Visitors have accessed this post 514 times.
husnul khotimah
ஹுஸ்னுல் காத்திமா-நல்ல முடிவு கிடைக்க வேண்டுமா?
இவ்வுலக வாழ்க்கையில் ஓர் இறை விசுவாசியுடைய-முஃமினுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?
தனது இறுதி முடிவு நல்லதாக -அழகானதாக அமைந்து விட வேண்டும் என்பதுதான்.
وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ
“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரணித்துவிட வேண்டாம்.”
[سورة آل عمران 102]
அல்லாஹ்வுடைய இக்கட்டளையின் படி,
தான் ஒரு தூய முஸ்லிமாக இருக்கும் நிலையில் -ஈமான் ஸலாமத்தோடு மரணிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரு முஃமினுடைய எதிர்பார்ப்பு.
وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ یَأۡتِیَكَ ٱلۡیَقِینُ
“உம்மிடம் (மரணம் எனும்) உறுதியானது வரும் வரை உமது இரட்சகனை நீர் வணங்குவீராக!”
[سورة الحجر 99]
அல்குர்ஆனின் இந்த கட்டளையின் அடிப்படையில் இறுதி மூச்சு வரை இறை வணக்கத்தில், நற்காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்; அந்த நிலையிலேயே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்பது ஒரு முஃமினின் மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.
ஒருவர் தன் வாழ்நாளில் நீண்ட காலம் இறைவழிபாடுகளில் ஈடுபாடு காட்டுவார்; பாவங்களை விட்டும் விலகி இருப்பார். எனினும், தனக்கு மரணம் நெருங்கிவரும் காலத்தில் பாவங்களையும் தவறுகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவார். இது, அவரது இறுதி முடிவு மோசமாக அமைவதற்கு காரணமாகிவிடும்.
நபி ஸல் அவர்கள் சொல்கிறார்கள்:
“உங்களில் ஒருவர் நற்செயல்களை புரிந்து கொண்டே செல்வார். அவருக்கும் சுவர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அந்த அளவுக்கு தொடர்ந்து நற்கருமங்கள் செய்து வருவார். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அப்போது அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக இறுதியில் நரகம் நுழைவார்.” (புகாரி )
ஓர் இறை விசுவாசிக்குள்ள பெரிய அச்சம் தனது இறுதி முடிவு எப்படி அமையும் என்பதுதான்.
தனது இறுதி முடிவை எப்படி அழகானதாக அமைத்துக் கொள்வது என்பதே நம் ஒவ்வொருவருக்கும் முன்னால் உள்ள பெரிய சவால் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.
ஒருமுறை நபி ஸல் அவர்கள்,
“அல்லாஹ் ஓர் அடியானுக்கு நன்மையை நாடினால் அவனை செயல்பட வைப்பான்” என்றார்கள். அப்போது
“அல்லாஹ் அவனை எவ்வாறு செயல்பட வைப்பான்” என்று வினவப்பட்டது. அதற்கு அன்னார், “மரணத்திற்கு முன் ஒரு நற்காரியத்தை செய்ய அவனுக்கு துணை புரிவான்” என்றார்கள். (திர்மிதி)
🔷️ஒருவர் ஹுஸ்னுல் காத்திமாவை-நல்ல முடிவைப் பெறுவதற்கு துணைபுரிகின்ற பல காரியங்கள் இருக்கின்றன.
அவற்றுள் முக்கியமானவற்றை கீழே சுருக்கமாகக் கலந்துரையாடுவோம்.
💠ஆரம்பமாக ஹுஸ்னுல் காத்திமைப் பெறத் துணை செய்வது
ஆழமான ஈமான் – இறை நம்பிக்கையாகும்.
இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ.
“எவர்கள் ஈமான் கொண்டிருக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு உறுதி படுத்துகின்றான்.”
[سورة إبراهيم 27]
அல்லாஹ் உண்மையான முஃமீன்களை உயிர் பிரியும் தருவாயிலும் கப்றில் விசாரிக்கப்படும் போதும் மஹ்ஷரிலும் உறுதிப்படுத்துவான்.
