Visitors have accessed this post 120 times.

கல்யாணத்தில் சரமாரி

Visitors have accessed this post 120 times.

காலணா கணேஷ்: இன்னாமா கண்ணு, உனுக்கு சேதி தெரியுமா?

தம்பிடி தினேஷ்: இன்னாடா காலணா?

காலணா கணேஷ்: நம்மோட மூர்த்தி பய, கல்யாணம் பண்ணிக்கினான்

தம்பிடி தினேஷ்: நல்ல சேதிதானேடா மச்சி.

காலணா கணேஷ்: அட நீ ஒண்ணு, அவன் நிச்சயித்தபெண்ணுக்கு பதில் வேறு ஒருத்திக்கு தாலி கட்டிபுட்டான்.

தம்பிடி தினேஷ்: யாஆவ்வ், இன்னாடா இது புது கன்றாவியா கீது, எப்படி  நடந்துச்ச்சு?
காலணா கணேஷ்: மூர்த்தி அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த விமானம் லேட்டா வந்துச்சா. அங்கிருந்து நேரா அவன் கல்யாணச்சந்திரத்துக்கு டிரக்ட்டா ஊபர்ல வண்டியை உட்டான்.

தம்பிடி தினேஷ்: எந்த கல்யாண மண்டபம் கண்ணு?

காலணா கணேஷ்: அதாம்பா, கூடுவாஞ்சேரியில இருக்குதே சனி கல்யாண மண்டபம், அதுல தான்.

தம்பிடி தினேஷ்: அப்போ, சரியான கல்யாண மண்டபம் தான் போயிருக்கான்.

காலணா கணேஷ்: ஆமாம் தம்பிடி. ஆனா போன பிறகு அங்கே கிட்டத்தட்ட அதே   நேரத்தில்ரெண்டு கல்யாணங்கள் இருக்குன்னு தெரிஞ்சது. சத்திரத்து கீழே ஒரு கல்யாண மேடை ,  மாடில இன்னொரு கல்யாண மேடை. அன்னிக்குன்னு பார்த்து அங்கே ரெண்டு கண்ணாலம். மச்சி இன்னொரு செம்மையான தமாசு இன்னான்னு கேட்டினா, அன்னிக்கு கல்யாணம் செஞ்சிக்கிற இரண்டு ஜோடிகள் பேரும் , மூர்த்தி- கீர்த்திதான்.
தம்பிடி தினேஷ்: இன்னாடா சொல்லுறே காலணா? ஒரே பேர்ல ரெண்டு ஜோடியா. அம்மா சாமி நைனா. அது சரிடா. கல்யாணம் எப்படி ட்ராக் மாறிப்போச்சு?

காலணா கணேஷ்: கீழே ராகு மண்டபத்தில் ஒரு கல்யாணம். மாடியில் கேது மண்டபத்தில் இன்னொரு கல்யாணம். இரண்டு கல்யாணமும் ஒரே குடும்பத்து கல்யாணம் தான். அதுவும் ரெண்டு கல்யாண பொண்ணுங்களும் இரட்டையருங்க, ட்வின்ஸ். ரெண்டு பேருக்கும் கீர்த்தின்னுதான் பேரு. பார்ப்பதற்கும் ஒரே மாதிரியாதான் இருப்பாங்க.

தம்பிடி தினேஷ்: அப்புறம் என்னப்பா, ரெண்டு பசங்களும் மூர்த்திதான். கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு மாறிச்சுன்னா ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லைதானே. இரண்டு பொண்ணுங்களும் ஒரே சைஸுன்னு சொல்லறியே.

காலணா கணேஷ்: டேய் தம்பிடி. பார்க்க ஒரே மாதிரின்னுதான் சொன்னேன். வயசும் ரெண்டுபேருக்கும் இருப்பது நாலு தான். ஆனா ரெண்டு பேருடைய சைஸுல நிறைய வித்தியாசம் இருக்குடா. ஒருத்தி சாதாரண உடம்பு, இன்னொருத்தி கொஞ்சம் குண்டு.

தம்பிடி தினேஷ்: ஓ ஓ ஓ அப்படீன்னா கொஞ்சம் பிரச்சினை தான்.

காலணா கணேஷ்: அமெரிக்காவிலிருந்து வந்த மாப்பிள்ளையும் , கூடுவாஞ்சேரி மாப்பிள்ளையும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பார்கள்.

தம்பிடி தினேஷ்: அவங்க என்ன அண்ணன் தம்பிங்களா?

காலணா கணேஷ்: அண்ணனும் இல்ல தம்பியும் இல்ல. ஒருத்தனை இன்னொருத்தனுக்கு தெரியாது.

தம்பிடி தினேஷ்: அடேங்கப்பா, என்ன அதிசயம்டா காலணா.

காலணா கணேஷ்: சென்னைல பொறந்து வளர்ந்தாலும் பொண்ணுங்க குடும்பம் தெலுங்கு. அவங்க முறைப்படி விடியற்காலை மூணு மணிக்கு ஒரு முகூர்த்தம்,

இன்னொன்னு மூணு பதினைந்துக்கு.

தம்பிடி தினேஷ்: எல்லாரும் அசந்து தூங்குற நேரத்துல எப்படிடா கண்விழித்து கண்ணாலம் பண்ணறாங்க?

காலணா கணேஷ்: ஆமாம்பா, சரியா சொன்னே. இந்த ரெண்டு கண்ணாலமும் கூட கொஞ்சம் தூக்க கலகத்தில்தான் நடந்திருக்குது. ஏர்போர்ட்டிலிருந்து நேரே கல்யாண மண்டபத்திற்கு வந்த மூர்த்தி, கீழே உள்ள ராகு மண்டபத்திற்கு போகாமல் மாடியில் உள்ள கேது மண்டபத்திற்கு போய்ட்டான். ஏன்னா, மாடியிலதான் அப்போ வெளிச்சம் இருந்தது. அவன் அங்கே போகும்போது சரியாக இரவு இரண்டு மணி அம்பத்தஞ்சு நிமிஷம். அங்கே பொண்ணுக்கு தாலி கட்டவேண்டிய நேரம் காலை மூணு மணி. சொல்லி வச்சா மாதிரி அந்த நேரத்தில் கரண்ட் புட்டுக்கிச்சு.

தம்பிடி தினேஷ்: டேய் காலணா. இது இன்னாடா சினிமால வர்ர கிளைமாக்ஸ் காட்சி மாதிரி கீது.

காலணா கணேஷ்: இந்த கண்ணால கூத்த பாக்கசொல்ல சினிமா கினிமால்லாம் ஒண்ணுமே இல்லை. கூடுவாஞ்சேரி மூர்த்தி மறந்து போய் காலை இரண்டே முக்கால் மணிவரை அவர் வீட்டில் தூங்கி விட்டு பின்னால அடிச்சிபுடிச்சிக்குனு சத்திரம் வரச்சொல்ல கிட்டத்தட்ட மூணேகால் மணி. ஜெனெரேட்டர் காலை ரெண்டு மணி வரைக்கும் வேலை செஞ்சிது. பிற்பாடு பூட்ச்சு. ஏன்னா, டீசல் காலி , டீசல் வாங்க மறந்து பூட்டாங்க, ஒரு சொட்டு டீசல் கூட கிடைக்கல. எல்லாம் அப்போ இருட்டு மயமாத்தான் இருந்தது.

தம்பிடி தினேஷ்: இப்போ நான் இன்னா நெனைக்கிறேன்னா, அமெரிக்கா மூர்த்தி கீழே

போய் தாலி கட்டவேண்டியவன், மேலே போய் மூணு மணி முகூர்த்த கீர்த்தி பொண்ணுக்கு, தாலியை லொடுக்குன்னு கட்டியிருப்பான். இன்னொரு நைனா, அதான் கூடுவாஞ்சேரி மூர்த்தி, மாடிக்கு போய் தாலி கட்டுவதற்கு பதிலா, கீழே ராகு மண்டபத்திற்கு போய் இன்னொரு கீர்த்தி பொண்ணு கழுத்துல நறுக்குன்னு தாலிய கட்டியிருப்பான். இன்னா காலணா, நான் நெனைச்சது காலணாவாவது கரீட்டா?

காலணா கணேஷ்: சும்மா சூப்பரா சொல்லிப்புட்ட தம்பிடி. உன்னை நான் தம்பிடி பிரயோசனம் கூட ஆகாதவன்னு நெனைச்சது தப்புதாம்பா.

தம்பிடி தினேஷ்: அப்புறம் எப்படி தெரிஞ்சது , தப்பு தாண்டா நடந்துருத்துன்னு?

காலணா கணேஷ்: இருட்டோடே இருட்டா, ஜோடிகள் ஒருமணி நேரம் கொஞ்சம் ஜல்சா பண்ணியிருக்காங்க. ஆறு மணி வாக்குல வெளிச்சம் வந்தவுடன், ஒரு மூர்த்தி ஐயோ ஐயோ என்று அலறினானாம்.

தம்பிடி தினேஷ்: ஏண்டா, அவன் ராகுகாலம் பிடிச்சவன் மாதிரி ஐயோ ஐயோன்னு அலறினான்?
காலணா கணேஷ்: ஏண்டா கேக்குற இந்த வவுத்தெரிச்சலை. இந்த ரெண்டு மூர்த்தில ரு மூர்த்தி, ஒரு கீர்த்தியை அவ்வப்போது முன்பே கொஞ்சம் கணக்கு பண்ணியிருக்கானாம். ஒரு மாசத்துக்கு முன்னாடி அந்த கீர்த்திக்கு ரெண்டு மாசம்னு சொன்னாங்களாம். அந்த கீர்த்தி குண்டு இல்லை சாதாரணமாக இருப்பாள்.

தம்பிடி தினேஷ்: அட பாவி புள்ளைங்களா, கல்யாணத்திற்கு மூணு மாசத்திற்கு முன்னாலேயே கூடி கும்மாளம் போட்டுண்டங்களா!

காலணா கணேஷ்: கூடுவாஞ்சேரி மூர்த்தி தாலி கட்டி காலங்கார்த்தால கணக்கு பண்ணது, குண்டா இருக்கும் கீர்த்தியை. இப்போ புரியுதா தம்பிடி கண்ணு, எப்படி ஆக்சிடென்ட் ஆச்சுன்னு!

தம்பிடி தினேஷ்: ஆமாம் இந்த கண்ராவிங்க, இல்ல கண்ணாலங்க எப்ப நடந்தது?

காலணா கணேஷ்: அட ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் தம்பிடி.

தம்பிடி தினேஷ்: சரி, இன்னொரு மூர்த்திக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சா?

காலணா கணேஷ்: பின்னே என்ன தம்பிடி. லோக்கல் மூர்த்தியை அப்பாவாக்கும் பொண்ணை, அமெரிக்கா மூர்த்தி வச்சிக்க கூடுவாஞ்சேரி மூர்த்தி எப்படி ஒத்துப்பான்?அவன் தாலி கட்டியது குண்டான கீர்த்தியை. விவரம் தெரியாம லோக்கல் மூர்த்தி, ஓரிரண்டு மணிநேரம் அப்பிடி இப்பிடின்னு குண்டு கீர்த்தியுடன் இருந்தாலும், அதேபோல அமெரிக்கா மூர்த்தி பக்கமும் நடந்தாலும், மனம் ஒப்புக்குமா?

தம்பிடி தினேஷ்: புரியுதுடா மச்சி, அல்டிமேட்டா இன்னா நடந்தது?, அத்த சொல்லுடா. எனக்கு கையும் காலும் ஓடலடா.

காலணா கணேஷ்: என்கிட்டே லோக்கல் மூர்த்தி சொன்னவரைக்கும், அவன் இந்த விஷயத்தை கல்யாணம் நடந்த நாளே , அதாவது காலை ஆறு மணி அளவில், அமெரிக்கா மூர்த்தியிடம் ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டானாம். குண்டு இல்லாத கீர்த்தியும் அதை அமெரிக்கா மூர்த்தியிடம் ஒப்புக்கொண்டு விட்டாளாம். இரண்டு கீர்த்திகளும் தங்களுக்குள்ளே ரகசியமாக பேசி லோக்கல் மூர்த்தி ஆலோசனையை ஒப்புக்கொண்டுவிட்டார்களாம். எனவே, எனக்கு கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்படி, இரண்டு மூர்த்திகளும், அவரவர் புதிய மனைவியை ஸ்வாப் செய்து கொண்டுவிட்டார்களாம்.
தம்பிடி தினேஷ்: அதென்னப்பா ஸ்வாஹா செய்துவிட்டார்கள் என்கிறாய்?

காலணா கணேஷ்: ஸ்வாஹா இல்லடா தம்பிடி, ஸ்வாப் என்றால் ஒருவர் தவறுதலாக தாலி கட்டிய மனைவியை, அதே மாதிரி தவறுதலாக தாலி காட்டிய இன்னொருவருக்கு எஸ்சாஞ்சு ஆபர் மாதிரி மாத்திக்கிணங்களாம்.

தம்பிடி தினேஷ்: என் தலை வெடிக்கிறமாதிரி இருக்குடா கணேஷ்.

காலணா கணேஷ்: அந்த நாலுபேர்களுக்குள்ளேயே ஒன்னும் இல்ல அப்புறம் நாம் ஏண்டா அதை போட்டு குழப்பிக்கணும். ஏதோ என்னுடைய நெருங்கிய நண்பன் என்பதால், லோக்கல் மூர்த்தி என்னிடம் இந்த விஷயத்தி சொல்லிப்புட்டான். நடந்தது எல்லாமே அவங்க நல்லதுக்குதான். இதை பத்தி நீ இனி வாயை திறக்கக்கூடாது. புரியுதா தம்பிடி?

தம்பிடி தினேஷ்: எங்கம்மா உங்கம்மா மேல சத்தியமா நான் எவருக்கும் இதைப்பத்தி சொல்லமாட்டேன்டா. அப்படி சொன்னாலும் ஒரு காலணா பிரயோசனம் இல்லை.

காலணா கணேஷ்: டேய் தினேஷு, நீ என்னடா காலண்ணாக்கும் தம்பிடிக்கும் முடிச்சி போடற?

தம்பிடி தினேஷ்: (சிரித்தபடி), டேய் மச்சி நீயும் நானும் ஆம்பளைங்க, அப்புறம் எப்படிடா நமக்குள்ள முடிச்சி போட்டுக்கமுடியும்…

காலணா கணேஷ் கலகலவென்று சிரித்துவிட்டு, தம்பிடி தினேஷ் முதுகில் மகிழ்ச்சியால் அடிக்க , இருவரும் அவர்களது காலணா தம்பிடி பொழைப்பை கவனிக்க புறப்பட்டனர்.

 

 ஜாய்ராம்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam