Visitors have accessed this post 297 times.

நானே வருவேன் – பகுதி 14

Visitors have accessed this post 297 times.

 பாகம் 14

மாலை நேரம் மகிழுந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வீரராகவன் சாலையில் வித்யா நடந்து செல்வதை கவனித்தான். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவன் சென்ற சாலையில் நிறுத்தற்குறி விளக்கு ஏறிய மகிழுந்தை அணைத்து விட்டு காத்திருந்தான்.

சாலையின் ஓரத்தில் வித்யா ஒரு நாயை கையில் தூக்கிக்கொண்டு வந்தாள். அந்த நாயின் காலில் கட்டு போடப்பட்டு இருந்தது. சாலையை கடப்பதற்காக வந்தவள் அங்கே நின்றிருந்த பார்வையற்றவரின் கையை பிடித்து அவருடன் சேர்ந்து சாலையைக் கடந்தாள். இருவரும் சில வினாடிகள் பேசிவிட்டு வித்யா வலது பக்கம் இருந்த சின்ன சந்தை நோக்கி நடந்தாள்.

அவளைப் பின்தொடர்ந்து வேகமாக ஓடிய ஒரு பள்ளிச்சிறுமி  அவளுடைய கைப்பையை தட்ட திரும்பி சிறுமியைப் பார்த்து சிரித்தவள் அவளுடைய கையை பற்றிக் கொள்ள இருவரும் அந்தப் பாதையில் நடந்தனர்.

‘நாமதா இவளப் பத்தி தப்பா நெனச்சிட்டமோ’ என மனதுக்குள் நினைத்தவனின் கண்களில் செல்வதற்கான பச்சை விளக்கு தென்பட மகிழுந்தை இயக்கி வீட்டை நோக்கிப் பயணித்தான்.

வீட்டில் வேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வெடுக்க அறைக்குள் வந்த செல்வி படுத்திருந்த தன் கணவரிடம் “என்னங்க தூங்கிட்டீங்களா? ” ,  “இல்ல” , “நாளக்கி நாம நிச்சயத்துக்கு டிரஸ் எடுக்க போலாமா? ” ,  “அதுக்கு தா இன்னு ரெண்டு வாரோ இருக்குல்ல” ,  “என்னங்க இப்டி அசால்ட்டா சொல்றீங்க?  ரெண்டு வாரோங்கிறது ரெண்டு நாள் மாதிரி சீக்கிரமா போயிரூ இப்ப இருந்தே ஒவ்வொரு வேலயா ஆரம்பிச்சா தா எல்லா வேலையையு எந்த குறையு இல்லாம முடிக்க முடியு”

“எல்லாத்தையு நா பாத்துக்குறே நீ டென்ஷன் ஆகாம இரு, அதவிட நா ஒ கிட்ட ஒரு முக்கியமான விஷயோ கேக்கனூ” ,  “என்னங்க” ,  “நீ ஏ கிட்டருந்து எதையாவது மறைக்கிறியா?” “நா ஒங்ககிட்டருந்து என்னத்தங்க மறச்சுருக்கே? இத்தன வருஷமா இல்லாம என்னங்க புதுசா இப்ப இந்த கேள்வி கேக்குறீங்க? ” ,  “ஒன்னு இல்ல கேக்கணூனு தோணுச்சு அதா கேட்டே” ,  “நல்லா தோணுதுங்க ஒங்களுக்கு” அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அமைதியாக படுத்து உறங்க முயற்சித்தாள் செல்வி. ஆனால் உறக்கம் வரவில்லை எதையாவது சொல்லாமல் மனதிற்குள் மறைத்தால் உறக்கம் வராதோ என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.

அறையின் சுவரில் படர்ந்திருந்த உருவத்தில் ஒளிபொருந்திய கண்கள் மெல்ல ஒளிர ஆரம்பித்தது. அந்தக் கண்கள் படுத்திருக்கும் செல்வியை ஒரு வெறியுடன் பார்த்து விட்டு மறைந்தது.

அனைவரும் அவரவர் வேலையை செய்வனே செய்ய ஒரு வாரம் உருண்டோடி விட்டது. தினமும் மாலையில் வித்யாவும் பள்ளிச் சிறுமியும் அந்த சந்தின் வழியாக செல்வதை பார்ப்பது வீரராகவனுக்கு வாடிக்கையாகிப் போனது.

இன்று காலை எப்பொழுதும் போல பரபரப்பாக சென்று கொண்டிருக்க வி.எஸ் குரூப்ஸ் அலுவலகத்தின் முன்பு ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் வம்பு செய்து கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து மகிழுந்தில் இருந்து வீரராகவன் இறங்கி வர அவனை அந்த ஆண் பார்த்துக் கொண்டிருந்த இடைவெளியில் அந்தப் பெண் அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டாள்.

அவளைத் தவற விட்ட ஆத்திரத்தில் “ஏய்!” என அந்தப் பெண்ணைப் பார்த்து அவன் கத்த அவள் திரும்பிப் பார்க்காமல் உள்ளே ஓடிவிட்டாள். வீரராகவன் அவன் அருகில் வந்து “யார் சார் நீங்க? எதுக்காக ஏ ஆபீஸ் வாசல்ல நின்னு சவுண்ட் குடுத்துட்டு இருக்கீங்க? ” .

“அது எனக்கு தெரிஞ்ச பொண்ணு தா சார்” ,  “தெரிஞ்ச பொண்ணா இருந்தாலு ஆபீஸ்க்குள்ள போனதுக்கப்றோ வெளிய நின்னு இப்டியெல்லா கத்தி கூப்டுட்டு இருக்கக் கூடாது அவங்க வொர்கிங் டைம் முடிஞ்சு வெளிய வரும் போது பாத்துக்கங்க அப்படி ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா செக்யூரிட்டி கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கி அவங்கள வெளிய கூப்ட்டு பேசுங்க” என்று கூறிவிட்டு அலுவலகத்திற்குள் சென்றான்.

“இவனால நீ இப்ப ஏ கிட்ட இருந்து தப்பிச்சுட்ட ஆனா இன்னக்கி நா ஒன்ன விடமாட்டேன்டி” என்று கோபமாக அவன் முனங்கி விட்டு பாதுகாவலரைத் தேட ஆரம்பித்தான்.

வேலையில் நாட்டம் செலுத்தாது ஒருவிதமான பதட்டத்துடன் அமர்ந்திருக்கும் வித்யாவைக் கண்ட சுமதி “ஏய் என்னாச்சு? ஏ இவ்ளோ டென்ஷனா இருக்க? ” ,  “நா சென்னைக்கு வந்ததுலருந்து என்ன ஒருத்தே ரொம்ப டிஸ்டப் பண்ணிட்டு இருக்கான்னு சொன்னேன்ல” ,  “ஆமா” ,  “அவே இன்னக்கி என்ன ஃபாலோ பண்ணிட்டு நம்ம ஆபீஸ் வாசல் வரைக்கு வந்துட்டா” .

“அய்யய்யோ! அப்றோ நீ என்ன பண்ண? ” ,  “அவே கிட்ட ஏ பின்னாடியே வந்து என்ன டிஸ்டப் பண்ணாதன்னு நா சொல்லிட்டு இருந்தப்போ எம்.டி கார்ல வந்து எறங்குனாரு அத அவே திரும்பி பாத்துட்ருந்த கேப்ல நா ஆபீஸ்க்குள்ள வந்துட்டே” .

“திரும்பி ஆபீஸ் முடிஞ்சு வெளிய போறப்போ அவே நின்னான்னா என்ன பண்ண போற? ” ,  “என்ன பண்றதுன்னு தெரியலடி? ”  பதட்டத்துடன் நெற்றியை தேய்த்தவளிடம் அலுவலக பாதுகாவலர் வந்து “மேடம் ஒங்கள பாக்க வாசுன்னு ஒருத்தர் வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்காரு” இதைக் கேட்டு அவளின் பதட்டம் மேலும் கூடிவிட “நா கொஞ்சோ வேலைல பிஸியா இருக்கே வர முடியாதுன்னு சொல்லிருங்க” ,  “சரிங்க மேடம்” என்று பாதுகாவலர் அந்த இடத்தை விட்டு வெளியே சென்றார். 

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் உள்ளே வந்த பாதுகாவலர் “அவரு ஒங்ககிட்ட கொஞ்சோ அர்ஜெண்டா பேசணும்னு சொல்றாரு மேடம்” ,  “என்னால இப்போதைக்கி வர முடியாதுன்னு சொல்லிருங்க ப்ளீஸ்” அவள் சொன்ன விதத்திலேயே அவனிடம் பேச இவளுக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்ட பாதுகாவலர் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

அனைவரும் அவரவர் வேலைகளை சரியாக செய்து கொண்டிருக்கிறார்களா என்று வீரராகவன் தன்னுடைய கணினித்திரையில் பார்த்தான் அந்நேரம் பாதுகாவலர் வித்யாவிடம் பேசி விட்டு செல்வதை அவன் கவனித்தான்.

மீண்டும் சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்த பாதுகாவலர் “அந்த ஆளு ஒங்கள பாக்காம போக மாட்டேன்னு சொல்லி வாசல்லே நின்னு பிரச்சன பண்ணிட்டு இருக்கா மேடம்” என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்து மேஜையின் மேல் கவிழ்ந்தாள் வித்யா.

இதை கவனித்த வீரராகவன் அலுவலகத்தின் பொதுவான ஒலிபெருக்கியில் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் “செக்யூரிட்டி ஒடனே என்னோட ரூமுக்கு வாங்க” என்று சத்தமாக அழைத்தான். இதைக் கேட்டவுடன் பாதுகாவலர் வேகமாக வீரராகவனுடைய அறைக்கு விரைந்தார்.

சார் என்று வேகமாக கதவைத் திறந்து உள்ளே வந்த பாதுகாவலரைப் பார்த்தவன் “அங்க என்ன பிரச்சன?” ,  “சார் வாசுன்னு ஒருத்தர் வெளிய நின்னுகிட்டு வித்யா மேடமா பாக்காம போக மாட்டேன்னு  பிரச்சன பண்ணிட்டு இருக்காரு சார்” என்று கூறினார்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam