Visitors have accessed this post 780 times.

விழித்து கொள்வோம்

Visitors have accessed this post 780 times.

நெல்லையில் ஒரு தனியார் பள்ளியில் நேற்று பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி. ஒரு மாணவன் கவலைக்கிடமான சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 இந்த செய்தியை பார்த்த கேட்ட நமக்கே இந்த அதிர்ச்சி மனநிலை என்றால் அந்த மாணவர்களின் பெற்றோர்களின் நிலை என்னவாக இருக்கும்?

 இதைவிடக் கொடுமை அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருடைய மனநிலை என்னவாக இருக்கும்?

 ஒவ்வொருவரும் இறந்தது யார் பிள்ளைகளாக இருக்கும் என்று பதறிய பதட்டம் கண்கொண்டு பார்க்க முடியாதது.

 பள்ளிக்குள் இருக்கும் குழந்தைகளின் மனநிலை அதைவிட பதட்டம் தெரிந்தது. இச் சூழலுக்கு இந்நிலைக்கு யார் பொறுப்பு?

 கொரோனா காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பூட்டியிருந்த பள்ளி கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்ட போது அந்த பள்ளியை சேர்ந்தவர்கள் அந்த கட்டிட பராமரிப்பு பணிகளை செய்யாமல்  திறந்தனரா?

 பின்னர்   கொடு   மழை கொட்டித் தீர்த்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மீண்டும் திறந்தபோதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யப்படவில்லையா?

 இதில் யாரைக் குற்றம் சொல்வது பள்ளி  நிர்வாகிகளையா?  பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளையா? கண்டிப்பாக முடியாது. ஏனெனில் பணம் படைத்தவர்களையோ அதிகாரம் படைத்தவர்களை யோ  நாம் குறை சொல்லக்கூடாது. குறை சொல்ல முடியாது. ஏனெனில் அப்படி சொன்னாலும் எதுவும் மாறப்போவதில்லை. இன்னும் இரண்டு நாளைக்கு அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வுகள் நடத்தப்படும். அதோடு அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்படும் .அவ்வளவே.

 எனவே நல்ல பள்ளிக்கூடமா? தரமான கட்டிட வசதி உள்ள பள்ளிக்கூடமா என்பதை பார்த்து கவனித்து தங்கள் பிள்ளைகளை சேர்த்து விட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாதது அந்த குழந்தைகளின் பெற்றோரின் தவறு என்று கஷ்டப்பட்டாவது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து நம்மை விட உயர்ந்த நிலைக்கு நம் பிள்ளைகளை வர வைத்துவிட வேண்டும், என்ற  கனவோடும் ஆசையோடும் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த பெற்றோரின் மீதே பழியைப் போட்டு விடுவோம். ஏனெனில் எளியோர் மீது பழி போடுவதே நமக்கு எளியது.

 “அனைவருக்கும் கல்வி” என்ற முழக்கம் மட்டுமே போதுமானது. அந்த கல்வியின் தரம் கற்பிக்கும் ஆசிரியர்களின் தரம் மற்றும் கல்விக்கூடங்களின் தரம் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

 பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் பாரம்பரியமான பள்ளி ,நற்பண்புகளை போதிக்கும் பள்ளி, நல்வழிகாட்டும் பள்ளி சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் பள்ளி என்றெல்லாம் பார்த்து பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர் முதலில் ஆய்வு செய்ய வேண்டியது நம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான பள்ளி? என்பதே ஆகும்.

 குழந்தைகளின் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அவர்கள் பாதுகாப்புக்கும் கொடுக்கப்பட வேண்டும்.  பெற்றோர்களை விட அதிக நேரம் பள்ளிகளிலேயே மாணவர்கள் செலவழிக்கின்றனர். அப்போது யாருக்கு பொறுப்பு அதிகம் இருக்க வேண்டும். பள்ளி  நிர்வாகிகளுக்கே.

 கல்வித்துறை அதிகாரிகளின் பொறுப்பு என்ன? கல்வியின் தரத்தை மட்டுமே அவர்கள் ஆய்வு செய்வார்களா? பள்ளியின் கழிவறை வசதி, பள்ளியின் இருக்கை வசதி ,பள்ளியை சுற்றி உள்ள சூழ்நிலை என்ன ? என்று எதையுமே ஆய்வு செய்ய மாட்டார்களா?

 குழந்தைகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு ? பெற்றோரா ஆசிரியர்களா? நிர்வாகிகள் அதிகாரிகளா?

 “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்று போதிக்கப்பட வேண்டிய பள்ளிகளிலேயே யாரும் தங்கள் கடமையை ஒழுங்காக, முழுமையாக செய்யாததன் விளைவே இன்று நடந்த நிகழ்வின் காரணம்.

 எத்தனை தனியார் பள்ளிகளில் கழிவறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? சுத்தமான கழிவறைகள் இல்லா காரணத்தினால் எத்தனை குழந்தைகள் இயற்கை உபாதைகளை அடக்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தண்ணீர் குடிப்பதையே எத்தனை குழந்தைகள் தவிர்க்கிறார்கள் தெரியுமா? இதனால் எத்தனை நோய்களுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

 எத்தனை பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா குடிதண்ணீர் வசதி இல்லா பள்ளிகள் உங்களுக்குத் தெரியுமா பேருந்து வசதி இல்லா பள்ளிகள் உங்களுக்குத் தெரியுமா? ஆபத்தான கூட்ட நெரிசலால் பள்ளி சாலைகளை நீங்கள் கடந்திருக்கிறீர்களா?பகட்டான நீச்சல் குளங்களில் பாதுகாப்புத் தன்மை ஆய்வு செய்து இருக்கிறீர்களா?

 எத்தனை பள்ளிகளில் பகட்டுக்காக போடப்பட்டிருக்கும் டைல்ஸ் தரைகள் எப்படி குழந்தைகளை  வழுக்கி விளவைக்கும் என்று ஆய்வு செய்து இருக்கிறீர்களா?

  எத்தனை பள்ளிகளில் மின்சார சாதனங்கள் பயன்படுத்த தக்க வகையில் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று சோதித்துப் பார்த்து இருக்கிறீர்களா? எத்தனை பள்ளிகளின் மாடி கைப்பிடி சுவர் பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா?

 எத்தனை பள்ளிகளில் வகுப்பறைகள் காற்றோட்டமான தாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறது என்று பார்த்து இருக்கிறீர்களா?

 ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டால் அனைத்து பள்ளிகளிலும் அது சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் .ஒரு பள்ளியின் சத்துணவினால் வாந்தி, பேதி ஆனால் உணவு கூடங்கள் சோதனைக் உள்ளாக்கப்படும்.

 ஒரு பள்ளியின் பேருந்து விபத்துக்குள்ளானால் அனைத்து பள்ளிகளின் பேருந்துகளும் ஆய்வு செய்யப்படும்.

 “என்று ஒரே மாதிரியான சூழல் அனைத்து பள்ளிகளிலும் நிலவுகிறதோ, என்று அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பான சூழல் உருவாகிறதோ ,அன்று என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்” என்று சொல்லும் தைரியம் ஆகும் பெற்றோர்களாகிய எங்களுக்கு இல்லை.

 அதிகம் நாங்கள் ஆசைப்படவில்லை. அனைத்திற்கும் ஆசைப்படவில்லை. அடிப்படை பாதுகாப்பையே கேட்கிறோம்.

 கல்வி ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்றால், பாதுகாப்பும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை தானே.

 குழந்தைகளின் ஒழுங்கீனங்கள் குழந்தைகள் தண்டிக்கப்படுவது போல் நம் தவறுகளுக்கு நாமும் தண்டிக்கப்படுவோமா? சம்பந்தப்பட்ட, பொறுப்புடைய அனைத்து நிலை அதிகாரிகளும் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

 கல்வி கற்கவே கல்விக் கூடங்களுக்கு எங்கள் பிள்ளைகளை அனுப்புகிறோம், காவு கொடுக்க அல்ல. பொறுப்புணர்வை போதிக்க வேண்டிய கல்வி நிலையங்களை பொறுப்பற்ற செயல்பட்டால் நாங்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?

 ஒவ்வொரு குழந்தையும் ஒரு தலைமுறையின் கனவையே சுமந்துகொண்டு பள்ளிகளில் கால் எடுத்து வைக்கின்றது. இன்று சிதைந்தது இருப்பிஞ்சுகள் மட்டுமல்ல இரு குடும்பம். குடும்பங்களின் எதிர்காலம்.

 நஷ்ட ஈடாக கொடுக்கப்படும் காசும் பணமும் என் குழந்தைகளின் களங்கமில்லா சிரிப்புக்கு ஈடாகுமா? கண் மூடி கண் திறப்பதற்குள் கனவாக மறைந்துபோன கபடமற்ற அக்குழந்தைகளுக்கு இங்கு யார் பொறுப்பு?

 பணத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து கேள்விகள் யாரால் எப்பொழுது எழுப்பப்படும்? இனி எத்தனை எத்தனை குழந்தைகளை இழந்தப்பின் நாம் விழித்துக் கொள்ள போகிறோம்?

 குழந்தைகளின் பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம் தருவது? பெற்றோர்களை விட்டு தனியாக நம்பிக்கையாக தங்கள் குழந்தைகளை அனுப்பும் ஒரே இடம் பள்ளி. அப்பேர்பட்ட பள்ளிக்கு.குழந்தைகள் மீது எவ்வளவு பொறுப்பு இருக்க வேண்டும்.

 குழந்தைகளின் பாதுகாப்பு இன்று யாருடைய பொறுப்பு பெற்றோரின் பொறுப்பா? கல்வியாளர்களின் பொறுப்பா? அதிகாரிகளின் பொறுப்பா? இப்படி கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம் ஆனால் பதில் யாரிடம் இருக்கிறது?

 இச் சமூகத்தில் பிறந்த, பிறந்து இருக்கின்ற, பிறக்கப்போகும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வாழ உரிமை உண்டு அவர்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், சுதந்திரமாகவும் வாழ, செயல்பட, சிந்திக்க ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டிய கடமை இச்சமூகத்தில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

 எனவே பூக்களுக்கு சமமான   குழந்தைகளின் முகத்தில் என்றுமே புன்னகை தவழ செய்வோம். பொத்திப் பொத்திப் பாதுகாப்பதை விட்டுவிட்டு அவர்களின் உரிமைகளுக்காக அவர்களே குரல் கொடுக்க கற்றுத் தருவோம். கல்வி என்பது வெறும் கட்டுக் கட்டான புத்தகங்களை போதிக்காமல் கடமை தவறுபவர்களை கண்டிக்கும் தைரியத்தையும் கற்றுக்கொடுக்கும் கருவியாக மாறட்டும்.

 கல்வி என்பது நம் கலாச்சாரத்தை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கண்ணியத்தையும் கற்றுக் கொடுப்பதாக அமையட்டும்.

 பொன்னும் பொருளும் சேர்ப்பது எப்படி என்பதை மட்டும் கற்றுக் கொடுக்காமல் பொறுமையையும் பொறுப்புணர்வையும் கற்றுக் கொடுப்பதாக இருக்கட்டும்.

 நம் கல்வி என்பது வெறும் போதனையாக மட்டும் அல்லாமல் தேவை என்றால் போர்க்கொடி தூக்கவும் கற்றுக் கொடுப்பதாக இருக்கட்டும்.

 நம் கல்வி முறை பண்பை மட்டும் கற்றுக் கொடுக்காமல் பகுத்தறிவையும் கற்றுக் கொடுக்கட்டும்.

 நம் கல்வி முறை புத்தியை மட்டும் போதிக்காமல் புலனாய்வும் கற்றுக் கொடுக்கட்டும்.

 நம் கல்வி முறை கணிதத்தை மட்டும் போதிக்காமல் கண்ணியத்தையும் நம் குழந்தைகளுக்கு  போதிக்கட்டும்.

 நம் கல்விமுறை வரலாற்றை போதிக்க மட்டும் செய்யாமல் வரலாறு படைக்கும் மாணவர்களை உருவாக்கும் வகையில் அமையட்டும்.

 நம் கல்வி முறை அறிவியலை மட்டும் போதிக்காமல் அறத்தினை போதிக்கட்டும்.

 நம் தாய்மொழி கல்வி தாய்நாட்டின் மீது தலையாய பற்று கொண்டவர்கள் உருவாக்கும் வகையில் இருக்கட்டும்.

 எதிர்காலம் குறித்த எதிர்மறை கருத்துக்கள் நம் குழந்தைகளை அண்டாமல் பார்த்துக் கொள்வோம். புதிய உலகினை புத்தம் புதிதாய் நம் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுப்போம். அதில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் .நாம் ஒவ்வொருவரும் நம் கடமையை தவறாமல் சரியாக செய்வோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு இணங்க இவ்வுலகில் நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க அரசு அதிகாரிகள், பள்ளி கல்லூரி நிர்வாகிகள், பெற்றோர்கள் என அனைவரும் நம் நம் கடமைகளை தவறாமல் சரியாக செய்வோம்.

 கடவுளும் குழந்தைகளும் ஒன்று என்பது நாம் அறிந்ததே. எனவே குழந்தைகளுக்கு நாம் ஆற்றும் நமது கடமைகளை, கடவுளுக்கு செய்யும் பூஜையாக கருதி முழுமனதுடன், பேரன்புடன், பேரானந்தத்துடன் செய்வோம்.

 விளையும் பயிர்கள் முளையிலேயே கருகி விடாமல் பாதுகாப்போம் .நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை தருவோம் .அவர்களிடம் கண்ணியத்துடனும், கனிவுடனும் நடந்து கொள்வோம் . எதிர்கால இந்தியா நம் குழந்தைகளை நம்பியே இருக்கிறது என்பதை உணர்ந்து ஒற்றுமையாக ஒரே மனதுடன் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் பாதகமில்லாத சூழலை உருவாக்கிக் கொடுப்போம். மலரட்டும் மகிழ்ச்சி, நம் குழந்தைகளின் முகத்திலும், வாழ்விலும். ஒன்றுபடுவோம், உழைப்போம், உயர்வோம், உயர்த்துவோம்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam