Visitors have accessed this post 113 times.

நேர்மையின் கண்ணை மறைக்கும் பணம்

Visitors have accessed this post 113 times.

ரவியும் சேகரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே இருவரும் நன்றாக பழகுபவர்கள். ரவி ஒரு பொது வங்கியில் கீழ் நிலை அதிகாரியாக வேலை செய்து வந்தான். சேகர் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். இருவருக்கும் ஒரு வருடத்திற்குள்ளாகவே திருமணமும் நடந்து முடிந்தது. துரதிருஷ்டவசமாக, இரண்டு வருடத்திற்குள் சேகர் வேலை செய்து வந்த கம்பெனி மூடப்பட்டு விட்டது. சேகருக்கு மீண்டு ஒருவரிடத்தில் வேலை செய்ய பிடிக்கவில்லை. எனவே, அவன் தான் சேமித்து வைத்த பணத்தையும், மனைவி கொண்டு வந்த கொஞ்ச நகைகளையும் விற்று ஒரு சின்ன வியாபாரத்தை துவங்கினான். முதல் வருடம் சில சிறிய பெரிய பிரச்சினைகள் வந்தபோது , சேகர், அவனுடைய சாதுர்யத்தால் அவைகளை வெற்றிகரமாக சமாளித்துவிட்டான். இருப்பினும், முதல் வருடம் அவனுக்கு நஷ்டம் தான். அவனுக்கு கீழே வேலை செய்த சில பணியாளர்களை, அவர்களின் திறமை குறைவு காரணமாக விலக்கி விட்டான். புதிதாக சிலரை வேலைக்கு அமர்த்தினான். அப்படி அமர்த்திய இரண்டு பேர்களிடமிருந்து ஒரு ஒரு லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டான். வருடத்திற்கு 9% வட்டி தருவதாக கூறினான். இப்படி கிடைத்த இரண்டு லட்ச ரூபாயையும் வியாபாரத்தில் முதலீடு செய்தான். இரண்டாம் வருடம் வியாபாரம் சுமாராக நடந்தது. நிகர லாபம் ஓரளவுக்கு கிடைத்தது. ஆனால், மூன்றாம் வருடத்திலிருந்து சேகருக்கு,  வியாபாரம் நன்றாக நடக்க ஆரம்பித்தது. 

 

ரவியும் சேகரும் பல முறை, தம்பதியாக சில ஊர்களுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். ஒவ்வொரு வாரமும் இருவரும் சந்தித்து வந்தனர்.  இதனிடையில், சேகரின் வியாபாரத்திற்கு  போட்டியாளர்கள் வரத்துவங்கினர். அடுத்த இரு வருடங்களில் ,சேகரின் வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக தொய்வு காண ஆரம்பித்தது. சில மாதங்களில் நஷ்டம் வரத்தொடங்கியது. மனைவியிடம் உள்ள நகைகள் அனைத்தையும் விற்றாகி விட்டது. அவனுடைய சேமிப்பு நிதியையும் கரைத்தாகிவிட்டது. அவனிடம் வேலை செய்த இருவரும், தத்தம் ஒருலட்ச ரூபாய் பணத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு, வேலையை  விட்டு சென்று விட்டார்கள். 

சேகர் அவன் வியாபாரத் தோல்வியை பற்றி ரவியிடம் பகிர்ந்து கொண்டான். தான் புதிய வியாபாரம் செய்யப்போவதாகவும், தனக்கு கொஞ்சம் பண உதவி செய்யுமாறு கேட்டான். ‘உனக்கு எவ்வளவு பணம் தேவை’ என்று ரவி கேட்டபோது, ‘ குறைந்தது பத்து லட்ச ரூபாய் தேவைப்படும்’ என்று சேகர் சொன்னான். ரவி அவன் மனைவியிடம் இதைப்பற்றி சொன்னான். அவள் சொன்னாள் ” நீங்கள் அவருக்கு உதவுவதை நான் தடுக்கமாட்டேன். ஆயினும், பண விஷயத்தில் அவரிடம் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்”. ரவி ” அதைப்பற்றி ஒரு கவலையும் வேண்டாம். என்னிடத்தில் இருப்பதற்கு பதில் ஐந்து லட்ச ரூபாய் அவனிடத்தில் ஓரிரு வருடங்கள் இருக்கும். மீண்டும் எனக்கு திருப்பி வந்துவிடும். அதில் எனக்கு ஒரு இம்மியளவுகூட சந்தேகம் இல்லை” என்று தன்னம்பிக்கையுடன் கூறினான்.

பின்னர், தன் சேமிப்பிலிருந்து ஐந்து லட்ச ரூபாயை அவனுக்கு கொடுத்து உதவினான். அதனுடன், தான் வேலை செய்யும் வங்கியிலிருந்து, சேகர் தொழில் செய்யக் கடனாக ஐந்து லட்ச ரூபாயை, அவனுடைய ( ரவியின்) சொந்த உத்தரவாதத்தின் பெயரில்,  சேகருக்கு ஏற்பாடு செய்தான். அதன் படி, மாதாமாதம் வங்கிக்கு பதினைந்தாயிரம் ரூபாயை சேகர் செலுத்த வேண்டும். சேகர் ரவிக்கு மிகவும் நன்றி சொன்னான். ” உன்னால்தான் நான் மீண்டும் தலைநிமிர்ந்து நடக்கிறேன். உனக்கு நான் என்றென்றும் கடமை பட்டவன்” என்று சேகர் புகழ்ந்தபோது ” நாம் எதற்கு உற்ற நண்பர்களாக இருக்கிறோம். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்குத்தான்” என்று அடக்கமுடன் சொன்னான் ரவி. 

 

அடுத்த மூன்று வருடங்களில் சேகரின் புதிய வியாபாரம் அமோகமாக நடை பெற்றது. அவன் வாங்கி கடனை கெடுவுக்கு முன்னதாகவே தீர்த்து விட்டான். ரவி கொடுத்து உதவிய ஐந்து லட்ச ரூபாயில் சேகர், மூன்று லட்சத்தை திரும்பத் தந்தான். மீதி இரண்டு லட்சத்தை கூடிய விரைவில் தந்து விடுவான் என ரவி நம்பினான். ஆனால், ஒரு முறை கூட அவன் சேகரிடம் இதைப்பற்றி கேட்கவில்லை. உயர்ந்த நட்பு அல்லவா! நாட்கள் செல்ல செல்ல சேகர், ரவியின் வீட்டிற்கு செல்வத்தையும் குறைத்து கொண்டான். இதனால் ரவியும், சேகர் வீட்டுக்கு செல்வதை குறைத்து விட்டான். போனிலும் இருவரும் மிக குறைவாகவே பேசினார்கள். சொல்லவேண்டும் என்றால் சேகர் ரவியிடம் அதிகம் பேசுவதை தவிர்த்தான். ரவிக்கு சேகரின் போக்கு புரியவில்லை. இவ்வளவு நடப்பினும், ஒரு முறை கூட ரவி சேகரிடம், அவன் தரவேண்டிய மீதி இரண்டு லட்ச ரூபாயை பற்றி ஒரு தடவைகூட நினைவுகூறவில்லை.

இதற்கிடையில், ரவியின் அப்பாவுக்கு கேன்சர் வியாதி வந்தது. அதற்காக ரவி மிகவும் செலவு செய்தான். ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி அப்பா பேரில் இருப்பினும், குறைவான பிரீமியம் என்பதால் கிட்டத்தட்ட 70% மருத்தவ செலவை ரவி தான் ஏற்றுக்கொண்டான். வங்கியிலிருந்து கடனும் வாங்கி கொண்டான். துன்பம் வந்தால் சுமந்து கொண்டு வரும் என்பது போல, அவன் சேமித்து வைத்த பணத்தை முதலீடு செய்த இரண்டு கம்பெனிகள் திவாலாகி அவன் முதலீடு செய்த ரூபாய் பத்து  லட்சத்தில், ஒரு லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்தது.

ரவிக்கு இரண்டு குழந்தைகள். பிரபலமான பள்ளி என்பதால் கல்வி செலவு அதிகம். இந்த நிலையில் ரவி மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் மனைவி “உங்கள் நண்பர் சேகரின் வியாபாரம் இப்போது மிகவும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. தவிர, அவர் உங்களிடம் வாங்கிய பணத்தில் இரண்டு லட்ச ரூபாயை இன்னமும் தரவில்லை. ஒரு தம்பிடி காசுகூட வட்டி கேட்காமல் நீங்கள் கொடுத்த ஐந்து லட்சத்தில் சேகர், உங்களுக்கு மூன்று லட்சம்தான் திரும்ப கொடுத்திருக்கிறார். அவர் தொழிலில் ஆழ்ந்திருப்பதால், மீதி பணத்தை உங்களுக்கு தரவேண்டும் என்கிற ஞாபகம் அவருக்கு இல்லாமல் இருக்கலாம். எனவே, நீங்கள் சேகரிடம் பேசி, அந்த பணத்தை கேட்டு வாங்குங்கள். நமக்கும் இப்போது பொருளாதார ரீதியாக நேரம்  சரியில்லை. ” என்று ஆலோசனை சொன்னாள். 

சேகரிடம் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்கக்கூட ரவிக்கு விருப்பமில்லை.ஆனால், அவன் பொருளாதாரநிலை அவனை இதற்கு கட்டாயப்படுத்தியது. இரண்டு முறை அவனுக்கு போன் செய்தபோது சேகர் போனை எடுக்கவில்லை.  ரவி மேலும் இரண்டு நாட்கள் பொறுத்துப்பார்த்தான். சேகரிடமிருந்து போன் ஏதும் வரவில்லை.

மூன்றாவது நாள் ரவி மீண்டும் சேகருக்கு போன் போட்டான். அந்த முறை சேகர் பேசினான், ரவியை தன் வீட்டிற்கு வரச்சொன்னான்.

ரவி அவனை நேரில் சந்தித்தபோது “நான் உனக்கு திரும்ப தர வேண்டியது ஏதும் இல்லையே ரவி” என்றான் சேகர். ரவிக்கு தூக்கி வாரி போட்டது. “என்ன சேகர், நீ என்னிடம் நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய பணம் ரூபாய் ஐந்து லட்சம். ஆனால் நீ திருப்பி கொடுத்தது ரூபாய் மூன்று லட்சம் மட்டுமே. இன்னும் இரண்டு லட்சம் பணத்தை நீ இன்னும் எனக்கு தரவில்லை. நீ எனக்கு மூன்று முறை ஒவ்வொரு லட்ச ரூபாயை திருப்பிக்கொடுத்த விவரங்கள் இதோ என்னிடம் உள்ளது. உன்னுடைய வங்கி புத்தக விவரங்களை நீ பார்த்தால் உனக்கே விளங்கும் என்றான் ரவி மிகவும் வேதனையுடன்.

சேகரோ “இல்லை ரவி நீ மறந்துவிட்டாய் என நினைக்கிறேன் . கடந்த இரண்டு வருடமாக, எனக்கு கடன் என்பதே இல்லை. உனக்கு கடனாக வேண்டும் என்றால் தருகிறேன்” என்று கூற, ரவி மிகவும் மனம் புண் பட்டான். இருப்பினும் அவனுக்கிருந்த பண பிரச்சினையால் அவன் ” அப்படியே சேகர். எனக்கு ரூபாய் ஐந்து லட்சம் கடனாக கொடு என்றான் . சேகர் ” ரவி, நான் பொதுவாக 15% வட்டிக்கு தான் கடன் கொடுக்கிறேன். இருப்பினும் நீ என் நண்பன் என்பதால், உனக்கு 12 % வட்டிக்கு தருகிறேன். மாத மாதம் ஐந்து தேதிக்குள் எனக்கு நீ எனக்கு வட்டி பணத்தை தரவேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாற்பதாயிரம் ரூபாய் கடன் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும். நீ நிச்சயம் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவாய் என்று தெரியும். இருப்பினும், உன் வீட்டை அடமானம் வைத்து எனக்கு உத்திரவாத பத்திரம் கொடுத்தால், வருங்காலத்தில் பிரச்சினை எதுவும் இருக்காது” என்று, ஒன்றும் தெரியாதவன் போல், வணிகரீதியாக சொன்னான்.

ரவி இந்த வார்த்தைகளை கேட்டு, அதிர்ந்து போய், சில நிமிடங்கள்  என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் துன்பம் கலந்த துக்கத்தில் ஆழ்ந்தான். பின்னர் சேகரிடம் அமைதியாக சொன்னான் “உனக்கு நான் கொடுத்த கஷ்டத்திற்காக வருந்துகிறேன். எனக்கு உன் கடன் தேவையில்லை. இன்றோடு நட்பு என்ற நம் கடனும் முழுமையாக தீர்ந்தது. இந்த கணத்திலிருந்து நீயும் நானும் தெரியாதவர்கள்.” இதை சொல்லி விட்டு ரவி உடனே வீடு திரும்பினான். 

ஆயினும் அவன் மனது கொதித்தது , அடித்துக்கொண்டது, கதறியது. ” இவ்வளவு நாட்கள் இவன் என்னுடன் உற்ற தோழனாக இருந்ததெல்லாம் வெறும் நடிப்புதானா? நல்லதிற்கு காலமே இல்லையா?” என்று அவன் மனதில் கருவினான். 

மனம் உடைந்து வீடு திரும்பிய ரவிக்கு அவன் மனைவி, சிறிதும் அதிர்ச்சியும் திகைப்பும் அடையாமல், ஆறுதல் கூறினாள் . “வீணாக கவலை கொள்ளாதீர்கள். நாம் யாருக்கும் மனதாலே கூட தீமை நினைக்கவில்லை. நமது பிரச்சினைகள் நிச்சயமாக வெகு விரைவில் தீர்ந்து விடும். சேகரின் போக்கை நான் இரண்டு வருடமாக, கவனித்து கொண்டு வருகிறேன். அவர் முற்றிலும் மாறிவிட்டார். சரி. இப்போது இரவு நேரமாகிவிட்டது. சாப்பிட்டு, தூங்குங்கள். நாளை காலை ஆஸ்பத்திரி சென்று அப்பாவை காண வேண்டும்;”

அடுத்த நாள் காலை விடிந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து ரவியின் சித்தப்பா பேசினார். ” ரவி, உன் அன்பு அப்பா, என் பாசமான அண்ணன் இப்போதுதான் காலமானார்”.  ரவி அவன் மனைவியிடம் கதறினான் “நான் இப்போது இருக்கும் நிலையை என் தந்தை அறிந்துதானோ, என் மீது மேலும் பாரம் எதுவும் வைக்காமல், இவ்வுலகை விட்டே போய்விட்டார். என் அப்பாவை காப்பாற்றமுடியாத பாவியாகிவிட்டேனே. ” அந்நேரத்தில் அவன் மனைவி “இப்போது ஆகவேண்டியதை பாருங்கள். வீணாக இந்த நேரத்தில் மனதை அலட்டிக்கொள்ளதீர்கள்.  உடனே புறப்படுவோம் ஆஸ்பத்திரிக்கு.”  

அதன் பின்னர், ரவியின் அப்பாவின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்தது. கொஞ்ச நாட்களில், ரவி பெயரில், கொரியரில் ஒரு கடிதம் வந்தது.  அவன் அப்பா, அவர் ஆயுள் காப்பீடு பணம் பத்து  லட்சம் ரூபாய், ரவிபேரில் காசோலையாக வந்தது. அவனுடைய அப்பா பத்துவருடங்களுக்கு மேலாக காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணம் கட்டிவந்தது, ரவிக்கு தெரியாது. அவன் அப்பாவும் இதைப்பற்றி ரவியிடம் சொல்லவில்லை. கைகால் பிடிபடாமல் ரவி  மனைவியிடம் “நான் சேகரிடம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு போய் நின்றேன். இப்போது என் அப்பா, அதற்கு இரண்டு மடங்காக பத்து லட்சம் ரூபாயை எனக்கு கொடுத்து விட்டு, நமக்கு எந்தவித கஷ்டத்தையும் கொடுக்காமல், இவ்வுலகை விட்டு போய் விட்டார். எனக்கு அப்பாவின் பாசமும் அன்பும் கடைசி வரை வந்து உதவி செய்கிறது, ஆனால் என் நட்போ விஷத்தைவிட கொடியதாகிவிட்டது “. 

அப்போது அவன் மனைவி கூறினாள் “உங்கள் அப்பா இந்த காப்பீடு தொகை விஷயத்தை எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறி, இதை உங்களிடம் சொல்லவேண்டாம் என்றும், என்னிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்டார்.” ரவி விரக்தியுடன் சிரித்தான் “அருமை, அருமை, ஒரு புறம் இப்படிப்பட்ட ஒரு அப்பா, இன்னொரு புறம், நான் கொடுத்த பணத்தை முழுவதும் திருப்பி தராமல்,  என் வீட்டை அடமானம் வைத்துக்கொண்டு, வட்டியுடன் கடன் கொடுக்க முன்வரும், ஒருகாலத்தில் ஆருயிர் நண்பன் என்று நம்பிய சேகர். பொதுவாக, மகன், வயதான தன் அப்பாவை காப்பாற்றுவான், ஆருயிர் நண்பன் உயிரையும் பணயம் வைத்து, நண்பனை ஆபத்து காலங்களில் காப்பாற்றுவான். என் வாழ்க்கையில் எல்லாமே நேர்மாறு.”

 

சரியாக அந்த நேரத்தில் ரவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “ரவி, நான்தான் சேகர் பேசுகிறேன். நீஙயும் நானும் பேசி இரண்டுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. உன் தந்தை  தவறிவிட்டார் என்ற துக்கமான செய்தியை செய்தித்தாளில் பார்த்தேன். உனக்கு என் அனுதாபங்கள்.  நான் உனக்கு புரிந்த துரோகத்திற்கு இப்போது எனக்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது. நான் உயிருக்கு  உயிராக நேசித்த  என் மனைவி, ஆறு மாதங்களுக்கு முன்பு, அவள் போட்டிருந்த 50 லட்சம்  லட்சம் மதிப்புள்ள  நகைகளுடன் என்னைவிட்டு  பிரிந்து ,வேறு ஒருவனுடன் வாழ்ந்து வருகிறாள். அதை தொடர்ந்து அவள் விவாகரத்து வழக்கு ஒன்றை பதிவு செய்துவிட்டாள் . திருமணமாகி 15  வருடங்கள் ஆகியும், நான் அவளை எந்த விதத்திலும் திருப்தி படுத்த முடியவில்லை என்பதை முக்கிய காரணமாக குறிப்பிட்டிருக்கிறாள். அதன் விளைவு தனக்கு இதுவரை தாய்ப்பேறு  கூட கிடைக்கவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறாள். இந்த நிலையில் என்னால் வியாபாரத்தையும் முழு கவனத்துடன் செய்யமுடியவில்லை. நான் உனக்கு கொடுக்கவேண்டிய இரண்டு லட்சத்தை வட்டியும் முதலுமாக உனக்கு திருப்பி தந்துவிடுகிறேன். நீ உன்னுடைய பேங்க் அக்கௌன்ட் விவரங்களை  எனக்கு இந்த வாட்ஸாப் நம்பருக்கு அனுப்பி வை . நீ சரி என்று சொன்னால் நான் உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்” என்று மூச்சு விடாமல் சொல்லிமுடிதான் சேகர். 

இரன்டு வருடங்களுக்கு முன்வரையில், கிட்டத்தட்ட இருபது வருடங்களாக  உயிர் நண்பனாக பழகிய சேகரை, அவர்களது நட்பை, ரவி முப்பது நொடிகள் சிந்தித்து பார்த்தான். அடுத்த நொடி, ஒரு வார்த்தைகூட பதில் பேசாமல் ரவி, சேகரின்   அலைபேசி அழைப்பை துண்டித்தான்.

“பணம் அடைய ஒருவன் துடிக்கிறான்

கிடைத்தபின் செய்நன்றி மறக்கிறான்”

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam