Visitors have accessed this post 769 times.
சோர்வாக இருந்தது நஜ்முன்னிஸாவுக்கு அமைந்திருந்த உற்சாக மனநிலை மெல்ல மெல்ல அழிந்து போய் விட்டது. களங்கத்தையே சுமந்து கொண்டு திரிந்த வாழ்க்கையில் அப்படியென்ன தனக்கென்று ஒரு உற்சாகம்? வாழ்க்கை அவளுக்கு ஒரே வழித் தடத்தைத் தான் கொடுத்திருந்தது. ஆயினும் கூட உயிர் வாழ்தலில் கொண்ட தாகத்தின் பொருட்டு ‘சந்தோஷமாக இருத்தல்’ என்றே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். தான் வளர்த்து ஆளாக்கி விட்ட மகளுக்கு இனியும் அவளே சம்பாத்தியம் பண்ணுவதும் அதற்காகவே மேலும் நசிந்து போவதும் ஆகாது. ஓய்வு பெற்றாக வேண்டும்; காலம் அந்தக் கட்டளையைக் கொடுத்து விட்டது. கிடைக்கப் போகிற ஓய்வை இனி நன்கு அனுபவிக்க வேண்டும். தன் மகளும் தன்னைக் காத்துக் கொள்கிற அதே சமயத்தில்தன்னையும் ஒரு பொருட்டாக நினைத்துப் பேணிக் காக்க வேண்டும்.
இந்த நிலைக் கண்ணாடி; அதன் முன்னே உள்ள சின்ன மேஜை மீது வாசனைப் பவுடர். சீப்பு, கண் மை, ஹேர் ஆயில், கலர் கலராய் இதர அழகு சாதனப் பொருட்கள். அவை ஒரு பாரத்தையும் மனக் கஷ்டத்தையும் கொடுத்தது.
நஜ்முன்னிஸாவை வாழ்வித்தவை அவையே! தேய்ந்து போன இளமையைக் கூட ஜொலிக்கச் செய்தவை அவையே! கலைந்து போக விருந்த வாழ்க்கையை, காணாமல் போகவிருந்த வாழ்க்கையை அவளுக்குச் சிறிதளவாக வேனும் வசப்படுத்திக் கொடுத்தவை. இவை இனி தன் மகளுக்கு! கண்ணீர் திரண்டு தளும்பியது.
கடைசியாகக் கண்ணாடியின் முன் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டாள். அவள் உருவம் தெரிகிற இடத்தில் ஓர் அழுக்கான பிம்பம்; அவளாலேயே அடையாளம்கண்டு கொள்ள முடியாத அளவில், எத்தனையோ வருஷங்களாக அவளது அழகுக்குச் சான்றிதழ் வழங்கி, இப்போது தர மறுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் தொழில் நடத்திய காலம் வரை இணை பிரியாத் தோழியான அந்த நிலைக் கண்ணாடியைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அன்று இந்தக் கண்ணாடிக்கு இருந்த துல்லியமும், பளபளப்பும் இப்போது இல்லை. ஆயினும் தன்னைப் போல் காலாவதி ஆகி விடவில்லை. ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கியது. அதனைத் தடவிக் கொண்டபடி சொன்னாள், “என் குழந்தைக்கும் உதவியா இருந்து வா!” அழுகை பீறிட்டுக் கிளம்பியது. வாயில் முந்தானையை வைத்து அடக்கிக் கொண்டாள்.
“மஹ்மூதா!”
தாய் அழைத்த மறு நிமிஷம் வந்து நின்றாள் மஹ்மூதா. அவள் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. என்ன பேரழகு! எழுந்து நின்று ஆதரவாய்ப் பற்றினாள். நேருக்கு நேர் நின்று இந்தக் கோலத்தில் தன் மகளைக் காணுகையில் இது நாள் வரை தான் அனுபவித்த சோகம் அனைத்தும் ஒரே வடிவாய் திரண்டு வந்து நெஞ்சைப் பிசைந்தது. முன்னும், பின்னுமாக காலங்கள் அர்த்தம் இழந்து போய் நின்றன. யாரோ கைகொட்டிச் சிரிக்கிறதான உணர்வு எழுந்தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு தன்னுடைய துயரத்தையும் ஆசாபாசத்தையும் வெளிப்படுத்தாமல் வெறுமனே முறுவலைத் தவழ விட்ட படி நின்றாள் நஜ் முன்னிஸா.
“கண்ணே! உன் அம்மாவோட வாழ்க்கை எப்படியெல்லாம் சகதிக் குழியிலேயும் குப்பை மேட்டிலேயும் பொரண்டுக்கிட்டு கெடந்துச்சின்னு உனக்கும் தெரியக் கூடிய காலம் வந்திடுச்சி. அனுபவத்துல உணரும் போது நீ என்னைய மனசால வெறுத்து உதறினாலும் உதறி விடுயோன்னு பயம்மாவும் இருக்கு. ஆனாலும் என்னால் ஆனமட்டுக்கும் உன்னை வளத்து ஆளாக்கி விட்டுட்டேன். இன்னும் நான் தான் உன்னக் காப்பாத்தி ஆகணும்னு நெனச்சாலும் அதுக்குக் காலம் கை கொடுக்காது. சொல்லப் போனா மூணு வருஷக் காலமாக என்னைத் தேடி லாட்ஜுக்கும் வீட்டுக்குமா வந்தவங்க எந்த அளவுக்கு கொறைஞ்சு போயிட்டாங்கங்குறது எல்லாத்துக்குமே நல்லா தெரியும்.”
மஹ்மூதாவைக் கண்ணாடியின் முன்னிருந்த ஸ்டூலில் உட்கார வைத்தாள். எப்போதுமே இந்த இடத்தில் அவள் உட்கார்ந்ததில்லை. உட்காரப் பிரியப்பட்டதுமில்லை. தன் தாய்க்கே உரித்தான அந்த இடம் தனக்கும் வந்து சேரும் என்று அவள் நம்பியதுமில்லை; விரும்பவுமில்லை. மனத்தளவில் அவளால் காறி உமிழப்பட்ட இடம் அது, அதனாலென்ன? அதற்காகவே அந்தத் தாயின் வாழ்க்கை இவளுக்கும் தொடர்ச்சியாக வராது என்றாகி விடுமா? இவளுடைய விருப்பம் மட்டுமே இவளது வாழ்க்கைளை நிர்ணயம் செய்து விடுகிறதான எந்தவொரு வலிமையும் இல்லையே!
அந்த ஸ்டூலில் அவள் அமர்ந்ததும் மின்னல் வெட்டு போன்ற கேவல உணர்ச்சிகள் அவள்உடலெங்கும் பரவிப் பாய்ந்து கூனிக் குறுகச் செய்தது. அருவருப்பானதைத் தொட்டு விட்டதைப் போன்ற அவல உணர்ச்சிகள். தன்னையே வெட்டி விடத் துணிகின்ற அவ்வளவு கொடிய துயரம். தன் தாயை ஏறிட்டு நோக்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். அது நஜ்முன்னிஸாவை வதைத்தது. எவளொருத்தி அது குறித்து வெட்கப்பட வேண்டுமோ அவளே தலை நிமிர்ந்திருக்க, புதியவள் ஏன் தளர வேண்டும்? அவள் முகவாயைத் தொட்டு தன் முகத்துக்கு நேரே நிமிர்த்தினாள். இப்போதும் தாயைக் காணும் மனப்பக்குவம் இன்றி மக்மூதா தலை கவிழ்ந்தாள். மெளனம் இடையில் குறுக்குச் சுவராய் எழுவதை விரும்பாமல் மீண்டும் மகளிடமே கூறினாள்.
“எந்தத் தாய் தான் மகளுக்கும் இந்த வாழ்க்கையை கைப்புடிச்சிக் கொடுப்பாங்க? இந்த வட்டத்துக்கே வரவுடாம் உங்களைக் கரையேத்தணும்னு தான் நான் நெனச்சேன். ஆனா தங்கமாளவளே, நல்லா யோசிச்சுப் பாரு! நமக்குன்னு யாரு இருக்காங்க? சிலோன்ல அள்ளிக் குவிச்சுட்டு வாரேன்னு போன உங்க வாப்பா கிட்டேயிருந்து ஒரு கடிதம் உண்டா? சொந்தக்காரி தானேன்னு யாராவது நமக்கு கை கொடுத்தாங்களா? ஊரை விட்டே ஓடி வந்தோம், யாராவது தடுத்து நிறுத்துனாங்களா?”
மஹ்மூதாவின் கண்கள் தாயை அளந்தன. அவள் பார்வை மீனைப் போல அங்குமிங்குமாகத் தாவியது.
“உனக்குத் தெரியுமா? நீ காய்ச்சல்ல கிடந்தேனு தான் அடுத்து வீட்டு நவாபுகிட்டே மாத்திரை வாங்கி வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு குடுத்துட்டுப் போன ஒரு விஷயத்துக்காவத் தான் என்னை ‘தேவடியா’ ன்னு ஊர்க்காரனுவ சொன்னானுங்க.” விம்மினாள், அழுதாள். நிலைக்குத்தின் கண்களோடு தாயின் அவஸ்தையை எதுவும் சொல்லாமல், எந்த உணர்ச்சியும் காட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் மஹ்மூதா.இன்னும் கதை உள்ளது அடுத்த பக்கம் எழுதி உள்ளேன் நன்றி