Visitors have accessed this post 804 times.
செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.
குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்து தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.
சங்கங்கள் இருந்தமைக்கும், அவை பழமை வாய்ந்தவை என்பதற்கும் உரிய பல இலக்கியக் குறிப்புகள் சங்கப்பாடல்களிலேயே கிடைக்கின்றன.