Visitors have accessed this post 184 times.
துஆவின் சக்தி
சதாவும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரன் ஒருவன் ஒரு தடவை தன் சகாக்கள் சூழ இருந்தான். மது தயாராக இருந்தது. மது அருந்துவதற்கு பழம் வாங்கி வரும்படி நான்கு திர்ஹம்களை தன் அடிமையிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வடிமை கடைவீதிக்கு செல்லும் வழியில் ஹஜ்ரத் மன்சூர் இப்னு அம்மார் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபையை கடந்து செல்ல நேர்ந்தது. பெரியார் ஏழை ஒருவனுக்கு உதவி வழங்குமாறு மக்களிடம் “எவர் இந்த ஏழைக்கு 4 திர்ஹம்களை தர்மம் செய்வாரோ அவருக்கு நான்கு துவாக்களைச் செய்வேன்” என்று கூறிக்
கொண்டிருந்தார்கள். அந்த அடிமை நான்கு திர்ஹம்களை அவ்வேழைக்கு கொடுத்து விட்டான். ஹஜ்ரத் மன்சூர் ரஹ்மத்துல்லாஹி “நீ என்னென்ன துஆக்களை விரும்புகிறாய் சொல்?” என்றார்கள்.
அடிமை எனக்கொரு எஜமானன் இருக்கிறார். அந்த எஜமானனிடம் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும், என்றான். அதற்காக துஆ செய்தார்கள். “இரண்டாவது துவா என்ன விரும்புகிறாய்?” என பெரியார் கேட்க, அடிமை எனக்கு இந்த நான்கு கிரகங்களுக்கு பிரதிபலன் கிடைக்க வேண்டும், என்றான். அவர்கள் அதற்காகவும் துவா செய்து,”மூன்றாவது துவா என்ன வேண்டும்?” என்று கேட்க, அடிமை அல்லாஹுத்தஆலா என்னுடைய எஜமானனுக்கு தவ்பா செய்யும் நல் அறிவு கொடுத்து
அவருடைய பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான்.
மன்சூர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அதற்காகவும் துவா செய்துவிட்டு ,”நான்காவது துவா என்ன?” என்று வினவ, அடிமை அல்லாஹுதஆலா எனக்கும், என் எஜமானனுக்கும், உங்களுக்கும் இன்னும் இச்சபையில் உள்ளோர் அனைவருக்கும் மக்பிரத் செய்ய வேண்டும், என்றான். மன்சூர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அதற்காகவும் துவா செய்தார்கள். இதற்குப் பிறகு அந்த அடிமை வெறும் கையுடன் எஜமானிடம் திரும்பிச் சென்றான். (அதிகபட்சம் எஜமானன் அடிப்பார் அவ்வளவுதானே நடக்கும் அதைவிட வேறு என்ன நடந்துவிடப் போகின்றது) என்று தன்னை
தைரியப்படுத்திக் கொண்டான்.
காத்திருந்த எஜமானன் அவ்வடிமையை பார்த்ததும் இவ்வளவு நேரம் தாமதம் செய்து விட்டாயே! என்று சொல்ல, அடிமை நடந்தவற்றையெல்லாம் விவரித்தான். எஜமானன் பெரியாரின் துஆ பரக்கத்தால் கோபப்பட்டு அடிப்பதற்கு பதிலாக என்னென்ன துஆக்களைச் செய்யச் சொன்னாய்? என்று கேட்டான். அதற்கு அவன் “முதலாவதாக நான் அடிமை தளையில் இருந்து விடுதலை பெற வேண்டும்” என்று கூற, அதற்கு எஜமானன் நான் உனக்கு விடுதலை அளித்து விட்டேன். “இரண்டாவது துஆ என்ன என்று கேட்டான். அடிமை எனக்கு அந்த நான்கு திர்ஹம்களுக்கு
பிரதிபலன் கிடைக்க வேண்டும்” என்று கூற, அதற்கு எஜமானன் என் புறத்திலிருந்து உனக்கு நாலாயிரம் அன்பளிப்பாக அளிக்கின்றேன். “மூன்றாவது துஆ என்ன?” என்று கேட்டதற்கு அடிமை, “அல்லாஹுத்தஆலா உங்களுக்கு மது அருந்துவது போன்ற பாவங்களில் இருந்து தவ்பா செய்யும் நல்லறிவு நல்க வேண்டும் என்றான். இதை கேட்ட எஜமானன் “நான் என்னுடைய சகல பாவமான காரியங்களில் இருந்தும் தவா செய்து கொண்டேன்”. “நான்காவது என்ன?” என்று கேட்டான். அடிமை அல்லாஹ் ஜல்லஷானுஹு என்னுடைய மேலும் அப் பெரியாருடைய இன்னும் அங்கு கூடி இருந்தவர்கள் அனைவருடைய பாவங்களையும் மன்னிக்க வேண்டும் என்பதற்காக துஆ செய்ய
சொன்னேன் என்று கூறினான். அதற்கு இது என்னுடைய சக்திக்கு உட்பட்ட விஷயம் அல்லவே! என்று எஜமானன் கூறிவிட்டான். அன்று இரவு எஜமானன் கனவில் எப்பொழுது நீ உன் சக்திக்கு உட்பட்ட மூன்று செயல்களையும் செய்து விட்டாயோ அப்படி இருக்க என் சக்திக்கு உட்பட்டதை நான் செய்ய முடியாது என்றா எண்ணுகிறாய்? “நான் உன்னுடைய அந்த அடிமையுடைய மன்சூர் உடைய மேலும் அந்த சபையோர் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து விட்டேன்” என்று ஒரு மனிதன் கூறுவதே கேட்டான்.
நீதி கருத்து: துஆவின் சக்தி வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். நன்மையே செய்வோம் நன்மையையே
அடைவோம்.