Visitors have accessed this post 787 times.
அரசர் ஒருவர் பறவைகளின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அபூர்வமான பறவை ஒன்றின் வரைபடம் வேண்டும் என்று ஓவியர் ஒருவரிடம் கேட்டார். அவரும் வரைந்து தருவதாக கூறினார். நாட்கள் மாதங்கள் வருடங்கள் உருண்டோடியது 5 வருடம் ஆகியும் வரைபடம் கைக்கு வரவில்லை.
கோபமுற்ற அரசன் கலைக்கூடத்திற்கு சென்றார். அங்கு ஓவியரை பார்த்தவர் என்னை ஏமாற்ற பார்க்கிறாயா… ஒரு படம் வரை எவ்வளவு காலமா… என்று சீறினார்.
உடனே ஒரு திரைச்சீலையை ஸ்டாண்டில் மாட்டினார் ஓவியர். 15 நிமிடம் ஒரு அபூர்வமான பறவையின் படம் தயாராகிவிட்டது. ஓவியத்தை கண்டு மெய் சிரித்தவர், ஓவியரை பாராட்டினார் அரசர். இருப்பினும் அவர் மீது இருந்த கோபம் குறையவில்லை.
அழகான படத்தை 15 நிமிடம் வரைந்து விட்டீர்கள், இருந்தாலும் ஏன் ஐந்து வருடமாக என்னை காக்க வைத்தீர்கள் என்று கேட்டார்.
உடனே அறைக்குள் சென்ற ஓவியர் ஒரு பெட்டியை கொண்டு வந்தார். அதிலிருந்து பல வரைபடங்களை எடுத்தார்.
இறகுகள், இறக்கைகள், கால்கள், கண்கள், அழகு என தனித்தனியாக வரைபடம் இருந்தன.அரசருக்கு ஒன்றும் புரியவில்லை.
அரசே.. ஒவ்வொரு நாளும் ஒரு படங்களை வரைந்து கொண்டிருந்தேன். இன்றுதான் முழு வடிவம் பெற்றது என்றார்.
நம் வாழ்க்கையும் இப்படித்தான். நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தருணமும் முக்கியமானவை. அவற்றை சரியாக பயன்படுத்தினால் சிறப்பான எதிர்காலம் அமையும். பெரிய செயல்களை உருவாக்க வாழ்வின் ஒவ்வொரு சிறிய செயல்களும் உதவுகின்றன.