Visitors have accessed this post 731 times.

அன்ரிரா

Visitors have accessed this post 731 times.

அந்த ஃபேன் ஒரு வித ‘கும்’ என்ற சப்தத்தோடு எங்கள் எல்லோருக்கும் பேருபகாரம் செய்தது. நன்றாகத் தூங்கினோம். தூங்கும் முன் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு ஃபேன் முன் போனோம். “ஏ! மடப்பயலுக்குப் பொறந்தா பசங்களா! கிட்டப் போயி படுக்காதீங்கடா. தள்ளிப் படுங்க; என்று அப்பாவே எங்களை அருகில் விடாமல் தடுத்தார். மறுநாள் காலையில் நாங்கள் புத்துணர்ச்சியோடு எழுந்தோம். அப்போதும் அப்பா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். ஃபேன் ஓடியபடியே இருந்தது.

அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் ஆசையாகப் போய் ஃபேனைத் தட்டினேன். அது ஓடவில்லை . அசைவின்றிக் கிடந்தது. விளக்கைப் போட்டுப் பார்த்தேன்; எரியவில்லை. ஆனால் அடுத்த வீட்டில் ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. அது தான் வீட்டுச் சொந்தக்காரரின் வீடு.அங்கு கரண்ட் இருக்கும் போது இங்கு மட்டும் எப்படி இல்லாமல் போனது? என் தம்பி, தங்கையின் முகங்கள் வாடிப் போய் விட்டன. அம்மா எங்களை ஏக்கத்தோடு பார்த்தாள். நான் அம்மாவிடம் கேட்டேன். “ஏம்மா நம்ம வீட்ல கரண்ட் இல்ல?” என்று. அவள் பதிலொன்றும் கூறாமல் அடுக்களைக்குள் புகுந்து விட்டாள். காரணம் புரியாமலும் மாலை நேர விளையாட்டிலும்

ஆர்வம் இல்லாமலும் வீட்டில் முடங்கி விட்டோம்.

அப்பா வந்தார். “அப்பா நம்ம வீட்ல பேன் ஓடல. கரண்ட்டும் இல்லை!” என்று தங்கை சொன்னாள். அப்பாவை அம்மா, ‘இங்கே வாங்க’ என்று கூப்பிட்டு உள்ளே போனாள். அடுக்களையில் இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. ஓரிரு நிமிஷம் கழித்து அப்பா அறைக்குள் வந்தார். சட்டையைக் கழற்றி டவலைப் போர்த்திக் கொண்டார். மணி ஆறாகி மேலும் சில நிமிஷங்கள் ஆகி விட்டிருந்தது. வீட்டில் இருள் சூழ ஆரம்பித்தது! அப்பா மெதுவாக வீட்டுக்காரர் வீட்டை நோக்கிப் போனார்.

“என்னங்க வீட்ல மட்டும் கரண்ட் இல்லாம இருக்கு?” என்று போனதும் அப்பா கேட்டார்.

` “அப்படி வாங்க வழிக்கு. இப்ப தெரியுதா கரண்ட்டோட அருமை?” அப்பா பதிலேதும் பேசாமல் நின்றார்.

“புதுசா வீட்டுக்கு ஃபேன் கொண்டு வந்திருக்கீங்களே. யாருகிட்டே கேட்டு கொண்டு வந்தீங்க?”

“இதுல என்னங்க கேக்க வேண்டியிருக்கு?”

“ஓஹோ …. அப்படியா சமாச்சாரம்… அது சரி. உங்களுக்கு எங்க அதுல உள்ள கஷ்டம் தெரியப்போவுது. அதுக்கெல்லாம் சொந்த வீடு வாசல்னு இருந்தால் அது அதோட அருமை தெரியும்” என்றார் வீட்டுக்கார சாம்பசிவ பெருமாள்.

எனக்கு எங்கோ உறைத்தது. ரொம்ப குத்தலான கேள்வி. இயலாமையையும், ஏழ்மையையும் அவர் கடுமையாகக் கேலி செய்கிறார். ஆனாலும் என்ன செய்ய முடிந்தது?

“இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்றீங்க?” என்று அப்பா வேறு வழியில்லாமல் கேட்டார்.

 வீட்டு வாடகையை இந்த மாசத்துலே இருந்து பத்து ரூபா கூட்டிக் கொடுங்க. கரண்ட் சார்ஜ் தான் இது. அப்படி ஒம்மாலே கூட்டிக் குடுக்க முடியாதுன்னா ஃபேனைத் தூக்கித் தூர எறியும். இல்லே வீட்டைக் காலி பண்ணிக் குடுங்க” என்றார் சாம்பசிவம். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் இப்போது எட்டிப் பார்த்தார்கள். அது எங்களுக்கு கூச்சமாக இருந்தது. சாம்பசிவத்துக்கு அப்படித்தான் பேசத் தெரியும். அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் பேசி விட்டார். அப்பாவின் நிலை தான் தர்ம சங்கடமானது. அவர் பதிலேதும் பேசாமல் குனிந்த தலையோடு வீட்டிற்கு வந்தார்.

ஏழு மணி அளவில் சாம்பசிவம் கருணைப்பட்டு ஃப்யூஸ் மாட்டினார். வீட்டில் ஒளி படர்ந்தது. ஆனால் அனைவர் முகங்களிலும் இருள் மட்டும் நீங்க வில்லை. இரவில் மன வெக்கையுடன் படுத்திருக்கிறோம். ‘கும்’ என்ற ஓசையுடன் ஃபேன் எங்களுக்கு அருகில் தன் சிறகுத் தலையைத் திருப்பி திருப்பி சுழன்று ஓடிக் கொண்டு தான் இருக்கிறது…..

தமிழ் சிறு கதை படித்து எனக்கு கமெண்ட்ஸ் பண்ணுங்க நண்பர்களே

Leave a Comment

Write and Earn with Pazhagalaam