💠இஸ்திக்காமா எனும் அல்லாஹ், றஸுலுக்கு வழிப்படுவதில் என்றும் எப்போதும் நிலைத்திருப்பது ஹுஸ்னுல் காத்திமாவை பெற்றுத்தரும் மற்றுமொரு காரணியாகும்.
இது தொடர்பில் அல்குர்ஆன் பின்வருமாறு சொல்லுகின்றது:
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
“நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.”
[سورة فصلت 30]
💠தொழுகைகளைப் பேணி தொழுது வருவதும் இறுதி முடிவு நல்லதாக அமையத் துணை புரியும்.
நாளாந்தம் தொழுகைகளை முறையாகப் பேணி தொழுது வருபவருக்கு தொழுகையில் இருக்கும் நிலையிலோ அல்லது இரண்டு தொழுகைகளுக்கு இடையிலோ மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உள்ளது.
தொழுது கொண்டிருக்கும் போது, ஸுஜுதில் இருக்கும் நிலையில் மௌத்தை சந்தித்த பாக்கியசாலிகள் வரலாறு நெடுகிலும் இருக்கின்றார்கள்.
💠அல்லாஹ் தனக்கு நல்ல முடிவைத் தருவான் என்ற நம்பிக்கையோடும் அவன் பற்றிய நல்லெண்ணத்தோடும் தொடர்ந்தும் நற்காரியங்களில் முனைப்புடன் ஈடுபடுகின்ற ஒருவருக்கும் அல்லாஹ் ஹுஸ்னுல் காத்திமாவை வழங்கப் போதுமானவனாக இருக்கின்றான்.
💠அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ர் செய்வதும் நல்லமுடிவு கிடைக்க உதவும் ஒரு வழியாகும். எப்போதும் திக்ருடன் இருப்பவர் தனது இறுதி வேளையிலும் திக்ர் செய்யும் பேற்றைப் பெறுவார்.
ஒருவர் எந்த நிலையில் வாழ்ந்தாரோ அந்த நிலையில்தான் பெரும்பாலும் மரணிப்பார். ஒருவர் எந்த நிலையில் மரணித்தாரோ அந்த நிலையிலேயே நாளை மறுமையில் எழுப்பப்படுவார்.
நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்:
يبعث كل عبد على ما مات عليه
“ஒவ்வோர் அடியானும் எந்த நிலையில் மரணித்தானோ அந்த நிலையிலேயே மறுமையில் எழுப்பப்படுவான்.”
(முஸ்லிம்)
💠அடுத்த மனிதர்களுக்கு உதவி, உபகாரம் செய்வது முதலான நற்பணிகளில் ஈடுபடுவது மோசமான முடிவுகளிருந்து ஒருவரைக் காப்பாற்றவல்லது என்பதை நபிமொழிகள் உறுதி செய்கின்றன.
💠மேலும் மரண சிந்தனை எப்போதும் மனதில் பசுமையாக இருக்க வேண்டும். மரணத்தை எப்போதும் நினைவு கூருபவர் விழிப்பாக இருப்பார்; பாவங்களிலிருந்து விலகியிருப்பார்; நன்மையான காரியங்களில் ஈடுபாடுகொண்டவராக இருப்பார்.
இதனால் எந்த நேரத்தில் அவருக்கு மரணம் சம்பவித்தாலும் அவரது முடிவு அழகான முடிவாக அமையும் இன்ஷாஅல்லாஹ்.
💠இறுதியாக ஓர் இறை விசுவாசி எப்போதும் ஹுஸ்னுல் காத்திமாவை வேண்டி துஆ செய்ய வேண்டும்.
இது தொடர்பாக நபி ஸல் அவர்கள் கேட்டுவந்த துஆக்களில் பின்வருவன பிரபலமானவை:
اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتِنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ!
يا مُقَلِّبَ القُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ
எந்தவொரு விஷயத்திலும் இறுதி முடிவே முக்கியமானது; வாழ்க்கையைப் பொறுத்தவரையிலும் அப்படித்தான். இதனை நபி மொழிகள் விளக்குகின்றன.
இந்த உண்மையைப் புரிந்து எஞ்சியுள்ள வாழ்க்கையை உச்ச நிலையில் பயன்படுத்தி நமது இறுதி முடிவை சிறப்பானதாக அமைத்துக் கொள்ள திட உறுதி பூணுவோம்!