Visitors have accessed this post 118 times.
பாகம் 19
சுட்டெரிக்கும் சூரியனின் செங்கதிர்களை மங்கச் செய்யும் மாலைப்பொழுது வரத் தொடங்கியது. மாலை வேளையில் தான் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான காரியத்தை மறந்து விட்டு மனம் முழுவதும் ஆர்பரிப்போடு தன்னுடைய முகூர்த்தத்தை உறுதிப்படுத்த தயாராகிக் கொண்டிருந்தான் வீரராகவன்.
என்றைக்கும் போல் இன்றைக்கும் தன்னுடைய பணியை மனநிறைவுடன் செய்து முடித்த வித்யா அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கடந்த நான்கு நாட்களாக பணி முடிந்து செல்லும் தன்னை பத்திரமாக உறைவிடம் சேர்ப்பவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
அலுவலகத்தை விட்டு அனைவரும் வெளியேறிவிட இவள் மட்டும் ஆட்கலற்ற அலுவலகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் இன்றைக்கு வீரராகவன் அலுவலகம் வரவில்லை என்று சுமதி காலையில் கூறியது நினைவுக்கு வந்தது. எப்படியும் உள்ளே அவனுடைய உதவியாளர் ராமு இருப்பார் அவரிடம் உதவி கேட்டு அந்த நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்று சிறு நம்பிக்கையுடன் நின்றிருந்தாள்.
வெளியே நின்றிருந்த பாதுகாவலர் உள்ளே சென்று அனைவரும் சென்று விட்டார்களா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அலுவலகத்தின் இரண்டாவது கதவை பூட்டி வெளியே இருந்த இரும்பு கதவை பூட்ட ஆரம்பித்தார். “தாத்தா எதுக்கு இந்நேரமே ஆபிஸ பூட்றீங்க? உள்ள எம்.டியோட அசிஸ்டன்ட் ராமு சார் இல்லையா? ” , “அவர் உள்ள இல்லமா இன்னக்கி நம்ம சின்ன ஐயாவுக்கு பீனிக்ஸ் மஹால்ல நிச்சயதார்த்தோ அதுக்கு போகணும்னு அவர் மத்தியானோ மூணு மணிக்கே ஆபீஸ்ல இருந்து போயிட்டாரு” .
இதை கேட்டவளின் மனதில் முள் தைத்தது போல் வலி ஏற்பட்டது. நம்மை எப்போதும் காப்பாற்றுவான் என்று நினைத்தோமே இப்போது என்ன செய்வது அனைவரும் சென்று விட்டார்களே எப்பொழுதும் தன்னுடனே ஒட்டிக்கொண்டு துணையாக நிற்கும் தன்னுடைய தோழியையும் கையசைத்து வழியனுப்பி வைத்து விட்டோம். இப்போது என்ன செய்யலாம் என்று தவித்துக் கொண்டிருந்தவள். இங்கிருந்து புறப்படத் தயாரான பாதுகாவலரிடம் “தாத்தா என்ன அந்த சிக்னல் வரைக்கூ கொண்டு வந்து விட்றிங்ளா” அவளை ஏன் என கேள்விக் குறியாக பார்த்தார் அவர்.
“உங்களுக்குத் தெரியுல்ல அந்த எம்எல்ஏ ஓட பையே, என்ன கடத்திட்டு கூட போகப் பார்த்தானே அவே எப்பவூ அந்த சிக்னல்ல தா நின்னுட்ருப்பா ப்ளீஸ் தாத்தா என் கூட அந்த சிக்னல் வரைக்கூ கொஞ்சோ வாங்க” இதைக் கேட்டவர் சிறிதும் யோசிக்காமல் “சரி வாமா போலா” என்று கூறி நடக்க ஆரம்பித்தார்.
அவரைப் பின் தொடர்ந்து நெடுஞ்சாலையில் பாதையை கடக்கும் இடம் வரை வந்த வித்யா ஒருவிதமான பயத்துடன் சாலையின் ஓரத்தில் ஏறிட்டாள் அங்கு வாசு இல்லாததைக் கண்டு நிம்மதி அடைந்தாள். “ரொம்ப தேங்க்ஸ் தாத்தா இனிமேல் நா போய்டுவே” என்று மகிழ்ச்சியாக கூறிவிட்டு சாலையை கடந்தாள்.
சந்துக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுமியை நோக்கி அவள் நடந்து கொண்டிருக்க வேகமாக அவளை கடந்து சென்ற ஒரு மகிழுந்து புழுதியை கிளப்பிக்கொண்டு சிறுமியின் அருகில் சென்று நிற்க அதிலிருந்து இறங்கிய வாசு அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு வித்யாவை கண்டு வெற்றி புன்னகையை உதிர்த்து விட்டு மகிழுந்தில் ஏற கண்ணிமைக்கும் நேரத்தில் அது வந்த வேகத்தில் நெடுஞ்சாலையை நோக்கிப் பயணித்தது.
இதைக் கண்டு திகைப்புற்ற வித்யா “அந்த பொண்ண விடு டேய்! அந்த பொண்ண விட்றா” என்று கத்திக்கொண்டே வேகமாக மகிழுந்தின் பின்னால் ஓடி வந்தாள். நெடுஞ்சாலையின் அருகில் சட்டென நின்ற அந்த மகிழுந்தில் வாசு ஓடிவந்த வித்யாவையும் பிடித்து இழுத்துப் போட்டான். அடுத்த நொடியே மின்னலென சென்று மறைந்தது அந்த மகிழுந்து.
இதை பயத்துடன் பார்த்த பாதுகாவலர் வேகமாக வீரராகவனுடைய அலைபேசிக்கு அழைப்பு விடுத்தார். புது மாப்பிள்ளையாக பிரம்மாண்டமான அரங்கத்தின் அலங்கார மேடையில் கம்பீரமாக வீற்றிருந்தான் வீரராகவன். அவனுடைய கவனத்தை திசை திருப்பிய அலைபேசியின் மணியோசை கேட்டு அதற்கு தன் விரல்களால் உயிர் கொடுத்து பேச ஆரம்பித்தான்.
“சொல்லுங்க” . “சார் இன்னூ வித்யா என்னோட வீட்டுக்கு வர்ல” என்று தவிப்பான குரலோடு வித்யா தங்கி இருந்த பெண்கள் விடுதியின் பாதுகாவலர் கூற அவனுடைய கண்கள் ஆதர்ஷை தேட ஆரம்பித்தன. வீரராகவனுடைய கண்களில் ஆதர்ஷ் அகப்படாததால் அங்கே நின்றிருந்த தன் தம்பி வித்தார்தை அழைத்து “ஆதர்ஷ பாத்தியா? ” என்று கேட்க “அவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தா கார எடுத்துட்டு எங்கயோ போனாருண்ணே” , “சரி நீ போ” என்று அவனை அனுப்பிவிட்டு “மேடம் ஏ ஃபிரண்டு கூட்டிட்டு வந்துட்ருக்கா போல கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க மேடம்” , “சரிங்க சார்” என்று நிம்மதியாக அவரும் தொடர்பைத் துண்டித்தார்.
ஆதர்ஷூக்கு அழைப்பு விடுத்து எங்கே சென்று கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம் என நினைத்து தொடர்பு பட்டியலை திறந்தவன் தனக்கு முன்பிருந்த கூட்டத்திலிருந்து ஆரவாரமான சத்தம் எழ என்னானது என்று அங்கே பார்த்தவன் அலங்காரத்துடன் ரஞ்சிதா தோழிகள் புடைசூள நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அவனுடைய கண்கள் ரஞ்சிதாவின் மேல் நிலைத்து நிற்க கை தானாக அலைபேசிக்கு ஓய்வு கொடுக்க எண்ணி அதை சட்டைப் பையில் வைத்தது. வெட்கப்பட்டுக் கொண்டே நடந்து வந்த ரஞ்சிதா நிமிர்ந்து வீரராகவனை பார்த்தாள். இரண்டு கண்களும் நேருக்கு நேராக சந்தித்து நலம்விசாரித்துக் கொண்டிருந்தன. திடீரென கூட்டத்தில் அலறல் சத்தம் கேட்டு கண்களின் காந்தப்புலன் விசை அறுபட்டு அந்த இடத்தை நோக்கியவள் அங்கே ஒருவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து கிடப்பதைக் கண்டு அவரிடம் ஓடினாள் ரஞ்சிதா.
“எல்லாரூ கொஞ்சோ தள்ளி நில்லுங்க ப்ளீஸ்! எல்லாரூ கொஞ்சோ வழிவிட்டு நில்லுங்க அவருக்கு காத்து கெடைக்கணூ அப்பதா அவரால மூச்சு விட முடியூ” என்று பதட்டத்துடன் கூறினாள் ரஞ்சிதா. அவள் அருகே ஓடிவந்த வீரராகவன் அவள் கூறியதை கேட்டு அனைவரையும் விலக்கி ஓரமாக நிற்க வைத்தான். அவருடைய நெஞ்சில் கை வைத்து அழுத்தி இதயத்துடிப்பை சீராக்க முயன்றாள். அவருடைய மனைவி “வாயில காத்த ஊதி அமுக்கி பாருமா” என்று கூற “இவருக்கு மூச்சு இருக்குமா இதுக்கு மேல அதிகமா நானூ சேந்து ஆக்சிஜன் கொடுத்தன்னா லங்ஸ் டக்குனு கொலாப்ஸ் ஆயி வொர்க் ஆகாம நின்னாலூ நின்னுடூ” இதைக் கேட்டு “ஐயோ! ” என்று அலறினாள். “இவரோட இன்ஹேலர் வச்சிருக்கீங்களா? ” , “அது அவரோட பேண்ட் பாக்கெட்ல இருக்குமா” வேகமாக அதை எடுத்து அவர் வாயில் வைத்தாள்.
அதிலிருந்து மருந்தை அவர் உள்ளிழுக்க ஆரம்பித்தவுடன் மீண்டும் இதயத்தின் மேல் கை வைத்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தாள் ரஞ்சிதா. மெல்ல மெல்ல அவருடைய இதயத் துடிப்பு சீராகி பழைய நிலைக்குத் திரும்பிய தன் கணவரை பார்த்து ஆனந்த கண்ணீருடன் ரஞ்சிதாவுக்கு கை கூப்பி நன்றி கூறினாள் அந்த நடுத்தர வயது பெண்.
அவள் கையைப் பிடித்து கீழே இறக்கி “இதெல்லா எதுக்கு? இவர் உயிர காப்பாத்துனதுதா எனக்கு ரொம்ப சந்தோஷோ” என்று கூறி விட்டு எழுந்தவள் மேடையை நோக்கி நடக்க கூட்டத்தில் ஒரு கிழவி “நிச்சயதார்தத்துக்கு முன்னாடியே இப்படி ஒரு அபசகுனமாயிருச்சே!” என அனைவரின் காதுப்பட கத்த ரஞ்சிதாவின் பின்னால் வந்த வீரராகவன் அவளுடைய கை விரல்களை இறுகப் பற்றி மேடைக்கு அழைத்து வந்தான்.
வீரராகவனுடைய இந்த செயலால் அகம் மகிழ்ந்து போனாள் ரஞ்சிதா. அங்கே கூடியிருந்த பலரும் இருவரின் செயல்களையும் பாராட்டி கைதட்டி ஆரவாரம் செய்தனர். கண்ணில் ஒளி மின்ன தன் வருங்கால கணவனைப் பார்த்து “ரொம்ப தேங்க்ஸ்” என்று ரஞ்சிதா கூற வீரராகவன் “தேங்க்ஸ் நாந்தா சொல்லணூ நீ என்னோட ரிலேட்டிவ் உயிர காப்பாத்திருக்க அதவிட பெருசு இந்த உலகத்துல வேற எதுவுமே கெடையாது” . தனக்கு நல்ல கணவன் கிடைக்கப் போகிறான் என்ற பூரிப்பில் ரஞ்சிதாவுக்கு அகத்தோடு சேர்ந்து முகமும் மலர்ந்தது.