Visitors have accessed this post 137 times.

மனிதனே, நீ யார், கடவுள் யார்?

Visitors have accessed this post 137 times.

நாம் வாழும் இந்த உலகம், கேடுகள் அனைத்தையும் விளைவிக்கும் வெறும் கலிகாலத்தில் மட்டும் சிக்கிக்கொண்டு அவதிப்படவில்லை. அதைவிடவும் கொடுமையான நிலையான, இவ்வுலகை பரிபாலிக்கும் கடவுள் கூட இல்லாமல் அனாதையாக விடப்பட்ட பரிதாபமான உலகமாகவும் திகழ்கிறது.

 எண்ணற்ற அறிஞர்கள், ஞானிகள், முனிகள், தவசீலர்கள் வாழ்ந்து சென்ற பூமி என்று சொல்லப்படும் இந்த உலகில் (குறிப்பாக இந்தியாவில்), இப்போதைய கால கட்டத்தில் எவ்வளவு நல்ல மனிதர்களை பார்க்கமுடிகிறது? நல்ல மனிதர் என்பது என் பார்வையில் அன்பு, இரக்கம், கருணை மற்றும் மனிதாபிமானம் கொண்டவர். இத்தகைய மனிதர்கள் இவ்வுலகில் மிக மிக மிக குறைவே. இந்த மிகக்குறைந்த நல்லவர்களில் நீங்களும் நானும் ஒன்றா என்றால், அதுகூடசந்தேகமே. நல்ல மனிதர்கள் என்பவர்கள், வெறும் கொள்கைகள் அடையாள அட்டை (பேட்ஜ்) தாங்கிய வெறும் வீரர்கள் இல்லை. நல்லதை நினைக்கவும், தன உயிரையும் தியாகம் செய்து பிறருக்கு நன்மை செய்யும் மனம் படைத்த அபூர்வமான மனம் படைத்த அப்பாவி மக்களைத்தான் நான் நல்லவர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

 இந்த வகையில் நீங்களும் நானும் இப்படி பட்ட நல்லமனிதர்களில் ஒருவராக இருக்கமுடியும் என்பது மிகவும் கேள்விக்குரிய விஷயம்தான். நம்மில் பலர் நல்லதை சிந்திப்பவராக இருக்கலாம். ஆனால் எவ்வளவு பேர் பிறருக்கு நன்மை செய்கிறோம்ஒருவேளை நீங்கள் யாரேனும் நான் குறிப்பிடும் நல்ல மனிதர்களாக இருப்பின் அவர்களை நான் தலைகுனிந்து வணங்குகிறேன்.

விஞ்ஞான ரீதியாக, ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து திடீரென்று (வெடித்து) தோன்றி, லட்சலட்ச வருடங்கள் மனித சுவடே இல்லாத உலகமாகத்தானே இது இருந்திருக்கிறது இந்த உலகமும் பிரபஞ்சமும். அப்படி என்றால், மனித உயிர் எப்படி உருவாயிற்று? யார் இந்த மனித உயிரை முதன் முதலில் படைத்தது? மனிதன் தானாகவே உருவான சுயம்பு என்றால் அதையும் நம்பமுடியவில்லை. இரண்டு உடல்கள், அதுவும் ஒரு ஆண் ஒரு பெண் இல்லாவிடில், எப்படி இன்னொரு உயிர் உருவாக முடியும்?

 உருவம் இல்லாத ஒரு சக்தி, இருவர் இணைந்தால்தான் உருவாகும் உயிருள்ள உருவத்தை எப்படி படைத்தது? அப்படி என்றால் ஒன்றுமே இல்லை என்ற அந்த முதன்மையான சக்தி, ஒன்றல்லாது இரண்டா? அப்படி என்றால், ஒன்றும் இல்லாத அந்த இரண்டில் ஒன்று ஆணா, இன்னொன்று பெண்ணா? இது சத்தியமாக மாயமே, மர்மமே, தலையை பிய்த்துக்கொள்ளும் தலைபோகும் விஷயமே. மனிதனின் ஞானமும் விஞ்ஞானமும் இந்த கேள்விக்கு இதுவரை தக்க பதிலை அளிக்கமுடியவில்லை என்பதுதான் நம்மில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். பிரபஞ்சம் ஏன் படைக்கப்பட்டது? ஆகாயம், நட்சத்திர மண்டலம், சூரியன் சந்திரன் இவை எல்லாம் ஏன் உருவாக்கப்பட்டது? இவை எல்லாம் உருவாக மூல காரணமாயிருக்கும்,

எவராலும் உணரவே முடியாத அந்த சக்தி, ஏன் நம் எவருடைய கண்களுக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது? காற்றுகூடத்தான் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் நம்மால் உணரமுடிகிறதே. நம் ஆறறிவுள்ள மனதுகூட கண்ணுக்குத்தெரியாமல் நம்மிலிருந்துகொண்டே நம்மை ஆட்டிவைக்கிறதே. அது ஏன், எவ்வாறு உருவானது? காற்றை நாம் உணர்வதைப்போல கடவுளையும் (உருவற்ற) நம்மில் பலரால் உணரமுடிகிறது என்று இருந்திருந்தாலும், நாம் கடவுளை பற்றி இந்த அளவுக்கு குழப்பிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது.

 விஞ்ஞானம், கடவுள் என்ற ஒன்று வெறும் கற்பனையே, பௌதீக ரீதியாக கடவுள் என்ற ஒன்று எதுவும் இல்லை என்று சொல்வதை நாம் உண்மையிலேயே மறுக்கமுடியுமா? இந்த பிரபஞ்சமும் உலகமும் மனிதனும் மற்றும் இதர உயிர்களும் ஏதோ ஒரு மாபெரும் சக்தியின் மூலம்தான் உருவாகியிருக்கமுடியும் என்பதை விஞ்ஞானமும் மறுக்கமுடியாது. எனவேதான், சில விஞ்ஞானிகள் அனைத்தும் உருவாக முதற்காரணமாக இருக்கும், இருந்து இயங்கிவரும் அந்த பேராற்றல் கொண்ட சக்தியை, கடவுள் அணுக்கள் (God particles) என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி கருதுவதின் மூலம் விஞ்ஞானிகள், கடவுள் எனும் சக்தி இருக்கிறது என்பதை ஆய்வுக்கூடங்களின் சோதனைகள் மூலம் நிரூபிக்கமுடியாவிட்டாலும், நிரூபிக்கமுடியாத அந்த இயலாமையால், மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள் என்றுதான் கொள்ளவேண்டும்

 ஒருவேளை கடவுள் என்று எதுவும் இல்லை என்று எல்லோருமே நம்பினால், பின்னர் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும், இயங்கும் என்பதைத்தான் நினைத்துக்கூட பார்க்கமுடியுமா? அவரவர் தனக்கு தோன்றுவதை செய்து கொண்டிருப்பார்கள், செய்து கொண்டும் கொன்றுகொண்டும் இருப்பார்கள். ஒருவர் பலரது மனதை வென்றிருப்பார்; அப்படி வென்றவர்களை தன்வசம் கொண்டிருப்பார்; அப்படியானால், பலர் ஒருவரின் இதயத்தில் குடிகொண்டிருப்பார்கள். ஒரு மணமகன் பல மணமகள்கள், ஒரு மணமகள் பல மணமகன்கள் என்றெல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத சூழ்நிலைகள் உருவாகியிருக்கும்.

 கடவுள் நம்பிக்கை இல்லாத உலகில், வல்லவர்கள் நல்லவர்களை விட்டுவைத்திருப்பார்களா? ஒழுக்கம், தருமம், நீதி, நேர்மை, நியாயம், உண்மை போன்ற பதங்களும் வார்த்தைகளும் உலகின் அகராதிகளில் இருந்திருக்குமா? ஒரு வேலை இப்பதங்கள் உலக அகராதியில் இல்லாதிருந்தால், உலகம் எப்போதோ சர்வநாசம் ஆகியிருக்கக்கூடும் அல்லவா?

