Visitors have accessed this post 930 times.
முன்னுரை:
செல்வம் என்னும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. “மதிப்பிற்குரியது” என்பது அவற்றுள் ஒன்று. “பொருள் என்னும் செல்வச் செவிலி” என்பது திருக்குறள். கல்வி, கேள்வி மனநிறைவு, அறிவு, பொருள் என்பவையெல்லாம் செல்வங்கள் எனப்படுகின்றன.
இவையெல்லாம் ஒருவனுக்கு கிடைத்தாலும் அவன் நோயாளியாக இருந்தால் என்ன பயன்? எனவே “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது சரியே.
நோய்வரக் காரணங்கள்:
நோய் வருவதற்கான காரணங்கள் பலப்பல. போதிய உணவு இல்லாமை, சத்துக் குறைபாடு, உடலில் நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமை, அதிகமாக உண்ணுதல், உடல் உழைப்பு குறைபாடு, தீய பழக்கங்கள், போதிய உறக்கம் இன்மை, சுற்றுபுற சூழல், பருவ மாற்றம் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
நோய் தீர்க்கும் வழிமுறைகள்:
நோய் தீர்க்கும் வழிமுறைகளை இரண்டாகப் பகுக்கலாம். 1. உணவு 2. மருந்து. உணவே மருந்தாக அமையும். அளவான உணவு நோய் தீர்க்கும். உணவு உண்ணாமல் இருப்பது நோய் தீர்க்கும் வழிமுறையில் அடங்கும்.
மருந்து மூலம் நோய் தீர்ப்பதில் மருத்துவழிமுறைகள் பலவும் உதவுகின்றன. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் என்பன சில.
“காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய்” என்னும் பழமொழி பொன் போல் போற்றத்தக்கது.
வருமுன் காத்தல்:
நோய் வருமுன் காத்தல் நல்லது. அளவான உணவு, காலத்திற்கு பொருந்திய உணவு, சத்தான உணவு, தூய குடிநீர், தூய்மையான சுற்றுப்புற சூழல், தீய பழக்கங்கள் இல்லாமை முதலியவை நோய் வருமுன் காக்கும் முறைகள்.
உணவும் மருந்தும்:
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”என்னும் பழமொழி உணவைப் பற்றி அறிவுறுத்துகிறது. சத்துக் குறைபாடு காரணமாக நோய் வராமல் தடுக்க கீரை, காரட், முட்டைகோசு போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்துக் குறைபாட்டால் நோய் வராமல் இருக்க வேண்டுமா? தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும். பித்தம் வராமல் தடுக்க உணவில் இஞ்சி சேர்க்க வேண்டும். எளிதில் கிடைக்கும் பழ வகைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன.
உடற்பயிற்சியின் தேவை:
முன்காலத்தில் வீட்டு வேலைகள் உடற்பயிற்சியாய் அமைந்தன. இப்போது வீட்டில் இயந்திரங்கள் வேலை செய்கின்றன. மக்கள் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். முதியவர்கள் ஒரு நாளைக்கு முக்கால் மணி நேரமாவது நடக்க வேண்டும். இளைஞர்கள் ஓட்டம், கபடி, பந்தாட்டம் முதலியவற்றை பயிற்சியாகக் கொள்ளலாம்.
காலை மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஒடிப் போவானே.
என்பது கவிமணி அறிவுரை.
முடிவுரை:
நோய் வரக் காரணங்கள், நோய் தீர்க்கும் வழிமுறைகள், வருமுன் காத்தல், உணவும் மருந்தும், உடற்பயிற்சியின் தேவை ஆகியவற்றை கண்டோம் இவற்றை பின்பற்றி நலம் பெறுவோம்.
பழமொழி: உணவே மருந்து மருந்தே உணவு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை