Visitors have accessed this post 205 times.

நானும் என் இரண்டு கார்களும்

Visitors have accessed this post 205 times.

 

எனக்கும் வண்டிகளுக்கும் , அதாவது நான் விலைகொடுத்து வாங்கி ஓட்டும் வண்டிகளுக்கும் எனக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்துகொண்டு வருவதை நான் இன்று இல்லை, ஏறத்தாழ இருபத்திரண்டு வருடங்களாக உணர்கிறேன்.

வருடம் 2000 இல் முதன் முறை மாருதி-800 கார் ஒன்று வாங்கினேன். பழைய காரை வாங்க ஒருவருடம் திட்டமிட்டு, அடுத்த ஒரே மாதத்தில் புதிய கார் வாங்க தீர்மானம் செய்து அதே மாதத்தில் காரையும் வாங்கிவிட்டேன். (என்ன, இந்த மனிதர் ஏதோ குளறுபடி செய்பவர்போல் பேசுகிறார்? ஒரு வருடமாக பழைய கார் வாங்க திட்டம் தீட்டியவர் எப்படி புதிய கார் வாங்க முடியும் என்றுதானே குழப்பம் கொள்கிறீர்கள்). அதையும் விளக்கி வைக்கிறேன் இப்போது.

வருடம் 2000 இல் நான் பணிசெய்துவந்த பொதுத்துறை நிறுவனத்தில் போதிய உயர்வுடன் கூடிய ஊதிய மாற்றம் அமலுக்கு வந்தது. இந்த ஊதிய மாற்றம் நேரத்தில் அமையுமா இல்லையா என்பது திட்டவட்டமாக தெரியாத காரணத்தினால் தான், நாங்கள் பழைய கார் வாங்கலாம் என்று திட்டவட்டமாக திட்டமிட்டுக்கொண்டிருந்தோம். இனி உங்களுக்கு சந்தேகம் எதுவும் தேவை இல்லை.

சரி, இப்போது கட்டுரையின் சாரத்திற்கு வருவோம். கார் வாங்கத் திட்டம் தீட்டியவுடன் நானும் என் மாமனாரும் (பல வருடங்களுக்கு முன் ஸ்டியரிங் பக்கத்தில் இருக்கும் கை-கியர் பியட் வண்டி ஒட்டியிருக்கிறார்)  கார் ஓட்டக் கற்றுக்கொண்டோம்தனித்தனியாகத்தான். நான் கால் பக்கத்தில் இருக்கும் கியர் போடும் மாருதி கார் வாங்க தீர்மானித்ததால் மாருதி கார் ஓட்ட கற்றுக்கொண்டேன். என் மாமனார் ஸ்டியரிங் திருப்பியில் பொருந்தியிருக்கும் கை கியர் அம்பாசடோர் ஓட்டக் கற்றுக்கொண்டார். என் மாமனாரின் காரோட்டும் தேனிலவு இரண்டு வாரத்தில் முடிந்தது. அதன் பிறகு அவர் கடைசிவரை காரை ஒட்டவில்லை.

நான் கார் ஒட்டகற்றுக்கொண்ட பத்துநாட்களுக்குப் பிறகு ஓரளவுக்கு மாருதி கார் ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றேன். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய காரையும் வாங்கிவிட்டேன். எப்படி? பாங்கில் ஏழு வருட வண்டி கடன் மூலம்தான். புது கார் வாங்கியவுடன் இரண்டு மாதங்களில் நிரந்தர கார் லைசென்சும் பெற்றுவிட்டேன்.

 

மிகவும் ஆவலுடன் நானும் என் மனைவியும் என் அலுவலக நண்பர் ஒருவரின் துணையுடன் என் வீட்டிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் மாருதி ஷோரூம் சென்று புது மாருதி-800 (குளிர்சாதன வசதி இல்லாமல்) வாங்கி வீடு வந்தோம். என் நண்பர்தான் புது வண்டியை ஓட்டிவந்தார். வீட்டிற்கு அருகாமையில் வந்தவுடன் நானும் கொஞ்ச தூரம் காரை ஓட்டிவந்தேன்.

அன்று மாலை என் மனைவியை வண்டியில் உட்கார வைத்துக்கொண்டு பெருமையாகக் காரை வீட்டின் அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு ஓட்டிச்சென்றேன். கோவிலுக்கு உள்ளே வண்டியை ஓட்டிச்செல்ல கொஞ்சம் சிரமப்பட்டேன். ஒரு வழியாக வாகன பூஜை செய்துகொண்டு மீண்டும் பிரச்சினை இல்லாமல் வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் மாலை நான் மீண்டும் வண்டியை காரேஜிலிருந்து எடுக்கையில் கொஞ்சம் ரிவெர்ஸில் வண்டியை எடுக்கும்போது டமால் என்று காரேஜ் கதவில் ஒரு இடி இடித்துவிட்டேன் (நான் எங்கே இடித்தேன், கார்தான் இடித்தது). அதன் பிறகு மூன்று நான்கு முறை இப்படி வண்டியை இடித்திருக்கிறேன். மீண்டும் காரேஜிலிருந்து வண்டியை எடுக்கும்போது முந்து இடித்த மாதிரி அதேபோல இடித்தேன். (முந்தைய அனுபவம் இருந்ததால் action replay சரியாக அமைந்தது).

 

பின்னர் ஒருமுறை ஒரு ஆட்டோவின் பின்னால் லேசாக இடித்தேன். ஆட்டோவில் ஒரு கீறல் கூட விழவில்லை. இருப்பினும் ஐநூறு ரூபாயை இழந்தேன். இன்னொருமுறை நான் யாரையும் எந்த வண்டியையும் இடிக்கவில்லை. ஆனால் ஒரு நெரிசலான சாலையின் சிஃனலில்ஒரு அரசு பேருந்து என் வண்டிக்குப் பின்னால் வந்து லேசாக என் வண்டிக்கு லேசான சத்தத்துடன் ஒரு முத்தம் கொடுத்து சென்றுவிட்டது. (நானும் அதற்கு ஒரு முத்தம் கொடுக்கலாம் என்று பார்த்தால் அந்த அரசு பேருந்து சத்தம் போடாமல் வேகமாகப்போய்விட்டது). அரசு பேருந்து என் வண்டியை முத்தமிட்டாலும், என் வண்டி அரசு பேருந்தை முத்தமிட்டாலும், பித்தம் என் வண்டிக்குத்தான்.   வண்டியின் பின்புறம் மொத்தமும் பழுதாகிவிட்டது. இப்படியாக பட்டும் படாமலும் என் மாருதி காரை பத்து வருடங்கள்  ஓட்டினேன். ஒட்டிய தூரம் 45000 கிமீ கூட இல்லை.  அந்தப்பத்து வருடங்களில் இரண்டு முறை மட்டுமே, இருநூறு கிமீ தூரம் வெளியூர் சென்று வந்தேன். குளிர்சாதனம் பொறுத்தாமல் இருந்தது தவறு என்று உணர்ந்தேன். தனியாக குளிர்சாதனம் வாங்கி பொருத்திக்கொள்ளலாம் என்று நினைத்தேன். நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் காரை விற்கும்வரை குளிர்சாதனத்தை வண்டியில் பொருத்தவில்லை. ஏனோ இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தவனுக்கு, இருபதாயிரம் செலவு செய்ய முடியவில்லை. ஆமாம் என்னைத்தான் குறிப்பிடுகிறேன்.

பின்னர் காரை 25000 ரூபாய்க்கு ஒருவருக்கு விற்றுவிட்டேன். அதற்கு அடுத்த மாதமே வெள்ளை நிறத்தில் ஒரு ஹூண்டாய்  i-20 வாங்கினேன். மாருதியை விட இது பெரிய வண்டி. ஹார்ஸ் பவரும் அதிகம். 2015 இல் அதுதான் i-20 யில் டாப்-எண்ட் மாடல்.  என்னுடைய பிறந்ததினமான ஏப்ரல் 17 ஆம் தேதி  ஹூண்டாய் ஷோரூம் சென்று புது வண்டியை எடுத்துவந்தேன். ஷோரூமில் என் பிறந்த நாளை அங்குள்ள விற்பனையாளர்கள் சிறிய அளவில் கொண்டாடினார்கள். பெரிய வண்டி பழக்கம் இல்லை என்பதால் நான் காரை ஒட்டவில்லை. ஹூண்டாய் டிரைவர் ஒருவர்தான் என் வீட்டிற்கு ஓட்டிவந்தார்.

மதியம் வீட்டில் பாயசத்துடன் உணவு எடுத்தபின் நானே புது வண்டியை எடுத்து ஓட்டத் துவங்கினேன். வண்டி பெரியதென்பதால், ஓட்டுவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. இருப்பினும் என் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு குறுகிய வாயிற்கதவு வழியாகவும் வண்டியை ஓட்டிச்சென்று விட்டேன். ஆனால், அலுவலக வளாகத்தில் பார்க்கிங்கில் வண்டியை ஒடித்துநான்கு சக்கர வாகன பார்க்கிங்கில் நுழையாமல், ( பெரிய வண்டி ஓட்டுவதால் ஏற்பட்ட குழப்பமாக இருக்கும் என்று தோன்றியது) இரு சக்கர வாகனங்கள் வைக்கும் இடத்திற்கு செல்லும் சிறிய வழியில், தவறுதலாக வண்டியை ஓடித்ததில், வண்டியின் முன்பக்கம் நன்கு நசுங்கிவிட்டது. முந்தைய மாருதி காரை இரண்டாம் நாள்தான் காரேஜில் இடித்தேன். இந்தமுறை இடிப்பதில் ஒரு முன்னேற்றம். வண்டி வாங்கிய அதே நாள் வண்டியை கொண்டு இடித்தேன். ஒரு வழியாக வண்டியை எடுத்து கார் பார்க்கிங் இடத்திற்கு எடுத்துச்சென்றேன். வண்டி வைக்கும் இடம் கொஞ்சம் சரிவான இடமாதலால், நான் பார்க்கிங் செய்தவுடன் வண்டி கீழே நழுவ ஆரம்பித்தது. அந்த நேரத்தில் hand brake போடவேண்டும் என்று தோன்றவில்லை. அப்படி போடாமல் ஆக்சிலேட்டரை கொஞ்சம் அதிகம் அழுத்தியதில் வண்டி கார் பார்க்கிங் தடுப்புக்குப் போட்டு வைத்த கனமான இரும்பு பைப்பில் இடித்து வண்டியின் பானட்டும் நன்றாக பழுது  அடைந்தது. எனக்கு குறை என்னவென்றால்  அன்றய தினமே மூன்றாவது முறையும் இடித்து ஹாட்-ட்ரிக் பண்ணமுடியவில்லையே என்று.

அன்று இடித்த இடி, இந்த வண்டிக்கு பலமுறை இடியடி அபிஷேகம் நடந்துவிட்டது. ஒரு புறம் வண்டியின் தோற்றத்திற்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்தது.

ஒரு முறை அலுவலகத்திலிருந்து வீடு வரும் பெரிய சாலையில்,  U டர்ன் ஒன்று செய்கையில், டிவைடரின் ஓரத்தில் மிகவும் பக்கமாக சென்று ஓடித்ததால், வண்டியின் வலது கோடி  டிவைடரில் நன்கு இடித்து வலது பின் பக்கம் உடைந்து பெரிய விரிசலும் ஏற்பட்டது. நான் வண்டியை ரிவெர்ஸ் எடுப்பதில் இன்றும் கூட முழுத் தேர்ச்சி பெறவில்லை. காரணம், வண்டியை ஓட்டும் பக்குவமும் தைரியமும் எனக்கு இன்னமும் முழுமையாக வரவில்லை. இதைத்தவிர, ரிவெர்ஸ் எடுப்பதில் எனக்கு எப்பவுமே ஒரு பயமும் தயக்கமும் உள்ளது. என் அபார்ட்மெண்டில் கார் பார்க்கிங் இடத்தில், குறைந்தது ஐந்து முறையாவது என் I-20 ஐ இடித்திருக்கிறேன். தூரத்திலிருந்து பார்த்தால் அதிகம் தெரியாது. ஆனால் வண்டியின் அருகில் வந்து பார்த்தால் தெரியும் வண்டிக்கு கிடைத்த கீறல் மடல்கள், நசுங்கல்கள், ரணங்கள்.

நான் செய்த சில்மிஷங்களைத் தவிர எங்கள் அபார்ட்மெண்ட் வாட்சமனின் குழந்தைகள் அவர்களால் முடிந்ததை செய்ததால் அங்குமிங்கும் அழிக்கமுடியாத மழிப்புகளும், என் வண்டியின் கோலத்தை மேலும் அழகு செய்திருக்கிறது. இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் அந்தக்குழந்தைகள் எவரும் அவர் பெயர்களை என் காரில் கீறிவைக்கவில்லை.

ஏற்கெனவே மூன்று முறை இன்சூரன்ஸ் மூலம் வண்டிக்கு பழுது பார்த்தாகிவிட்டது. நான் ஓட்டும்போது, அடிக்கடி கிளச்சினை அழுத்துவதை , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எப்போதும் எடுப்பேன். இதனால் இரண்டு முறை கிளட்ச் பிளேட்டுகளை மாற்றவேண்டியதாகி விட்டது.  உங்களுக்குத் தெரியும் இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் என்று. பெரிய வண்டி என்றால் பெரிய செலவுதான். மேலும் இந்த வண்டி மைலேஜ் கொடுப்பதும் குறைவுதான்.

என்னுடைய போறாத காலம், என் வண்டியின் டயர்கள் பல முறை பஞ்சர் ஆகி, ஏற்கெனவே இரண்டு புதிய டயர்கள் வாங்கி பொருத்தி விட்டேன். கோணி இருக்கும் என்று வண்டியை நிறுத்திய இடங்களில், அநேகமாக பெரிய பெரிய ஆணிகள் தான் இருந்தன. பிறகு எப்படி பஞ்சர் ஆகாமல் இருக்கும். ஒரு முறை பஞ்சர் போடுகையில் , ஒரு பஞ்சர் என்று சொல்லிவிட்டு இரண்டு பஞ்சர்கள் போட்டுவிட்டார்கள். என் கண்களுக்குத்  தெரியாமல் இந்த பஞ்சர் போடுபவர்கள் இன்னொரு ஓட்டையை அவர்களே போட்டுவிட்டார்களோ என்று கூட சந்தேகமாக இருக்கிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் அடுத்த  இரண்டு டயர்களையும் மாற்றவேண்டும்.  எல்லாம் சேர்ந்து வண்டி பராமரிப்பு தொகை அதிகமே.

இத்தனை இருந்தாலும் ஒன்றை நான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவேண்டும். வண்டியின் இன்ஜின் அருமையாக வேலை செய்வதால், வண்டி நல்ல வேகமாக போகும்போதுகூட சத்தம் இரைச்சல் இல்லாமல் ஸ்மூத்தாக செல்கிறது. வண்டியை ஓட்டுகையில் நமக்கு ஒரு  

மகிழ்ச்சி இருக்கிறது. பெரிய கார் என்பதால், பெரிய இருக்கைகள், நல்ல நவீன சாதனங்கள் ( பின்புற கேமரா, ரிமோட் லொக்கிங், பெட்ரோல் அளவு காட்டும் சாதனம், ப்ளூ டூத் வசதி, விபத்தின் விளைவை குறைக்க ஓட்டுநர் அவர் பக்கத்தில் அமருபவர் இருவரின் எதிரே இரண்டு காற்று பைகள் ( air bags) எல்லாம் இருக்கிறது. நான் கிட்டத்தட்ட ஆறடி உயரம் என்பதால் , காலை முடக்கிக்கொள்ளாமல் வசதியாக உட்காரமுடிகிறது.

வண்டியை வாங்கி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. வண்டியை வருடத்தில் ஒரு முறை சர்வீஸிங் செய்துகொள்கிறேன் . எனவே, அங்கங்கு உள்ள வெற்றி சின்னங்களை , தழும்புகளை தவிர , மற்றபடி வண்டி நல்ல ஆரோகியத்துடனேயே இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் இந்த வண்டி நல்லபடியாக எனக்கு உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த வண்டியில் நான் தூரம் சென்ற இடங்கள் ஹைதராபாத்திலிருந்து நாகர்ஜுனாசாகர், ஹைதராபாத்திலிருந்து கோயம்புத்தூர், கோயம்புத்தூரிலிருந்து கொடைக்கானல், அவ்வளவே. இந்தப்பயணங்களில் நன்கு காரை செலுத்தும் என்னுடைய பெரிய மகனும் கூட இருந்தான். இருவரும் பாதி பாதி தூரம் ஓட்டுவோம்.

 

இந்தக்கட்டுரையை நான் எழுதி ஒரு மாதம் ஆகிவிட்டது.இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினால் இந்தக்கட்டுரையை இன்றுதான் முடிக்கிறேன். என் சின்ன மகனும் என் அண்ணனின் மகனும் இரண்டு நாட்களுக்கு முன் என் வண்டியில் கோவை நகரைச்சுற்றி நகர்வலம் சென்று வந்தனர். அவர்கள் திரும்பி வரும்போது நள்ளிரவாகிவிட்டது. நான் அந்த நேரத்தில் தூக்கத்தில் இருந்தேன். என் சின்ன மகனுக்கு கார் ஓட்டுவதில் ஆர்வம் இல்லை என்பதால் அண்ணனின் மகன்தான் வண்டியை ஓட்டினான். பார்க்கிங் வளாகத்தில் வண்டியைத்திருப்பி பின்புறம் வைக்கும்போது அங்கிருந்த ஒரு பெரிய தூணில் (எங்கள் பார்க்கிங் இடத்தில் ஒன்றன் பின் உள்ள இரண்டு தூண்களும் ஒரே நேர்கோட்டில் இல்லை என்பதால், ஒவ்வொரு முறையும்  வண்டியை பார்க் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும், இந்த இடத்தில் பார்க்கிங் செய்வது எவருக்குமே கொஞ்சம் கடினமான காரியம்தான்) வண்டியின் இடது புறம் இடித்து, முன் பின் இருக்கைகளுக்கு நடுவே, ஒரு பெரிய கரையுடன் ஒரு சின்னபள்ளத்தாக்கு உருவாகிவிட்டது.

  

வண்டி ஓட்டுனர்கள் யாவருமே மிகவும் கவனமுடன் வண்டியை ஓட்டவேண்டும். பயம் கொஞ்சமும் இல்லாமல் வண்டி ஒட்டினால்தான் நன்றாக வண்டியை ஓட்டமுடியும். இல்லையென்றால் என்னை போலத்தான். வேகமாக வண்டியை ஓட்டும்போது இரட்டிப்பு கவனம் தேவை. சாலை விதிகளை எப்போதும் மீறக்கூடாது ( யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்). பல இடங்களில் சிஃனலில் காமெராவை பொருத்தி இருப்பதால், சாலை , வேக விதிகளை மீறினால் சலான் கட்டுவது மட்டும் இல்லாமல், லைசென்ஸை பறிமுதல் செய்யும் அபாயமும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வண்டியை எடுத்து வெளியே செல்லும்போதும், ” நான் மீண்டும் நாளையும் இந்த வண்டியை நன்கு ஒட்டிச் செல்லவேண்டும்”  என்பதை நினைவு கொள்ளுங்கள். 

 

இரண்டு கார்களை வாங்கி ஒன்றை விற்ற நான், கற்ற பாடம் என்னவென்றால் , மனைவி அமைவது மட்டும் இல்லை, வீடு அமைவது மட்டும் இல்லை, அலுவலகம் அமைவது மட்டும் இல்லை, உயர் அதிகாரி அமைவது மட்டும் இல்லை, மருத்துவர் அமைவது மட்டும் இல்லை, நண்பர்கள் அமைவது மட்டும் இல்லை, கார் அமைவதுகூட இறைவன் கொடுத்த வரம்தான்.

 

 

இன்றைய நாட்களில் கோயம்புத்தூரில் வசிக்கும் நான் என் மனைவியுடன் தினமும் ஒரு முறையாவது எங்கள் i-20 யில் சவாரி செய்தவண்ணம் தான் இருக்கிறேன். எங்கும் இல்லையென்றாலும் அருகில் உள்ள பூங்காவில் சென்று நடைபழகி வருவதற்கும் இந்த வண்டியில்தான் செல்வோம். நமக்கு மட்டும் வாக்கிங் இருந்தால் போதுமா வண்டிக்கும் வாக்கிங் வேண்டாமா?

Leave a Comment

Write and Earn with Pazhagalaam