Visitors have accessed this post 819 times.

132 மரணங்கள்: 1957-ல் சீரியல் கொலைகாரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஆடம்ஸ்

Visitors have accessed this post 819 times.

மருத்துவர் ஜான் பாட்கின் ஆடம்ஸ். இந்தப் பெயர் இன்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், 1950-களின் ஐரோப்பிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தவர்.

இங்கிலாந்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள ஈஸ்ட்போர்ன் என்ற நகரத்தில் மருத்துவராக இருந்தார் ஜான் பாட்கின் ஆடம்ஸ். தன்னுடைய நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை, அவர்களுடைய பணத்திற்காகக் கொலை செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

மருத்துவர் ஜான் பாட்கின் ஆடம்ஸை விசாரித்துக் கொண்டிருந்தபோது, 310 இறப்புச் சான்றிதழ்களை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், 163 இறப்புச் சான்றிதழ்களின் பின்னணி விசாரிக்கப்பட்டது.

காவல்துறை 300 கொலைக் குற்றங்கள் குறித்து அவர்மீது விசாரணை நடத்தி வந்ததாக அப்போது மக்களிடையே புரளி பரவியது. ஜேன் ராபின்ஸ் எழுதிய, “தி க்யூரியஸ் ஹேபிட்ஸ் ஆஃப் டாக்டர் ஆடம்ஸ் (The Curious habits of Dr.Adams),” என்ற நூலின்படி, 1950களில் மருத்துவர் ஆடம்ஸின் 132 நோயாளிகளுடைய உயில்களில் அவருடைய பெயரும் இருந்துள்ளது.

அவர் தம் நோயாளிகளைக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 1956 டிசம்பர் 19 அன்று, காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தார்கள். அவர் மீதான விசாரணை 1957-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி தொடங்கி 17 நாட்களுக்கு நடந்தது.

ஆனால், அவருடைய வழக்கில் இறுதி வரை குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போனதால், நிரபராதியாக நீதிமன்றத்தை விட்டு ஏப்ரல் 4-ம் தேதி வெளியேறினார் ஜான் ஆடம்ஸ். அவர் மீது நடந்த கொலைக் குற்ற விசாரணையை, ‘நூற்றாண்டு கொலைக்குற்ற விசாரணை’ என்று பத்திரிகைகள் குறிப்பிட்டன.

நோயாளியின் உயிலில் மருத்துவர் ஆடம்ஸ்

மருத்துவர் ஆடம்ஸ், 1922-ம் ஆண்டு வடக்கு அயர்லாந்தில் இருந்து பிரிட்டிஷில் உள்ள ஈஸ்ட்போர்ன் பகுதிக்கு வந்தார். ஈஸ்ட்போர்னில் மருத்துவராகப் பல்லாண்டுகளாக இருந்தவர், ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் மிகவும் பணக்கார மருத்துவர் என்றும் பெயர் பெற்றார்.

உயிர் பிரியும் நிலையில் இருந்த அவருடைய நோயாளிகள், தங்கள் உயில்களில் அவருடைய பெயரையும் சேர்த்ததாக அவர் மீது நடந்த விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

அவருடைய ஒரு நோயாளியான இடித் ஆலிஸ் மொரெல், 1950-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி உயிரிழந்தார். “81 வயதான அவர் உயிரிழக்கும் முன்னர், 157,000 யூரோ பணம் மற்றும் அவருடைய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகியவற்றை மருத்துவர் ஆடம்ஸ் பெயரில் எழுதி வைத்துள்ளார்” என வழக்கு விசாரணையின்போது அரசுத்தரப்பு தலைமை வழக்கறிஞர் கூறியதாக 1962-ம் ஆண்டு சிபில் பெட்ஃபோர்ட் எழுதிய “தி டிரையல் ஆஃப் டாக்டர் ஆடம்ஸ் (The Trial of Dr.Adams) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பேட்ரிக் டெவ்லின், 1985-ம் ஆண்டில் அந்த வழக்கு விசாரணையைப் பற்றி, ‘ஈசிங் தி பாஸிங் (Easing the Passing)’ என்ற நூலை எழுதினார். அந்த நூலுக்கு விமர்சனம் எழுதிய லிவர்பூலைச் சேர்ந்த ஜே.ஜி.கௌவ் என்ற சிறுநீரக மருத்துவர், “இந்த வழக்கு முடிந்து 25 ஆண்டுகள் கழித்து அதை விசாரித்த நீதிபத் எதற்காக இந்த நூலை எழுதினார் என்பதே இந்நூலின் வாசகர்கள் மத்தியில் எழும் கேள்வியாக இருக்கிறது.

மருத்துவர் ஆடம்ஸ் ஒரு சிறந்த மருத்துவர். அவருடைய நோயாளிகளுடைய, குறிப்பாக முதியவர்களுடைய முழுமையான நம்பிக்கையைப் பெற்றிருந்தார். இருப்பினும், அவர் ஆபத்தான மருந்துகளை அதிக டோஸ்களில் நோயாளிகள் மீது பயன்படுத்தியது பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றன.

இப்போது இந்த நூலை எழுதியதன் மூலமாக, 25 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி டெவ்லின் அவருடைய தீர்ப்பு சரியா இல்லையா என்று சந்தேகம் கொள்கிறாரா?

ஒருவேளை இப்போது அந்த வழக்கு விசாரணை நடந்தால், புதிய ஆதாரங்கள் வெளிவந்து தீர்ப்பு வேறு மாதிரியாகச் செல்லுமா?” என்று கேட்டிருந்தார்.

அவரிடம் வரும் முதிய, மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளிடம் இருந்து சொத்துகளை அவர்கள் மாற்றி உயில் எழுதிய பிறகு, அவர்களைக் கொன்று விடுகிறார் என்றும் அவர் ஒரு சீரியல் கொலைகாரர் என்றும் இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த நேரத்தில் கடுமையான குற்றச்சாட்டுகள் அவர்மீது வைக்கப்பட்டன.

“இதையா கொலை என்று சொல்கிறீர்கள்?”

காவல்துறை அவருடைய நோயாளிகளில் உயிரிழந்த 163 பேருடைய மரணங்களில், அதில் 23 பேருடைய மரணங்களை விசாரிக்கத் தொடங்கினார்கள். அதற்குக் காரணம், அந்த 23 பேரும் ஆடம்ஸ் பெயரை அவர்களுடைய உயில்களில் சேர்த்த பிறகு உயிரிழந்தார்கள் என்பதுதான்.

சிபில் பெட்ஃபோர்ட் எழுதிய ‘தி டிரையல் ஆஃப் டாக்டர் ஆடம்ஸ் (The Trial of Dr.Adams)’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, டிசம்பர் 19, 1956 அன்று காலையில் அவர் கைது செய்யப்பட்டார். தான் கைது செய்யப்படுவதன் காரணத்தைக் கேட்ட மருத்துவர் ஆடம்ஸ், “கொலையா? அது கொலை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை,” என்று கூறியுள்ளார்.

இடித் ஆலிஸ் மொரெலுக்கு அவர் மார்ஃபின் மற்றும் ஹெராயின் ஆகியவற்றை கொடுக்கவேண்டிய அளவைவிட மிகவும் அதிகமாகக் கொடுத்து மரணத்தின் வாசலுக்கு மொரெலை அனுப்பி வைத்தார் என்று வழக்கு விசாரணையின்போது, இடித்தின் செவிலியர் ஸ்ட்ரோனாக் சாட்சியம் கூறியுள்ளார்.

விசாரணையின் இறுதியில் தன்னுடைய தரப்பு விளக்கத்தைக் கூறிய மருத்துவர் ஆடம்ஸ், “கொலை? இதை கொலை என்றா சொல்கிறீர்கள்? மரணிக்கும் தறுவாயில் மிகுந்த வலியோடு வேதனையோடும் தவித்துக் கொண்டிருந்த நோயாளிகளுடைய வலி குறைய உதவினேன். எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலையில் இருந்தவருடைய மரணம் வலியற்றதாக இருக்க உதவினேன்,” என்று கூறியுள்ளார்.

தீர்ப்பு நாளில் நீதிபதி டெவ்லின், “மருத்துவர் ஆடம்ஸ் கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் அளவுக்கு வலிமையான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும் அவரைக் குற்றவாளி என்று முடிவு செய்யும் அளவுக்கு இல்லை,” என்று கூறி அவரை விடுதலை செய்தார்.

மருத்துவர் ஆடம்ஸ், 17 அறை கொண்ட வீடு, ரோல்ஸ் ராய்ஸ் என்று இங்கிலாந்தின் பணக்கார மருத்துவராக இருந்தவர். இந்த வழக்கு விசாரணையின்போது 1957-ம் ஆண்டில் அவருடைய மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது. 1960-ம் ஆண்டில் தன்னுடைய உரிமத்தை மீண்டும் பெற்று, தொடர்ந்து மருத்துவராகப் பணியாற்றியவர், 1983-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி உயிரிழந்தார்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam