ஆஷூராவின் சிறப்பு

Visitors have accessed this post 129 times.

‘இன்ஸியா` என்கிற அரபுக் கிரந்தத்தில் உள்ள ஒரு சம்பவத்தை இங்கு நாம் தொகுத்துத் தருகிறோம்.

ஓர் ஏழை வயோதிகர் ஆஷூரா தினத்தன்று நோன்பு வைக்க நாடி, ஒரு முஸ்லிம் நீதிபதியிடம் சென்று, தமக்குச் சிறிது இறைச்சியும். ரொட்டியும், செலவுக்கு இரண்டு தீனார்களும் தரும்படி வேண்டி நின்றார்.

அந்த முஸ்லிம் நீதிபதியோ, “அப்படியா,, பகலில் வா தருகிறேன்” என்று கூறி அனுப்பினார்.

பகலில் அந்த முதியவர் தள்ளாடியவாறு அந்த நீதிபதியிடம் செல்ல, “மாலையில் வா” என்று கூறி அனுப்பிவைத்தார்.

மனமுடைந்த அந்த ஏழை வயோதிகர் திரும்பினார். இதைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு கிறிஸ்த்தவப் பாதிரியார் அந்த ஏழை முதியவரை அணுகி விசாரிக்க, அவர் நடந்ததைக் கூறி அழுதார்.

“பெரியவரே; ஆஷூராவின் நோன்பு வைக்க ஏன இவ்வளவு ஆசை ?” என்று கேட்டார் பாதிரியார்.

அந்த ஏழை முஸ்லிம் கூறினார்: “பாதிரியாரே! இது யூதர்களின் திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளாகும். இன்றுதான் அரபியர்களின் முஹர்ரம் பத்தாம் நாள் வருகிறது. இதன் மகிமை ஒன்றல்ல, இரண்டல்ல, எடுத்துரைப்பதற்கு! ஆஷூராவின் சிறப்பை எடுத்துக் கூறிக்கொண்டே இருக்கலாம். அதற்கு எல்லையே இல்லை”

வானம், பூமி, சூரிய மண்டலம், தாரகை, லவ்ஹு, கலம், அர்ஷ், குர்ஸ், சுவர்க்கம், நரகம் அனைத்தும் படைக்கப்பட்டது இந்த ஆஷூரா தினத்தில்தான். உலகில் முதலில் மழை பெய்ததும் இந்த ஆஷூரா தினத்தில்தான்.

ஹள்ரத் ஜிப்ரஈல், மீக்காயீல், இஸ்ராயீல், இஸ்ராஃபீல் ஆகிய மலக்குகள் படைக்கப்பட்டதும் இந்த ஆஷூரா தினத்தில்தான். அதுமட்டுமா?

ஹல்ரத் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்), ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) ஆகியோர் படைக்கப்பட்டதும் அவர்கள் மன்னிக்கப்பட்டதும் இந்த ஆஷூரா தினத்தில்தான்.

நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கப்பல் பெரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டுப் பத்திரமாக ஜூதி மலையை அடைந்ததும் இந்த ஆஷூரா தினத்தில்தான். அதுமட்டுமா?

நபி இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மகாமன் அலிய்யா என்னும் உயர்ந்த இடத்திற்கு உயர்த்தப்பட்டதும் இந்த ஆஷூரா தினத்தில்தான்.

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு கலீல் என்ற பட்டம் சூட்டப்பட்டதும், நம்ரூத் மூட்டிய நெருப்புக் குண்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டதும் இந்த ஆஷூரா தினத்தில்தான்.

நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் தங்கள் ஆட்சியை இழந்து மீண்டும் திரும்பப் பெற்றதும் இந்த ஆஷூரா தினத்தில்தான். நபி யஅகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மைந்தர் நபி யூசுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கிடைக்கப் பெற்றதும் இந்த ஆஷூரா தினத்தில்தான். நபி யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டதும் இந்த ஆஷூரா தினத்தில்தான்.

