Visitors have accessed this post 401 times.

நானே வருவேன் – பகுதி 6

Visitors have accessed this post 401 times.

 பாகம் 6

ரஞ்சிதா கூறிய விஷயத்தை சில வினாடிகள் ஆழமாக யோசித்த வீரராகவன் “எனக்கு ஒங்கள கல்யாணம் பண்ணிக்க ஓகே தா” என்று ரஞ்சிதாவைப் பார்த்து கூறிவிட்டு தன்னுடைய உதவியாளரைப் பார்த்து கண்ணசைத்தான்.

அவனுடைய செய்கையை புரிந்து கொண்ட உதவியாளர் வேகமாக அவனுடைய அருகில் வந்து அவனுடைய முகத்திற்கு அருகே குனிந்தார். அவர் காதில் அவன் எதையோ சத்தமில்லாமல் சொல்ல அவர் அங்கிருந்து கண்ணன் இருக்கும் இடத்தை நோக்கி சென்று அவனை கையோடு வீரராகவனிடம் அழைத்து வந்தார்.

அவனைப் பார்த்து “சி மிஸ்டர்” என்று நிறுத்திய அவனிடம் “கண்ணன்” என்று தன் பெயரைக் கூறினான் கண்ணன். “நல்ல பேரு தா அதே மாதிரி நீ நல்லா இருக்கணும்னா இதோ இங்க நிக்கிறாங்களே இந்த ரஞ்சிதாவ இனிமே நீ எந்த தொந்தரவூ பண்ணக் கூடாது ஏன்னா ஷீ இஸ் மை ஃப்யூச்சர் வைஃப்” என்று கூறிவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நடந்து சென்றான் வீரராகவன் அவனுடைய பின்னால் அவனுடைய உதவியாளரும் சென்றார்.

அவன் கூறிவிட்டுச் சென்ற தோரணையைப் பார்த்த கண்ணன் சற்று அதிர்ந்து தான் போனான் என்ன செய்வது என்று தெரியாமல் சில வினாடிகள் திகைத்து நின்ற கண்ணன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான். என்ன சொல்லப் போகிறானோ என்று பரிதவித்துக் கொண்டிருந்த ரஞ்சிதாவும் அவன் கூறிய பதிலில் அசைவில்லாமல் நின்றிருந்தாள்.

எதுவும் பேசாம் கண்ணன் சென்று விட்டதைப் பார்த்த ஐஸ்வர்யா “ஏய் ஓ ஆளு சூப்பர் டீ நா நெனச்சு கூட பாக்கல இவர் கிட்ட இருந்து இப்படி ஒரு பதில் வரும்னு” என்று துள்ளி குதித்துக் கொண்டு ஆனந்தத்தில் ரஞ்சிதாவை பிடித்து உலுக்கினாள். ஒரு வழியாக தன்னுடைய பெரிய பிரச்சனை தீர்ந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் ரஞ்சிதாவினுடைய முகத்தில் புன்னகை மலர்ந்தது.

உணவகத்தில் இருந்து காரில் பயணித்து தன்னுடைய அலுவலகத்தை வந்தடைந்த வீரராகவன் அலுவலக வேலைகளை முடிக்கும் ஒரு விரைப்புடன் உள்ளே நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் வரவேற்பறையை கடந்து செல்லும் போது வரவேற்பாளர் இவனுக்கு காலை வணக்கத்தைக் கூற அங்கே ஒரு பெண் நின்று ” இதெல்லா கொஞ்சோ கூட சரியில்ல மேடம் எங்க உங்க எம்.டி அவர கூப்புடுங்க நா அவர்கிட்ட பேசணூ” என்று சத்தமாக வரவேற்பாளரிடம் கத்திக் கொண்டிருந்தது  அவனுடைய காதில் விழுந்தது.

அப்படியே நின்று சட்டென திரும்பிய அவன் “லதா” என்று வரவேற்பாளருடைய பெயரை சத்தமாக கூப்பிட்டான். இதைக் கேட்டு அந்த இடத்திற்கு ஓடி வந்த லதா “எஸ் சார்” என்று பணிவுடன் நின்றார். “அந்த லேடிக்கு என்ன வேணுமா? எதுக்காக சத்தோ போட்டுட்டு இருக்காங்க” .

“பெரிய எம்.டி சார் அவங்கள நம்ம கம்பெனியில லோகோ டிசைனரா சேர சொல்லி அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்து இருந்தாரா ஆனா அதுல மனோ சார் கம்பெனி சீல் இருக்கு சார். அதுவூ இல்லாம லோகோ டிசைனர் வேகன்டுக்கு நேத்தே டிபார்ட்மெண்ட்ல இருந்து ஆள் எடுத்துட்டதா சொன்னாங்க வேகண்ட் இல்லன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாங்க சார்” .

“அவங்கள இங்க கூப்பிடுங்க” என்று செல்வராகவன் கூற லதா அந்த பெண்ணிடம் சென்று “சார் ஒங்கள கூப்புட்டுறாங்க” என்று அவனிடம் அழைத்து வந்தாள். சுடிதார் அணிந்து நேர்த்தியாக வாரப்பட்ட தலையில் ஒரு ரோஜாவை வைத்து நெற்றியில் சிறு கீற்றளவுக்கு குங்குமம் இட்டு அதன் கீழ் சிறிய கருப்பு நிற பொட்டை வைத்து அழகாக பவுடர் பூசி இருந்தாள் வித்யா.

அவளைப் பார்த்த வீரராகவன் என்ன ‘காலேஜ் ஸ்டூடென்ட்டா? ” என்று கேட்டான்.  “இல்ல சார் மனோகர் சார் கம்பெனியில லோகோ டிசைனரா வொர்க் பண்ணீட்டு இருந்தே” ,  “அப்றோ எதுக்கு இங்க வந்தீங்க” ,  “போன வாரோ எங்க ஆபீஸ்க்கு வந்த செல்வம் சார் தா என்னோட லோகோ டிசைன் பாத்துட்டு நீ எங்க கம்பெனில வந்து ஜாயின் பண்ணுமான்னு சொல்லி எனக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தாரு” என்று அப்பாயின்மென்ட் ஆர்டரை அவனின் முன்பு நீட்டிய வித்யா “நம்பிக்கை இல்லைனா நீங்களே செல்வம் சாருக்கு போன் பண்ணி கேட்டுப் பாருங்க” என்று தன் தரப்பு நியாயத்தை கூறினாள்.

அந்த கடிதத்தை வாங்கிப்பார்த்த வீரராகவன் “அப்பாயின்மென்ட் ஆர்டர் எல்லா சரிதா ஆனா அந்த வேகன்ஸ்க்கு நேத்து ஆள் எடுத்தாச்சு வேற ஆள் ஏதாவது தேவைப்பட்டா கூப்பிட்டு அனுப்புறே ஒங்க ரெஸ்யூம ரிசப்ஷன்ல கொடுத்துட்டு போங்க” என்று அந்த அப்பாயின்மென்ட் லெட்டரை லதாவிடம் கொடுத்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

“ஒரு நிமிஷோ இந்த வேலைய செல்வம் சார் கிட்ட நானா ஒன்னூ கேட்டு வாங்கல அவரா தா என்னோட ஒர்க்க பாத்துட்டு என்கிட்ட வந்து ஒனக்கு இந்த வேலைய கொடுக்குறேன்னு இந்த லெட்டர கொடுத்தாரு” என்று வித்யா தன்னுடைய பதிலுக்கு பதில் கொடுக்கவும் சட்டென வீரராகவனுக்கு கோபம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது.

திரும்பி அவளிடம் வந்த அவன் “ஏ அப்பா தா ஒனக்கு வேல தர்றேனு சொல்லி இருக்காரு நா ஒத்துக்குறே அத நா இல்லன்னு சொல்லல நா அந்த வேகன்டுக்கு நேத்தே ஆள் எடுத்துட்டே இந்த அப்பாயின்மென்ட் லெட்டர அவர் கொடுத்து ரெண்டு நாள் ஆச்சு ரெண்டு நாளா வராம இருந்தது ஒன்னோட தப்பு” என்று சத்தமாக கூறினான்.

“சார் நா ஊருக்கு போய் எ அம்மாவ பாத்துட்டு வர்றதுக்கு கொஞ்சோ லேட் ஆயிடுச்சு சார்” ,  “ஒன்னோட சொந்தக்கத சோகக்கதைய கேட்கல்லா எனக்கு நேரமில்ல வேலன்னு வரும் போது டைம் ரொம்ப முக்கியோ வேல கெடைக்கலையேன்னு எவ்ளோ பேரு அலஞ்சுட்டு இருக்கா அப்பாயின்மென்ட் ஆர்டர் கெடச்ச ஒடனே நீ ஆபீஸ்க்கு வந்து இருக்கணூ லேட் பண்ணது உன்னோட தப்பு” .

“ஏ தப்புதா ஒத்துக்குறே அதுக்காக கொடுத்த அப்பாயின்மென்ட் ஆர்டர்  செல்லாதுன்னு நீங்க எப்படி சொல்ல முடியூ? செல்வம் சார் கிட்ட கேளுங்க?” என்று எதிர்வாதம் செய்தாள் வித்யா.

இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற வீர் “ஏய் உன்ன” என்று கத்த அவன் அருகில் வேகமாக வந்தா அவனுடைய உதவியாளர் அவனுடைய தோள்பட்டையைப் பிடித்து அழுத்தி “சார் எதா இருந்தாலூ உள்ள போய் பேசிக்கலா எல்லாரூ பாக்குறாங்க பாருங்க வாங்க சார்” என்று அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவனுடைய அறைக்குச் சென்றார்.

“அவ எப்டி பேசுறா பாருங்க ராமு” என்று உதவியாளரிடம் கடிந்து கொண்டான் வீரராகவன்.  “அந்தப் பொண்ணு பேசுரது நியாயம் இல்லன்னாலூ நீங்க முன்னாடி நின்னு சத்தம் போட்ட அது நல்லா இருக்காதுல்ல சார் அதனால தா உங்கள உள்ள கூட்டிட்டு வந்தே” என்று அவனை சமாதானப்படுத்த முயன்றார்  உதவியாளர் ராமு. அவர் கூறுவதில் உள்ள நியாயத்தை உணர்ந்த அவன் தன்னுடைய கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தான்.

ராமு வேகமாக தொலைபேசியை எடுத்து “சீக்கிரமா எம்.டி சாருக்கு ஒரு டீ கொண்டு வா” என்று ஆணையிட்டார். சிறிது நேரத்தில் அறையின் கதவு தட்டப்பட “எஸ் கம்மின்” என்று ஆர்டர் கொடுத்தான் வீர். தன்னை அமைதிப்படுத்த தேநீர் வரும் என்று நினைத்தவனுக்கு புயல் அடித்தது போல் அங்கே வித்யா வந்து நின்றாள்.

அவளைக் கண்டவுடன் “மொதல்ல அவள வெளிய போக சொல்லுங்க” என்று கத்த ஆரம்பித்தான் வீர். அவனுடைய கோபத்தை உணர்ந்து கொண்ட ராமு “ஏமா ஒனக்கு எத்தன தடவ சொன்னாலூ புரியாதா போமா மொதல்ல வெளிய” என்று அவளுடைய கையைப் பிடித்து அறையை விட்டு வெளியே இழுத்து வந்தார்.

வித்யா திமிறிக் கொண்டு “மொதல்ல கைய எடுங்க சார் செல்வா சார் தா எனக்கு வேல கொடுக்குறேனு சொன்னாரு மொதல்ல அவர கூப்புடுங்க நா அவர்கிட்ட பேசிக்கிறே” . “ஒனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதாமா எதுக்கு திரும்பத் திரும்ப பிரச்சன பண்ணீட்டு இருக்க வேலக்கி ஆள் சேத்தாச்சுன்னு சொன்னா வேற எடத்த பாரே” ,  “நீங்க செல்வா சார மட்டூ கூப்புடுங்க அவர் வந்து எனக்கு வேல இல்லன்னு சொல்லட்டூ நா இங்கயிருந்து போயிட்றே” என்று பிடிமாக நின்றாள் வித்யா.

இவளை இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்ட ராமு வீர் உடைய அறைக்குள் சென்று “சார் அப்பாவ கொஞ்சோ வர சொல்லுங்க சார்” என்று மெதுவாக கூறினார். “என்ன அவ கூப்புட சொன்னாளா அவ கூப்டா எங்க அப்பா ஒடனே வந்துரணுமா என்ன நினைச்சிட்டு இருக்கா அவ நீங்க என்ன அவளோட சேந்து அவளுக்கு ஜால்ரா போட்டுட்டு இருக்கீங்களா அவள மொதல்ல கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளுங்க உங்களால முடியலன்னா சொல்லுங்க நா அவ கழுத்தப் புடிச்சு வெளிய தள்றே” கோபத்தில் அவன் உள்ளே கத்தியது வெளியே நின்ற வித்தியாவுக்கு நன்றாக கேட்டது.

கதவை வேகமாகத் திறந்து கொண்டு உள்ளே வந்த வித்யா “தள்ளுவிங்க தள்ளுவிங்க ஏற்கனவே கைய புடிச்சு இழுத்து வெளிய விட்டு இருக்கீங்க இதுக்குமேல கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளுவிங்களோ நான் போலீஸ் கிட்ட போவே” என்று அவளும் கோபமாக கத்த ஆரம்பித்தாள்.

“போ நீ எங்க வேணாலூ போ என்ன பிரச்சன வந்தாலூ அத நா பாத்துக்குறே ஃபர்ஸ்ட்டு நீ இங்கயிருந்து கெளம்பு”  என்று பொறுமை இழந்து தன்னுடைய இருக்கையில் இருந்து எழ முயற்சித்த வீரராகவனை “சார் வேணா சார்” என்று அமுக்கி உட்கார வைத்தார் ராமு.

“அம்மா நீ கொஞ்சோ வெளிய போமா சொன்னா புரிஞ்சுக்கம்மா பிரச்சனய இதுக்கு மேல பெருசு பண்ணாதம்மா போய் வெளிய நில்லும்மா” என்று ராமுவும் சேர்ந்து கத்த திமிரிக் கொண்டிருந்த வீரை பார்த்தவள் இதற்கு மேல் இங்கு நின்றால் இவன் அடித்தாலும் அடித்து விடுவான் என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்து நின்றாள் வித்யா.

“கோச்சுக்காதீங்க சார் பையனா இருந்தா கூட நாலு சாத்து சாத்தி வெளிய அனுப்ச்சிடலா இது பொம்பள புள்ளையா போயிடுச்சு என்னால எதுவூ செய்ய முடியல சார் அப்பா வந்து சொன்னா போயிற்றேனு சொல்லுது சார் கோபப்படாம அப்பாவ கொஞ்சோ வர சொல்லுங்க சார்” என்று கனிவாக கூறினார் உதவியாளர் ராமு.

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam