Visitors have accessed this post 768 times.
அழகுப் போட்டிகள் என்றாலே அனைவரும் ஆர்வமாகி விடுவார்கள். விலங்குகளுக்கான அழகுப் போட்டி என்றால் அது இன்னும் சுவராசியமானதாக இருக்கும். விலங்குகளுக்கு அழகுப் போட்டியா என்ற வியப்பால் பலரும் அதை ரசித்துப் பார்க்கின்றனர்.
சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஒட்டகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட பிரபலமான கிங் அப்துல்அஜிஸ் (King Abdulaziz Camel Festival) ஒட்டகத் திருவிழா உலக அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
ஏனென்றால், ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு மொத்தம் 66 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கிடைக்கும்.
போட்டியின் விதிகளின்படி, போடோக்ஸ் ஊசி (Botox injections), முகத்தை உயர்த்துதல் மற்றும் பிற அழகுசாதன மாற்றங்கள் அனுமதிக்கப்படாது. இருப்பினும், பல வளர்ப்பாளர்கள் தங்கள் ஒட்டகங்களை வெற்றி பெற வைக்க சிலிகான் மற்றும் ஃபில்லர்களை உட்செலுத்துவது போன்ற நெறிமுறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு மாத காலம் தொடரும் இந்த விழாவில், செயற்கையாக மேம்படுத்தப்பட்ட ஒட்டகங்களின் மீதான தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால், “சிறப்பு மற்றும் மேம்பட்ட” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒட்டகங்களை சேதப்படுத்துவதைக் கண்டறிவதாக அல்ஜசீரா அதிகாரப்பூர்வ சவுதி செய்தி நிறுவனம் (Saudi Press Agency) புதன்கிழமையன்று (டிசம்பர் 8) தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, விலங்குகளை சேதப்படுத்திய (Tampered Animal) வளர்ப்பாளர்கள் தங்கள் குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ஒட்டகத் திருவிழாவின் சட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மர்ஸூக் அல்-நாட்டோ தெரிவித்துள்ளதாக CNN செய்தி ஊடகம் கூறியதை அல்ஜசீரா மேற்கோள் காட்டியுள்ளது.
இந்த ஆண்டு, ஒட்டகத் திருவிழா தொடர்பாக சுமார் 147 முறைகேடு வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டகங்கள் சேதமடைவதைக் கண்டறிய உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சவூதி அரேபியாவின் கலாச்சாரத்தில், ஒட்டகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பாலைவன வாழ்க்கைக்கு உதவும் ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டி, மாபெரும் திருவிழாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இதில் ஒட்டகப் பந்தயம், விற்பனை மற்றும் பிற விழாக்களும் அடங்கும்.
வெற்றி பெற்ற ஒட்டகங்களின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் கிடைக்கும். இந்தப் போட்டிகளில் வெல்லும் ஒட்டகங்களின் உரிமையாளர்கள் அதிக விலைக்கு விலங்குகளை விற்கலாம்.
இந்த திருவிழா பிராந்தியத்தின் பெடோயின் பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தை (Bedouin tradition and heritage) பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல மில்லியன் டாலர் தொழில், ஒட்டக வளர்ப்பு இந்த பிராந்தியத்தில் மிகவும் பிரபலமானது.