Visitors have accessed this post 771 times.
கம்பராமயணத்தை எழுதியவர் கம்பர். இவர் தேரழுந்தூரில் பிறந்தார். கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகியன கம்பர் இயற்றிய நூல்கள்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்,விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியர் கம்பர் என்னும் தொடர்களால் கம்பரின் பெருமையை அறியலாம்.
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்கள் உடையது. இவற்றுள் அயோத்திய காண்டத்தை பற்றி காணலாம். அயோத்தியா காண்டம்
அயோத்தி நாட்டு மன்னன் தசரதனுக்கு மக்கள் நால்வர். தசரதன், தன் மூத்த மகன் இராமனுக்கு முடிசூட்ட விழைந்தான். தசரதன் மனைவி கைகேயி; அவள் தோழி மந்தரை, இராமன் முடிசூடுவதனை விரும்பவில்லை. எனவே, கைகேயின் மனத்தை மந்தரை வஞ்சக உரைகளால் மாற்றினார். மனம் மாறிய கைகேயி, தசரதனிடம் தான் பெற்ற இரு வரங்களை பயன்படுத்தி, இராமன் காடு செல்லவும், தன்மகன் பரதன் நாடாளவும் வேண்டுமெனக் கூறினாள்.
மணிமுடி சூடப் புறப்பட்டு வந்த இராமனிடம் கைகேயி, “நீ பதினான்கு ஆண்டுகள் காடு செல்ல வேண்டும். இது மன்னன் ஆணை” என்றாள். அதனை இராமன் பணிவுடன் ஏற்றான். தன் மனைவி சீதையுடன் தம்பி இலக்குலனுடனும் காட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் கங்கைக்கரையை அடைந்தான். அங்கே அன்பே வடிவான வேட்டுவத் தலைவன் குகன், இராமனைச் சந்தித்தான்.
போர்க்குணம் மிக்க குகனானவன் ஆயிரம் படகுகளுக்குத் தலைவன்; கங்கையாற்றுத் தோணித்துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்; பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்; மலைபோன்ற திரண்ட தோள்களை உடையவன்.
அலைகளையுடைய கங்கைக்கரையின் பக்கத்திலுள்ள சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழும் தலைவன் குகன். இவன், முனிவர்தம் தவச்சாலையிலுள்ள வள்ளல் இராமனைக் காணத் தேனும்மீனும் கொண்டுசென்றான்.
இராமன், குகனை அழைக்கும் முன்னர், இளையவனாகிய இலக்குவன் அவனை நெருங்கி, யார் நீ? என்று வினவினான். குகன், இராமனை அன்போடு வணங்கி, “தேவா, கங்கையாற்றில் நாவாய்களை இயக்குகின்றவனும் நாயினும் அடியவனாகிய வேட்டுவன் யான், தங்களின் திருவடிகளை வணங்க வந்துள்ளேன்” என்று கூறினான்.
இலக்குவன் இராமனைத் தொழுது, ‘வெற்றி பொருந்திய தலைவனே! தூய உள்ளம் உடையவன்; தாயினும் சிறந்த அன்பினன்; கங்கையாற்றில் செல்லும் நாவாய்களுக்குத் தலைவன்; குகன் என்னும் பெயரினன்; தன் உறவினருடன் நின்னைக் காண வந்துள்ளேன்’ என்றான்.