நபி ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிறந்ததும் அவர்களை யூதர்கள் சிலுவையில் அறைய முயன்றபோது காப்பாற்றப்பட்டதும் இந்த ஆஷூரா தினத்தில்தான்.

நபி மூசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும், அவர்கள் சமூகத்தாரும் நைல் நதியிலிருந்து காப்பாற்றப்பட்டதும், ஃபிர்அவ்னுடைய இராணுவத்தினரும் நைல் நதியால் அழிக்கப்பட்டதும் இந்த ஆஷூரா தினத்தில்தான்.

உலகம் தோன்றியது இந்நாளில்தான். அவ்வாறே அனைத்தும் அழிவதும் ஆஷூரா தினத்தில்தான். இதன் சிறப்புகள் இன்னும் இருக்கின்றன.

இந்த நாளில் நோன்பு நோற்பவர் ஒரு வருடம் நோன்பு நோற்பவர் போலாகின்றார். ரமளான் நோன்புக்கு அடுத்த சிறந்த நோன்பு. இதுதான். இந்நாளில் தம் உறவினர்களுக்காகச் செலவழிப்பவர்களுக்காக அடுத்த வருடம் வரை வறுமையே உண்டாகாது து.

இந்நாளில் பிள்ளைகளுக்குக் கல்வியை ஆரம்பித்து வைத்தால் அவர்கள் சிறந்த மேதாவிகளாவார்கள். இத்தகைய சிறப்புகள் உள்ள இந்நாளில் நோன்பு வைக்க யாருக்குத்தான் ஆசை வராது என்று கூறி முடித்தார் அந்த ஏழை வயோதிக முஸ்லிம் பெரியவர்! இதைக்கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறிவிட்டு, அப்பாதிரியார் அவர் கேட்டதை விடப் பத்து மடங்கு அதிகமாகக் கொடுத்ததோடு, “மாதாமாதம் வந்து இந்த அளவு பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

இரவு, நீதிபதி படுத்தபோது அவர் கனவில் சுவர்க்கத்தில் உள்ள இரு மாளிகைகள் காட்டப்பட்டன. அதை அவர் ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் போது இறைவனிடமிருந்து ஓர் அசரீரி வாக்கு கேட்கிறது;”நீதிபதியே! உமக்காக இந்த மாளிகைகள் இரண்டும் இருந்தன. நீர் ஏழைக்கு உணவு அளிக்காததன் காரணத்தால் அவை ஒரு கிறிஸ்தவருக்குக் கொடுக்கப் பட்டுவிட்டன. காட்டப்பட்டது. என்று அந்தக் கிறிஸ்தவரைக் காட்டப்பட்டது. 

திடுக்கிட்டு விழித்த முஸ்லிம் நீதிபதி, “ஒரு கிறிஸ்தவருக்கு எப்படிச் சுவர்க்கம் கிட்டும் ? அவரிடம் ஓர் இலட்சம் தீனார்களைக் கொடுத்தேனும் சுவர்க்க மாளிகையைப் பெற்றுக் கொள்வேன்!” என்று எண்ணி, பண முடிப்புடன் பாதிரியார் வீட்டுக்குப்போய் கதவைத் தட்டினார்.

அதே கனவைக் கண்டு விழித்த பாதிரியார் கதவைத் திறக்க நீதிபதி நின்று கொண்டிருந்தார். விவரத்தைக் கேட்டுத் தெளிந்த அந்த பாதிரியார், “இந்தப் பணம் உமக்குத்தான் பெரிது; எனக்குத் தேவையில்லை” என்று கூறி விட்டார். “நீர் கிறிஸ்தவர்; எப்படிச் சுவர்க்கம் செல்ல முடியும் ?” என்று நீதிபதி கேட்க, “இதோ இப்படித்தான்!” என்று கூறி உடனே கலிமாவைக்கூறி முஸ்லிம் ஆனார்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam