Visitors have accessed this post 339 times.

நானே வருவேன் – பகுதி 11

Visitors have accessed this post 339 times.

 பாகம் 11

அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த போதிலும் அனைவரிடமும் அன்பாகப் பழகி அனைவருடைய மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் வித்யா.

அந்தப் பக்கமாகச் சென்ற அலுவலக சேவகன் “வித்யா மேடம் ஒங்களுக்கு  ஏதாவது உதவி வேணும்னா கூச்சப்படாம ஏ கிட்ட கேளுங்க நா செய்றே” என்று சிரித்துக் கொண்டே கூற வித்யாவும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். இதை கவனித்த வித்யாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சுமதி “என்னபா நீ ஆஃபீஸ் பியூனையு விட்டு வைக்கலையா!” என்று கேலி செய்ய அவளது முதுகில் வலிக்காமல் ஒரு அடியை கொடுத்துவிட்டு “சும்மா இரு” என்றாள் வித்யா.

“பியூன் கிட்ட கூட இவ்ளோ ஃபிரண்ட்லியா பழகுற ஆனா முக்கியமான எடத்ல போய் மொரட்டுத்தனமா சண்ட போட்டு வந்துருக்கியே ஏ அப்படி பண்ண? ” ,  “நா எதுவு பண்ணலயே” ,  “எதுவு பண்ணலயா இன்னக்கி ஆபீஸ் பூரா நேத்து நீ எம்.டி கிட்ட சண்ட போட்டதுதா  தலைப்பு செய்தியா ஓடீட்ருக்கு” .

“நா ஒன்னூ சண்ட போடல என்னோட உரிமைய தா கேட்டே அதுக்கு அந்தாளு தா கத்துனாரு பதிலுக்கு நானூ கத்துனே அந்த ஆளப் போய் எப்படி அவங்கப்பா எம்.டி யா போட்டாரு கொஞ்சங் கூட மரியாதயே தெரியாத ஆளு” .

“அவருக்கு மரியாத தெரியலயா? ஒனக்கு தாண்டி இப்ப மரியாத தெரியல அவரு வாட்ச் மேன் உள்பட இங்க இருக்க எல்லா ஆபீஸ் ஸ்டாஃப் கிட்டயு எவ்ளவு மரியாதையா நடந்துக்குவாரு தெரியுமா?” ,   “அப்றோ எதுக்கு என்ன வாடி போடின்னு பேசுனா? என்ன குட்டிச்சாத்தான்னு வேற சொன்னானே” .

“நீ இந்த மாதிரி மரியாத கொடுக்காம பேசுனா அப்றோ அவர் எப்டி மரியாத கொடுப்பாரு” சுமதியை முறைத்துப் பார்த்தாள் வித்யா. “என்ன முறைக்காம வேலயப் பாரு எம்.டி சார் வர்றாரு” . வீரராகவன் அலுவலகத்திற்குள் பரபரப்பாக வந்து கொண்டிருப்பதை திரும்பிப் பார்த்த வித்யா தலையை கவிழ்த்து கணினியில் தன் கவனத்தைச் செலுத்தினாள்.

மூன்று மணி நேரம் கடந்துவிட்ட நிலையிலும் வித்யா தன்னுடைய பணியை ஆர்வத்துடன் செய்து கொண்டிருந்தாள். அனைவரும் ஒழுங்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்று மேற்பார்வை செய்து கொண்டு வந்த அந்த அணியின் தலைவி ஷில்பா குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருக்கும் வித்யாவைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுச் சென்றாள்.

இடையில் மதிய உணவிற்கு சென்று விட்டு மீண்டும் தன் வேலையை தொடங்கிய வித்யா மாலை நான்கு மணி அளவில் தன்னுடைய பணியை நிறைவு செய்துவிட்டு அதை அணி தலைவியின் கணினிக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக உட்கார்ந்து சுமதியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

வித்யா அனுப்பிய கோப்பை திறந்து பார்த்த ஷில்பா “டேலண்டான ஆளுதா ஒன்ன வச்சே ஏ காரியத்தை சாதிச்சுக்குறே” என்று தன் மனதுக்குள் தனியாக ஒரு திட்டம் தீட்டினாள்.

மாலை 5 மணி ஆனவுடன் அனைவரும் அலுவலகப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லத் தயாராகினர். வித்யாவும் தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு தயாரானால் அவளிடம் வேகமாக வந்த ஷில்பா “ஒரு நிமிஷோ வித்யா” என்றழைத்து அவளை தடுத்து நிறுத்தினாள்.

“என்ன மேடம்? ”  ,   “நீ அனுப்பியிருந்த லோகோவோட ப்ரோமோ வீடியோ ரொம்ப நல்லா இருந்தது எம்.டி சார் அந்த வீடியோ இன்னிக்கி கண்டிப்பா வேணும்னு சொல்லிருந்தாரு ஏ அம்மாக்கு கொஞ்சோ ஒடம்பு சரியில்லாம இருக்காங்க அவங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனூ இல்லன்னா நானே அந்த வீடியோவ எவ்ளோ நேரமானாலூ வெயிட் பண்ணி காட்டிட்டு போயிடுவே…”

“எனக்கு உங்க சிச்சுவேஷன் புரியுது மேடம் கவலைப்படாதீங்க நானே வெயிட் பண்ணி எம்.டி சார் கிட்ட  வீடியோவ காட்டிட்டு போறே நீங்க உங்க அம்மாவ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் பாருங்க “ரொம்ப தேங்க்ஸ் வித்யா” ,  “இட்ஸ் ஓகே மேடம்” .

அவளுக்கு வீரராகவனை சந்திக்கப் பிடிக்கவில்லை என்ற போதிலும் ஷில்பாவின் சூழ்நிலை கருதி அவளுக்காக அலுவலகத்தில் காத்திருக்கத் தொடங்கினாள்.
அலுவலகம் சம்பந்தமான தன்னுடைய வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் வீரராகவன். செல்வியும் செல்வ ராகவனும் முகப்பு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களை நெருங்கி வந்தவன் “என்னப்பா காலைலருந்து ஒங்கள ஆபீஸ் பக்கமே காணோ எங்க போனீங்க? ” ,  “ஒரு ஃபிரண்ட பாக்க போனேம்பா” ,  “யாருப்பா அந்த ஃபிரண்டு”  ,  “அவே இப்போ உயிரோடையே இல்லப்பா அத விடு அம்மா ஓ கல்யாணத்த பத்தி தா பேசிட்டு இருந்தா ஒனக்கு இந்த பொண்ணு ஓகே தான? ” .

“அம்மாக்கு ஓகேன்னா எனக்கூ ஓகே தாம்பா”  ,  “அப்ப டபுள் ஓகே, நாம நாளக்கே போய் நிச்சய தேதிய குறிச்சிட்டு வந்துருவோ” ,  “சரிங்க நிச்சயத்துக்கு முன்னாடி வீர ஒரு தடவ நேர்ல கூட்டிட்டுப் போய் அந்த பொண்ண காட்டனூனு நெனச்சே ஆனா அதுக்குள்ள அவங்க ரெண்டு பேராவே ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க”

“அதனால என்ன? நாளக்கி போகும் போது கூட கூட்டிட்டு போனா போச்சு” ,  “இல்லப்பா. நாளைக்கி ஆஃபீஸ்ல எனக்கு நெறைய வேலருக்கு நீங்களு அம்மாவு போயிட்டு வாங்க” , “ஆபீஸ்ல நீ முடிக்க வேண்டிய முக்கியமான வேல ஏதாவது பெண்டிங்ல இருந்தா அத சீக்கிரமா முடிக்க பாருப்பா நிச்சயோ பண்ண பின்னாடி நீ ஆபீஸ்க்கெல்லா வர வேண்டா ஹனிமூன் முடிச்சுட்டு அப்றோ பொறுமையா வா” .

“என்னால அப்டிலா இருக்க முடியாதுப்பா கல்யாணத்துக்கு மொதோ நாள் வரைக்கு நா ஆபீசுக்கு வருவே” என்று கூறி விட்டு அப்பாவின் பதிலை எதிர்பார்க்காமல் மாடிப்படிகளில் ஏறினான்.

“என்னங்க இவே இந்த கல்யாணத்துல இன்ட்ரஸ்ட்டே இல்லாம இப்படி இருக்கா?”  ,   “கல்யாணோ ஆகட்டூ அப்றோ போகப் போக எல்லா தானா சரியாய்டு” .

விரைப்பாக பேசிவிட்டு அறைக்குள் வந்தவன் தன்னுடைய இருக்கமான மேல் உடுப்பை கழட்டி சொகுசு நாற்காலியில் வீசி விட்டு கலைப்பில் அப்படியே தன் கைவிரல்களை தலைக்கு தலையணையாக மாற்றி  படுத்துக் கொண்டான்.

கண்மூடிய அவனை கடுப்பேத்தும் விதமாக அவனுடைய அலைபேசி சினுங்கியது. எரிச்சலுடன் எழுந்திரித்து அதை எடுத்துப் பார்த்தான். ஆபீஸ் வாட்ச் மெனின் பெயர் திரையில் ஒளிர அழைப்பை ஏற்றான்.

 

 

“சொல்லுங்க முருகன்”  ,  “ஐயா இங்க வித்யா மேடம் ஒங்கள பாக்குறதுக்காக காத்துக்கிட்டு இருக்காங்கய்யா” ,  “நா யாரையு வெயிட் பண்ண சொல்லலையே முருகன்? , வித்யானா நேத்து வேலைக்கு சேந்துச்சே அந்த பொண்ணா? ”  ,  “ஆமாய்யா அந்தப் பொண்ணுதா” .

“அந்தப் பொண்ணு எதுக்கு என்னப்பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்கு? மணி என்ன ஆச்சுன்னு பாருங்க? அத மொதல்ல வீட்டுக்குப் போக சொல்லுங்க  ஒன்னு செய்ங்க நீங்க அந்த பொண்ணு கூட போயி அந்த பொண்ண வீட்ல விட்டுட்டு வந்துருங்க” ,  “சரிங்கய்யா” என்று அழைப்பை துண்டித்தார் முருகன்.

“அம்மா ஐயா உங்கள மொதல்ல வீட்டுக்குப் போக சொல்றாரு” ,  “என்னது வீட்டுக்குப் போக சொல்றாரா? ” ,  “ஆமா ஐயா ஒங்கள காத்துருக்க சொல்லலையா? ” .

எரிச்சலோடு வீட்டிற்குச் செல்லத் திரும்பியவளிடம் “இருங்கம்மா நானூ கூட வரே”  ,  “வேணா தாத்தா நானே போய்கிறே”  ,  “இல்லம்மா தம்பி உங்க கூடவே போய் வீட்ல விட்டுட்டு வர சொல்லீருக்காரு” அவர் கூறிய வார்த்தைகளால் வியப்படைந்தவள் எதுவும் பேசாமல் அவருடன் தன்னுடைய விடுதியை நோக்கிப் பயணித்தாள்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam