Visitors have accessed this post 144 times.

சிலையாய் சிலர்

Visitors have accessed this post 144 times.

மலை கிராமங்கள் என்றாலே அந்நிய மனிதர்களுக்கு ஒரு காட்சி பொருள் தான். பொன்னிச்சோலை மலை குன்றுகளுக்கு உறவாய் ஓடையும், ஏரியும், இதமான தென்றலுக்கும் சொந்தக்காரர்கள் இருந்திருந்தால் கட்டாயம் கட்டணமில்லாமல் காணக் கூட அனுமதிக்க மாட்டார்கள். மலைவாசி மக்கள் அதிர்ஷ்டசாலிகள் அதனால் தான் இந்த அர்ப்ப நவநாகரிகம் அவர்களிடம் தோற்றுப் போய் கிடக்கிறது.

 

 

நீ பேச ஆரம்பித்து விட்டால் இறைவனை கூட யோசிக்க செய்து விடுவாய்.

 

டேய் அர்பனடா நான் மனிதனுக்கு மயங்க தான் தெரியும் அவன் பெரியவன் இயற்கை என்னும் கொள்ளை அழகை மனிதனுக்காக சமைத்தவன் .ஒரே பூமியில் பாலையையும் சோலையையும் படைப்பது எவ்வளவு பெரிய இறைவனின் அதீத கற்பனை பார்த்தியா!!! பாலையின் தாக்கம் சோலைகளை காக்கும் மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கை என்பது ஒரே கோட்ல எங்கேயோ ஒத்துப் போகுது பாரு.

 

 ஐம்பூதங்கள் தான் மனித இயக்கத்திற்கு ஆதாரம் .இறைவன் தான் பெரியவன் என்ற இறுமாப்போடு இருந்திருந்தால் மரங்கள் மூலமாக மனிதன் சுவாசிக்கின்ற காற்றை கொடுத்து இருக்க மாட்டான்.

 

டேய் தாமு என்னடா நீ பேசிக்கிட்டே இருக்கிறியே? எங்க பாத்தாலும் குடிசையாய் இருக்குது எங்கடா தங்க போறோம்?

 

சாரதி கொஞ்சம் பொறு கூழும், கஞ்சியும், திணையும், தேனும் யார் நெஞ்சிலும் வஞ்சத்தை வளர்ப்பதில்லை .இவர்கள் எதார்த்த மனிதர்கள் பேசிப் பார்ப்போம் கட்டாயம் உதவி செய்வார்கள். சாலைகள் வெறிச்சோடி போயிருந்தது. குடிசையின் வாசல்களில் கோணி மூட்டைகளாக மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். லேசான காற்று ஈரப்பதத்துடன் சிமினி விலக்கோடு விளையாடிக் கொண்டிருந்தது. 

 

அறுக்காயி வீட்டு ஒட்டு திண்ணையில் படுப்பதற்கு ஏதுவாய் போனது சாரதி தன் பையை தூக்கிக் கொண்டு ஓடியவன் தொப்பன்று விழுந்து படுத்தான். 

 

ஏண்டா ஒரு நாள் கூட உன்னால தூங்காம இருக்க முடியாதா? இது யாரு வீடுன்னே தெரியல.இப்படி உன் வீடு மாதிரி படுத்து இருக்கிற, வீட்டுக்காரன் பார்த்தா மாட்டு வால கொசு விரட்டுவது மாதிரி உன்ன விரட்டி அடிக்க போறான் பாரு .

 

ஒரு பானை கஞ்சியும் ஒத்த மிளகாயும் பொழப்பா போச்சு என்று புலம்பிக்கொண்டு தண்ணியில சாணியை போட்டு அரக்க பறக்க கரைச்சுக்கிட்டு இருந்தால் அறுக்காயி ,விடியற் பொழுது நமச்சலோடு கம்பு கூட்டை சொரிந்தபடி கண்விழித்தான் தாமு.

 

நாத்து முடி போல பரட்டை தலை சுங்குடி புடவையை கொஞ்சிக்கட்டி தூக்கி சொருகியபடி தக்கடிப்புக்குடின்னு தருதருத்தவாறு சாணிய வாசல தெளிச்சுக்கிட்டு இருந்தா அருக்காயி . இவ வேகத்தை பார்த்தா அடிச்சிடுவா போலவே இந்தாடா சாரதி அவனை இழுத்து அசைத்தான் தாமு. வெடுக்கெடுத்தவன் என்னடா ஏன் தொல்லை பண்ற என்றவாறு புரண்டு படுத்தான் சாரதி

 

 வீட்டுக்காரம்மா சாத்த போறாடா வாடா போகலாம் அசைவு இல்லாமல் சாரதி தூங்கிக் கொண்டிருந்தான்.செய்வதறியாது முழித்துக் கொண்டு இருந்தான் தாமு.வரத் தண்ணிய போட்ட சட்டியோட இரண்டு குவளையை எடுத்துக்கிட்டு தாமு பக்கத்துல வந்தா அறுக்காயி சற்று சுதாரித்தவனாய் தாமு அக்கா அது வந்து என்று வார்த்தைகளால் தடுமாறி விழுந்தான்..

 

 அருக்காயி பேச்சில ஒரு வெள்ளந்தி ,தம்பி பயப்படாதே.. ஐயா காத்தால பார்த்தேன் நல்லா தூங்கிக்கிடந்தீங்க அதான் உசுப்பாமா போயிட்டேன், செருமியவாறு அக்கா நாங்கள் வெளியூரு.. இந்த ஊருக்கு ஒரு வேலையா வந்திருக்கோம். ராத்திரி படுக்க இடம் கிடைக்கல அதான் இங்க படுத்துட்டோம் .

 

ஏன் தம்பி… அதுக்கு என்ன? நான்  ஒத்தக்கட்டையா கஞ்சி காய்ச்சி குடிச்சிக்கிட்டு இங்குனே கிடக்கிறேன்.அது சரிப்பா என்ன வேலையா வந்திருக்க?

 

 அக்கா… போக போக சொல்றேன் என்றவன்  சாரதிய உசுப்பினான் தாமு.

 

 ஏம்பா தம்பி… வற தண்ணிய குடிக்கிறது.தாமுவின் தேடல் தங்க ஒரு இடம் என்பதால் அக்கா நீங்க குடிங்க நாங்க வருகிறோம் என்று அங்கிருந்து தூரத்தில் இருக்கும் ஒரு டீக்கடையை நோக்கி நடந்தனர்.

 

சாமியப்பன் டீக்கடை சோக்காலிகளுக்கு சொர்க்கம். கொம்பு சீவி பால் எடுக்கிறவன். கஞ்ச பய… வியாபாரத்தில கேனையன் போல நடிப்பு இரட்டை லாபம் பார்க்கிறவன். யோவ் விடுறியா அவனைப் பற்றி தெரியாதா?

பெருசு ரெண்டும் அந்தரங்கமாய் பேசிக்கொண்டிருந்தது.

 

 சாரதி என்னடா நடந்துகிட்டே தூங்குறியா? இந்த பெருசுதான்டா சரியான ஆளு… நமக்கு தங்க இடம் கிடைச்சிடும். கொஞ்சம் பொறு… இந்தா வாரேன் என்றவன்  பெருசுகளுடன் எதார்த்தமாக பேசத் தொடங்கினான்.அரை மணி நேரத்தில் பொன்னிச்சோலை வரலாறு தாமு கைக்கு வந்தது.

 

 ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியை இருவரும் சூரிய உதயத்திற்குள் சென்றடைந்தனர்.பெருசு சொன்னது போல் அந்த ஒத்த குடிசையும், வாசலில் நீளத்தட்டு கொட்டகையும், ஆரவாரம் அற்று போயிருந்தன. மனிதர்கள் சிலையாகி மௌனமாய் பேசிக்கொண்டிருந்தனர். 

 

குமரன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தான். அந்த குடிசையின் சூழல் ஆறுதலாய் இருந்தது. தோட்டத்திற்கு செல்லும் வழியில் ஒரு உருவம் பார்ப்பதற்கே வம்பாக தெரிந்தது.

 

முரட்டு கொம்பு திமிறிய திமில் போல உச்ச பச்ச எகத்தாளத்தோடு… யாரது அங்கே கம்பன் குடிலுக்கு வந்திருக்கும் வள்ளுவன் யாரென்றார் ராமையா.

 

 தாமு இலகுவாக, நாங்கள் குமரனை பார்க்க வந்தோம் …நீங்கள்தான் குமரனா என்றான்.

 

 இல்லை நான் குமரனுக்கும் கிழவனுக்கும் இடையில் ….என்ன உனக்கு வேணும்? குமரனை பார்க்கணும் அவ்வளவுதானே அதோ பார் அவர்தான் குமரன், போய் நன்றாக பார் என்றவாறு நகர்ந்தார் ராமையா.

 

 பக்குவமான அணுகுமுறை எளிமையாக, எங்களது தேவைகளை  புரிந்து கொண்டு அங்கேயே தங்கிக்க அனுமதி தந்தார். குமரன் ஒரு சிற்பி என்றதும் எனக்கு அவர் மேல் பெரும் பக்தியே வந்தது. நாட்கள் கடந்தன… எங்களுடைய மலைவாசி மக்களின் வாழ்க்கை முறை ஆய்வுக்கு பேருதவியாக இருந்தார் குமரன். 

 

ராமையா போன்றவர்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சொற்பமே. அந்த அளவுக்கு ஏட்டிக்கு போட்டியான ஆளு .

 

சிற்பங்கள் ஏற்றிய வண்டி காட்டுப்பாதையை கடந்து கொண்டிருந்தது.

 

 ஏன் குமரன் நீங்கள் வடிக்கும் சிற்பங்கள் சிரிக்கும்  அளவுக்கு கூட நீங்கள் சிரிப்பது இல்லையே ஏன்? சிறு மௌனத்திற்கு பிறகு தாமு விடாப்பிடியாக கேட்டதால் குமரன் வாயை திறந்ததான். மனிதனாக இருந்த பொழுது சிரித்தேன், விளையாடினேன். இந்த சோலை எனக்கு சொர்க்கமாய் தெரிந்தது.தேனும், கிழங்கும்,  பழமும் எனக்கு அமிர்தத்தை விட அன்று இனித்தது. தாமு நான் உங்களை என்னால் முடிந்தவரை உணர்ந்து கொண்டு தான் வருகிறேன். தேடல் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே கொடுக்கும். உங்களது கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

 

மென்மையான சூழலை நீங்கள் பேசும்போது என்னால் அனுபவிக்க முடிகிறது.குமரன் நான் கேட்ட கேள்வியை கடந்து எங்கோ போகிறீர்கள்.ஆனால் என்னால் தான் உங்களிடம் உரிமையோடு கேட்க முடியவில்லை. 

 

தலையை சாய்த்தவாறு , நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு என்னிடம் ஒன்றும் சுகமான சங்கீதம் இல்லை தாமு. ஒப்பாரி கலந்த சோக சங்கீதம் என்னுள் நிரம்பி இருப்பதனால் தான் நான் மௌனமாக ரசிக்கிறேன்.

 

 என்ன சொல்றீங்க குமரன்? என்று சாரதி அதிர்ந்தார். மன்னிக்கவும் குமரா எதுவும் பொம்பளைய நம்பி மோசம் போயிட்டீங்களா?

 

சாரதி என்றவாறு சிரித்தான் குமரன்.  நான் கஞ்சிக்கே காஞ்சி கிடந்தவன் .என்னுடைய சிறு வயது கஞ்சியை தேடிக்கொண்டே போன வழியிலே எனக்கு 29 வயசு ஆயிடுச்சு. எனக்கு இருந்ததெல்லாம் என் அக்கா அஞ்சம்மா தான். எனக்கு உறவுனு சொல்லிக்க இருந்த அந்த ஜீவன் வாழ்ந்த கொஞ்ச காலமும் எனக்காகத்தான். கண்களில் கண்ணீர் தொண்டை அடைத்தது குமரனுக்கு.

 

 தாமு சாரதியின் கையைப் பிடித்து அமிக்கியவாறு பேசாமல் இருடா எதுக்கு இப்படி அவரை போட்டு படுத்துற கண்கலங்குறாரு பாருடா… தாங்கலடா என்று தலையை குனிந்து கொண்டு நெற்றியை தடவினான்.

 

 

விடுங்க குமரா நான் ஏதோ உங்கள கஷ்டப்படுத்திட்டேன் போல …சரி பாதையை பார்த்து வண்டியை ஓட்டுங்க….உச்சிப் பொழுது பசி வவுத்த கிள்ள… ஓடைப்பள்ளம் கலப்பு கடையில வண்டி நின்றது.

 

 குமரன் வண்டியை விட்டு இறங்கியதும் ஏதோ ஒரு வேகம் மறுபடியும் வண்டியில் ஏறி மாட்டை அதட்டி விரட்டினான் .

 

தாமுக்கு ஒன்றும் புரியவில்லை. குமரா சாப்பிட தானே வந்தோம் ஏன் மறுபடியும் கிளம்பிட்டீங்க? முகமெல்லாம் வேர்த்து வழிந்தது குமரனுக்கு… கண்கள் சிவக்க இன்னும் ஒரு மையில் தூரத்துல ஒரு கடை இருக்குது அங்க சாப்பிட்டுக்கலாம் என்று வண்டியை விரட்டினான் குமரன்

 

 வண்டி வேகம் குறையாமல் போய் கொண்டு இருந்தது .மௌனம் மட்டும் தான் மூவரிடமும்,  காட்டாற்று பள்ளம் வண்டி ஏறி இறங்கியபோது கடார் என்ற சத்தம் சக்கர முறியும் அளவுக்கு வேகமாக இருந்தது . குமரா மெதுவாக போங்க ஏன் இந்த வேகம்? ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் குறைந்து போய் விட மாட்டோம் என்ன நான் சொல்றது புரியுதா?என்றான் தாமு.

 

 மாட்டின் தும்பை பிடித்து இழுத்தவாறு தாமுவின் பக்கம் திரும்பினான் குமரன். இயல்புநிலை அற்றவனாய், இது சாப்பாட்டுக்கான வேகம் இல்லை. தாமு என் கதை மிகவும் வித்தியாசமானது என்று கண்களை துடைத்துக் கொண்டு தொடர்ந்தான் குமரன். 1992 ஆம் வருடம் ஜனவரி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் அக்காவும் சிற்பத்துக்கு கல் எடுப்பதற்காக எங்க காட்டுக்கு பக்கத்தில் உள்ள மலைக்கு போனோம். லேசாக வானம் தூறிக் கொண்டு இருந்தது.காரசிங்கம் போலீஸ்காரர் வண்டியில வந்தவரு எங்களை இடைமறிச்சி எங்க போறீங்கன்னு? கேட்டாரு.நான் கூட பேசாம தான் நின்னேன். அக்கா முந்திக்கிட்டு, ஐயா! அந்த மலைக்கு போறோம்  கல்லு பொறுக்கிட்டு வர அதான் சாமி இந்த பக்கமா போய்கிட்டு இருக்கோம்னு சொல்லிட்டு என் பின்னால ஒதுங்கி மறஞ்சு நின்னுச்சு. அந்த கொம்பு மீசை ஒத்தப்பனை போல உயரம் கொஞ்சம் பார்க்கவே பயமா இருந்துச்சு. மிரட்டும் தொணியில் அடேய் கல் உடைக்கிறதுக்கு வெடிகுண்டு வைத்திருக்கப் போறானுங்க பாத்து போங்கடா என்றவர் பைக்கை நிமிடத்தில் தட்டிக்கிட்டு வளைவைத் தாண்டி போயிட்டாருங்க..

 

அந்த மலையை மொத்த குத்தகையா பரம்பூர் ஆளுக எடுத்து இருந்தாக.நல்ல மனசுங்க நானும் எங்க அக்காவும் கல்லு கேட்டா உனக்கு ஏத்த கல்லை எடுத்துட்டு போடான்னு சொல்லுவாரு அந்த காவக்காரரு. நாங்க கொடுக்கிற காச வாங்கிக்குவாரு கல்ல தூக்கிக்கொண்டு திரும்பி வர ஆறு மணி ஆயிடுச்சு. நாங்க போகும்போது பார்த்த இடத்தில் நின்று கொண்டு இருந்தாருங்க காரசிங்கம் .எங்கள பார்த்ததும் இப்பதான் வாரீங்களா வண்டியை விட்டு இறங்கி எங்களை சுத்தி வந்தாருங்க. அக்கா கொஞ்சம் கெஞ்சியபடி சாமி பொழுது போச்சுங்க தல சுமை கழுத்து பொரடிய வெட்டுதுங்க கொஞ்சம் வழியை விட்டிங்கனா போயிருவோம் சாமி மன்னிச்சிடுங்க என்றவாறு அக்கா ஒதுங்கி ஓடியாந்துடுச்சு. 

 

மறுநாள் காலையில மலைய காவக்காரர் எங்கள் வீட்டுக்கு வந்தாரு .அக்கா அருவியில தண்ணி எடுக்க போயிருந்தது நான் பாறையை சமம் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஏதோ ஒரு தடுமாற்றம் அவர் அதற்கு முன் அப்படி நான் பார்த்ததில்லை. அசட்டுத்தனமாக நெளிந்தவர்,  என்னப்பா நீங்க உங்களை எவ்வளவு நம்பினேன் இப்படி பண்ணிட்டீங்களே என்றவர் வந்த வழியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு பேசினார் எனக்கு ஒண்ணுமே புரியல நாங்க என்னங்க பண்ணினோம் ஐயா என்ன சொல்றீங்க,நீங்கள் வீட்டுக்கு தேடி வரும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் செய்யலையே சொல்லுங்க ஐயா என்றேன். அது ஒன்றும் இல்லை தம்பி நேத்து நீங்க வந்துட்டு வந்ததுக்கு அப்புறம் நான் வெச்சிருந்த கை லைட்ட  காணும் அதான் நீங்க ஏதாவது எடுத்துக்கிட்டு வந்துட்டீங்களா என்று கேட்டுட்டு போகலாம்னு வந்தேன். ஐயா நாங்கள் ஏழைகள் தான் திருடி பிழைக்கும் அளவுக்கு அசிங்கமானவர்கள் இல்லை மன்னிச்சிருங்க ஐயா உங்களை தவிர வேறு யாராவது என்னிடம் கேட்டிருந்தால் அவர்கள் முன்னால் நான் என்னையே மறந்திருப்பேன். உங்கள் வயது என்னை தடுக்கிறது என்று கத்தினேன்

 

 அந்த நேரம் என் அக்காவும் அங்கு வந்துவிட்டாள். பிரச்சினையை கேள்விப்பட்டதும் என்னை திட்டியபடி அவள் கலங்கினாள். ஆனால் காவல்காரன் எங்க வீட்டை விட்டுப் போகும்போது போலீசுக்கு போவதாக கூறி சென்றார். அது அன்று இரவு முழுவதும் எங்களை தூங்க விடவில்லை. 

 

என்ன சொல்றீங்க குமரன் கை லைட்டா?  எரிச்சலோடு அவனைப் போய் பெரிய மனுசன்னு சொல்றீங்களே என்று இடைமறித்தான் சாரதி. 

 

குமரன் நான் வேற… சொல்லுங்க அப்புறம் என்ன ஆச்சு ?

 

பொழுது இருக்கும்போது ஒரு போலீஸ்காரர் எங்க வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் என் அக்கா பித்து பிடித்தவள் போல் வீட்டுக்குள்ள ஓடினாள். எங்களுக்கு போலீசை ரோட்டில் பார்த்தாலே பயம். அவங்க வீட்டுக்கு வந்தா எப்படி இருக்கும் எங்க அக்காவை அணைத்துக்  கொண்டு கண்ணீரோடு அவரிடம் சென்றேன்

 

எடுத்ததுமே களவாணி பயலுகளா அஞ்சு மணிக்கு ஐயா ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருக்காரு என்றதும் அக்கா சோர்ந்து பக்கத்துல கிடந்த கருங்கல்லில் விழுந்து மண்டைய பொத்துக்கிச்சு .எங்களுக்கு  யாருமில்லை எங்க ஊருக்கு பக்கத்துல கம்யூனிஸ்ட் ஆளு  தியாகராஜன் ஐயா அவரை பார்க்க நானும் அக்காவும் ஓடினோம் அவர் ஏதோ ஒரு ஊருக்கு போயிட்டாருன்னு  சொன்னாங்க திரும்பி வந்துட்டோம்.சாயங்காலம் ஆறு மணிக்கு அக்காவை கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு போனேன். காரசிங்கம் போலீஸ்காரர் என்னன்னு கூட கேட்காம எங்க அக்கா முன்னாடி என்னைய போட்டு மாட்டை அடிப்பது போல் அடித்தார். என் அக்கா அடிக்காதீங்க, அடிக்காதீங்கன்னு அவர் காலில் விழுந்து கத்துனது. நாங்க திருடல  எவ்வளவோ சொன்னோம் அவர் நம்பல என்னை நிர்வாணமா அக்கா முன்னாடி நிக்க வச்சு அடிச்சார் அக்கா அழுதது எனக்கு இன்னும் கேட்டுக்கிட்டே இருக்குது கொஞ்ச நேரத்துல நான் அப்படியே மயங்கிட்டேன்

 

 கண் விழித்துப் பார்த்த பொழுது விடிஞ்சி இருந்தது என்னால எழுந்து கூட நடக்க முடியல ஒரு பள்ளத்தில் என்னையே எரிஞ்சிருந்தாங்க தட்டு தடுமாறி அங்க விழுந்து இங்க விழுந்து அம்மணத்தோட வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டி இருந்தது.பார்த்ததும் எனக்கு அப்பொழுதுதான் என் அக்கா ஞாபகம்  வந்தது. கல்லால் வீட்டு பூட்டை  உடைத்து சட்டையும், வேட்டியும் கட்டிக்கிட்டு அக்காவை தேடி ஓடினேன்.

 

தாமு அழுது கொண்டிருப்பான் என்று குமரன் நினைக்கவில்லை. சிறிது நேரம் மேலும் கதையை தொடங்க தடுமாறினான் குமரன்.அதை உணர்ந்த தாமு சொல்லுங்க குமரன் அக்கா எங்க போயிருந்தாங்க? சொல்லுங்க குமரா… இதை நான் கொடுமையின் உச்சமாக உணர்கிறேன் என்றான். தொடர்ந்தான் குமரன்…நீண்ட நாள் மனகுமுறல் அவர்களிடம் கதையை சொல்லும்  பொழுது ஒரு ஆறுதலாய் இருந்தது குமரனுக்கு.

 

 நீண்ட நேர தேடல் அக்கா யாருடனும் நெருங்கி பழகி பார்த்ததில்லை. ஊரெல்லாம் தேடியும் அக்காவ பார்க்க முடியல. பசி மயக்கம் வீட்டில் கஞ்சி பானையில் நிறைய இருந்தது. ஊத்தி குடிச்சிட்டு, கட்டத் திண்ணையில் சாஞ்சுகிட்டு இருந்தேன். ராமையா அண்ணன் காட்டுப்பகுதிக்கு  பக்கத்துல இருந்து குமரா,  குமரான்னு கத்திகிட்டே ஓடி வந்தார் .பதறிப் போய் அவர்கிட்ட ஓடினேன் மூச்சு திணற குமரா, குமரா அங்க போய் பாருடா அக்காவை மிருகம் அடிச்சு போட்டுருக்கு. உடம்புல ஒரு ஒட்டு துணி கூட இல்லை என்று கதறினார்  தலை தெறிக்க அவர் சொன்ன திசையை நோக்கி ஓடினேன். அக்காவை ஊர் மக்கள் பனை ஓலையை போட்டு மூடி வைத்திருந்தார்கள். கத்தி அழுது புரண்டு அடக்கம் செய்துவிட்டு இரவு ஊர்க்காரர்கள் துணையுடன் வீடு சில மனிதர்களால் நிரம்பி இருந்தது. 

 

ஊர்க்காரர்கள் சொன்னது போல் அக்காவை மிருகம் அடித்துவிட்டது என்று நினைத்து மனசை தேத்திகிட்டு இருந்தேன். என் நிலைமையை கேட்டுட்டு ஒருநாள் அந்த காவக்காரன் வழியில என்னை பார்த்து நொறுங்கிப் போய் என் அருகில் வந்து தம்பி என்ன மன்னிச்சிருப்பா அந்த போலீஸ்காரன் பேச்சைக் கேட்டு உனக்கு துரோகம் பண்ணிட்டேன்பா குமரா .அந்த போலீஸ்காரன் தான் உன் அக்காவை கெடுத்து கொன்னுட்டான். உன்னை அடிச்சு மயக்கம் போட வச்சிட்டு உன் அக்காவை பலவந்தமாக எல்லாத்தையும் முடிச்சுட்டேன் என்று குமரனின் காலில் விழுந்தார்.

 

 என் இருதயம் நூறு துண்டுகளாக வெடித்து சிதறியது. அந்த போலீஸ்காரரை ஏதாவது செய்யணும்னு இன்று வரை எனக்கு ஆத்திரம் இருக்கிறது. ஆனால் என் அக்காவின் மரணம் உள்ளூர் காரர்களின் எண்ணப்படி மிருகம் கொன்னதாகவே இருக்கட்டும். ஒருவன் என் அக்காவை கெடுத்து சீரழித்து கொன்றான் என்பது என்னை தவிர யாருக்கும் தெரியாமல் காத்து வருகிறேன். ஒரு சில நேரம் கம்யூனிஸ்ட் தியாகராஜனிடம் உண்மையை சொல்லி என் அக்காவின் மரணத்திற்கு தீர்வு கண்டிட வேண்டும் என்று தோணும். ஒரு ஏழை சிற்பிக்கு நியாயம் கேட்பதற்கு பின்புறம் என்ன இருக்கிறது என்று திரும்பி விடுவேன்…

 

சாரதி குமுறியவாறு குமரா பயப்படாதே இப்ப நாம மூணு பேர் இருக்கிறோம் அவனை கொன்று விடலாம் யார் அவன் சொல்லு குமரா என்ற

 வேகத்துடன் பேசினான், தாமு மௌனம்  அசைவில் சாய்ந்து சிலைகளில் கோவிலில் இருக்கும் சில நிமிடங்களுக்கு பிறகு தர்மகர்த்தாவிடம் இருந்து கூலியை பெற்றுக் கொண்டு அங்கிருக்கும் அம்மன் சிலையை பிரிய முடியாமல் அக்காவின் நினைவோடு கோவிலில் வடக்கு புறமாக புரண்டு படுத்தான் குமரன்..

 

தாமு, சாரதி ஏதாவது சாப்பிடுங்க சாயங்காலம் போகலாம் மாடு கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்

 

தாமு நிலை குலைந்தான் சிறிது நேரத்துக்கு பிறகு குமரா ஏன் நீங்கள் அந்த கம்யூனிஸ்ட் காரர் தியாகராஜனிடம் சொல்லக்கூடாது?  இப்பொழுது நாங்கள் இருவரும் உங்கள் கூட இருக்கிறோம் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.

 

தாமு நீங்கள் சொல்வது சரிதான் அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது . அதுதான் நான் என் அக்காவுக்கு செய்யும் பெரும் உபகாரம். ஆனால் அவனைக் கண்டாலே நான் ஒதுங்கி ஒடுங்கி விடுகிறேன். மதியம் நான் அந்த கலப்பு கடையை விட்டு வந்ததற்கு அங்கு அந்த கார சிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தான் காரணம்.

 

மக்கள் போராளிகள் உங்களைப் போன்றவர்களை காப்பாற்றுவதற்காக தான் நீங்கள் உங்கள் பிரச்சினையை அவர்களிடம் சொல்லாமல் இருந்தால் எப்படி சாத்தியம் ஏன் குமரா நான் ஒன்று கேட்கிறேன் அவனை கொலை செய்ய முயற்சி செய்கிறீர்களா சொல்லுங்கள்…

 

அட போங்க தாமு எங்க ஊர்ல நரசப்பன் என்பவர் எங்க மக்களுக்கு உதவியாக இருந்தார் விரோதிகள் அவரது அவர்கள் பலியாமும் எதிர்த்து வாழ இங்குள்ள எங்களுக்கு அதை நீங்க எப்படி வேணுமானாலும் எடுத்துக்கலாம்

 

 

குமரா அப்ப நம்ம பிரச்சனைக்கு நாமே தீர்வாகலாம் வாங்க நாம அவனை தீர்த்து கட்டிடலாம் உங்கள்  ஒருத்தரால் தானே முடியாது குமரா நாங்களும் இருக்கிறோம் இந்த கொடுமைக்கு நிச்சயம் நியாயம் கிடைத்தே தீர வேண்டும் குமரா நான் சொல்வதைக் கேளுங்கள் என்று புழுவாய் துடித்தான் தாமு…

 

என் பிரச்சனையில் தாங்கள் யார் தாமு … சிறந்த போராளிகள் தான் நாட்டுக்கு இன்று தேவை என்னை போல் கோழைகள் அல்ல…

இப்படிக்கு குமரன்…

Leave a Comment

Write and Earn with Pazhagalaam