Visitors have accessed this post 716 times.

யார் உலகின் உண்மையான கடவுள்?

Visitors have accessed this post 716 times.

     நாம் நமது பாரம்பரியப் பழக்கத்தின் காரணமாக நம்மிடம் யார் உண்மையான கடவுள் என்று கேட்டால் நாம் உடனே என்னுடைய கடவுள்தான் உண்மையான கடவுள் என்று பெருமை பீற்றிக் கொள்கிறோம். அதற்கு நமது வேதங்களையும், புராணங்களையும், முன்னோர்களின் புனித நூல்களையும் உதாரணமாக குறிப்பிடுகிறோம்.

     நாம் கடவுளை உலகைப் படைத்தவராகவும், நம் உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாகவும் உருவகம் செய்கிறோம். நாம் கடவுளைத் அனைவருக்கும் தந்தையாக கருதினாலும், நமது பிறப்புக்கு காரணமானவரையே தந்தை என்று அழைக்கிறோம்
     கடவுளே அனைவருக்கும் தந்தையாக இருந்தாலும் நமது இரத்த சம்பந்த உறவுகளையே உரிமை கொண்டாடுகிறோம், இறைவன் அனைவரையும் அரவணைக்க வேண்டும் என்பதற்காக நமக்கெல்லாம் தந்தை என்கிற உறவைக் கொடுத்திருக்கிறார்.நாம் நமது தந்தையை நமது அண்டை வீட்டாரின் தந்தை என்றோ, அந்த ஊருக்கே தந்தை என்றோ அழைப்பது இல்லை, ஏனெனில் அது குடும்பம் சார்ந்த அந்தரங்க உறவு. அதுபோல இறைவனுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் பந்தம் அந்தரங்கமானது.
     ஒவ்வொரு மனிதனும் அவன் மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், முன்னோர் வழிகாட்டுதலுக்கேற்ப கடவுளை வழிபடுகிறான். அது அவனது அந்தரங்கமான உறவு. நான் எனது தந்தையை என் நண்பனின் தந்தை என்று கூறினால் அவன் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்பான். அதுபோல என் கடவுள்தான் உனக்கும் கடவுள் என்று யாராவது கூறினால், நான் அவர்களை எவ்வாறு அழைப்பது? இதைவிட கொடுமை என்னெவென்றால், என் தந்தை ஒருவரே உண்மையானவர், அவர் ஒருவர் மட்டும்தான் கடவுள், மற்றவர்கள் அனைவரும் இந்த உலகத்தின் எதிரிகள் என்று வாதிட்டால் அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தோன்றும்?
     இவ்வாறு ஒரு நபர் என்னிடம் காரசாரமாக வாதிட்டார், நான் அவரிடம் அமைதியாக என் மனைவி பத்தினி என்றேன், அவரோ உன் மனைவி பத்தினி என்பதை எனக்கு ஏன் அறிவிப்பு செய்கிறாய் என்றார், நான் சொன்னேன், என் மனைவி மட்டும்தான் இந்த உலகத்தில் பத்தினி என்றேன். அவர் கடும் கோபத்திற்கு உள்ளானார், உன் மனைவி பத்தினி என்பது உன் தனிப்பட்ட விஷயம், அதற்காக மற்ற பெண்கள் பத்தினிகள் அல்ல என்று எவ்வாறு சொல்வாய்? என்றார். நான் பொறுமையாக, நானும் அதைத்தான் சொல்கிறேன், உன் கடவுள் உண்மையானவர் என்பது உனது தனிப்பட்ட விஷயம், ஆனால் உலகத்திற்கே அவர் ஒருவர்தான் கடவுள் என்று எவ்வாறு அறிவிப்பாய்? என்றேன். அவர் வாயைத் திறக்கவில்லை. அதற்குப் பிறகு அவர் என்னைப் பார்த்தாலே பார்க்காதது போல் திரும்பிக் கொண்டு நழுவி விடுகிறார்.
     நமக்கு தாஜ்மகால் என்றால் என்ன ஞாபகம் வருகிறது? அது காதலரின் சின்னம், தன் காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய நினைவுச்சின்னம், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று. அது உலகிற்கு ஒரு கணவனின் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. நாம் மதங்களைத் தாண்டி அனைவரும் கொண்டாடுகிறோம். மதங்களின் பெயரால் மனிதர்களிடம் பிரிவினையைத் தூண்டும் நிலை ஏற்படும் போது, நமது அன்பை வெளிப்படுத்த மதம் நமக்கு தடையானால், நாம் நமது மதத்தையும் விட்டுக் கொடுப்போம். மனித நேயம் காப்போம். மதம் என்பது ஒவ்வொருக்கும் அந்தரங்கமானது. அதனை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் அந்தரங்கமும் அவரவருக்கு புனிதமானதுதானே. மீண்டும் ஒரு தலைப்பில் சந்திப்போமா…வாழ்க வளமுடன்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam