Visitors have accessed this post 851 times.
அத்திப்பழம் சிவப்பா?
Contents
TOC o "1-3" h z u முன்னுரை:
அத்திப்பழத்தின் நன்மைகள், எப்படி சாப்பிடலாம்? யார் சாப்பிடலாம்?
அத்திப்பழ சாகுபடி செய்வது எப்படி?
முன்னுரை:
ஒரே பழத்தில் உடலுக்குத் தேவையான, அனைத்து சத்துக்கள் ஒருங்கிணைந்து கிடைக்கிறது என்றால், அது அத்திப்பழத்தில் மட்டும்தான். இது ஒரு மர வகையைச் சேர்ந்ததாகும். தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. இது களிமண் நிலம் மற்றும் ஆற்றோரப் பகுதிகளிலும் நன்கு வளரும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தைத் தருகின்றது எனக் கூறுகிறார்கள். நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என்று, அத்தி மரங்களில் சில வகைகள் உண்டு.
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழத்தை அப்படியேவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். அத்தி மரம் மிகவும் மருத்துவ குணம் பெற்றது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டது.
அத்தி மரம் எப்படி இருக்கும்?
அத்தி மரம், அளவான, உயரம் உடைய நடுத்தர மரமாகும். சுமார் 10 மீட்டர்வரை இம்மரம் வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதை வைத்து அத்திமரத்தை கண்டுபிடிக்கலாம். அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான கூம்பு வடிவில் பார்க்க இருக்கும். தண்டிலும், கிளைகளிலும், அடிமரத்திலும் கொத்துக் கொத்தாக பழங்களைக் காணலாம்.
முதலில், பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் காணப்படும். பின்பு காய், பழுத்தபின்பு கொய்யாப்பழத்தை போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழுத்தவுடன் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் சிறியதாக காணப்படும். பழங்களைப் பறிக்க கூட வேண்டாம், தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அதை எடுத்து, அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அதனால் சுத்தம் செய்து சாப்பிடுவது நல்லது.
ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும். கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்துப் பதப்படுத்தலாம். பொதுவாக, பதப்படுத்தாமல் இந்தப் பழத்தை உண்ண முடியாது. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள், பழக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் அதிகளவில் விற்கப்படுகின்றன.
அத்திப்பழத்தின் நன்மைகள், எப்படி சாப்பிடலாம்? யார் சாப்பிடலாம்?
‘கால்சியம், புரதம், கலோரி என்று, தினசரி உழைப்புக்குத் தேவையான சத்துக்கள் அத்திப் பழத்தில் அதிகம் உள்ளது. குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் அத்திப்பழம் தீர்வு என்றெல்லாம் கிடையாது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், எலும்பு உறுதி இல்லாதவர்கள், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஆண்மை குறைபாட்டுக்கு, சுவாசப்பிரச்சனைகளுக்கு என அனைவரும் சாப்பிடலாம். இதில் உள்ள கால்சியம், எலும்புகளையும் பற்களையும் உறுதியாக்கும். மேலும் இரும்புச் சத்து ரத்த உற்பத்தியை அதிகப்படுத்தும்.
வைட்டமின் ‘ஈ’ முதியவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு நோயிலிருந்து காப்பாற்றும். அத்திப் பழ விதையில் உள்ள துத்தநாகம், தாமிரம் போன்ற தாது உப்புக்கள் வெண்புள்ளி, தோல் நிறமாற்றம் போன்ற நோய்களைக் குணமாக்க உதவும்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. இதில் உள்ள சோடியம், கெட்ட நீரை வெளியேற்றிவிடும். இதனால் வயிற்றுவலியிலிருந்து தப்பிக்கலாம். நாள் ஒன்றுக்கு மனிதனுக்குத் தேவைப்படும் 20-30 கிராம் நார்ச் சத்தில், 1.6 கிராம் நார்ச் சத்து, இரண்டு அத்திப் பழங்களைச் சாப்பிட்டாலே கிடைத்துவிடும்.
தினமும், இரண்டு பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க ஐந்து பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
இதில் விட்டமின், கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால், தலை முதல் பாதம் வரையிலான உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும். இளவயதில் இருப்பவர்கள் அழகு பராமரிப்போடு இதைச் சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். கூந்தலுக்கும் நன்மை செய்யும். அத்திப்பழத்தில் புழுக்கள் அதிகமாக இருக்கும் என்பதால், நன்கு சுத்தப்படுத்திய பிறகே உண்ண வேண்டும். வழக்கமான உணவுக்கு 2 மணி நேரம் முன்னர் அல்லது 2 மணி நேரத்துக்குப் பின்னர் உண்ண வேண்டும்.
அத்திப்பழத்துடன் கருப்பட்டி சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நல்லது. பழத்துடன் சீனி மற்றும் உப்பு கலந்து சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க்க வேண்டும்.
உலர் அத்திப் பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்து, தினமும் சாப்பிட்டு வந்தால், மது போன்ற போதைப் பழக்கம், இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்திலிருந்து மீண்டு வரலாம்.
மூலநோயைக் குணப்படுத்த, அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிடலாம். அத்திப்பழ இலைகளை உலர வைத்துப் பவுடராக்கி, இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும். உடலின் எந்தத் துவாரத்திலிருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
சிறு குடல் பெருங்குடல்களில் தேங்கியிருக்கும் நச்சுகளால் சிலருக்கு புற்று நோய் ஏற்படுகிற அபாயமும் உண்டு. குடலில் தங்கியிருக்கும் நச்சுகளை நீக்கி, குடலை சுத்தமாக்குவதோடு உடலில் புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தரமான ஆன்ட்டி–ஆக்சிடன்ட் சத்துகளையும் அதிகம் கொண்டிருக்கிறது அத்திப் பழம்.
சிறு துண்டுகளாக நறுக்கிய அத்திப்பட்டையை நீரில் ஊறவைத்து மறுநாள் குடித்தால் மூட்டு வலி, வாதநோய் குணமாகும். அத்தி வேருக்குத் தாய்ப்ப்பால் பால் நன்றாகச் சுரக்கச் செய்யும் வலிமை உண்டு. வெள்ளைப்படுதல், மேக நோய், பெரும்பாடு பிரச்சினை இருக்கும் பெண்கள் இந்தப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதிசயிக்கத் தக்க வகையில் நோய் கட்டுப்படும்.
குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதைச் சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டுத் தெரிந்து பின் சாப்பிடுங்கள்.
உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்தக் கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது.
அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம் என்கிறார்கள். தினமும் சாப்பிட்டு நலன் பெறுவோம்.
அத்திப்பழ சாகுபடி செய்வது எப்படி?
அத்தியில், நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி போன்ற வகைகள் உள்ளன.
அத்திமரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது. சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது 10 டன் தொழுஉரம் கலந்து உழவு செய்ய வேண்டும். விண் பதியன்கள் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.
தேர்வு செய்த பதியன்களை 5.7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மழை காலங்களில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும்.
இது வறட்சியைத் தாங்கி வளர்வதால் இவற்றை மானாவாரியாக பயிர் செய்யலாம். இறவையாக பயிரிட்டுத் தண்ணீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ காய்ந்த தொழு எருவும், 600 கிராம் தழைச்சத்து, 350 கிராம் சாம்பல் சத்து, 400 கிராம் மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். இந்த உர அளவை பிரித்து இரண்டு தடவையாக கொடுக்க வேண்டும்.
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பழ பறிப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும்.
இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.
அசுவினி பூச்சியைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த 4வது ஆண்டு முதல் மகசூல் தரவுள்ளது. ஆனால் 8 ஆண்டிற்கு பிறகு நிரந்தர வருமானம் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து 180 முதல் 360 கிலோ பழங்கள் கிடைக்கும்.
அப்போ என்னெங்க வாங்க அத்திப்பழத்தை விதைப்போம், ஆரோகியத்தையும், பணத்தையும் அள்ளுவோம்.