Visitors have accessed this post 186 times.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
படித்த ஒரு கதை
முள்ளம் பன்றிகள் கூட்டமாக வாழ்ந்த ஒரு இடத்தில் கடும் பனிக்காலம் வந்தது. பனியில் இருந்து காத்து கொள்ள முள்ளம் பன்றிகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தன. இதனால் ஒன்றின் முள் மற்றொன்றின் மீது குத்தி காயம் ஏற்பட்டது. சில பன்றிகள் காயத்தை பொறுத்துக் கொண்டு இருந்தன. சில பன்றிகள் தனித்து சென்றன.
பனிக்காலம் முடிந்து பார்த்த பொழுது ஒன்றாய் இருந்த பன்றிகள் சிறு காயங்களோடு
பிழைத்துகொண்டன. தனித்து சென்ற பன்றிகள் பனியில் விறைத்து இறந்து போயின.
எனவே உறவுகளுக்குள் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து சென்றால் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
சிறு வயதில் படித்த ஒரு கதை
ஒரு புல் வெளியில் நான்கு எருதுகள் மேய்ந்து கொண்டிருந்தன . அதை பார்த்த சிங்கம் ஒன்றிற்கு அவைகளை கொன்று புசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது . அதனால் அவைகளிடம் சென்றது . சிங்கத்தை கண்ட எருதுகள் நான்கும் ஒன்றாக சேர்ந்து அதைத் தாக்கின . அவைகளை தாக்க முடியாமல் சிங்கம் திரும்பி ஓடியது . இதைக் கண்ட நரி ஒன்று சிங்கத்திடம் சென்று அந்த எருதுகள் நான்கும் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பதால்தான் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை . அவைகளை பிரித்துவிட்டால் நீங்கள் எளிதாக அவைகளை வீழ்த்தலாம் என்று உபாயம் கூறியது . அதன்படி அந்த எருதுகளிடம் சென்ற நரி தனித்தனியாக அவைகளை சந்தித்து ஒன்றை பற்றி மற்றொன்றிடம் தவறாக எடுத்துக்கூறியது . அவைகளை உண்மை என நம்பிய எருதுகள் ஒன்றின் மீது மற்றொன்று கோபம் கொண்டு பிரிந்துச்சென்றன . இந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்ட சிங்கம் ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தாக்கி கொன்றது .
எனவே ஒற்றுமை என்றும் பலமாம் .
இப்பொழுதெல்லாம் தினசரி செய்திகளை கவனித்தால் பெரும்பாலும் வருவது வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை, தனியாக இருந்த மூதாட்டி கொலை, தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் தனியாக என்பது. முன்பெல்லாம் ஒரு குடும்பம் என்பது தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா, மாமி, சித்தி, சித்தப்பா என்ற அங்கத்தினர்களைக் கொண்டது. ஆனால் இன்று கணவனும், மனைவியும் சேர்ந்து வாழும் குடும்பங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமல் போனதும், தவறான செயல்களுக்கு தடையாக இருப்பதாலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை தவிர்க்கின்றனர்.
தனியாக இருக்கும் கயிறு பலவீனமானது. அதை அறுப்பது எளிது. அதுவே பல கயிறுகள் ஒன்று சேர்ந்து இருக்கும்போது அதுவே பலமானதாக மாறும். அதை அவ்வளவு எளிதாக அறுக்க இயலாது. கூட்டுக் குடும்பமும் அது போலத்தான்.