Visitors have accessed this post 700 times.

உண்மையான தலைவன் (SUPER HERO) யார்?

Visitors have accessed this post 700 times.

     நாம் சினிமாவில் 50 பேர்களை ஒரே அடியில் வீழ்த்தும் ஹீரோவை சூப்பர் ஸ்டார் என்கிறோம், ஒரு 500 பேர்களையாவது பறந்து சென்று தாக்கும் ஹீரோவை ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் மேன் என்கிறார்கள். ஆனால் நான் இன்றுவரை ரசிக்கும் ஒரு பிரமாண்ட  ஹீரோ, எனக்குப் பிடித்த உலகின் ஒரே ஹீரோ. இவருடைய ஆயுதத்தை வெற்றி கொள்ள இதுவரை ஒருவராலும் முடியவில்லை. இவரிடம் இருந்த அந்த ஆயுதம் அன்பு. எத்தனையோ கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட அவர் பிறந்த இடம் ஒரு சாதாரண மாட்டுத் தொழுவம், ஒரு சாதாரண, ஆடம்பரமில்லாத, ஒரு கூலிக்காரனின் வாழ்க்கை, அவர் பால்ய  வயதில் எதையும் பெரிதாக அனுபவித்திருக்க மாட்டார். அவர் தனக்காக எதையும் தேடவில்லை, ஆனால் தன்னை சுற்றியுள்ள மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கு காலத்தை செலவிட்டார். அவர் உலகத்துக்கே வழிகாட்டியாக இருந்தாலும் ஒரு சாதாரண, காட்டில் சுற்றித் திரியும் இறையறிவுப்பு செய்கிற மனிதனிடம் தீட்சை பெறுகிறார். இவர் இறைவனை தனது தகப்பனாக குறிப்பிடுகிறார். நான் அவரது சார்பாக, அவரிடத்தில் இருந்து உங்களுக்கு வழிகாட்ட வந்திருக்கிறேன் என்கிறார். தனக்கு இறைவன் சக்தி கொடுத்திருக்கிறார் என்றும், அதனை தனது சுய நலத்திற்காகவோ, அவரை பரிசோதித்துப் பார்ப்பதற்காகவோ, செல்வங்களை அடைவதற்கோ பயன் படுத்துதல் கூடாது என்கிறார்.

     தனது மக்களிடம் சென்று தனது தந்தையின் ராஜ்யம் வரப் போவதாகவும், அதற்கு உங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள், தகுதி படுத்திக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார். அந்த ஊர் மக்கள் “நம்மில் ஒருவன் திடீர் என்று காணாமற்போய், வாலிப வயதில் மீண்டும் வந்து, நமக்கே உபதேசம் செய்கிறானே என்று ஆச்சர்யப்பட்டார்கள். அவர் அதற்குள் 12 சீடர்களை தயார் படுத்தி ஊர் ஊராகச் சென்று, அவர்களுடைய கோவில்களிலேயே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.

     இவர் செல்லுமிடமெல்லாம் அற்புதங்கள் நடக்கிறது. முதன் முதலில் இவரது தாயார் இவரை ஒரு திருமண விருந்துக்கு அழைத்துச் செல்கிறார், அங்கே, திராட்சை ஜூஸ் காலியாகிவிடுகிறது, தாயார் இவரிடம் முறையிட்டவுடன், இவரால் ஜூஸ் பலமடங்கு பெருகுகிறது. இவர் பிரச்சாரம் செய்யும் இடங்களிலும், கிடைத்த சில ரொட்டித் துண்டுகளும், மீன்களும் பல மடங்காக பெருகுகின்றன.இவர் வார்த்தைகளை நம்பும் குருடர்கள் பார்வையடைகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மனநலம் குன்றியோர் குணமடைகிறார்கள், நோய்வாய்ப் பட்டோர்கள் குணமடைகிறார்கள், இறந்த மனிதன் கல்லறையில் இருந்து மீண்டும் உயிருடன் வருகிறான், பேய் பிடித்தோரை குணப்படுத்துகிறார், ஆனால் அந்த பேய்களும், நாங்கள் எங்கே செல்வது என்று கேட்கும்போது, அவைகளுக்கும் புகலிடம் தருகிறார். நமது ஹீரோக்கள் தாயிடம் கருணையோடு நடந்து கொள்வார்கள், ஆனால் பேய்களிடமும் கருணையோடு நடந்து கொண்ட ஒரே ஹீரோ நம்ம ஹீரோதான்.

     ஒவ்வொரு கதையிலும் வில்லன்கள் உண்டு, நம்ம கதையில் வரும் வில்லன்கள் அந்தந்த நாட்டின் பழமை வாதம் செய்து மக்களையும் அரசனையும் தன் வசப்படுத்திக் கொண்ட குருமார்கள். அவர்கள் சொல்கிறவர்களாக இருக்கிறார்கள், ஆனால் நம்ம ஹீரோ செய்கிறவராக இருக்கிறார். இதனால் இவர்கள் செல்வாக்கு படிப்படியாக குறைந்து, ஹீரோவுக்கு மவுசு கூடிவிடுகிறது. அடடா ஹீரோவை வளரவிட்டால் நமது சோத்துக்கே சுண்ணாப்படித்துவிடுவான், என்று நினைத்து அவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அவரது பண்ணிரன்டு சீடர்களில் ஒருவன் பணத்துக்கு ஆசைப்பட்டு இவரைக் காட்டிக் கொடுக்கிறான். இவரை அந்த நாட்டு அரசனிடம் இழுத்துச் செல்கிறார்கள், அரசனோ இவரிடம் எந்த குற்றமும் செய்ததாக எனக்குத் தெரியவில்லையே என்கிறார், ஆனால் இவருக்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும் என்று அடம்பிடிக்க, பண்டிகையை முன்னிட்டு ஒருவரை விடுதலை செய்யலாம் என்று வேருருவரை விடுதலை செய்ய மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் தண்டனை கொடுக்கிறார். இவர்கள் நமது ஹீரோவை அடித்து, காரித்துப்பி, சவுக்கால் விளாசி, முள்கிரீடம் வைத்து, சிலுவை மரத்தை இழுக்க வைத்து, கைகளில், கால்களில் ஆணியால் அடித்து மரத்தில் தொங்க விட்டு விட்டார்கள்.  ஆனால் அப்பொழுதும் அவர் இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை எனக்காக மன்னியுங்கள் அப்பா என்று தன்னை கொல்பவர்களையும் மன்னித்து, அவர்களுக்காக தன் இறைவனிடமும் மன்னித்துவிடும் படிக்கு கேட்கிறார். கடைசியில் இறந்து விடுகிறார். இவர் சடலம் யாருக்கும் கிடைக்கவில்லை. ஆனால் மூன்றாம் நாளுக்குப் பிறகு மீண்டும் தன் சீடர்களுக்கு காட்சி தருகிறார், பரிசுத்த ஆவியின் மூலம் கிறிஸ்துவை தனது சீடர்கள் மூலம் ஸ்தாபனம் செய்கிறார்.

     இவர் கர்த்தராகிய ஏசு கிறிஸ்துதான் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் இவரை உலகின் ஒரே சூப்பர் ஹீரோவாக நான் நினைப்பதற்குக் காரணம்

1. இவர் தனக்கான எந்த சுகங்களையும் தேடவில்லை

2. இவர் அனைவரிடத்திலும், தன் எதிரிகளிடத்திலும், ஏன், கண்ணுக்குத் தெரியாத பேய், பிசாசுகளிடத்திலும் கருணையாய் இருந்தார்.

3.இவர் எந்த அரசனையும் எதிர்க்கவில்லை, உன் அரசனுடைய வரிப் பணத்தை அரசனுக்கு கொடு, உன் இருதயத்தை இறைவனிடம் கொடு என்றார்.

4.இவர் யாரையும் எதிர்த்துப் போராடவில்லை, தன் உயிர் பறி போய்விடும் என்று தெரிந்தும், மக்களுக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

5.இவர் தன் வாழ்நாளில் எதற்கும் பயப்படவில்லை, ஆனால் அதே நேரம் எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டார்.

6. இவர் குழந்தைகளை விரும்பினார், இறைவனுடைய ராஜ்யம் இவர்களுக்கு சொந்தமானது என்றார்.

7. கோவில்கள் வியாபாரக் கூடங்களாக நடத்தப்படுவதைக் கண்டித்தார்.

8.அக்காலத்தில் விபசாரிகளை கல்லால் எறிந்து கொல்லும் வழக்கம் இருந்தது. இவரிடம் ஒரு விபச்சாரி தன்னை காப்பாற்றும்படி சரணடைந்த போது, எவனொருவன் எந்த பாவமும் செய்யவில்லையோ அவன் முதல் கல்லை எடுத்து இந்தப் பெண்ணின் மேல் வீசட்டும் என்றார். அங்கே சுற்றி இருந்த அத்தனை பேரிடமும் கற்கள் இருந்தன, ஆனால்  முதல் கல் வீச முயன்ற ஒவ்வொருவன் முன்னாலும் அவன் செய்த பாவம்  வந்து நின்றது, அத்தனை பேர்களும் அவள் மேல் கல்லெரிய முடியாமல் கலைந்து சென்றனர்.

9. இதுவரை நாம் சீடர்கள், பக்தர்கள், சாமியார்கள் காலில் விழுந்துதான் கேள்விப்பட்டிருப்போம், ஆனால்  முதன் முறையாக ஏசு தன் சீடர்கள் காலை கழுவி சுத்தம் செய்தார், அதில் ஒருவன் தனைக் காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்தும், அவன் காலையும் சுத்தம் செய்தார்.

10.ஒருவன் தவறு செய்தால்தான் பாவம் வரும் என்பதில்லை, ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே நீ விபச்சாரம் செய்தவனாகிறாய், உன்னிடம் பாவம் வந்து சேர்ந்தது என்றார்.

       பாவம் எண்ணங்கள் மூலமாகவே சுலபமாக வந்து சேரும் என்பதை துல்லியமாக குறிப்பிட்ட இவர் தன் முடிவு காலம் வரும் வரை, எந்தப் பாவமும் செய்யாமல், தன்னை சுற்றி பாவம் செய்தவர்களையும் மன்னித்து கருணையோடு நடந்து கொண்டதால், இவரே என் இந்த உலகின் சூப்பர் ஹீரோவாக என் கண்ணுக்குத் தெரிகிறார்.

நல்லது, நாம் மீண்டும் வேரொரு தலைப்பில் சந்திப்போமா….வாழ்க வளமுடன்   

Leave a Comment

Write and Earn with Pazhagalaam