Visitors have accessed this post 416 times.

ஆஷ்துரையை நியாந்தீர்த்த வாஞ்சிநாதன்

Visitors have accessed this post 416 times.

எதை நோக்கி எய்யப்பட்டிருக்கிறோம் என்று அம்புக்குத் தெரியாது. மகத்தான ஒரு விஷயத்துக்காக கடவுள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளான். நாடா, குடும்பமா என்று வருகையில் நான் நாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். எனது விதி என்னை ஆளுகையில் இதில் இழப்பதற்கோ பெறுவதற்கோ ஒன்றுமில்லை. சாவைக் கண்டு பயந்து சமரசம் செய்து கொள்பவர்கள் கோழைகள். ஒரு நாடு எப்படிப்பட்டதென்று மக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அச்சத்தோடு வாழ்பவர்களுக்கு ஒரு பூ கூட பாறை போல கனக்கும். உன்னதமான லட்சியம் கொண்டவர்கள் இறந்தும் வாழ்வார்கள். தொடக்கமும் முடிவும் தெரியாத காரிருளில் கீதை நமக்கு வழிகாட்டி உதவுமாக – வாஞ்சிநாதன்

திருவாங்கூர் இந்து அறநிலையத்துறையில் மணியக்காரராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரகுபதி அய்யர். அவருக்கு மூத்த மகனாக பிறந்தவர் தான் சங்கரன் என்ற வாஞ்சிநாதன். செங்கோட்டை பெருமாள் சந்நிதித் தெருவில் வசித்த ஏழை பிராமணக் குடும்பம் தான் வாஞ்சியினுடையது. செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்தவர். திருவனந்தபுரம் ‘மூலம் திருநாள்’ மகாராஜா கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார். வாஞ்சிநாதனுக்கு இருபத்தி மூன்று வயதான போது முன்னீர்பள்ளம் சீதாராமய்யரின் மகளாக பொன்னம்மாளை மணமுடித்து வைத்தார் தந்தை ரகுபதி அய்யர். பரோடாவில் மரவேலைக்கான தொழிற்படிப்பு முடித்து புனலூர் காட்டிலாகாவில் வாஞ்சி பணியில் அமர்ந்தான்.

வாஞ்சிநாதன் என்ற வேங்கையை வேட்டைக்குப் பழக்கியவர் வெள்ளையர் ஆதிக்கத்தை அழித்தொழிக்க பல ரகசிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட நீலகண்ட பிரம்மச்சாரி. இவர் தீவிரவாதத்தை தமிழ்மண்ணில் வளர்த்தெடுக்க இளைஞர்களின் பாசறையான பாரத மாதா சங்கத்தைப் பயன்படுத்தினார். அகிம்சையாளர்கள் அன்று பயன்படுத்திய ஒரேயொரு ஆயுதம் பேனா. மயிலே மயிலே என்றால் இறகு போடாது தமிழ் மண்ணெங்கும் எழுச்சிமிக்க 100 இளைஞர்களைத் திரட்ட வேண்டுமென்பது நீலகண்ட பிரம்மச்சாரியின் கனவு. அதன்படி தேசப்பற்று மிக்க இளைஞர்களுடன் கை கோர்த்தார்.

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக எழுதுகிறாயா பேசுகிறாயா விசாரணையே கிடையாது உள்ளே போ என்றது பிரிட்டிஷாரின் தேச துரோகச் சட்டம். கையில் ஆயுதம் இருக்கிறதே என்று பயந்து விடக்கூடாது. கையில் அதிகாரம் இருக்கிறதே என்று குனிந்து விடக்கூடாது. நம் வாழ்வு முக்கியமல்ல தேசத்தின் விடுதலையே முக்கியம். அதுதான் நம் இலக்கு. மரணத்தை வைத்து பூச்சாண்டி காட்டிய வெள்ளையர்கள் அது பூமராங் போல தங்களையே திருப்பித் தாக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள். இது தான் திலகரின் பின்னால் அணிவகுத்த தீவிரவாதிகளின் வேதவாக்கு.

காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் வேலை எடுபடாத நாளொன்று வரும். அப்போது ஆயுதம் தாங்கிய புரட்சியை திடீரென்று நடத்த வேண்டும். அவர்கள் சுதாரித்துக் கொள்ளும் முன் கையிலுள்ள அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளவேண்டும். எப்படி இந்தியாவில் நுழைந்தார்களோ அப்படியே வெறும் கைகளுடன் வெள்ளையரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். உங்களிடம் உயிர் இருக்கிறது அது ஒன்றே போதும் தீயாய் எரிய. இந்த உறுதிமொழியை ஏற்று திட்டம் நிறைவேற உயிர்கொடுத்தவர்களில் வாஞ்சிநாதனும் ஒருவன். விடுதலை வேள்வித் தீயில் எரிவதற்கு மீண்டும் மீண்டும் பிறந்து வருவோம் என முழக்கமிட்ட இளைஞர்கள் கூட்டத்தில் வாஞ்சிநாதனும் இருந்தான். கொள்ளைக்காக சாவேன் என்று இரத்தத்தால் கையெழுத்திட்டான்.

ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 1895ல் பணிக்காக இந்தியா வருகிறான் ஆஷ். முதல்பணி இன்றைய ஒடிசா மாநிலத்தில் அன்றைய கஞ்சம் மாவட்டத்தில், பின்னர் சென்னையில் சிறப்பு அலுவலராக பணிமாற்றம், வடஆற்காட்டில் துணை ஆட்சியராகப் பணி என்று பல இடங்களில் சுற்றி கடைசியாக 1910ல் திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியராக பணிபுரிய தென்னிந்தியாவின் கடைக்கோடிக்கே வந்து சேர்கிறான் ஆஷ்துரை. அவன் பணிபுரிந்த இடங்களைப் பட்டியலிட வேண்டுமானால் நீண்டு கொண்டே இருக்கும். ஆங்கிலத்தில் ஆஷ் என்றால் சாம்பல் என்பார்களே அதுபோலத்தான் அவன்.

வ.உ.சியும், சிவாவும் தலைமையேற்று நடத்திய கோரல் மில் தொழிலாளர் போராட்டத்தில் ஆஷ்துரை நடந்து கொண்ட விதமாக இருக்கட்டும். முதலைக்கு தண்ணீரில் தான் வலு  அதிகம் என்று புரிந்து கொண்டு வ.உ.சியையும், சிவாவையும் சிறைப்படுத்தியதாக இருக்கட்டும். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க அவன் கையாண்ட விதமாக இருக்கட்டும். வ.உ.சியின் கனவான சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கு மூடுவிழா நடத்தியதாக இருக்கட்டும். அவன் சர்வாதிகாரத்தன்மை பாசிச மூளை அவ்வப்போது சில காரியங்களில் வெளிப்பட ஆரம்பித்தது. அதனால் தான் தூத்துக்குடி மக்களின் வெறுப்புக்கு ஆளானான் ஆஷ்துரை.

நீலகண்டரைச் சந்திக்க வாஞ்சிநாதன் அடிக்கடி புதுவைக்குச் சென்றான். பாரதி, வ.வே.சு ஐயர், நாகசாமி முதலியவர்களை அங்குதான் அவன் சந்தித்தான். பாரதத்தாயின் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறித்தமான பற்று வ.வே.சுவைக் கவர்ந்தது. இதை யார் கொண்டு முடிப்பது என்று வ.வே.சு பல காலமாக ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார் கடவுள் ஐயர் முன் வாஞ்சிநாதனை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். வ.வே.சு தன் திட்டத்தை செயல்படுத்த வாஞ்சிநாதனால்தான் முடியும் என்று உறுதி கொண்டிருந்தார். அத்திட்டம்தான் வ.உ.சியை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்திய ஆஷ்துரையைக் கொல்வது. கர்சான் வைலியைக் கொன்றவன் மதன்லால் திங்க்ரா. ஆனால் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டதோ சாவர்க்கர். இந்த முறை தான் குறிவைப்பது ஆட்சியருக்கு என்று வ.வே.சு ஐயருக்கு தெரியாமலில்லை.

வாஞ்சிநாதனை புதுவையில் ஓரிரு மாதங்கள் தங்க வைத்து, வ.வே.சு ஐயரும், நாகசாமியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியை அளித்தனர். வாஞ்சிநாதன் குறுகிய நாட்களிலேயே குறிபார்த்து சுடுவதில் கற்றுத் தேர்ந்துவிட்டான். 1911 மே மாதம் இறுதியில் இரவு 11 மணிக்கு நாகசாமியும், கண்ணுப்பிள்ளை என்பவரும்  வாஞ்சிநாதனுடன் நடந்தே வில்லியனூர் சென்று அங்கிருந்து பர்கூர் வழியாக ஆற்றைக் கடந்து திருப்பாப்புலியூரில் வாஞ்சிநாதனை ரயில் ஏற்றி அனுப்பினார்கள். வாஞ்சிநாதன் தன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தலைப்பிரசவத்திற்கு பிறந்தகம் சென்ற மனைவி பொன்னம்மாளைக்கூட ஒருமுறைகூட போய்ப் பார்க்காது, தேசம் சுதந்திரம் என்று ஊர் ஊராக சுற்றுகின்றானே என்று மகனின் போக்கு பெற்றவர்களுக்கு மிகுந்த கவலையளித்தது.

வாஞ்சிநாதன் எதிர்பார்த்த தருணம் இறுதியில் வந்து சேர்ந்தது. 17 ஜூன் 1911, காலையில் ரயிலில் ஆஷும் அவனின் காதல் மனைவி மேரியும் தன் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக கொடைக்கானலுக்கு பயணத்தை மேற்கொண்டனர். சரியாக 10.38 மணிக்கு மணியாச்சி சந்திப்பை தொடர்வண்டி நெருங்கியது. ஊருக்கு அப்பாலிருந்த ஒதுக்குப்புறமாக அமைந்த சந்திப்பு அது. கிராசிங் ரயிலுக்காக காத்திருந்தது ஆஷ் பயணப்பட்ட மணியாச்சி மெயில் வண்டி. முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தனர் ஆஷ் தம்பதியினர்

அப்போது ஆஷ்துரை இருக்கும் பெட்டியில் ஏறினான் வாஞ்சிநாதன். ஆஷைப் பார்த்ததுமே அவனது நரம்புகள் புடைத்தது. நவீன இரணியனுக்கு நான் தோட்டாக்களைப் பரிசாகத் தரப்போகிறேன் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். ஆஷ் செய்வதறியாது திகைத்து நிற்கையில் கண்ணிமைக்கும் நேரத்தில் வாஞ்சிநாதனின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த தோட்டாக்கள் ஆஷ்துரையின் இரும்பு இதயத்தை சல்லடையாக துளைத்தது. அவர்கள் பயணித்த ரயிலை மீண்டும் திருநெல்வேலிக்கே திருப்பினார்கள். வாஞ்சிநாதனை ஆஷின் இரு பணியாட்களும், இரயில்வே போலீசாரும் விடாது துரத்தினர். கழிப்பறைக்குள் நுழைந்த வாஞ்சிநாதன் துப்பாக்கியை தன் வாயில் நுழைத்து தனக்குத் தானே சுட்டுக்கொண்டு உயிர்நீத்தான். அவன் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வழிந்தது. அவன் கைகள் இறுக்கமாக துப்பாக்கியைப் பற்றியபடி இருந்தன. அவனது சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதம் சிக்கியது.

எங்களது கீதை  தர்மத்தை உரைக்கின்றது. இதிகாச, புராணங்கள் உண்மையைப் பற்றியே பேசுகின்றன. வேதமும், உபநிடதமும் ஒன்றே கடவுள் அதுவே சத்தியம் என்கின்றன. இந்தியத் திருநாட்டின் வரலாற்றை முழுமையாக அறியாதவர்கள் நாட்டின் மன்னராக முடிசூடிக்கொள்ள முடியுமா? அதைப் பார்த்து நாங்கள் வாளா இருக்கவேண்டும் அப்படித்தானே! இந்திய இளைஞர்களை சுரணை கெட்டவர்கள் என்று நினைத்தார்களா? வாயைத் திறக்கக்கூட உங்கள் அனுமதி வேண்டி கைகட்டி நிற்க வேண்டுமா? நாட்டின் உங்கள் ஜனத்தொகை எவ்வளவு எங்கள் ஜனத்தொகை எவ்வளவு? முப்பதுகோடி பேரும் பொங்கிஎழுந்தால் தாங்குமா பிரிட்டிஷ் அரசாங்கம். வாணிபம் செய்ய வந்த உங்களின் காலில் விழுந்தோமா எங்களை ஆளுங்கள் என்று. இல்லை எங்களுக்கு வாழத் தெரியவில்லை வாழ்க்கையைக் கற்றுக் கொடுங்கள் என்று தேவாலயங்கள் முன்பு திரண்டோமா? இந்தியாவை அடிமைப்படுத்திய ஐந்தாம் ஜார்ஜின் பாதுகையைக் கூட பாரதமண்ணில் பட விடமாட்டோம். அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராஸிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதை தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செயலை செய்தேன் என்று விரிகிறது அக்கடிதம்.

எங்கே வாய்கள் ஊமையாக்கப்படுகிறதோ எங்கே சிந்தனை சிறைப்பிடிக்கப்படுகிறதோ எங்கே அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறதோ அங்கே புரட்சி வெடிக்கும். அச்சுறுத்தலுக்குப் பயந்து வாழ்வை அடமானம் வைத்துவிடாதே உன் சிந்தனையால் சிறைக்கதவுகளைக் கூட உடைக்க முடியும். அடிமையின் கலகக்குரல் நாட்டை ஆள்வோருக்கு கேட்கட்டும். பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை அநீதிக்கு எதிரான போராட்டத்தில் தன் இன்னுயிரை இழப்பவன் ஒருவனே மரணத்தை வென்றவன். ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் பொங்கிஎழு உறங்கிக் கிடக்கும் இந்தியாவை உசுப்பி விட உன்னால் மட்டுமே முடியும். குனிந்து கொண்டே இருக்கும்வரை தான் தலையில் குட்டுவான் எதிர்த்து நில் இந்த சிறுதீப்பொறி நாட்டையே பற்றி எரியவைக்கக் கூடியதென்று ஒருநாள் அவனுக்கு புரியவை. வாழ்ந்தால் முப்பது கோடி முழுமையும் வாழ்வோம் வீழ்ந்தால் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம். இந்தக் கொள்கைகளைத்தான் தன் இறுதி மூச்சு உள்ளவரை நம்பினான் வாஞ்சிநாதன். கொள்கைக்காகவே வாழ்ந்து கொள்கைக்காகவே வீழ்ந்தவன் தேசத்துக்காக வாலிபத்தை இழந்தவன் இறுதியில் உயிரையும் இழந்தான்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam