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது. காரணம், காற்றின் திசையை எதிர்த்து, வேகமாக செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்குகிற சக்தி உடலுக்கு இருக்காது. வாகனத்தில் இருக்கும் ஷாக் அப்ஸார்பரை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சக்கரத்தில் காற்று அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது.
குனிந்து அதிகமான எடைகளைத் தூக்கக் கூடாது. கனமான பொருட்களைத் தூக்கும்போது உடலில் அணைத்தவாறு தூக்க வேண்டும். குளிக்கும்போது வாளியை உயரமான இடத்தில் வைத்துக் குளிக்க வேண்டும். ரொம்பவும் குனிந்து நிமிர்ந்து முதுகுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் நாற்காலிகளில் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நல்ல நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டும்.
கணிப்பொறி திரையின் உயரம் நம் கண் பார்வை மட்டத்தின் உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும். மேலே நிமிர்ந்து பார்ப்பது மாதிரியோ, கீழே குனிந்து பார்க்கிற மாதிரியோ கணிப்பொறித் திரை இருக்கக் கூடாது. அதிகபட்சமாக 2 மணி நேரத்துக்கு மேல் கணிப்பொறி முன் உட்காரக் கூடாது.
தூங்கி எழும்போது ஒரு பக்கமாக சாய்ந்து எழுந்திருக்க வேண்டும். மல்லாந்து படுத்திருந்து விட்டு, அப்படியே நேராக எழுந்திருக்கக் கூடாது, இடதுபக்கமாகவோ வலதுபக்கமாகவோ திரும்பி எழுந்திருக்க வேண்டும்.
தரையில் தூங்குவதில் பிரச்னையில்லை. மெத்தையாக இருந்தால் நல்ல பஞ்சு மெத்தையாகப் பயன்படுத்துவது அவசியம். பழைய மெத்தைகள் இறுகிப்போய்விட்டால் அதைப் பயன்படுத்தக் கூடாது. நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால் பின்புறம் சாய்ந்து கொண்டு நிற்க வேண்டும். ஒரு காலை மட்டும் கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.”