ந்த வகையில், கடவுள் என்ற சக்தி ஒன்று ஏதோ, நம் அகக்கண்களுக்கு தெரியாவிடினும், கண்டிப்பாக இருக்கிறது, என்கிற எண்ணத்தின் விதையை விதைத்தவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அப்படி உருவாக்கப்பட்ட கடவுள் என்பது, வெறும் கற்பனை, மூடநம்பிக்கை, பொய்புரட்டு என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கேலிசெய்து சித்தரிக்கும் பல மனிதர்கள் அன்றும் இன்றும், என்றும் எங்கும் இருக்கிறார்கள். இவர்களின் கூற்றுகளை அனைத்தையுமேநாத்திகர்கள், திமிர் பிடித்தவர்கள்என்று கூறி ஓரம் கட்ட இயலுமா?

 விதி, பூர்வஜென்ம கர்மவினைகள் என்னும்போது, இவ்வுலகில் முதன் முதலில் பிறந்த மனிதனின் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தான் என்ன?

ஒருவினையும் இல்லாதிருப்பின், பின் ஏன் முதல் மனிதன் பிறக்கவேண்டும்? அப்படி பிறந்த முதல் இரண்டு மனிதர்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர்களில் ஒருவர் ஆணாகவும் இன்னொருவர் பெண்ணாகவும் இருந்திருப்பின், குழந்தைகள் பிறக்க வழிசெய்வதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை தானே? இயற்கையின் விதிப்படி, இந்த முதல் ஜோடி, அந்த காரியத்தில் ஈடுபட்டது, கண்டிப்பாக குற்றம் என கருதப்படாத செயலாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் முதல் மனித ஜோடி காலத்தில் பகவத் கீதை இல்லை, பைபிள் இல்லை அல்லது குரான் இல்லை. திருக்குறளும், நாலடியாரும்கூட இல்லை. பின், அந்த முதல் ஜோடி செய்த செயல்கள் எவ்வாறு கர்மவினை என்று கருதப்படும்? அவர்கள் செய்த அனைத்து காரியங்களும் குற்றப்பத்திரிகை சுமத்துபவைகளாக இருக்கவே முடியாது.

 அந்த, முதல் இருவருக்கும் இது நல்லது இது கெட்டது என்பதை யார் விளக்கியது? யார் வகுத்தது? இவற்றை எல்லாம் யார் உணரமுடியும்? எப்படித்தான் உணருவது? யார்தான் விளக்கிவைப்பார்கள்? அப்படி விளக்கி வைக்கக்கூடிய ஒன்றே ஒன்று கடவுள்தான். அதுதான் இப்போது இவ்வுலகில் தென்படவில்லையே? இதை யாரிடம் சென்று முறையிட? இதையும் நாம் கடவுள் என்ற அந்த பேராற்றல் வாய்ந்த சக்தியிடம்தாம் முறையிடவேண்டியிருக்கிறது.

 இன்றைய உலகில் நடக்கும் சம்பவங்கள் பல மனித பண்பாட்டினை பறைசாற்றும் செயல்கள் அல்லவே. ஒரு புறம் ஆயிரமாயிரம் மனிதர்களும் மற்றும் விலங்குகளும் உணவின்றி தினமும் மடிகின்றனர். அதே நேரத்தில் சிலர் ஒவ்வொரு நாளும் கோடிகணக்கில் பணம்சேர்க்கிறார்கள். ஒருபுறம் கொலை, கொள்ளை, அநீதி, லஞ்சம் மற்றும் அராஜகம். இன்னொரு புறம் இன்பம்,கேளிக்கை, உல்லாசம் மற்றும் சல்லாபம். ஒரு புறம் பெண்களிடத்தில் வன்முறை மற்றும் அதர்மமான காரியங்கள் இன்னொரு புறம் பெண்களே செய்யும் வன்முறைகள், ஆபாசம் மற்றும் வேறு பலவழிகளில் செய்யும் இழிவான காரியங்கள். பசியின் கொடுமை காரணமாகவும் மற்றும் தம் குடும்பத்தை காப்பதற்காகவும், பெண்கள் சிலர் தமது கற்பையே வியாபாரம் செய்கிறார்கள். இந்த காரியத்தை குற்றம் என்று ஆணித்தரமாக கூற இயலுமா? பணத்தை பொருளை திருடுவது சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் எனும்போது, ஒரு மனிதரிடம் தன்னையே ஒரு இரவு சமர்ப்பணம் செய்வதை அநாகரீகம், அதர்மம் முறையற்ற சமுதாயத்தில் கேடுவிளைக்கும் செயல் என்று புகாரும் குற்றமும் சுமத்துவது, உண்மையிலேயே சரியாசந்திப்புகள் எனும்

போர்வையின் மறைவில் தான் எத்தனை வகையான மாடல்கள், ஆடல்கள், தேடல்கள், கூடல்கள் மற்றும் ஊடல்கள்!

 வேதங்கள் கடவுளே மானுடத்திற்கு வழங்கியது என்கிற ஒரு கருத்தும் நம்பிக்கையும் நம்மில் பலரிடம் இருக்கிறது. வேதம் கடவுளால் எழுதப்பட்டது என்றால், அது உலகம் முழுவதும் ஏன், வியாபித்திருக்கவில்லை? இந்திய மண்ணில் மட்டும்தான் வேதம் நடைமுறையில் இருந்ததாதவிர இப்போதுள்ள காலகட்டத்தில் மக்களை நான்குவகை (வர்ணாஸ்ரம்) தொழில்களின் கீழ் பகுத்து வகுக்கமுடியுமா?

 ஒருவருக்கு, எப்படி வாழவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ அப்படி வாழ இந்த உலகம் மறுப்பு தெரிவிக்கவில்லையே. அப்படி ஒருவர் தனக்கு பிடித்த தொழிலை செய்து தான் நினைப்பது போல சுதந்திரமாக வாழ்வதை நாம் குறை அல்லது தவறு என்று தட்டி கேட்கமுடியுமா? மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத பேச்சும் நடையும் ஒருவரிடம் இருப்பின், அத்தகைய நபர்கள் எந்தவிதமான தொழிலில் ஈடுபட்டாலும் அவர்களை எந்த வகையில் குறை கூற முடியும்?

 

ஒருவரையோ, ஒரு சமுதாயத்தினரையோ ஒரு மதத்தினரையோ, ஒரு இனத்தையோ, அவர் மனம் புண்படும் விதமாக, அவர்களின் உடலுக்கு இழுக்கையும், தீங்கையும் காயத்தையும் விளைவிப்பதாக இருக்குமானால் அதைத்தான் நான் இங்கு தீங்கு என்று குறிப்பிடுகிறேன்.  

 இயற்கையின் சீற்றங்கள், உடலை தாக்கும் பயங்கரமான வியாதிகள், பிறந்த உயிர்கள் இறந்தே தீரவேண்டும் போன்ற மறுக்கமுடியாத, தவிர்க்கமுடியாத அசம்பாவிதங்கள் தான், மனிதன் மனதில் பீதியையும் பயத்தையும் உருவாக்கிவிட்டு, அதனால் கடவுள் என்கிற ஒன்றை மனதளவில் மனிதன் கற்பனை செய்து, பின்னர் அதற்கு எண்ணற்ற உருவங்களை கொடுத்தான். ஒருவருடைய கர்மவினைகள் தான் அவரவர் வாழ்விற்கு காரணம் என்றால், பின்னர் கடவுளுடைய பங்கு என்ன? இயற்கையை நிர்வகிப்பதிலா? அல்லது அந்த இயற்கையைத்தான் கடவுள் என்று அழைக்கவேண்டுமா? இயற்கைதான் கடவுளின் பரிமளிப்பு, கடவுளின் உருவம் இயற்கைதான் எனும் கூற்றில் தவறு ஏதேனும் உண்டா?

நாம் எத்தனை முயற்சிகள் செய்து முன்னேற்றம் என்கிற பெயரில் இயற்கையோடு அவ்வப்போது சிறிது போட்டியிட்டாலும், அனைத்தையும் கடந்து இயற்கை நம்மை காட்டிலும் மிகவும் வலியது என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியுமா? இந்த வகையில் இயற்கையை இறைவனின் முக்கிய தளபதி என்று ஏற்றுக்கொள்ளலாமா?

 ஒவ்வொருவரும் அவரவருக்கு தேவையான முறையில் வாழ விருப்பம்கொண்டு, அதன்மூலம் உருவாக்கப்பட்டதே சமூகம், சமூக நியதிகள், ஒழுங்குமுறைகள் எல்லாமே. இத்தகைய சமுதாயங்கள் தானே, அந்தந்த சமுதாயத்தின் தேவைக்கேற்ப இத்தகைய ஒழுங்கு மற்றும் வாழ்வு முறைகளை கொண்டு, இன்று உலகெங்கிலும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு சமுதாயமும் தனித்தனியே அதனுடைய நடைமுறைகள், கோட்பாடுகள், அறநெறிகள், வாழும் முறைகள் என்று பல கோணங்களில் அடிப்படையில் செயல்பட்டுவருகிறது.

 மதம் என்கிற தேவையற்ற மிகவும் கொடிய கண்டுபிடிப்பு தான் மனிதனின் முதல் பரம விரோதி. உலகில் மதம் என்ற ஒன்றே இல்லாமல் இருப்பின், இந்த உலகம் இப்போதயத்தை காட்டிலும் எவ்வளவு சிறப்புடன் இருந்திருக்கும் என்பதை நாமே யூகிக்கமுடியும். மதம், இனம், ஜாதி என்ற பெயரில் எவ்வளவு முரட்டுத்தனமான நம்பிக்கைகள், முட்டாள்தனமான கொள்கைகள், பிற உயிர்களை வதைக்கும் மனிதாபிமற்ற கொடுமையான செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது. எவ்வளவு மக்கள் மதச்சண்டையில் உயிரை கொடுத்திருப்பார்கள், கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். இன்றைய அளவில் ரஷியாஉக்ரைன், இஸ்ரேல்பாலஸ்தீன் சண்டைகள் இத்தகைய வித்தியாசங்கள் மற்றும் பேதங்களினால் நிகழ்பவைகள்தானே? இத்தகைய போர்கள் நடைபெற, நேரடியாகவோ மறைமுகமாகவோ, விஞ்ஞானமும் அதன் பல கண்டுபிடிப்புகள் மூலம் உதவுகிறது என்ற குற்றச்சாட்டையும் நாம் மறுக்கமுடியாது.

 கடவுளின் அவதாரங்கள் என்று சொல்லப்படும் சில மனிதர்கள், மதம் என்ற, மனிதனிடமிருந்து மனிதனை பிரித்து வைக்கும் விபரீதமான, மனித ஒற்றுமையை குலைக்கும் அமைப்புகளை தோற்றுவித்தனர் என்றால் அது மிகையாகாது. மதத்தின் தலைவலிகள் யாவை என்றால், ஜாதி, குலம், இனம் போன்ற கேடுகெட்ட பிரிவினைகள்தான். மதம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், ‘சம்மதம்என்கிற ஒரே ஒரு உலக மதம், யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்என்ற அற்புதமான உலக நீதியின் வழியில், சுகமான பயணம் செய்துகொண்டிருக்கும்.

 

இறுதியாக, இந்த பிரபஞ்சம், உலகம் உருவாக, முதல் ஜோடி மனிதர்கள்

இவ்வுலகில் பிறக்க காரணம், முழுமுதற்கடவுள், தெய்வீக சக்தி, இயற்கை என்று பல வகையிலும் அழைக்கப்படும் அந்த எண்ணிப்பார்க்கமுடியாத, உணரமுடியாத, அறியமுடியாத, காணமுடியாத ஒரு மாபெரும் அபூர்வ பிரபஞ்ச சக்திதான். இந்த பிரபஞ்சமும் உலகும் இயங்க, நாம் இவ்வுலகில் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் (நல்லவை கெட்டவை) மூலகாரணமான அந்த சக்திதான் தார்மீக பொறுப்பை ஏற்கவேண்டும்.

 கர்மவினைகள் காரணமாகத்தான் மனிதர்களும் மற்றும் வேறு உயிர்களும் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து, அவதிப்பட்டு, அனுபவித்துக்கொண்டும் அல்லல் பட்டுக்கொண்டும் இருக்கின்றன எனும் பொதுவான கருத்தை நாம் ஏற்றுக்கொள்வதா அல்லது மறுப்பதா? இதற்கு தக்க ஒரு பதிலினை நீங்கள்தான் நன்கு யோசனை செய்துவிட்டு உங்களுக்கு நீங்களே தரவேண்டும்.

 ஜாய்ராம்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam