Visitors have accessed this post 320 times.

நானே வருவேன் – பகுதி 12

Visitors have accessed this post 320 times.

 பாகம் 12

காலை 10 மணி அளவில் செல்வராகவனும் செல்வியும் அருள் வீட்டிற்கு சென்றனர். “வாங்க சம்மந்தி ஒரு வார்த்த சொல்லி இருந்தீங்கன்னா நானே வீட்டுக்கு வந்துருப்பனே” பரபரப்பானார் அருள்.

“சில விஷயங்கள நாங்களே நேர்ல வந்து சொல்றது தான மொற” என்று செல்வராகவன் செல்வியைப் பார்க்க அவர் பேச்சைத் தொடர்ந்தார் “ஜோசியர் கிட்ட போய்ருந்தோ ரெண்டு வாரோ கழிச்சு புதன் கெழம நல்ல நாளுன்னு சொன்னாரு அன்னக்கி நிச்சயத்த வச்சுக்குவோமாணே”.

அருளும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “அன்னக்கே நிச்சயத்த வச்சுக்கலாம்மா அதுல எந்த பிரச்சனையு இல்ல ஆனா அதுக்கு முன்னாடி பொண்ணூ மாப்ளயூ ஒருதடவ நேர்ல பாத்துட்டா நல்லதுன்னு எனக்குத் தோணுது ஏன்னா? நாளைக்கி அவங்க ரெண்டு பேருந் தான சேந்து வாழப் போறாங்க? ” .

“நீங்க சொல்றது எனக்கு புரியுதுன்ணே ஒங்கள விட ஏ மருமக ரொம்ப ஃபாஸ்டா இருக்கா நேத்தே ஏ பையன பாத்து பேசீட்டா” இதைக் கேட்ட அருள் கோபமாக வைஷ்ணவியைப் பார்க்க அவர் அதிர்ச்சியில் வாயில் கை வைத்து அவரைப் பார்த்தாள்.

அருள் கோபக்காரர் என்பதை அவர் முக பாவனையே காட்டிக் கொடுத்தது. இதை உணர்ந்து கொண்ட செல்வி மேலும் பேச்சைத் தொடர்ந்தாள் “அவங்க ரெண்டு பேரூ எதர்ச்சயா ஒரு ரெஸ்டாரண்டுல தா மீட் பண்ணிக்கி இருக்காங்கண்ணே” ,  “ஆக ரெண்டு பேரூ ஒருத்தர ஒருத்தர் நேர்ல பாத்துக்கிட்டாங்க சரிதா, ஏ பொண்ண பாத்துட்டு மாப்ள என்ன சொன்னாரு? பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்னாரா? ” ஆர்வத்துடன் கேட்டார் அருள். “அதனால தான நாங்க நிச்சயத்துக்கு தேதி குறிச்சிட்டு வந்துருக்கோ” மறைமுகமாக பதில் கூறினார் செல்வராகன்.

“நீங்க பொண்ண ரொம்ப ஒழுக்கமா வளத்துருக்கீங்க அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு” இதைக் கேட்டு ரஞ்சிதாவின் பெற்றோர் ஆனந்தத்தில் பூரித்துப் போயினர். “கல்யாணத்துக்கு முன்னாடி எதையு மறைக்காம அவ லவ் பண்ண பையன காமிச்சு எல்லாத்தையு வெளிப்படையா சொல்லிருக்கா” இதை கேட்டு சற்று திடுக்கிட்டார் அருள்.

“இத கேட்டுட்டு நா கூட மொதல்ல இந்த சம்பந்தோ வேண்டான்னு தா நெனச்சே ஆனா ஏ பையந்தா தா லவ் பண்ண பையனையே அவ அப்பாவுக்காக விட்டு கொடுத்திருக்கா அவ நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நம்ம குடும்பத்த நல்லா பாத்துக்குவானு சொல்லி எனக்கு தெளிவா புரிய வச்சா” இதைக் கேட்டு வைஷ்ணவி நிம்மதி அடைந்தாள்.

“நிச்சயதார்த்தத்துக்கு இன்னூ ரெண்டு வாரந்தா இருக்கு எங்களுக்கு ஒரே பையேங்கிறதால நிச்சயதார்தத்த கிராண்டா பண்ணனும்னு ஆசப்பட்றே அதனால இவர்கிட்ட பீனிக்ஸ் மஹால புக் பண்ண சொல்லீருக்கே ஒங்க சைடு யார் யார கூப்டனுமோ எல்லாரையூ மறந்துடாம ஞாபகப் படுத்தி கூப்ட்ருங்க” , இடையில் புகுந்த செல்வராகவன் “அன்னக்கி சாப்பாடு எல்லாத்தையூ நானே அரேஞ்ச் பண்ணிக்கிறே” என்று அழுத்தமாக கூறினார்.

“எல்லாத்தையூ நீங்களே செஞ்சுட்டா அப்றோ எங்க பங்குக்கு நாங்க எதுவு செய்ய வேண்டாமா? ” மரியாதையின் நிமித்தமாக கேட்டார் அருள். “கல்யாணத்தை நீங்க தான பண்ண போறீங்க” உரிமையுடன் பதில் கூறினார் செல்வவராகவன்.

“எங்க ஏ மருமகள ஆளையே காணோ? , வீட்ல இல்லையா? ” ,  “ஆமாங்க சம்பந்தி அவ ஃபிரண்டு கூட கொஞ்சோ வெளிய போய்ருக்கா” , “இருந்தா பாத்துட்டு போலாமேனு நெனச்சே” ,  “அவ வந்ததுக்கப்றோ ஒங்க மாமியார் உன்ன கேட்டாங்கன்னு சொல்லிட்றே” என்று வைஷ்ணவி சிரிக்க “கண்டிப்பா சொல்லுங்க” என்று செல்வியும் சிரித்து விட்டு அங்கிருந்து இருவரும் விடை பெற்று கிளம்பினர்.

சுமதி உடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த வித்யாவை நோக்கி கோபமாக வந்த ஷில்பா “என்ன வித்யா நீ வேல பாக்காம ஒக்காந்து அரட்ட அடிச்சுட்ருக்க? ” , “நா ஏ வேலய முடிச்சிட்டு ரிவ்யூகாக ஒங்களுக்கு நேத்தே அனுப்பி வச்சிட்டே மேடம்” தன்னை எதிர்த்து பேசும் வித்தியாவைக் கண்டு கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டாள் ஷில்பா.

“அத நா நேத்து எம்.டி சார் கிட்ட காமிச்சு ஒப்பீனியன் கேட்க சொல்லிருந்தேல்ல நீ காட்டாம வீட்டுக்கு கெளம்பி போயிட்டியா? ” ,  “நா அவர்கிட்ட காட்டுறதுக்காக நேத்து சாய்ந்ரோ ஏழு மணி வரைக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தே மேடம் ஆனா சார் வரவே இல்ல அப்றோ வாட்ச்மேன் தாத்தா தா சாருக்கு போன் பண்ணாரு அவர் என்ன வீட்டுக்கு போக சொல்லிட்டாரு மேடம்” .

“அப்டியா சரி இப்ப சார் ஃபிரியா தா இருக்காரு இப்ப போய் காமிச்சிட்டு வா” வித்யா தயங்கிக் கொண்டு நிற்க “ஏ நிக்கிற போ போய் காட்டிட்டு வா அத காமிச்சதுக்கப்பறந்தா ஒனக்கு நெறைய ஒர்க் இருக்கூ” .

“இந்த ரிவ்யூ வேலயெல்லா எம்.டி கிட்ட டீம் லீடரான நீங்க தான மேடம் காட்டனூ” , “ஓ.. அப்ப மேடம் டீம் லீடர் நா சொல்ற வேலய நீங்க செய்ய மாட்டீங்க? நீங்க சொல்ற வேலயதா நா கேட்கணூ? அப்படித்தான” ,  “அப்படியயெல்லா இல்ல மேடம்” ,  “பேசாத ஒழுங்கா நா சொன்ன வேலய செய் இல்லன்னா உன்ன  இந்த டிபார்ட்மென்ட்லருந்து வேற டிபார்ட்மென்ட்கு ஹையர் பண்ணிடுவே”

வேறு வழி இன்றி ஷில்பா சொன்ன வேலையை செய்வதற்காக முன்னோட்டத்திற்கு தயார் செய்த காணொளியை விரலி நினைவகத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு நிர்வாக இயக்குனரின் அறையை நோக்கி நடந்தாள். ‘போடி போ என்னயா நீ எதுத்து பேசுற போய் நல்லா அவர்கிட்ட வாங்கி கட்டிட்டு வா’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன்னுடைய இடத்திற்குச் சென்று அமர்ந்தாள் ஷில்பா.

அறை கதவைத் தட்டி உத்தரவு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் வித்யா. குனிந்து ஆவணத்தில் கவனத்தை செலுத்தி இருந்தவனிடம் “குட் மார்னிங் சார்!” என அவன் கவனத்தை கலைத்தாள். “குட் மார்னிங்” என நிமிர்ந்தவன் வித்யாவைக் கண்டதும் “நீ எதுக்கு உள்ள வந்த? ” , ‘எனக்கு மட்டூ என்ன ஓ மூஞ்ச பாக்கனூனு ஆசையா? இதெல்லாதுக்கு அந்த பிசாசுதா காரணோ’ வெளிப்படையாக திட்ட முடியாமல் மனதிற்குள் பொருமிக் கொண்டாள்.

தன்னுடைய கேள்விக்கு பதில் கூறாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த வித்யாவைக் கண்டு கோபமான வீரராகவன் “என்ன பதில் சொல்லாம ஏ மூஞ்சியவே உத்து பார்த்துட்ருக்க நா என்ன அவ்ளோ அழகாவா இருக்கே?” ,  “ஒன்ன அழகுன்னு சொன்னா பாக்குறவங்க என்ன குருடீன்னு தா சொல்லுவாங்க” என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தாள் . “பதில் சொன்னா வாயத் தொறந்து சத்தமா சொல்லணு அதவிட்டுட்டு இப்டி வாய்க்குள்ளே சொன்னா யாருக்கூ கேக்காது”  ,  “கேட்டுட்டாலூ” ,   ‘என்ன சொன்ன? ” . “ஷில்பா மேடம் ஒங்க கிட்ட இந்த லோகோ ப்ரிவ்யூ வீடியோவ ரிவ்யூ பண்ணிட்டு வர சொன்னாங்க” .

“இதெல்லா ஓ வேல இல்லயே? ” ,  “மேடம் தா போக சொன்னாங்க” . அந்த பென்டிரைவ இங்க வச்சுட்டுப் போ நா அப்றோ பாத்துட்டு சொல்றே” . பென்டிரைவை மேஜையின் மேல் வைத்துவிட்டு “இத சொல்றதுக்கு இவ்ளோ ஸீனு மொதல்லே இத சொல்ல வேணடியதான லூசு” என்று அவனை அர்ச்சனை செய்து கொண்டே வந்து அவளுடைய இருக்கையில் அமர்ந்தாள் .

கடுமையான முகத்துடன் அமர்ந்திருக்கும் வித்தியாவைக் கண்ட சுமதி “ஏய்! என்னாச்சு? எம்.டி  ஏதாவது திட்னாரா” , “இல்ல” ,  “அப்றோ ஏ மூஞ்ச இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உர்ருன்னு வச்சுருக்க” ,  “உள்ள ஒரு இஞ்சி தின்ன கொரங்க பாத்துட்டு வந்தே அதா” இதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் சுமதி.

“நல்லா சிரி எல்லா ஏ நேரோ?” ,  “சரி சரி டென்ஷனாகாத கூலா இரு”  தோழிகள் இருவரும் மீண்டும் அரட்டை அடிக்கத் தொடங்கினர். இதை மறைகாணி வாயிலாக தன்னுடைய அறையில் இருந்து வீரராகவன் தனக்கு பக்கவாட்டில் இருந்த கணினித் திரையில் பார்த்தான்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam