Visitors have accessed this post 118 times.

பிச்சை எடுக்காத பிச்சைக்காரன்

Visitors have accessed this post 118 times.

 

காலத்தின் கோலங்களை யார் அறிவார்? முற்றும் தெரிந்த முனிவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அல்லது அழைக்கப்படுபவர்கள் (அப்படி எவராவது இருந்தால்) அறிவார்களா? யார் அந்த முற்றும் துறந்த தெரிந்த முனிவர்கள்? ‘நான் எல்லாவற்றையும் அறிவேன். நான் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவன். நான்தான் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு காரணம். என்னை எவன் ஒருவன் சரணடைகிறானோ அவனை நான் கைவிட மாட்டேன். என்னையே நினைத்து பக்தி செய்திடில் நான் நான் உங்களுக்கு மோட்சத்தை வழங்குவேன்என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுவதாக வியாசர் எழுதிய மகாபாரதம் எனும் இதிகாசம் சுட்டிக்காட்டுகிறது. இதை குறிப்பிடுகையில் இந்த ஒரு விஷயத்தையும் கூறியாகவேண்டும். மகாபாரதம் மற்றும் ராமாயணம் உண்மையிலேயே நடந்த நிகழ்வுகளா என்னும் ஒரு விவாதம் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய அளவில் மக்களின் நம்பிக்கையை மட்டும் பொறுத்துதான் இவை உண்மை சம்பவங்களா அல்லது வேதவியாசரின் கற்பனையில் விளைந்த தோத்திரங்களா என்பது நோக்கப்படுகிறது.

நான் எனது முந்தைய பல கட்டுரைகளில் குறிப்பிட்டதையே மீண்டும் இங்கு கூற விழைகிறேன். இதுவரையில் உலகில் தோன்றிய கடவுளின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் எவரும் கடவுள் என்று நம்பப்படும், கருதப்படும், போற்றப்படும் மாபெரும் பிரபஞ்ச சக்தி இல்லை. அப்படி தோன்றிய அனைத்து மானிடர்களும் ஏதாவது ஒரு அரிய சக்தியையோ அல்லது வரத்தையோ பெற்றிருந்தார்கள். அவ்வளவே தவிர அவர்கள் கடவுளின் சக்திகளை நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் இல்லை. எவர் ஒருவர் இத்தகைய பூரண சக்திகளை பெறவில்லையோ அவர்கள் முதற்கடவுளாக இருக்கமுடியாது. இதை சாதாரண மக்கள் கூட புரிந்துகொள்ள முடியும்.

இன்றைய உலகத்தில் எவ்வளவு பேர்களை பார்க்கிறோம். ஏதேதோ விந்தைகள் மற்றும் சாகசங்கள் புரிகிறார்கள். ரஷிய மனிதன் விண்வெளியில் பறந்தான், எல்லோராலும் பறக்கமுடியுமா? அமெரிக்காவின் ஆர்ம்ஸ்ட்ராங் சந்திரனில் காலடி வைத்தார். எவ்வளவு பேர் இன்று சந்திரனுக்குப்பயணம் செய்ய தைரியமாக இருப்பார்கள்? நாலாயிரம் ஐந்தாயிரம் அடி உயரத்திலிருந்து பாராச்சூட் இல்லாமல் கீழே குதிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஏன், சர்க்கஸிலும், கண்காட்சிகளிலும் ஒரு சிறிய கூண்டிற்குள் நூற்றிஐம்பது இருநூறு கிமீ வேகத்தில் பைக் விடுபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்இவ்வளவு ஏன், முற்பது நாற்பது அடிக்கு மேல், கயிற்றில் கட்டையும் கையில் இல்லாமல் நடப்பவர்கள் இருக்கிறார்கள்தானே? இவர்களைப்போல் நம்மில் எவ்வளவு பேர்கள் இந்த காரியத்தை செய்யமுடியும். இருப்பது முப்பது அடுக்குகள் கொண்ட பலஅடுக்கு மொட்டை மாடியிலிருந்து இருபது முப்பது அடிகள் தூரத்தில் இருக்கும் இன்னொரு பலஅடுக்குக்கு மாடியின் மொட்டை மாடிக்கு, எந்தவித துணையும் கருவியும் இன்றி, தன் உயிரை பணயம் வைத்து தாண்டுபவர்கள் சிலரும் இருக்கின்றார்கள்தானே? இப்படிப்பட்ட மயிர்கூச்செரியவைக்கும் சாகசங்களை செய்யும் சிலர் இத்தகைய செயல்களை செய்கையில் விபத்துக்குள்ளாகி இறந்து விடுவதையும் பார்க்கிறோம்

மனிதனாகப்பிறந்தவன் இறந்துதான் ஆகவேண்டும். இப்போது வரை இதுதான் பிரபஞ்சத்தின் நியதி. அந்த வகையில் நோக்குகையில் உலகில் இதுவரை பிறந்த அல்லது அவதரித்த எல்லா மானிடர்களும், அவர்கள் எத்தகைய பிரசித்தி பெற்ற மனிதர்கள் ஆயினும் சரி, அல்லது அரிய உடல் சக்தி மற்றும் தெய்வீக சக்தி பொருந்தியவர்களாயினும் சரி, அவர்களும் மற்ற மனிதர்களைப்போலத்தான் மரித்துப்போனார்கள்யேசுவாக இருக்கட்டும், ராமனாக இருக்கட்டும் அல்லது கிருஷ்ணனாக இருக்கட்டும். இப்படியாக பிறந்து இறப்பவர்கள் எவ்வாறு கடவுளாக இருக்கமுடியும்? பிறப்பும் இறப்பும் அற்றவர் தான் கடவுள் என்றால், உலகில் இதுவரை பிறந்த எந்த ஒரு மனிதனையும் கடவுள் என்று எப்படி ஒப்புக்கொள்வது?

ஒரு வேளை அவர்கள் கடவுளின் உண்மையான பிரதிநிதிகள் என்றால், இன்று உலகம் இத்தகைய வருத்தத்திற்குரிய ஒரு சூழ்நிலையில் இருக்குமா? ஒரு பக்கம் லட்சக்கணக்கில் மக்கள் தெருக்கோடிகளில் உணவுக்காக இரந்துகொண்டும், உணவின்றி இறந்துகொண்டும் இருக்கையில், இன்னொரு புறம் சில லட்சக்கணக்கான மக்கள் மட்டும் பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் நிலைதான் உலகில் ஏற்பட்டிருக்குமா? கடவுள் நல்லவர்களை காப்பாற்றுவார் என்றால் எவ்வளவு நல்லவர்கள் பெரும்துன்பத்திற்கு ஆளாகிறார்கள். கடவுள் தீயவைகளை அழிப்பவர் என்றால் உலகில் உள்ள எத்தனையோ லட்சக்கணக்கான ( கோடிக்கணக்கிலும் இருக்கலாம்) தீயவர்கள் எல்லோரும் எப்போதோ இறந்திருக்கவேண்டும் அல்லது அவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது தண்டிக்கப்படவேண்டும். இவை எதுவும் இவ்வுலகில் நடப்பதில்லை.

இப்படி இருக்கையில், நாம் சிலரை கடவுள் என்று சொல்லி வழிபடுவது எதற்காக? எல்லாம் ஒரு மன திருப்திக்காக, அல்லது மன ஆறுதலுக்காக. தவிர, மரணம் என்னும் பயத்தினாலும் தான்? இன்னுமொரு பகுத்தறிவு காரணம், ஒரு ஒழுக்கமுறையில் இந்த மாபெரும் இயற்கை இயங்கிவருவதற்கு நிச்சயமாக ஒரு மூல காரணம் இருக்கும். இதை ஒருவர் கடவுள் என்கிறார், இன்னொருவர் இயற்கை என்கிறார், மேலுமொருவர் மாயை என்கிறார். ஆக, ஏதோ ஒன்று நாம் இவ்வுலகில் பிறந்து உயிர்வாழ மூல காரணமாக இருக்கிறது.

இந்த காரணங்களை வைத்து பார்க்கையில், ஒவ்வொரு மனிதனுக்கும் நடக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் அவர்களின் கடந்த மற்றும் நிகழ் கால வினைப்பயன்கள் காரணங்களினால்தான் என்னும் கருத்தை நம்மால் ஒருஅளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால், நமக்கு நிகழும் அனுபவங்கள், குறிப்பாக துயரங்கள், துன்பங்கள் மற்றும் வேதனைகள் நாம் இப்பிறப்பில் செய்த பாவச்செயல்களை விட பலமடங்கு அதிகமாக ஏன் தாக்க வேண்டும்? இப்படிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் உங்களில் பலபேருக்கு நிகழ்ந்திருக்கும் அல்லது நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடும்.

 

ஒரு சிலருக்கு மட்டும் வாழ்வு பலருக்கு தாழ்வு என்னும் கோட்பாட்டை என்னால் உண்மையில் ஜீரணிக்கமுடியவில்லை. இப்பிறவியில் செய்யாத குற்றத்திற்காக, எவ்வளவோ கொடுமைகளையும் சோதனைகளையும் ஒருவர் அனுபவிக்கிறார் என்பதை காணுகையில், இந்த உலகம் மிகவும் பொல்லாத, நன்றிகெட்ட உலகம் என்றுதானே பலரின் மனதிலும் தோன்றும். அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றினாலும், நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் பரிதாபமான நிலையில்தான் பலர் வாழ்ந்து வருகின்றனர்.  

நான் இதுவரை வாழ்க்கையில் பணம் மற்றும் பொருள் பிச்சை எடுத்ததில்லை. லஞ்சம் வாங்குவது மிகவும் கேவலமான பணம் வாங்கும் பிச்சைபசியின் கொடுமையை தீர்த்துக்கொள்ளவே எனும்போது, பிச்சை எடுப்பது பாவச்செயலாக இருக்கமுடியாது. ஆனால் லஞ்சம் எனும் பிச்சை வாங்குவது நிச்சயமாக ஒரு பாவச்செயல் இன்றி வேறு எதுவும் இருக்கமுடியாது. அந்த வகையில் நான் எந்த ஒரு பிச்சையும் இதுவரை எடுக்கவில்லை. என் கர்மவினைகள் என்னை பாதுகாத்து வந்திருக்கின்றன என்றும் கூட சொல்லலாம். ஆயினும், எனது உடல் மற்றும் மன நலனுக்காகவும் நிம்மதிக்காகவும், ஏன் நல்ல தூக்கம் வரவேண்டியும் பல முறை, கண்ணிற்கு தெரியாத கடவுளிடம் பிச்சை கேட்டிருக்கிறேன்.

அவ்வப்போது எனக்குள் தோன்றும்நாமும் பிரபஞ்சத்தின் ஒரு சிறிய கூறுதானே (எவ்வளவு சிறிதாக இருப்பினும்), அப்படி இருக்கையில் நாமும் அந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம்தானே, பின் ஏன், நாம் அந்த கடவுள் எனக்கருதப்படும் பிரபஞ்ச சக்தியிடம் பிச்சை கேட்கவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் நான் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம் எனும்போது, நான் பிரபஞ்சம் எனப்படும் குடும்பத்தில் ஒரு அங்கமே. அப்படியாயின், ஒரே குடும்பத்தில் இருந்துகொண்டு அந்த குடும்பத்தின் தந்தைபோன்ற தலைவரை அணுகி பிச்சை கேட்கும் செயல் கொஞ்சம் விந்தையாகவே தெரிகிறதுநாம் நம் தாயிடம்அம்மா தாயே சோறு போடு என்று பிச்சை கேட்டோமா?’ அப்பாவிடம்ஐயா சாமி எனக்கு பத்து ரூபாய் கைச்செலவுக்கு கொடுங்கள்என்று பிச்சை கேட்டோமா? இந்த கோணத்தில் பார்த்தால், நாம் கடவுளிடம் கோரிக்கைகள் வைப்பதும் நம் தந்தை தாயிடம் பிச்சை கேட்பதைப்போலத்தான் இருக்கிறது.

கண்ணுக்குத்தெரியாத அந்த மாபெரும் சக்திக்கு நாம் எப்படி வாழ்கிறோம் என்பதும் நிச்சயமாக தெரிந்திருக்கவேண்டும். அப்படி என்றால், நாம் சுகப்படுவதையும் துன்பப்படுவதையும் இந்த பிரபஞ்சம் எனும் கடவுள் சதா சர்வ காலமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படியாக நோக்குகையில், நாம் எவரிடத்திலும் பிச்சை ஏந்துதல் கூடாது, கடவுளிடத்திலும் தான். படைத்தவன்தானே நம்மை காப்பாற்றவேண்டும்?

எப்படி இருக்கிறது நிலை, பார்த்தீர்களா? கர்மா வினைகள் என்ற பெயரில் நழுவிக்கொண்டு, கடவுளும் நம்மை கண்டுகொள்வதில்லை என்பதுபோலத்தான் எனக்குத்தோன்றுகிறது. உண்ண உணவு, உடுக்க உடை, உறைய உறைவிடம் இந்த மூன்றும் அடையப்பெற்ற எனது மன நிலையே இப்படி எனில், இவை எதுவுமே இல்லாத எவ்வளவு கோடி மக்கள் அவர்களது சகோதர சகோதரிகளிடம் (நம்மிடம்தான்) ” ஒரு பிடி சோறு கொடுங்கம்மா. பசி உயிர் போகுது. ஒரு ரூபாய் காசு கொடுங்கையா. வாழ வழியில்லாமல் இருக்கிறேன்என்று அன்றாடம் பிச்சை கேட்டு உயிர் பிழைக்கும் கேவலமான நிலயைத்தான் என்ன சொல்ல?

எனவே ஒரு தம்பிடி பைசா இல்லாத பிச்சைக்காரனும் சரி அல்லது ஒரு நாளுக்கு போட்ட சட்டையை அடுத்த நாள் போடாமல் தூர எறியும் பணக்காரனாயிருப்பினும் சரி, எல்லோருமே ஏதாவது ஒன்றை பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் பிச்சை போடுவது கடவுளா அல்லது வினைப்பயன்களா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

 

இந்த உலகம், ஒருவர் இன்னொருவரை ஏதோ ஒரு விதத்திலோ அல்லது பலவிதத்திலோ சார்ந்த உலகமாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில், நாம் அனைவருமே பிச்சை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் பிச்சை எடுக்கும் பாமர அல்லது படித்த பிச்சைக்காரர்களே!

Leave a Comment

Write and Earn with Pazhagalaam