Visitors have accessed this post 704 times.

பாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

Visitors have accessed this post 704 times.

     முன்னொரு காலத்தில் சந்திரபுரியை மகேந்திர வர்மன் ஆண்டு வந்தான்.அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சதாகாலமும் மதுவுக்கும், மங்கைக்கும் அடிமையாக இருந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட தனது பரிவாரங்களோடு வந்தான். அவன் போறாத வேளை ஒரு மிருகமும் அகப்படவில்லை. அவன் சோர்ந்து போய் ஒரு மர நிழலில் ஒதுங்கிய போது அருகில் ஒரு குடில் இருக்கக் கண்டான். அங்கே ஒரு முனிவர் தவத்தில் இருப்பதைக் கண்டான். எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தபடி தூங்கும் இந்த கிழவனை சும்மா விடக்கூடாது என்றெண்ணி தனது பரிவாரங்களுடன் அவரருகில் சென்றான்.

     சேனைகள் ஆரவாரத்தால் முனிவர் தவம் கலைந்து கண் திறந்த போது அங்கே மன்னர் இருப்பதைக் கண்டார். மன்னா தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். உம்மைப் போன்ற வேலை செய்யாத வெட்டி வேதாந்திகளிடம் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது? நீண்டகாலம் விடை தெரியாத கேள்வி ஒன்று என்னிடம் உள்ளது, ஒருவரும் இதற்கு பதில் அளிக்கவில்லை, உங்களிடமாவது தீர்வு கிடைக்குமா என்று நாடி வந்தேன் என்றார்.
     மன்னரை ஏற்கனவே முனிவர் அறிந்திருந்ததால் மன்னா தங்களுக்கு என்ன சந்தேகம் என்று வினவினார். மன்னர் கேட்டார் “பாவம் புண்ணியம் என்பது உண்மையா, பொய்யா? முனிவரும் அது அவரவர் செயல்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுதிறது. உதாரணத்திற்கு உங்கள் செயலால் யாருக்கேனும் நன்மை விளைந்தால் அது புண்ணியமாகவும், தீமை விளைந்தால் அது பாவமாகவும் கருதப்படும் என்றார்.
     மன்னர் புன்சிரிப்புடன் மந்திரியாரைப் பார்த்தார், மந்திரியாரும் மாட்டினான் கிழவன் என்றெண்ணி ” பெரியவரே அதில்தான் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது? நான் ஒரு காட்சியைக் கண்டேன், இதில் எது பாவம் எது புண்ணியம் என்பதை விளக்குகிறீர்களா? என்றார், முனிவரும் சம்மதித்தார். “பெரியவரே நான் ஒருநாள் தோட்டத்தில் உலா வருகையில் பசியோடு உயிருக்குப் போராடும் நிலையில் ஒரு கிழடுப் பாம்பைக் கண்டேன், அது தனது உயிருக்குப் போராடியபோது ஏதேச்சையாக அதன் வாயில் ஒரு தவளை சிக்கியது, பாம்பு தவளையை விழுங்க முயற்சி செய்கிறது, தவளை தனது கடைசி மூச்சுக்காக போராடுகிறது, இப்பொழுது நான் தவளயை காப்பாற்றினால் பாம்பு இறந்து விடும், பாம்பைக் காப்பாற்றினால் தவளை இறந்து விடும், இங்கு எது பாவம் எது புண்ணியம் என்று கேட்டார்.
     முனிவர் மவுணம் சாதித்தார், பிறகு பொறுமையுடன் எனக்குத் தெரியவில்லை என்றார், பக்கத்தில் இருந்த சேனாதிபதி, கிழவன் செத்தான் என்றெண்ணி ஐயா எனக்கொரு சிறிய சந்தேகம், தங்களிடம் கேட்கலாமா? என்றான். முனிவரும் கேளுங்கள் என்றார். நான் நகர்வலம் வருகையில் ஒரு நிலக் குத்தகைக்காரனை அரசாங்க வீரன் வதைக்கக் கண்டேன், அவனோ வலி தாங்காமல் என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான். நான் விசாரித்தபோது அவன்  நில அறுவடைக் காண வரி செலுத்தவில்லை என்றும் கேட்டால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதாக சொல்கிறான். இப்பொழுது குத்தகைக்காரனைக் காப்பாற்றினால் அரசு சட்டத்திற்கு மீறின குற்றத்திற்கு ஆளாவீர்கள், வீரனைக் காப்பாற்றினால், குத்தகைக்காரன் மடிந்து அவனைக் காப்பாற்றாத சூழ்நிலைக்கும் தள்ளப்படுவீர்கள். இதில் எது பாவம்? எது புண்ணியம்? இப்பொழுது முனிவரிடம் நீண்ட மவுணம். எனக்கு இதற்கும் விடை தெரியவில்லை என்றார்.மன்னரால்  பொறுக்க முடியவில்லை. அட கிழட்டுப் பயலே, எதுவுமே தெரியாத நீ இத்தனை வருடமாக சாமியார் வேடமிட்டுத் திரிகிறாயா? என்று வாளை உருவினான். முனிவரும் மன்னா சற்றுப் பொறுங்கள், என்னைப் படைத்தவனிடம் இதற்கான விளக்கத்தைக் கேட்டிருக்கிறேன், விரைவில் பதில் வந்துவிடும் என்றார்.
     சிறிது நேரத்தில் அங்கே ஒரு பறக்கும் ரதம் ஒன்று கீழிறங்கியது. மன்னர் மிரண்டு போனார். வாருங்கள் நாம் படைத்தவனிடமே விடை கேட்போமென்றார் முனிவர். மன்னரும், மந்திரியாரும் சேனாதிபதியும் அதில் ஏறிக் கொண்டனர். ரதமும் பறக்க ஆரம்பித்தது. ரதம் அடர்ந்த காட்டைக் கடந்தபோது ஒரு காட்சியைக் கண்டனர். பிரசவ வலியில் துடித்த ஒரு மான் குட்டிகளை ஈன்றது, நீண்டகால வலியில் இருந்தமையால், தாயால் குட்டிகளுக்கு ஆகாரம் கொடுக்க இயலாமல் போனது, குட்டிகள் பசியால் உயிருக்குப் போராடின. தாய் தனது வலியைப் பொருட்படுத்தாமல் உணவு தேடிப் புறப்பட்டது, வழியில் ஒரு புலியைக் கண்டது, புலி மானைக் கொன்றது. தனது குட்டிகளுக்கு இறையாக மானின் கழுத்தைக் கவ்வி இழுத்துச் சென்றது. முனிவர் இக் காட்சியைக் காண்பித்து மந்திரியாரே இதில் தனது குட்டிகளை காப்பாற்ற வெளியேறி இறை தேடிய மானை புலி கொன்றது, இதனால் மான்குட்டிகளும் ஆகாரமின்றி சாகும் நிலையில் உள்ளன. புலி தனது குட்டிகளுக்கு உணவிட்டது, இது பாவமா? புண்ணியமா? என்றார். இதிலென்ன சந்தேகம் முனிவரே, தனது குட்டிகள் ஆகாரமின்றி சாவதைத் தடுக்க வந்த மானை புலி வேட்டையாடியது பாவமே என்றார்.
     உடனே மந்திரியார் ரதத்தில் நின்ற இடம் பிளந்து ஆகாயத்தில் இருந்து ஐயோ வென அலறி தலை குப்புற விழுந்தார். மன்னரும் சேனாதிபதியும் அதிர்ந்து போனார்கள். இப்பொழுது சேனாதிபதியைப் பார்த்து முனிவர் கேட்டார், சேனாதிபதி வெலவெலத்துப் போய், முனிவரே, புலி தனது குட்டிகளுக்கு உணவளித்தது, புலியின் பசிக்காகத்தானே மான் படைக்கப் பட்டது வலிமையான விலங்கு பலமற்ற விலங்கை வேட்டையாடி உண்பது இயற்கைதானே, இது பாவமல்ல புண்ணியமே என்றான். உடனே ரதம் வாயைப் பிளந்து சேனாதிபதியைக் கீழே தள்ளியது. சேனாதிபதியும் தலைகுப்புற காட்டில் விழுந்தான்.
     இதே கேள்வியை முனிவர் மன்னரிடம் கேட்டார் மன்னர் நடுநடுங்கிப் போனார். மன்னருக்கு முனிவர் நம்மிடம் மாட்டிக் கொள்ளவில்லை, நாம்தான் முனிவரிடம் மாட்டிக் கொண்டோம் என்ற விஷயம் புரிந்தது. மன்னர் முனிவரிடம் சரணடைந்தார், ஐயா முனிவரே சத்தியமாக எனக்குத் தெரியவில்லை, தங்களை சோதித்தமைக்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று அவரை மண்டியிட்டு வணங்கினான். ரதமும் கீழிறங்கியது.
      முனிவரும் நானும் இதைத் தானே உங்களிடம் சொன்னேன் என்றார். மன்னர் இறுதியாக தாங்கள் எனக்கு புகட்டிய பாடம் என்ன? உண்மையில் பாவம் புண்ணியம் என்பது உண்டா எனக் கேட்டான். முனிவர் புன்சிரிப்புடன் என்னைப் படைத்த இறைவனே இதற்கு விடை சொல்லாதபோது, பாவ புண்ணியத்தைக் கணக்கிட நான் யார்? மன்னா நீர் பிறப்புக்கு முன்னால் எங்கே இருந்தீர்? இறப்புக்கு பின்னால் எங்கு செல்வீர்? என்று கேட்டார். ஐயா இதனை நான் அறிந்திருக்கவில்லை என்றார் மன்னர். மன்னா நமது ஆதி எது அந்தம் எது என்பதை அறியாத பூமியின் வழிப்போக்கர்களாகிய நாம் இறைவனின் கணக்கைப் புரிந்து கொள்ள இயலுமா? என்று கேட்டார். மன்னர் மனமுடந்து தனது அறியாமையை நினைத்து மனம் வெதும்பி இறை பக்தரானார். மந்திரியாரும் சேனாதிபதியும் பத்திரமாக அவரிடம் திரும்பி வந்தனர். நல்லது நாம் மீண்டும் இன்னொறு தலைப்பில் சந்திக்கலாமா…வாழ்க வளமுடன்.

1 thought on “பாவம் புண்ணியம் என்பது உண்மையா? பொய்யா?

Leave a Comment

Write and Earn with Pazhagalaam