Visitors have accessed this post 1146 times.

விவேகானந்தரின் வீரமொழிகள்

Visitors have accessed this post 1146 times.

விவேகானந்தரின் வீரமொழிகள்

காலடித் தடங்கள்
     உலகில் இதுவரை வாழ்ந்த மாமனிதர்கள் எல்லாம் நமக்கு உணர்த்தி நிற்கின்ற ஒன்று உண்டு . அது , நாமும் உன்னத வாழ்க்கை வாழலாம் என்பதே . நாம் பின்பற்றி நடப்பதற்காகக் காலமெனும் பெரும் மணற்பரப்பில் தங்கள் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் என்னும் காலடித் தடங்களை அவர்கள் விட்டுச் சென்றனர் . அப்படிச் சமீபகாலத்தில் அழியாத தடங்களை விட்டுச் சென்றவர் சுவாமி விவேகானந்தர் .
     அவர் உலக அரங்கில் இருந்தது என்னவோ பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான் . ஆனால் அதற்குள் அவர் சாதித்ததுதான் எத்தனையெத்தனை ! ஒருவேளை அவர் தமது இறுதி நாட்களில் கூறியதுபோல் ‘ இந்த விவேகானந்தன் என்ன செய்திருக்கிறான் என்பதை யார் அறிந்தார்கள் ? இன்னொரு விவேகானந்தன் இருந்தால் அவனால்தான் அதை அறிந்துகொள்ள முடியும் . ஒரு விவேகானந்தன் என்ன , காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள் ! ‘
      அவர் ஏற்றி வைத்த ஞானதீபத்தின் இந்தப் பதினொரு சுடர்களில் நாம் செய்யப்போவதெல்லாம் அவர் விட்டுச் சென்ற அந்தக் காலடித் தடங்களைக் காணவும் , அவற்றைக் கண்களில் ஒற்றிக்கொள்ளவும் , அவை நமக்குத் தருகின்ற செய்தியைப் புரிந்துகொள்ளவும் முயற்சிப்பதுதான்.

சுவாமி விவேகானந்தரின் எல்லை
       முயற்சி என்று ஏன் சொல்கிறோம் என்றால் , தத்துவம் , மதம் , மனஇயல் , சமூகஇயல் , விஞ்ஞானம் , வரலாறு , புவியியல் , வானஇயல் , கலை , இசை என்று அவர் பேசாத துறை எதுவுமே இல்லை . பேசியது மட்டுமல்ல , அவை ஒவ்வொன்றிலும் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளார் அவர் . ஒவ்வொரு துறை வல்லுனர்களும் இந்த இலக்கியத்தை ஊன்றிப் படிக்கும்போது அந்த முடிவுக்கே வருகிறார்கள்.
      விஞ்ஞானத்தை எடுத்துக்கொள்வோம் . சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு ஐன்ஸ்டீன் நிரூபிக்கவிருந்த சார்பியல் கோட்பாடு ( Theory of Relativity ) பற்றி , சுவாமிஜி தம்மிடம் கேட்டதாக நிகோலா டெஸ்லா ( Nikola Tesla ) என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
       மொழியியலை எடுத்துக்கொண்டால் , அவர் எழுதியவை வங்க மொழிக்கு ஒரு புதிய பார்வையை , ஒரு உத்வேகத்தை அளித் துள்ளதாக வங்க மொழியியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித் துள்ளனர் . ஆங்கில மொழியிலும் அதுபோலவே – கடினமான பதங்களை உபயோகித்து நீளநீள வாக்கியங்களாக எழுதுவது உயர்நடையாகக் கருதப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் , எளிய ஆனால் மிகவும் ஏற்புடைய சொற்களைப் பயன்படுத்தி , சிறிய வாக்கியங்களாக எழுதத் தொடங்கிய முன்னோடிகளுள் சுவாமிஜியும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.
       இனி மனஇயல் . இந்தத் துறையில் அவரது கருத்துக்கள் பிரமிப்பைத் தருவதாக உள்ளன . இன்று மேலை மனஇயலின் தந்தையாகப் போற்றப்படுகின்ற ஃப்ராய்ட் ( Sigmund Freud , 1856 1939 ) அப்போதுதான் தமது ஆராய்ச்சிகளைத் தொடங்கியிருந்தார் . ஆனால் அந்தக் காலத்திலேயே உணர்வு மனம் , ஆழ் மனம் , உணர்வறு மனம் என்று சுவாமிஜி தெளிவாகப் பேசியிருப்பது மிகவும் சிந்திப்பதற்கு உரியது.
      இப்படியே அவரது எல்லை முடிவின்றி நீள்கிறது . இந்தத் துறைகளில் எல்லாம் நமக்கு நல்ல அடித்தளம் இருந்தால் மட்டுமே , அந்தத் துறைகளில் ஏற்கனவே இருப்பவை என்ன , புதிதாக சுவாமிஜி என்ன அளித்துள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் . எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று கூறினோம்.
       அறிந்துகொள்வது இருக்கட்டும் , நாம் இந்தச் சுடர்களைப் படிக்கும்போது அவரது சிந்தனை ஓட்டத்தைத் தொடர் வேண்டுமானால்கூடத் தத்துவம் , மதம் , மனஇயல் , சமூகஇயல் , வரலாறு என்று குறைந்தது ஐந்து விஷயங்களாவது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
       ஆனால் எத்தனைத் துறைகளை அவர் தொட்டாலும் , அவரது சிந்தனை ஓட்டம் எங்கெங்குதான் சுற்றிச் சுழன்றாலும் அவையெல்லாம் சென்று சங்கமிக்கின்ற எல்லை ஒன்று உண்டு ; அது ஆன்மீகம் . அவரது இலக்கு , அவரது துறை ஆன்மீகம் . ‘ ஓ இந்தியா விழித்தெழு , உனது ஆன்மீகத்தால் உலகை வெற்றிகொள் ‘ என்று முழங்கியவர் அவர் அந்த ஆன்மீகத்திற்கு ஒரு புது மெருகு கொடுத்தவர் அவர்.      
        ‘ எனது லட்சியத்தைச் சுருக்கமாகச் சொல்வதானால் அது இதுதான் : மனிதன் தெய்வீகமானவன் என்பதை மனித குலத்திற்குப் போதிப்பது ; இந்த உண்மையை அவர்கள் வாழ்வில் ஒவ்வோர் அசைவிலும் வெளிப்படச் செய்வதுதான் ‘ என்கிறார் அவர் . மனிதனில் உறைகின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்து வதையே அவர் ஆன்மீகம் என்று கருதினார் , மதம் என்று கூறினார் . ‘ மதத்தைத் தூக்கியெறிந்துவிட்டு , அரசியலையோ சமுதாயத்தையோ மற்ற எதையோ உங்கள் மையமாக , உங்கள் தேசிய வாழ்வின் ஆதாரமாகக் கொண்டீர்களானால் , நீங்கள் மறைந்துபோய் விடுவதுதான் அதன் விளைவாக இருக்கும் . இதைத் தடுக்க வேண்டுமானால் உங்கள் எல்லா வேலைகளையும் மதம் என்ற அடிப்படையின் மூலமாகச் செய்யுங்கள். மதம் என்ற முதுகெலும்பின் வழியாக உங்கள் அனைத்து நரம்புகளும் அதிரட்டும் என்றெல்லாம் கூறும்போது இந்த ஆன்மீகத்தையே , தனிமனித வளர்ச்சிக்கான இந்த மதத்தையே அவர் குறிப்பிட்டார் என்பது நினைவில்கொள்ள வேண்டிய ஒன்று.
          
சுவாமிஜியின் பெருங்கொடை
       சுவாமிஜி யுகாவதார புருஷர் , அதாவது இந்தக் காலத்திற் கேற்ற செய்தியுடன் வந்தவர் . ஒருவரின் பாதை மற்றவருக்குச் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்த அவர் மனிதர்களை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார் ; அவர்கள் : புறமுகமானவர்கள் அதாவது செயல்துடிப்பு மிக்கவர்கள் , உணர்ச்சி மயமானவர்கள் , அகமுகமானவர்கள் ,ஆராய்ச்சி மனம் கொண்டவர்கள் . இவர்களுக்காக அவர் வகுத்ததே கர்மயோகம் , பக்தியோகம் , ராஜயோகம் , ஞானயோகம் என்ற நான்கு யோகங்கள்.
        கீதையைச் சொன்னது கண்ணனாக இருந்தாலும் , அதனைத் தொகுத்தது வேத வியாசராக இருந்தாலும் , மகாபாரதத்திலிருந்து அதனைக் கண்டெடுத்து உலகிற்கு அளித்த பெருமை சங்கரரைச் சாரும் . நான்கு யோகங்கள் மட்டுமல்ல , இன்னும் எத்தனையோ யோகங்கள் நமது வேதங்கள் என்னும் கருவூலத்தில் உள்ளன . ஆனால் காலத்திற்குஏற்ப மனித குலத்தைப் பொதுவாக இவ்வாறு நான்காகப் பிரித்து , நான்கு யோகங்களை அளித்த பெருமை சுவாமி விவேகானந்தரையே சாரும் . ‘ வெவ்வேறு பாதைகள்மூலம் நாம் ஒரே குறிக்கோளை அடைய முடியும் என்பது வேதாந்த மதத்தின் மகத்தான கருத்தாகும் . இந்தப் பாதைகளை நான் பொதுவாக கர்மம் , பக்தி , யோகம் , ஞானம் என்று நான்காகப் பிரித்திருக்கிறேன் , ஆனால் இந்தப் பிரிவுகள் துல்லியமாகக் கோடிட்டுப் பிரிக்கப்படாதவை . ஒவ்வொன்றும் முற்றிலும் தனியானவை அல்ல , ஒன்றோடொன்று கலந்தவை … எத்தகைய மனப்போக்கு , எந்த அடையாளம் ஒருவரிடம் சிறந்து விளங்குகிறதோ , அதற்கு ஏற்ப இந்தப் பிரிவுகள் வகுக்கப் பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறார் அவர்.
        இந்த நான்கு வழிகளால் மனிதன் வளர வேண்டும் , அதனால் நாடு வளர வேண்டும் , அதனால் உலகம் வளர வேண்டும் என்பது அவரது தனிப்பெரும் செய்தியாக இருந்தது.

வீரமொழிகள்
       இந்த எட்டுப் பகுதிகளின் தமிழ் மொழிபெயர்ப்பு , ஞானதீபம் என்ற பெயரில் முதலில் எமது மடத்திலிருந்து 1963 – இல் வெளிவந்தது . இரண்டாம் பதிப்பில் அது பதினாறு பகுதிகளாகியது . தற்போது வெளிவருவது புதிய பதிப்பு.
       பதிப்புரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் இந்தப் பதிப்பில் புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு , தலைப்புவாரியாகத் தொகுக்கப் பட்டுள்ளது .
        இந்தப் தொகுப்புப் பணிக்கு எமது மடம் மற்றும் மிஷனின் துணைச் செயலர்களுள் ஒருவரும் , மூத்தத் துறவியருள் ஒருவரு மான ஸ்ரீமத் ஸ்மரணானந்த சுவாமிகளின் வழிகாட்டுதலும் , மேரி லூயி பர்க் எழுதிய ஆராய்ச்சி நூல்களும் பெருந்துணையாக அமைந்தன . தற்போதைய தொகுப்பின்படி ஒவ்வொரு சுடர் களிலும் வரப்போகின்ற முக்கியத் தலைப்புகள் இந்தச் சுடர்களின் பின்புற உள் அட்டையில் ( Second Flap ) அச்சிடப்பட்டுள்ளன .
சுவாமிஜி வங்க மொழியில் எழுதியவை மற்றும் பேசியவை வங்க மூலத்துடனும் மற்றவை ஆங்கில மூலத்துடனும் ஒப்பிடப்பட்டு , மொழியிலும் பொருளிலும் தேவையான சில மாற்றங்கள் இந்தப் பதிப்பில் செய்யப்பட்டுள்ளன.
        சுவாமிஜி சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுகின்ற இடங் களுக்கு முடிந்த அளவு குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன . பட்டுள்ளது . இதற்கு வங்க மொழி மற்றும் மலையாள மொழிப் பதிப்புகள் உதவின . சுருக்கமான சொல்லடைவுப் பகுதி ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.
        சுவாமிஜியின் வீரமொழிகள் , படிக்கும் ஒவ்வொருவர் சுவாமிஜியின் பேரருள் துணை நிற்குமாக ! 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam