Visitors have accessed this post 839 times.
தீயணைப்பு துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி
ஆதிகால மனிதன் பயந்து நடுங்கிய முக்கிய எதிரி நெருப்பு .ஆனால் விரைவில் அந்த எதிரியை நண்பனாக்கி உணவு சமைக்க பயன்படுத்தி கொண்டான் மனிதன் .நினைத்த நேரத்தில் நெருப்பை வரவழைக்கும் தந்திரத்தை அறிந்து கொண்டதில் மனிதனின் முக்கிய வளர்ச்சி ஒளிந்த்திருக்கிறது.இன்று வரை உலகில் வேறு எந்த உயிரினமும் உணவை சமைத்து சாப்பிடுவதில்லை .மனிதனுக்கு அந்த பக்குவத்தை அளித்தது நெருப்பின் பயன்பாடுதான் .
நெருப்பை என்னதான் நல்லவிதமாக பயன்படுத்தினாலும் அது ஆபத்தானதுதான். நெருப்பால் ஏற்படும் விபத்துகள் ஏராளமான உயிர்களை கொன்றுள்ளன.
நெருப்பினால் ஏற்படும் தீவிபத்துகளை கட்டுப்படுத்த இன்று தீயணைப்பு படைகள் இருக்கின்றன. இருந்தாலும் தீயணைப்பு படையின் தொழில்நுட்பம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானது.
அலெக்ஸாண்ட்ரியாவை சேர்ந்த ( இப்போதைய எகிப்த் ) செஸிபியஸ் என்பவர் ஒரு வகை பிஸ்டன் பம்பை கி.மு.200-ல் உருவாக்கி இருந்தார்.இது தீயணைப்பு சாதனமாக பயன்பட்டது. 1500-ம் ஆண்டில் ஐரோப்பாவில் மற்றோருவகை பிஸ்டன் பம்புகள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் அவர்கள் செஸிபியஸ் உருவாக்கிய பம்ப்பை அறிந்ததில்லை.
1600-ம் ஆண்டு வரை தீயணைப்பு படைக்கான தேவையை உலக நாடுகள் உணரவில்லை.இருந்தாலும் தீயணைப்பு குழுக்கள் செயல்படவே செய்தன . சிறிய தீவிபத்துகளை மக்களே குழுவாக சேர்ந்து சமாளித்தனர் .
1666-ல் லண்டன் தீவிபத்து வரலாற்றில் தீவிபத்தின் கோரத்தாண்டவத்தை உலகிக்கிற்கு உணர்த்தியது .இங்கிலாந்து மக்கள் அப்போது தான் தாங்கள் பயன்படுத்தும் சிறிய பம்புகள் தீயை அணைக்க போதுமானதல்ல என்பதை உணர்ந்தனர் .நவீன கருவிகள் இருந்தால்தான் இனிமேல் இது போன்ற பயங்கர தீவிபத்துகளை எதிர்கொள்ள முடியும் என்று அறிந்து கொண்டனர் .
அதுவே அவர்களை பெரிய பிஸ்டன் எந்திரத்தை தயாரிக்க தூண்டுகோலாக அமைந்தது . அதுமட்டுமல்லாமல் அதை சுலபமாக எடுத்து செல்லும் வகையில் ஒரு வண்டியில் பொருத்தி தீயணைப்பு வாகனத்தை உருவாக்கினார்கள் .அதற்க்கு முன்பு வரை தோல் குழாய்களே பயன்பட்டன அதை பயன்படுத்தும் போது பல சிக்கல்கள் கொண்டதாக இருந்தது . அதன் பிறகு இரும்பு குழாய்கள் ,வாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன .
இந்த காலத்தில் தீயணைப்பு படைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வில்லை . அது காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டன . தங்கள் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்திருந்த கட்டிடங்கள் , நிறுவனங்களுக்கு மட்டுமே அவை தீயணைப்பு சேவையை வழங்கின .
அமெரிக்காவில் பீட்டர் ஸ்டுயூவாசன்ட் என்ற டச்சு கவர்னர் தீயணைப்பு படையை உருவாக்கினார் . மரவீடுகள் அதிகம் உள்ள நகரங்களில் தீயணைப்பு கருவிகளுக்கு கூடுதலாக வரிவிதித்தார். அப்போது பக்கெட் பிரிகேட் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டது .பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரிசையாக நின்று கொண்டு வாளிகள் ( பக்கெட் ) தண்ணீரை நிரப்பி ஒருவர் மற்றோருவர் கைக்கு மாற்றி நெருப்பை அணைக்க உதவுவார்கள் . இவர்கள் “பக்கெட் பிரிகேடியர் “ என்று அழைக்கப்பட்டனர் .
தீயை அணைக்கும் எந்திரம் 17-ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது .அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பெஞ்சமின் பிராங்க்ளின் முழுமையான தீயணைப்பு துறையை தொடங்கினார்
தீயணைப்பு பிரிவில் பல முன்னேற்றங்களும் ,மாற்றங்களும் மிக மெதுவாகவே நடந்தன .
1841-ல் அமெரிக்கா இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தானியங்கி தீயணைப்பு என்ஜினை உருவாக்கியது . 1861-ல் நீராவி தீயணைப்பு என்ஜின் உருவாக்கப்பட்டது . இவைகள் முதல் உலக போரில் தீயை அணைக்க உதவியாக இருந்தன . குதிரைகள் இந்த நீராவி என்ஜினை வீதிகளில் இழுத்துக்கொண்டு ஓடின .
இரண்டாம் உலகப்போரின்போது தீயணைப்பு படையில் பல நவீன மாற்றங்கள் ஏற்பட்டன .தீயை கட்டுப்படுத்தும் நவீன எந்திரங்கள் ,சாதனங்கள் உருவாகின . கட்டிடங்களின் உயரத்திற்கு ஏற்ப மேலே செல்லும் ஏணிகள், அதிகமான நீரை இறைக்கும் டீசல் என்ஜின்கள் பயன்பாட்டிற்கு வந்தன தீயணைப்பு படகுகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன .
எவ்வளவு முன்னேற்றங்கள் வந்தாலும் கிராமப்புற மக்கள் இன்றும் “பக்கெட் பிரிகேட் “முறையில் நமக்கு நாமே உதவி என்ற தீயணைப்பு யுக்தியை எதிர்கொள்கிறார்கள் . ஏனென்றால் “தீயணைப்பு வாகனங்கள் வரும்வரை தீ சும்மா இருக்க போவதில்லை” என்பது அனைவரும் அறிந்ததுதானே .