உக்ரைன் – ரஷ்ய போர் latest news

Visitors have accessed this post 212 times.

 

 

உக்ரைன் – ரஷ்ய போர்; இனிதான் மோசமான சூழல் ஆரம்பம்: பிரான்ஸ் பிரதமர்

பதிவு செய்த நாள்: மார் 04,2022 07:19

 

பாரிஸ்: உக்ரைன் – ரஷ்ய போர் நீடித்துவரும் நிலையில் இனிதான் மோசமான சூழல் துவங்கவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

 

உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் உடன் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.

 

இந்தப் போரில் மோசமான சூழ்நிலை இனிமேல்தான் ஏற்படப்போகிறது என்று மேக்ரான் தெரிவித்ததாக அவரது உதவியாளர் தகவல் அளித்துள்ளார். நாஜி ஆதரவாளர்களை உக்ரைனில் இருந்து விரட்ட புடின் எந்த நிலைக்கும் செல்வார் என்று கூறப்படுகிறது.

 

ஏற்கனவே ரஷ்ய அணு ஆயுத பிரிவை தயார் நிலையில் வைக்கும்படி விளாடிமிர் புடின் ராணுவ தலைமைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு அடுத்து உலகில் அணு ஆயுத போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

 

உக்ரைன் ராணுவ நிலைகள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்: 19 விமானங்களில் இந்தியர்கள் மீட்பு

 

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 8-வது நாளாக போர் நீடித்தது. உக்ரைன் ராணுவ நிலைகள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.

 

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே நேற்று 8-வது நாளாக கடும் சண்டை நீடித்தது. மரியபோல், செர்னிஹிவ் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் செர்னிஹிவ் நகரில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிகிறது.

 

உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கார்சன் நகர், ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. அந்த நகரில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருவதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

உக்ரைனின் ஒடேசாவில் கடற்படைத் தளம் அமைந்திருக்கிறது. இந்த நகரம் மீது ரஷ்ய போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. வெகுவிரைவில் இதுவும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வரும் என்று கூறப்படுகிறது.

 

தலைநகர் கீவ், கார்கிவ் நகரங்கள் மீதும் நேற்று தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது. போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். போரில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

 

ரஷ்ய தேசிய பாதுகாப்பு மையத்தின் கர்னல் மைக்கேல் கூறும்போது, ‘‘நகரங்களில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறுவதை உக்ரைன் வீரர்கள் தடுக்கின்றனர். கார்கிவ் நகரில் மட்டும் 3,189 இந்தியர்கள், 2,700 வியட்நாமியர்கள், 202 சீனர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சுமி நகரில் 576 இந்தியர்கள், 101 கானா நாட்டினர். 121 சீனர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். போரில் வெளிநாட்டினர் அதிக அளவில் உயிரிழக்க வேண்டும் என உக்ரைன் விரும்புகிறது’’ என்று தெரிவித்தார்.

 

உக்ரைன் அதிபர் ஜெலன்கி நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘‘ரஷ்யாவுக்கு நாங்கள் அஞ்சவில்லை. அந்த நாட்டிடம் சரண் அடைய மாட்டோம். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவோம். போர் குற்றங்களில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுப்போம். ரஷ்யாவிடம் இருந்து இழப்பீடு பெறுவோம். போரில் இதுவரை 9 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது.

 

19 விமானங்களில் மீட்பு

 

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது: உக்ரைனில் தவிக்கும் 3,276 இந்தியர்களை அழைத்து வருவதற்காக அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானப்படை மற்றும் விமான நிறுவனங்களை சேர்ந்த 19 விமானங்கள் வியாழக்கிழமை (நேற்று) இயக்கப்படுகின்றன. இவற்றில் 8 விமானங்கள் ருமேனியா தலைநகரான புக்காரெஸ்டில் இருந்து இந்தியா வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் 3,276 பேர் 19 விமானங்கள் மூலம் இந்தியா வருகின்றனர்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ‘உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 80 விமானங்கள் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களும் மீட்கப்படுவர்’ என்று தெரிவித்துள்ளது.

 

உக்ரைனின் கார்கிவ் நகரம், ரஷ்ய எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து ரயில் மூலம் ரஷ்ய எல்லைக்கு செல்ல சுமார் 1,000 இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். ஆனால், உக்ரைன் அரசு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்யவில்லை. ரஷ்ய எல்லை பகுதிக்கு சென்றால் சுட்டுக் கொல்வோம் என்று இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் மிரட்டி வருகின்றனர்.

 

2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்

 

போரை நிறுத்தும் வகையில் ரஷ்யா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டின் கோமெல் நகரில் கடந்த 28-ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து பெலாரஸின் பிலவ்ஜாகயா புஸ்சா நகரில் ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்றிரவு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

 

தாக்குதலை நிறுத்த வேண்டும், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் கோரப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் உக்ரைன் ஈடுபடக்கூடாது. உக்ரைனிடம் உள்ள ஆயுதங்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ரஷ்ய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

உக்ரைனில் இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: அமைச்சர் வி.கே.சிங் தகவல்

 

கீவ்: உக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

 

உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அந்த மாணவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், இப்போது அவர் உடல்நிலை எப்படியுள்ளது என்ற நிலவரம் தெரியவில்லை. ஆனால், அந்த மாணவர் கீவ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக போலந்தின் ரிஸோ விமான நிலையத்திலிருந்து பேட்டியளித்த அமைச்சர் வி.கே.சிங், ”கீவ் நகரில் இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார். போரின்போது இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்க முடியாது. துப்பாக்கி குண்டுக்கு மதமோ, தேசியமோ தெரியாது. கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து தூதரகம் அறிவுறுத்தி வருகிறது. உக்ரைனில் இன்னும்1700 மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்பதே இலக்கு” என்றார்.

 

ஏற்கெனவே கார்கிவில் உணவு வாங்கச் சென்ற போது ரஷ்ய குண்டுக்கு இரையாகினார் கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா. அந்த சோகம் அகல்வதற்குள் மேலும் ஒரு இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

 

உக்ரைனில் போர் வலுத்துவரும் நிலையில் அங்கிருந்து மாணவர்கள் வெளியேறுவது மிகவும் கடினமானதாக மாறிவருகிறது.

 

இந்திய மாணவர்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, ஸ்லோவேகியா எல்லைகளுக்கு வந்துவிட்டால் அங்கிருந்து அவர்களை இந்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவருகிறது. அவ்வாறு தப்பித்துவரும் மாணவர்கள் பாஸ்போர்ட்டை இழந்திருந்தாலும் கூட அவர்களுக்கு உடனடியாக பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்து அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam