கடவுள் என்பவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையா?

Visitors have accessed this post 330 times.

     கடலில் வாழும் மீனுக்கு திடீரன ஒரு சந்தேகம் தோன்றியது, உண்மையில் இந்தக் கடலில் யார் மிகுந்த பலசாலி என்பதை அறிய வேண்டும் என்று தோன்றியது. அது தன் அப்பா மீனிடம் சென்று அப்பா நம்ம கடலிலேயே யார் மிகுந்த பலசாலி என்று கேட்டது. நான் கடலில் பெரிய மீன்கள், முதலைகள், பாம்புகள் போன்ற பலவகையான உருவங்களைப் பார்த்திருக்கிறேன், அவை நம்மைவிட பலசாலிகள் என்றது. இவைகளில் யார் உயர்ந்தவர் என்று கேட்டது. அப்பா மீனும் இதற்கு விடை எனக்கு தெரியவில்லை என்றது.

     இதனை தன் நண்பனிடம் கேட்டது, அட போப்பா நம்ம சொந்தக்காரனுங்களையே ஏதோ ஒரு வலை வந்து தூக்கிட்டுப் போகுது, நேத்தைக்கு இருக்கிறவன், இன்னைக்கு இல்லாமல் போகிறான், வேலையைப் பார் என்றது. மீனுக்கோ இதைத் தெரிந்தே தீர வேண்டும் என்கிற ஆவலில் இருந்தது. ஒருநாள் ஒரு சுறாவை கண்டது, அதன் பற்களைக் கண்டு மிரண்டு போனது, பின்பு தைரியமாக அதனிடம் சென்று, நீங்கள்தான் இந்த கடலின் பலசாலியா? என்று கேட்டது. சுறாவோ தன்னிடம் பயமில்லாமல் கேள்வி கேட்ட மீனைக் கண்டு வியந்து, பொடியனே நீ திமிங்கலத்தைக் கண்டிருக்கிறாயா? என்றது, அந்த மீனும் இல்லை என்று தலையசைக்க, சுறா மீன் அதனை திமிங்கலத்திடம் அழைத்துச் சென்றது. மீனுக்கோ தான் கண்ட காட்சியை நம்ப முடியவில்லை, அந்த மீன் பிரமாண்டமான திமிங்கலத்தின் அருகில் சென்று வணங்கியது. தாங்கள்தான் இந்தக் கடலின் பலசாலியா? என்று கேட்டது.

     திமிங்கலமோ சோகமாக, “உருவத்தைக் கண்டு எடை போடாதே, என்னதான் உருவத்தில் நான் பெரியவனாக இருந்தாலும், என் பாட்டன் காலத்தில் இருந்தே ஒருவன் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. எவன் ஒருவன் மரணமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறானே அவனே பலசாலி”என்றது. அந்த மீனால் நம்ப முடியவில்லை உங்களை விட உயர்ந்தவன் யார் என்று கேட்டது, திமிங்கலமும் அதோ அந்த பாறைக் கடியில் ஒளிந்திருக்கும் கடல் ஆமை என்றது. மீனும் ஆமையைத் தேடிச் சென்றது.ஆனால் அங்கே ஆமையின் கூடுதான் இருந்தது, இங்கே யாராவது இருக்கிறீர்களா? என்று கேட்டது. ஆமை தன் கூட்டுக்குள் இருந்து இருந்து எட்டிப் பார்த்தது.
     அந்த மீனால் சிரிப்பை அடக்க முடியவில்லை, கடல் ஆமை கோபமாக ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறாய் என்று கேட்டது. மீனும்  மன்னித்துக் கொள்ளுங்கள், உங்களை கடலின் உயர்ந்த பலசாலி என்று அந்த திமிங்கலம் கூறியது, உங்கள் உருவத்தைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது என்றது. ஆமையும் அந்த திமிங்கலம் சொல்வது உண்மைதான், நான் சந்திக்கும் நான்காவது தலைமுறை இது, மூன்று தலைமுறைகளோடு நான் வாழ்ந்து இருக்கிறேன் என்றது. அப்படியானால் நீங்கள்தான் இந்தக் கடலின் மிக உயர்ந்த பலசாலியா? என்றது. ஆமையோ இல்லை நான் குறைந்தது 200 வருடமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்தத் தண்ணீர்தான் என்னை விட பலசாலி என்றது. மீனுக்கு தான் தண்ணீரில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிய முடியாததால், தண்ணீர் என்றால் என்ன? என்று கேட்டது. என் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே தண்ணீர் இங்குதான் இருக்கிறது, எங்களால் தண்ணீரிலும் வாழமுடியும், தரையிலும் வாழ முடியும், உன்னால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியுமாதலால் என்னால் உனக்கு புரியவைக்க முடியவிலை என்றது. மீண்டும் அந்த மீன் வற்புறுத்தியதால் அந்த ஆமை எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தது, மீனுக்கோ தண்ணீர் என்றால் என்னவென்று கடைசிவரை புரியவே இல்லை. அந்த ஆமையும் சலித்துப் போய்  “உனக்கு மரணம் வரும் நாள் தண்ணீர் என்றால் என்னவென்று புரிந்து கொள்வாய், போய்விடு என்று விரட்டி விட்டது.

     அந்த மீனும் தான் சந்திக்கும் அனைத்து மீன்களிடமும் தண்ணீர் என்றால் என்னவெண்று கேட்டது, ஒருவருக்கும் விடை தெரியவில்லை. வெறுத்துப் போன அந்த மீன் தன்னிடம் அந்த ஆமை பொய் சொல்லியதாக நினைத்துக் கொண்டு, ஆமையை அவதூறாகப் பேசி அனைவரிடமும் திட்டித் தீர்த்தது.

     ஒருநாள் கரையோர மனிதனின் தூண்டிலில் அந்த மீன் சிக்கியது. அவன் கடலில் இருந்து அந்த மீனை வெளியே எடுத்தபோது அது சுவாசத்திற்காக தவித்தது, அது தனது உயிர் பிரியும் வேளையில், ஆமை சொன்னது நினைவுக்கு வந்தது. தான் இருந்த உலகம் தண்ணீர் மயமானது என்றும், அந்தத் தண்ணீரால்தான் நாம் உயிர் வாழ்ந்திருக்கிறோம் என்றும், அந்தத் தண்ணீர்தான், கடலில் மிக உயர்ந்த பலசாலி என்றும் உணர்ந்தது. தான் ஆமையை இழித்துப் பேசியதற்காக வருத்தப்பட்டது. கடைசியாக இந்த கடலின் உயர்ந்த பலசாலி யார் என்பதை அறிந்து கொண்ட சந்தோஷத்துடன் இறந்து போனது.

     இப்படித்தான் மனிதர்கள் எந்த சக்தியால் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே, அதனை இழித்தும் பழித்தும் பேசி வருகிறார்கள். எப்படிப்பட்ட அகந்தையில் வாழும் மனிதனையும் மரணத்தின் மூலம் மண்ணுக்குத் தள்ளி, உனக்கு மேல் நானிருக்கிறேன், என்னிடம் சரணடைவாயாக” என்று இறைவன் தன்னைத் தானே நிரூபித்துக் கொண்டே இருக்கிறான். மீண்டும் இன்னொரு தலைப்பில் சந்திக்கலாமா…வாழ்க வளமுடன்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam