Visitors have accessed this post 307 times.

நானே வருவேன் – பகுதி 13

Visitors have accessed this post 307 times.

 பாகம் 13

 

வீரராகவன் இடைச் செய்தி தொடர்பு முறைத் தொலைபேசியை எடுத்து ஷில்பாவின் பக்கத்திலிருந்த தொலைபேசிக்கு அழைத்தான். அதை எடுத்து “டிசைனிங் செக்சன் லீடர் ஷில்பா ஹியர்” ,  “ஷில்பா கம் டு மை கேபின் வித் வித்யா”  அந்த அதிகாரக் குறலின் தோரணையிலேயே அது யார் என்பதை புரிந்து கொண்டவள் “எஸ் சார்” என்று பதில் அளித்தாள்.

 

வேகமாக வித்யாவிடம் வந்தவள் “சார் ஒன்ன கூட்டிட்டு வர சொன்னாரு சீக்கிரமா வா” என்று முன்னாள் செல்ல வித்யா வேகமாக அவள் பின்னால் எழுந்து சென்றாள்.

“மே கம் இன் சார்” என்று கதவைத் தட்ட “எஸ்” என்ற பதிலில் இருவரும் உள்ளே நுழைந்தனர். காணொளியை பார்த்துக் கொண்டிருந்தவன் வித்யாவைப் பார்த்து “ஒங்களோட க்ரியேட்டிவிட்டி ரொம்ப நல்லா இருக்கு வித்யா” இந்த வார்த்தைகளை செவியுற்றவள் இவன்தான் நம்மை இப்படி மரியாதையுடன் பாராட்டுகிறானா என்று ஒரு நிமிடம் கண்களை அகல விரித்து அவனை பார்த்தாள். இது கனவா நிஜமா என்று தெரிந்து கொள்ள அருகில் இருந்த ஷில்பாவை லேசாக கிள்ளினாள்

அவள் “ஆ!” என்று அலற “என்னாச்சு” ,  “ஒன்னுமில்ல சார்” என்று வித்யாவை முறைத்தாள் ஷில்பா. “ஆனா ஒனக்கு நாங்க இங்க வேல பாக்க தா சம்பளோ தர்றோ சும்மா ஒக்காந்து அரட்ட அடிக்கிறதுக்காகத் தரல என்ன ஷில்பா டீம் லீடரா இருக்க நீங்க இதெல்லா கவனிக்க மாட்டிங்களா? “

“இந்த பொண்ணு நா சொல்றத கேக்க மாட்டேங்கிறாங்க சார் இப்ப கூட நா சொல்ல சொல்ல கேக்காம ஒங்ககிட்ட ரிவ்யூக்காக அந்த வீடியோவை எடுத்துட்டு வந்துட்டாங்க சார்” திடுக்கிட்டு அவளை பார்த்தாள் வித்யா.

“இந்த வேல வேணா ஒனக்கு எங்க அப்பாவோட ரெகமெண்ட்ல கெடச்சிருக்கலா? ஆனா தொடர்ந்து இங்க வேல பாக்கணும்னா ஒனக்கு மேல இருக்க ஸ்டாப் எல்லார்கிட்டயு நீ ஒபிடியன்ட்டா இருக்கணூ அப்படி ஒன்னால இருக்க முடியலன்னா வேலய ரிசைன் பண்ணிட்டு போயிரு” என்று அவன் வித்யாவை பார்த்து கோபமாக கத்த ஷில்பா தலை குனிந்து யாரும் அறியாமல் தனது திட்டம் வெற்றி பெற்று விட்டதை நினைத்து சிரித்துக்கொண்டாள்.

“இனிமேல் இந்த பொண்ணு ஏ கேபினுக்கு வரவே கூடாது இந்த பொண்ணு சம்பந்தமான என்ன விஷயோன்னாலு ஏ கேபினுக்கு நீங்க தா வரணூ ஷில்பா” ,  “எஸ் சார்” ,   “இப்ப போய் ஒங்க வேலயப் பாருங்க” ,  “ஓகே சார்” .

அந்த இடத்தில் எதுவும் பேச முடியாமல் குற்றவாளியாக நின்ற வித்யா மேலும் அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே வந்தாள். வெற்றி பெற்ற மிதப்புடன் அவளைத் தொடர்ந்து மெதுவாக வெளியே வந்த ஷில்பா “இனிமேல் ஏ கிட்ட ஏதாவது எதுத்து பேசுன அடுத்த நிமிஷமே ஒன்ன இந்த வேலய விட்டு காலி பண்ணிடுவே” கண்ணில் கோபத்தைக் காட்டி மிரட்டிச் சென்றாள்.

“என்னாச்சு வித்யா? அந்தத் திமிங்கலோ எதுக்கு ஒன்ன மெரட்டிட்டு போகுது? ” ,  “அதுக்கு கொஞ்சோ கொழுப்பு கூடிருச்சு சுமதி”  ,   “அதுக்கு ஒடம்பு பூரா கொழுப்பு தா அது கிட்ட வம்பு வச்சுக்காத அது எங்க? எப்படி கொளுத்தி போடும்னு யாருக்கு தெரியாது” ,   ‘ஒரு நாள் இல்லனா ஒரு நாள் அது கொளுத்துனதுல அதே விழுந்து எரிந்து சாம்பலாகப் போகுது பாரு’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு தன்னை அமைதிப்படுத்த அமைதியாக இருக்கையில் உட்கார்ந்தாள்.

ஷில்பா தான் நினைத்தது போல் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து வித்யாவின் கையில் திணித்தாள். இது கோபத்தை காட்ட வேண்டிய நேரம் இல்லை என்பதை புரிந்து கொண்ட வித்தியாவும் பொறுமையாக அந்தப் பணிகளை செய்து முடித்தாள்.

நிறைவடைந்த பணிகளை சமர்ப்பிப்பதற்காக நிர்வாக இயக்குனரின் அறைக்கு சென்ற ஷில்பா அன்றைக்கு தன்னுடைய அணி செய்து முடித்த பணிகளை விளக்கிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த உதவியாளர் ராமு ஷில்பா வீரின் பக்கத்தில் நின்று பேசும் விதத்தையும் அவனைப் பார்க்கும் விதத்தையும் அவளுடைய உடையையும் கவனித்தார்.

அவள் வெளியே சென்ற பின்பு “சார் அந்த பொண்ண அதிகமா உள்ள விடாதீங்க சார்” ,  “ஏ ராமு? ”  ,  “எனக்கு என்னமோ அந்த பொண்ணப் பாத்தா ரொம்ப சந்தேகமா இருக்கு அது ஒங்கள பாக்குற விதமு ஒங்ககிட்ட பேசுற விதமு சரியில்ல சார் அப்றோ ஒங்க இஷ்டோ , அப்பா நிச்சயத்துக்கு ஃபீனிக்ஸ் மஹால புக் பண்ண சொல்லிருக்காரு சார் அதுக்காக கொஞ்சோ அட்வான்ஸ் கொடுக்கணு” .

அவர் சொல்ல வந்ததை புரிந்து கொண்டவன் தன்னுடைய காசோலை புத்தகத்தை எடுத்து அதில் தன்னுடைய கையொப்பத்தை இட்டு அந்தப் பக்கத்தை கிழித்து அவரிடம் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு மேற்கொண்டு அவருடைய வேலைகளைப் பார்க்க அங்கிருந்து கிளம்பினார்.

உதவியாளர் சொன்னதை யோசித்துப் பார்க்கத் தொடங்கினான். காலையில் வித்யாவுடன் உள்ளே வரும்போது அவளுடைய சட்டையின் கழுத்துப்பட்டி பொத்தான் பூட்டி இருந்தது இப்பொழுது வந்த போது சட்டையில் கழுத்துப்பட்டி  பொத்தானுடன் அடுத்த  பொத்தானும் பூட்டப்படாமல் இருந்தது. நிறைவுற்ற பணிகளை விளக்கிக் கொண்டிருக்கும்போது இடையில் தூரிகையை எடுத்து வைக்கும் பொழுது இரண்டு முறை தன் விரல்களை அவள் தொட்ட விதத்தை நினைவு படுத்தி பார்த்தவனுக்கு ஏதோ ஒரு விவரம் புரிந்தது.

மறுநாள் காலையில் அலுவலகத்திற்கு மகிழுந்தில் வந்து கொண்டிருந்தவன் ஒரு சின்ன சந்தில் இருந்து வித்யா வருவதை பார்த்தான். ‘இந்தப் பக்கோ இருந்து இவ ஏ வர்றா? ‘ என்று அவனுடைய மனம் கேள்வி கேட்க ‘அவ எந்தப் பக்கோ இருந்து வந்தா ஒனக்கு என்ன ஓ வேலயப் பாரு’ என்று மூளை கொடுத்த பதிலை ஏற்றுக் கொண்டு தன்னுடைய கவனத்தை சாலையில் செலுத்தினான்.

அவனுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருந்த ஷில்பா ஏதோ ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு அவனுடைய அறைக்குள் வந்தாள். பெயருக்கு புடவை கட்டி தன் முன்னால் வந்து நின்றவளைப் பார்த்ததும் அவனுக்கு நேற்று தான் நினைத்தது சரிதான் என்று தோன்றியது.

அந்த காகிதத்தை அவனிடம் காட்டி மேஜையின் மேல் வைத்து குனிந்தவளை “ஒரு நிமிஷோ மிஸ் ஷில்பா உங்க டீம்ல இருக்கிறவங்க எல்லாத்தையு நா மீட் பண்ணனு ஒடனே எல்லாரையு மீட்டிங் ஹால்ல அசம்பலாக சொல்லுங்க” ,  “எஸ் சார்” என்று வெளியே வந்தவள் அவன் கூறியபடி அனைவரையும் ஒன்று கூடச் செய்து ஆலோசனைக் கூடத்தில் காத்திருந்தாள்.

உள்ளே வந்த வீரராகவனைப் பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்று காலை வணக்கத்தைக் கூற அவனும் பதிலுக்கு அனைவருக்கும் காலை வணக்கத்தை கூறிவிட்டு “நீங்க எல்லாரூ மிஸ் ஷில்பாவோட டீம்மெட்ஸ் ஐ அம் ரைட்? ” . எல்லோரும் ஆம் என்பது போல் தலையாட்ட “நம்ம கம்பெனிலயே ஒங்க டீம் ரொம்ப அமேசிங் ஆன டீம்”.

“ஒங்க டீம் லீடர் ஷில்பா ஒங்க எல்லாருக்கு ஈக்குவலா மரியாத கொடுத்து சிறப்பா இந்த டீம வழி நடத்திட்டு வராங்க” இதைக் கேட்டவுடன் ஷில்பா தன்னைப் பற்றி பெருமையாக எதோ கூறப்போகிறான் என்று ஆவலுடன் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தாள். “டீம் லீடர்ங்குறதால எல்லா விஷயத்துக்கு அவங்களே ஏ கேபினுக்கு வரணும்ங்குற அவசியமில்ல அதனால உங்க டீம்ல இருந்து மூனு ஃபெர்சன நா இப்போ செலக்ட் பண்ண போறே அவங்க தா இனிமே இந்த டீம் பத்தின எந்த விஷயமா இருந்தாலூ ஏ கிட்ட வந்து சொல்லணு மத்தபடி யாரூ ஏ கேபினுக்கு வரத் தேவயில்ல ஆல் ஆப் யு அன்டர் ஸ்டாண்ட்” என்று அவன் ஷில்பாவைப் பார்த்து சிங்கத்தை போல் கர்ஜனை செய்ய பயத்தில் அவள் தானாகவே தலையாட்டினாள்.

ஒவ்வொருத்தராக தன் முன்னாள் வரச் சொல்லி இதுவரை அந்த அணியால் முடிக்கப்பட்ட பணிகளை விளக்குமாறு கூறினான். ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிந்தவரையில் அந்த பணிகளைப் பற்றி விளக்கம் கொடுத்தனர். அந்த வரிசையில் ஷில்பா செல்லாது தனியாக அமர்ந்திருப்பதைக் கண்ட சுமதியும் வித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“நெக்ஸ்ட்” என்று வீரராகவன் அடுத்தவரை அழைக்க வித்யா எழுந்து வந்தாள். “நீங்க இப்ப தான புதுசா ஜாய்ன் பண்ணீருக்கிங்க நீங்க இந்த வேலக்கி வேண்டா” என முகத்தில் அடித்தார் போல் வித்யாவை அனைவரின் முன்பும் மட்டம் தட்ட ‘மவனே என்னைக்காவது ஒரு நாள் ஏ கையில நீ மாட்டாமலா போயிருவ அன்னக்கி உன்ன பாத்துக்கிறேன்டா’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டு வெளியே சென்றாள் வித்யா.

இறுதியாக அவன் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை இந்தப் பணிக்காக தேர்வு செய்தான். பெண்களை அதிகம் விரும்பாத அவன் தேர்வு செய்த அந்தப் பெண் சுமதி. இதை அனைவரின் முன்பும் அறிவித்துவிட்டு ஒரு பெரிய பிரச்சனையை தீர்த்து விட்ட மனநிறைவுடன் தன்னுடைய பணியைப் பார்க்கச் சென்றான்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam