Visitors have accessed this post 189 times.
சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு நடுஇரவுக்கு பிறகு என் உறக்கம் துண்டிக்கப்பட்டது. இப்படி என் தூக்கத்தை துண்டிப்பவர் யார் என்று தெரிந்தால், என் கையால் அவரது கையில் உள்ள தூக்கம் துண்டிக்கும் கத்திரிக்கோலை பிடுங்கி அந்த கத்திரிக்கோலாலேயே அவரது கையை துண்டித்து விடுவேன். இப்படி அந்த கண்ணுக்குத்தெரியாத, என் தூக்கம் கெடுக்கும் பேர்வழி (அவரது பெயரை ‘தூக்கம் தூக்கி‘ என்று வைத்துக்கொள்வோம்) பல வருடங்களாக எனக்கு இந்த இம்சயை செய்து வருகிறார். இந்த தூக்கம் கெடுக்கும் சேவையை, அவர் இருட்டில் செய்வதால் தானோ என்னவோ எனக்கு இந்த தூக்கம் தூக்கி யார் என்று கண்டுகொள்ளமுடியவில்லை.
சரி, இப்போது இந்த கட்டுரையின் சாரத்திற்கு வருகிறேன். தூக்கம் கெட்ட இரவுக்கு முந்தைய நாள் மாலை, எனக்கு ஒரு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் உறை வந்திருப்பதாக, ஹைதராபாதில் நான் இருந்த ஒரு அபார்ட்மெண்ட் வளாகத்தின் பாதுகாவலன் (வாட்ச்மேன்) எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். அந்த அஞ்சலின் முன்பக்கத்தை படம் எடுத்து, எனக்கு அனுப்பிவைக்கும்படி நான் அவரிடம் சொன்னேன். அவரும் அவ்வாறு அந்த அஞ்சலின் முன் பக்கத்தை படமெடுத்து அனுப்பினார். அனுப்புனர் விலாசத்தை கவனித்தேன். போக்குவரத்து ஆணையர் அலுவலகம், கச்சிபோலி, ஹைதராபாத் என்று இருந்ததை பார்த்து, நான் கொஞ்சம் படபடப்பு அடைந்தேன். நான் ஹைதராபாதில் இருந்தபோது, என் இரண்டு இரு சக்கர வாகனங்களை (சைக்கிள் இல்லை) இரண்டு பேருக்கு கொடுத்துவிட்டேன். நல்ல வேளை, (நான்கு சக்கர வண்டியாக இருந்திருந்தால், நான்கு பேர்களுக்கு கொடுத்திருப்பேனோ என்னவோ).
ஒரு வண்டியை நாலாயிரம் ரூபாய்க்கு கொடுத்துவிட்டேன் (எட்டு வருடமே ஆன, ஒரு மோட்டார் பைக்). இன்னொன்று ஸ்கூட்டர். பதினெட்டு வருடங்கள் உபயோகம் செய்துவிட்டு அந்த வண்டியை எனது வீட்டில் வேலை செய்துவந்த ஒரு தச்சனிடம் காசு ஏதும் வாங்காமல் கொடுத்துவிட்டேன். அதற்கு பதில் அவர் எங்கள் வீட்டில் செய்த தச்சு வேலைக்கு நான் பணம் கொடுத்துவிட்டேன்.
மோட்டார் பைக்கை விற்றபோது, அந்த வண்டியை நான் அவருக்கு விற்கிறேன் என்று எழுதி அவர் கையெழுத்தும் வாங்கிக்கொண்டேன். அந்த வண்டியின் பதிவினை அவர் பெயர்க்கு மாற்றிக்கொள்ளும்படி அவரிடம் சொன்னதும், அப்படியே செய்கிறேன் என்று பலமாக கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு (ஏனோ, அவர் தலையை ஆட்டவில்லை) சொன்னார். நடந்து வந்த பேர்வழி, வண்டியின் காகிதங்களுடன் செல்லும்போது எனது இரண்டு சக்கர வாகனத்தில் அழகாக அமர்ந்தது மட்டும் அல்ல, அவரே அதை ஒட்டிக்கொண்டும் சென்று விட்டார். அந்த மனிதர் ஐம்பது வயதை தாண்டியவராக காணப்பட்டார். ஆகவே கல்யாணம் ஆனவராக இருக்கவேண்டும். ஆனால் இதையெல்லாம் நான் அவரிடம் விசாரிக்கவில்லை. வண்டியை வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்துவிட்டார். அப்புறம் அவரிடம் நமக்கு என்ன வேலை? அவருக்குத்தான் நம்மிடத்தில் என்ன வேலை?
இப்படி நினைத்த எனக்கு ஆறுமாதத்திற்குள்ளாகவே முதல் தலைவலி வந்தது, உண்மையான தலைவலி இல்லை, வண்டி விற்றவரின் பொறுப்பில்லாத செயலினால். நான் வண்டியை விற்ற நபரோ அல்லது என் வண்டியில் சென்றவரோ தலைக்கவசம் அணியவில்லை. அதை புகைப்படம் எடுத்து சாலை போக்குவரத்துக்கு அலுவலகம் எனது விலாசத்திற்கு சல்லான் அனுப்பிவிட்டது. காரணம், வண்டி வாங்கிய மனிதர் அவரது பேரில் அதை மாற்றவில்லை. நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறினேன். உடனடியாக வண்டியை தன்பேரில் மாற்றிவிடுவதாக கூறினார். இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு இதேமாதிரி இன்னொருமுறை எனக்கு சல்லான் கட்ட கடிதம் வந்தது. ஒவ்வொரு முறையும் ரூபாய் ஆயிரம் ரூபாய் நான் தண்டமாக செலுத்தினேன். மோட்டார் பைக் வாங்கியவருக்கு போன் செய்து “ஏன், நீங்கள் இன்னும் வண்டியின் பதிவினை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளவில்லை” என்று கோபத்துடன் கேட்டபோது அவர் கோபப்படாமல் ” கூடிய விரைவில் மாற்றிவிடுகிறேன்” என்று சொன்னார்.
அதன் பிறகு இரண்டு மூன்று முறை அவருடன் தொடர்பு கொள்ள போன் செய்தபோது, அந்த மனிதர் போனை எடுக்காமல் விட்டுவிட்டார். அப்போது நினைத்துக்கொண்டேன் “சரியான முறையில் வண்டியை விற்றிருந்தால், இந்தமாதிரி பிரச்சினை வந்திருக்காது“.
அதன்பிறகு நான் என் வீட்டை வாடகைக்கு விட்டுவிட், கோயம்புத்தூர் வந்து இங்கே வசித்து வருகிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில், போக்குவரத்து ஆணையரின் அலுவலக்கத்திலிருந்து எனக்கு பதிவு செய்யப்பட்ட தபால் வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும், எனக்கு பலவிதமான சிந்தனைகளும் சந்தேகங்களும் வந்தன. நான் அந்த வாட்ச் மேனுக்கு போன் செய்து, அந்த தபாலை திறந்து அதில் உள்ள கடிதத்தில் என்ன தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை புகைப்படம் எடுத்து அனுப்பச்சொன்னேன். அந்த வாட்ச் மேன், இந்த மாதிரி காரியங்களில் கொஞ்சம் சோம்பல் பேர்வழி. நான் சொல்லி இரண்டு நாட்கள் கழித்தும் அவர் இந்த காரியத்தை செய்யவில்லை. இதனிடையில் என் மனக்குழப்பம் இன்னும் அதிகமானது. நான் ‘அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டேன்‘ என்று எனக்குள் பலமுறை கூறிக்கொண்டிருந்தாலும், அந்த இரவு நடுநிசியில் என் உறக்கம் கலைந்தபோது ஏதேதோ சிந்தனைகள் எழ ஆரம்பித்ததன். அந்த நேரத்தில் இந்த கடிதத்தில் என்ன இருக்கும் என்று நினைத்து என்னென்னவோ நினைத்துக்கொண்டு குழம்பிக்கொண்டும் பதைப்புடன் இருந்தேன். இந்த பைக் ஆசாமி வண்டியில் ஏதாவது விபத்து ஏற்பட்டிருக்குமோ? அவர் வண்டியின் பதிவை அவர் பெயரில் மாற்றாமல் இருந்ததால், விபத்து குறித்து எனக்கு ஏதாவது நோட்டீஸ் அனுப்பியிருப்பார்களோ என்றெல்லாம் சந்தேகம் வந்தது. ஆக மொத்தம் தூக்கம் நன்றாகவே கேட்டது.
அடுத்த நாள், நான் இருப்பு கொள்ளாமல் அந்த வாட்சமேனுக்கு போன் செய்து “ஏன் நான் சொன்னதை நீங்கள் இன்னும் செய்யவில்லை. உடனடியாக அந்த கடிதத்தின் விவரத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் “என்று சொன்னதும், அடுத்த அரைமணியில் எனக்கு அவர் அதை வாட்ஸாப்பில் அனுப்பிவைத்தார். அந்த கோப்பை நான் திறந்து பார்ப்பதற்குள் மனம் மிகவும் அடித்துக்கொண்டது. கடிதத்தின் உள்ளடக்கத்தை பார்த்ததும் எனக்கு அப்பாடா என்ற திருப்தி மட்டும் அல்ல முகத்தில் புன்னகை இழைந்தோடியது.
அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது இதுதான் “உங்கள் இரண்டு சக்கர வாகனம் ஜூலை மாதத்திலிருந்து இந்த காவல் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. வண்டியின் விவரங்களை பார்க்கையில், அது உங்கள் பெயரில் உள்ளது என்பதால், இந்த அறிவிப்பு. இக்கடிதம் கண்டு பத்து நாட்களுக்குள் நீங்கள் தகுந்த ஆவணங்களுடன் இந்த காவல் நிலையத்திற்கு வரவும். அப்படி இல்லையெனில், இந்த வண்டி சட்டதிட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அகற்றப்படும் (will be disposed)”. எனக்கும் அந்த வண்டிக்கும் சம்மந்தமே இல்லை எனும்போது இந்த கடிதம் எனக்கு மிகவும் ஆறுதலையும் திருப்தியையும் தந்தது. அன்று இரவு நான் நிம்மதியாக தூங்க நினைத்து கொண்டேன்.
அன்று இரவு நடுநிசிக்கு எனக்கு முழிப்பு வந்தது. வண்டியை பற்றி இப்போது பிரச்னை எதுவும் இல்லை, பின் எதற்கு முழித்துக்கொண்டு விட்டோம் என்று நினைத்தபோது மனதில் “முதல் வண்டியை பற்றி இப்போது ஒரு கவலையும் தேவையில்லை. ஆனால் இன்னொரு வண்டியையும் நீ அங்கே ஒரு தச்சனிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாய். அந்த வண்டி குறித்து விபத்து, தண்டம் என்று எதுவும் வராது என்பது என்ன நிச்சயம்“.
இப்போது நீங்களே சொல்லுங்கள், ஏற்கெனவே நொண்டி குதிரைக்கு வழுக்கின சாக்கு என்று இருப்பவனுக்கு இந்தமாதிரி ஒரு நினைவு வந்துவிட்டால், எப்படி வரும் நல்ல தூக்கம். உங்களில் யாராவது ஒருத்தர் இந்த தூக்கம் தூக்கியை, என் முன் கொண்டுவந்து நிறுத்துவீர்களா அல்லது நான் ஒரு நாற்காலி ஏற்பாடு செய்தால் அவரை அதில் அமர்த்துவீர்களா?
பிகு: ஆமாம் உங்கள் எல்லோருக்கும் இந்தமாதிரி தூக்கம் பிரச்சினை, வண்டி பிரச்சினை எதுவும் இல்லையா? இல்லை என்றால் நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர். மற்றவர்களை கெடுத்துக்கொண்டிருக்கும் பலர் பலமாக குறட்டை விட்டுக்கொண்டு தூங்குவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, நீங்கள் குறட்டை விடுபவரா அல்லது அரட்டை மட்டும் அடிப்பவரா என்பதை எனக்கு தயவு செய்து தெரியப்படுத்தினால், அதனால் எனக்கு தம்பிடி பிரயோசனமும் கிடையாது. நீங்களும் உங்கள் குடும்பமும் ‘வாழ்க வளமுடன்‘.
பட்டபின்தானே தெரிகிறது எது சரி, எது தவறு என்று. அப்படித்தெரிந்தபின்பும் நாம் எவ்வளவு பேர் காரியங்களை சரியாக செய்கிறோம். நான் எப்போதும் தவறில்லாமல் செய்யும் காரியம் என்ன தெரியுமா? தவறு தான்
ஜாய்ராம்