Visitors have accessed this post 745 times.
நகருக்கு செல்லும் மெயின் ரோட்டிற்க்கு அருகில் அமைந்திருக்கிறது நான் அவ்வப்போது முடிதிருத்தம் செய்யும் அந்த சலூன்கடை .
ஆகையால் முடி திருத்த நேரம் அதிகமானாலும் பக்கத்திலேயே பேக்கரி , ஹோட்டல், பெட்ரோல்பங்க், பேருந்து நிறுத்தம் ஆகியவை இருப்பதால் வேடிக்கை பார்க்க உகந்த இடம்.
சினிமா மற்றும் வாசிப்பின் மேல் உள்ள காதலாலும், அத்துறைகளில் கால் பதிக்க ஆசை யென்பதாலும் ஏதேனும் நிகழ்வுகள் கண் முன் நடந்தால் அதனை அதிகம் கவனிப்பேன்.
சரி. அங்கே வரும் மனிதர்களின் கதைக்கு வருவோம். நடிகர் சந்தானத்தின் க்யூமர் கலந்தாற் போல ஒரு மனிதர். ஒய்யாரமாய் அக்கடை நாற்காலியில் அமர்ந்திருந்தார். கையிலிருந்த செய்தி தாளை கண்கள் பார்க்க, அக்கடை தொலைக்காட்சியில் ஓடும் செய்திகளை காதுகள் கேட்க, நடு நடுவே முடிதிருத்தும் கடைக்காரரிடம் நகைப்பு பேச்சு கொடுக்க… என பல வேலைகளை செய்து கொண்டிருந்தார்!.
அவரிடம் அந்த ஏரியா பிரபல சாமியாரில் இருந்து நித்யானந்தா சாமியார் வரை யாரை பற்றி கேட்டாலும் எவ்வித இறுக்கமும் இன்றி பதில் சொல்வார் என தெரிந்து கொண்டேன்.
எங்களிடமும் அவர் சிற்பல கேள்விகள் கேட்டார். அவையும் நக்கலாகவே இருந்தன.
கடைசியில் அவசர அழைப்பு வரவே கடைக்காரருக்கு ‘டாட்டா பாய் பாய்’ செல்லி விட்டு சிவப்பு ஸ்கூட்டியில் சிட்டாய் பறந்து சென்றார். பின்பு தான் தெரிந்தது அவர் முடி திருத்த வந்திருக்கவில்லை டைம்பாஸுக்காக வந்திருக்கிறார் என்று.
… ஹீம்ம் இன்ட்ரஸ்டிங் …
பின்பு ஒருநாள் அக்கடையில் ஒரு மனிதர். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை க(த)ண்டிக்கும் இந்தியன் தாத்தா போல இருந்தார். முகமும் இருக்கமாகத்தான் இருந்தது. ஏதோ சோக நிகழ்வு நடந்திருக்க கூடும்.
தன் பேரன் ஒரு தவறு செய்து விட்டதாகவும் அதில் இருந்து அவனை மீட்டு வர முயன்று வருவதாகவும் அவர் கடைகாரரிடம் சொல்லி கொண்டிருந்தார்.
முற்காலத்தில் தன் மகன்/மகளின் தவறுகளையும் அவர் திருத்தி மீ ட்டு வந்திருக்க கூடும். இப்போது அவர் பேரனின் தவறுகளை திருத்தி கொண்டிருப்பது என்னை ஒரு அப்பாவின் கடமைகளில் இதுவும் ஒன்று தானோ என சிந்திக்க வைத்தது .
மெளனமாக – கடினமாக இருந்த என் மனநிலையை சலூன்கடை சேவிங் லோசன் வாசனையும் பக்கத்து ஹோட்டல் ஆம்லெட் வாசனையும் மாற்றின . (ஆகா என்ன நருமணம்ம்ம்)
பின் சேவிங் செய்து விட்டு அந்த பெரியவரும் ‘வரேன் தம்பி ‘ என பொறுமையாக கூறி விட்டு நிதானமாக கடந்து சென்றார்.
… ‘பொறுமை மற்றும் நிதானம்’ ஆம்ம். நிச்சயம் கற்று கொள்ள வேண்டியவை…
அடுத்து ஒரு மனிதர் அங்கே வந்தார். கடைக்காரர் அப்போது எனக்கு முடிதிருத்தி கொண்டிருந்தார். அம்மனிதர் வெகு நேரம் காத்திருந்தார். வருவார் சில நிடங்கள் நெளிவார். ‘ அண்ணே டீ அடிச்சுட்டு வந்துடுரேன்’ என கிளம்பி விடுவார். மீண்டும் வருவார் செய்தி தாளை புரட்டிய பிறகு பக்கத்தில் இருக்கும் பேக்கரிக்குள் நுளைந்துவிடுவார்.
ஆள் பார்க்க பல்க்காக இருந்தார். அவர் ஓங்கி வாயில் அடித்தால் நிச்சயம் பல் உதிர்ந்து விடும் போல் இருந்தது. ஆனால் அம்மனிதர் மிக வெள்ளந்தியாக பேசிக்கொண்டிருந்தார்.
அவர் சொல்வதை கடைக்காரர் சரியாக கவனிக்காததை கூட கண்டு கொள்ளாமல் பேசலானார்.
‘எங்கண்ணே கேங்குறான் ஏ மயன். உங்க கடையில முடி வெட்ட சொன்னா கடை பூட்டி இருக்குன்னு எதிர் கடையில தொண்ணூறு ரூபா கொடுத்து ஒன்சைடுன்னு எதையோ வெட்டியாந்துருக்கான்’ என ஆரம்பித்தார். பின்பு அவனை மீண்டும் அதே கடைக்கு கூட்டி சென்று முடியை முழுவதுமாக திருத்தி கூட்டி வந்ததாக சொன்னார்.அப்போது தனக்கு வாகனம் ஓட்ட சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகவும் …கோர்ட்டில் வாய்தா நடந்து கொண்டிருப்பதால் செல்ல முடியவில்லை என்றும் பின் அச்சலூன் கடை முன் மது அருந்திவிட்டு கத்திக்கொண்டிருந்த ஒருவனை அறைந்து விட்டதாகவும் சொன்னார்.
அப்’பல்க்கான மனிதரின் நண்பரும் அங்கு வரவே .. நான் தான் மொதல்ல வெட்டுவேன். தாடிய மட்டும் தான் ஷேவ் என நண்பர் சொல்ல… இங்க என்ன முடி காடுகணக்காவா இருக்கு. நானு தாடிய தான்டா ஷேவ் பண்ணனும் என பல்க் மனிதர் கூரல் உயர்த்த …. ஒரே அனந்த சண்டை தான்.
அது வரை அமைதி காத்த கடைக்காரரும் அதனை கேட்டு சிரித்தார் (க்கீகீ க்கீ).
… கோப-எரிச்சல் நிலையை மறந்து மகிழ்ச்சி கொள் மனமே- மகிழ்ச்சி கொள் தினமே …
இப்போது அந்த சலூன் கடைக்காரரிடமே வந்து விடுவோம்.
அமைதியாக- நிதானமாக- சாந்தமாக இருப்பார் .என் கற்பனை கண்ணால் அவர் தலைக்கு பின் ஒரு ஞான ஒளி வைத்தேன். அவர் புத்தர் போல் காட்சி தந்தார்.
கிட்டத்தட்ட ஒரு ஷேவிங் செய்யவே மனிதர் முப்பது நிமிடத்துக்கும் மேல் எடுத்து கொள்வார். கடையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானாலும் அவரது வேலை மெதுவாகவே இருக்கும். சோம்பேறி தனமோ என முதலில் நினைத்து கொண்டேன். முடிதிருத்தம் -தாடி திருத்தம் என எல்லாம் முடிந்த பிறகும் சிறு சிறு முடி எங்கேனும் தூக்கி கொண்டிருந்தாலும் அதற்காகவே ட்ரிம்மரையோ கத்தரிக்கோலையோ எடுத்து சரி செய்வர். அதிகம் மெனக்கெடுவார் . நிச்சயமாக அவரிடம் சோம்பேறித்தனம் இல்லை. தன் தொழிலை எவ்வித குறையும் இன்றி முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும் என்னும் எண்ணம் நிச்சயம் அவருள் இருந்திருக்க கூடும்.
பின் என்னுடன் வந்தவனுக்கு எழுபது ரூபாயும் என்னிடம் நூத்தி இருபது ரூபாயும் முடி திருத்த வாங்கி கொண்டார். ‘அண்ணே போன தடவ எனக்கு நூறு ரூபா தான் வாங்குனீங்க என்றேன்’. (அந்த இருபது ரூபாயை வைத்து பக்கத்து டீக்கடையில் பஜ்ஜி சாப்பிட நினைத்திருந்தேன்). அவர் சற்று தயங்கி ‘அதனால ஒன்னும் இல்ல தம்பி.. இந்த மீதி ரூபாய்’ என கொடுத்தார்.
அதை வாங்கி….. சூடாக நாலு பஜ்ஜியை குருமாவில் போட்டு முக்கி சாப்பிடும் போது சிந்திக்கலானேன்.
இக்காலத்தில் டிசைன் டிசைனாக சிலர் வியாபாரம் செய்து ஏமாற்றும் நிலையில் அசல் நேர்மையை அந்த மனிதரிடம் கற்று கொண்டேன் .
ஒவ்வொரு மனிதரிடத்தும் கண்டிப்பாக ஒரு நல்ல விசயம் இருக்கத்தான் செய்யும். தீங்கு என படும் விசயத்தை தவிர்த்து நல்லதை நிச்சயம் எடுத்து கொள்ளலாம்.
இதில் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதற்க்கும் கற்றுக்கொள்வதற்க்கும் சலூன் கடை மட்டும் ஒரு விக்கிபீடியா அல்ல.
பெட்டிக்கடை யொரு கூகுள். துணிக்கடை யொரு யூடியூப். எல்லா இடத்திலிருக்கும் எல்லா மனிதர்களிடமும் இருந்து கற்று கொண்டு தான் இருக்கிறேன் எதாவது ஒரு நல்லதை.
– கவி_கணபதி