Visitors have accessed this post 993 times.
மொழி என்பது அறிவின் சாளரம். நாம் நமது கருத்துகளையும் தேவைகளையும் பிறருக்கு தெரிவிக்க மொழி உதவுகிறது. மொழியின் மூலமே நாம் அறிவினைப் பெறுகிறோம். நமது தாயிடமிருந்து நாம் கற்கும் மொழியைத் தாய்மொழி என்கிறோம். ஒரு தாய் தன் குழந்தையுடன் உரையாடும் மொழி தாய்மொழி.
நாம் இவ்வுலகில் பிறந்தது முதல் நம்மை சுற்றி தாய் மொழியே ஒலிக்கிறது. நாம் வளரும் பொது வேறு பல மொழிகளில் புலமை பெற வழி ஏற்பட்டாலும், நமது தாய் மொழியே நமது அறிவின் முதல் திறவு கோலாக அமைகிறது. நமது உடலின் பசிக்கு நமது அன்னை உணவளிப்பது போல நமது அறிவின் பசிக்கு நமது தாய் மொழியே உணவளிக்கிறது. எனவே நமது தாய் மொழியை நாம் நமது தாய்க்கு நிகராகக் கருதவேண்டும்.
மாணவப் பருவத்தில் தாய் மொழிப் பற்று நாம் மிக முக்கியமாக வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உணர்வாகும். தாய் மொழிப் பற்று மரபு சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு வித்திடும். மேலும் தாய் மொழிப் பற்று தன்னம்பிக்கையை வளர்த்து நாம் வாழ்வில் ஒரு சாதனையாளராகத் திகழ வழி செய்யும்.
தாய் மொழியின்பால் பற்று உள்ளதற்கு அடையாளம் நமது தாய் மொழியில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்வதேயாகும். முடிந்த வரையில் நமது தாய் மொழியில் பிற மொழிக் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும். தாய் மொழில் சில இலக்கியங்களையாவது படித்தால் நன்மை பயக்கும்.
நமது தாய் மொழி நமக்கு இன அடையாளத்தையும் தனித்துவத்தையும் வழங்கும். அண்மையில் மேற்கத்திய நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு இந்த உலகிலேயே தாய் மொழிப் பற்றில் சிறந்தவர்கள் தமிழர்களே என்பதை கண்டறிந்துள்ளது. நமது தாய் மொழியாம் தமிழ் மொழியின்பால் பற்று கொண்டு அதன் பெருமையை உலகோர் அறியும் வகையில் பறை சாற்றுவோம்.