Visitors have accessed this post 343 times.

நானே வருவேன் – பகுதி 3

Visitors have accessed this post 343 times.

வேகமாக உள்ளே வந்த வைஷ்ணவி கழிவறை கதவைத் தட்டினார். எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவே மீண்டும் “ரஞ்சிதா!” என்று அழைத்துக் கொண்டே கதவைத் தட்டினார். “ஒரு நிமிஷோ! கதவு வெளிய பூட்டிருக்கு பாருங்க” என்று வைஷ்ணவியிடம் செல்வி கூற அவளும் அதை பார்த்துவிட்டு “ஐயய்யோ எங்க போனான்னு தெரியலையே இந்த ஆள் நம்மல கொல்ல போறாரு” என்று மனதுக்குள் கலவரப்பட்டுக் கொண்டே அறையின் மையப் பகுதிக்கு வந்து நின்று “ரஞ்சிதா! ரஞ்சிதா!” என்று சத்தமாக அழைத்தாள்.

“என்னம்மா” என்று பால்கனியில் இருந்து அறைக்குள் வந்தாள் ரஞ்சிதா. அவளைப் பார்த்தவுடன் வைஷ்ணவி அப்பாடா என்று ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டாள். சட்டென நிதானத்திற்கு வந்த அவள் பக்கத்தில் நின்ற செல்வியை பார்த்தாள். செல்வி ரஞ்சிதாவை பார்த்துக் கொண்டே அசையாமல் நின்றாள்.

“இதாங்க ஏ பொண்ணு ரஞ்சிதா” என்று சத்தமாக வைஷ்ணவி குரல் கொடுக்க தன் நிலைக்கு வந்த செல்வி “நா ரஞ்சிதா கிட்ட கொஞ்சோ தனியா பேசணூ” என்று சொல்ல “எதுக்கு?” என்று கேட்ட வைஷ்ணவி “நானூ ஒங்க கிட்ட பேசணூ” என்ற ரஞ்சிதாவின் பதிலில் அதிர்ந்து நின்றார். இருவரும் இடையில் நீ எதற்கு என்பது போல் வைஷ்ணவியைப் பார்க்க அவர் அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.

“சொல்லுமா” என்று உரையாடலை ஆரம்பித்தாள் செல்வி “நீங்கதா சொல்லணூ நீங்க தான மொதல்ல பேசணூனு சொன்னீங்க” , “பரவால்லையே ஏ மருமக எனக்கேத்த மாதிரிதா இருக்கா” ,  “என்ன மருமகளா?” என்று திகைத்தாள் ரஞ்சிதா “ஆமாமா நீ தா ஏ வீட்டு மருமக நா முடிவு பண்ணிட்டே”

“ஒருவேள ஒங்க பையே இதுக்கு ஒத்துக்கலன்னா என்ன பண்ணுவீங்க” , “ஏ பையே நா சொல்றத என்னைக்கூ தட்டவே மாட்டா” , “அப்போ நீங்க என்ன மறந்துட சொன்னா மறந்துடுவாரா?” இதைக் கேட்டவுடன் செல்விக்கு சிரிப்பு வந்துவிட்டது. அந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “நாந்தா ஒன்ன புடிச்சிருக்குன்னு சொல்லி மறுமகளாக்கிக்கனூனு  நெனைக்கிறே பின்ன எப்படி நானே ஏ பையேகிட்ட ஒன்ன மறந்துட சொல்லுவே?”

“ஒருவேள அந்த மாதிரி சிச்சுவேஷன் வந்தா?” அவள் கூறி முடிக்கும் முன்னே “அப்படி என்னைக்குமே நடக்காது நா ஒனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுக்குறே ஓகேவா” சிரித்த முகத்துடன் சத்தியம் செய்து கேட்டவளிடம் இல்லையென்று சொல்ல ரஞ்சிதாவுக்கும் மனமில்லை சரி என்று தலையாட்டினாள்.

மகிழ்ச்சியில் அவளுடைய தாடையை செல்லமாக பிடித்தாட்டியவள் வெளிய ஓ மாமனார் ஒன்ன பாக்க வெயிட் பண்ணீட்டு இருக்காரு வா அவர போய் பாக்கலா”  ,  “நீங்க என்ன இவ்ளோ ஃபாஸ்ட்டா இருக்கீங்க நா இன்னூ ஒங்க பையன ஒரு தடவ கூட பாக்கல, ஒங்களுக்கு என்ன புடிச்ச மாதிரி எனக்கூ அவர பிடிக்கணூல்ல”.

“உனக்கூ ஏ பையன கண்டிப்பா புடிக்கூ இந்தா போட்டோ” என்று தன்னுடைய கைப்பையில் இருந்த தன்னுடைய மகனின் புகைப்படத்தை எடுத்து அங்கே இருந்த மேஜையின் மேல் வைத்து விட்டு “சரி வா போலா” எனக்கூறி ரஞ்சிதாவின் கைகளைப் பற்றி செல்வி வரவேற்பறைக்கு அவளை கூட்டி வந்தாள்.

இவர்களைப் பார்த்த செல்வராகவன் “என்னமா விட்டா இன்னைக்கே பொண்ண நம்ம வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்துருவ போல இருக்கே” , “நா நெனச்சத நீங்க கரெக்டா சொல்லீட்டீங்க எனக்கூ அப்படித்தா தோணுது என்ன செய்றது நல்ல நாள் பாத்து தானே எல்லாத்தையூ செய்யணூ” இதைக் கேட்ட அருள் வைஷ்ணவி இருவருக்கும் மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தது.

“அம்மாவுக்கு பொண்ண ரொம்ப புடிச்சி போச்சு போல இருக்கு” என்று உரிமையுடன் கேட்டார் அருள். “ஏ பொண்டாட்டி கையோட ஒங்க பொண்ண கூட்டிட்டு வந்தத பாத்தாலே தெரியுதே” என்று செல்வராகவன் கூற நால்வரும் சிரித்தனர். ஆனால் இந்த சிரிப்பை கொடுத்தவளோ முகத்தில் சிரிப்பின்றி நின்றிருந்தாள்.

இதை கவனித்த வைஷ்ணவி “ஏய் மூஞ்சிய உர்ருன்னு வைக்காதடி கொஞ்சோ சிரிச்ச மாதிரி வை சம்மந்தியம்மா பாக்குறாங்க பாரு” , ‘என்னம்மா பொண்ணு தான பாக்க வந்தாங்க அதுக்குள்ள சம்பந்தி அம்மாங்குற விட்டா  இன்னைக்கே கல்யாணோ பண்ணி நாளைக்கே ஹனிமூனுக்கு அனுப்பீட்வ போல இருக்கே இதுக்கு அந்தம்மாவே பரவால்ல’ என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டு முகத்தில் வெற்று புன்னகையை தவழவிட்டாள் ரஞ்சிதா.

“ஜோசியர் கிட்ட ஒரு நல்ல நாளா பாக்க சொல்றே அன்னைக்கி தட்டு மாத்தி நிச்சியோ பண்ணிக்கலா” என்று அருள் கூற “சரிங்கண்ணே” என்று அதனை ஆமோதித்துக் கொண்டாள் செல்வி. “அப்போ நாங்க கெளம்புறோ என்று செல்வராகவன் எழுந்திரிக்க “ஏதாவது சாப்புட்டு போலா சம்மந்தி” என்று அக்கறையுடன் சொன்னார் அருள்.

“நீங்க சீக்கிரமா ஒரு நல்ல நாளா பாருங்க நாங்க அன்னைக்கி வந்து சாப்புட்றோ” என்று தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் செல்வி பதில் கூற அதற்குமேல் பேச்சை வளர்க்க விரும்பாத செல்வராகவன் “அப்போ நாங்க வரோ” என்று எல்லோரையும் பார்த்து கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகல செல்வியும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கணவனைத் தொடர்ந்து வந்து மகிழுந்தில் ஏறி அமர்ந்தாள்.

மகிழுந்து வீட்டை சென்றடையும் வரை பொறுமைகாத்து வந்தவர் மகிழுந்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றபின் பொங்கி எழுந்தார். “எத்தன பொண்ண பாத்தோ ஆனா ஒனக்கு இந்த பொண்ணதா பிடிச்சிருக்கா? ” ,  ” நமக்கு மருமகளா வர்ற பொண்ணுக்கு தங்கச்சியோ இல்ல அந்த ஸ்தானத்துல வேற கல்யாணமாகாத பொண்ணு ஏதாவது இருந்தா நம்ம பையனோட உயிருக்கு ஆபத்து வரூன்னு ஜோசியர் சொன்னத மறந்துட்டீங்களா?” , “அந்த மாதிரி யாரூ இல்லங்குறனாலதா இந்த பொண்ண செலக்ட் பண்ணீருக்கியா?” .

“ஆமா , அந்த பொண்ண பாக்கும் போது நம்ம பையனோட பிரச்சனக்கி கண்டிப்பா தீர்வு கெடக்குன்னு ஏ ஆழ்மனசுல தோனுது” இந்த பதிலைக் கேட்ட பின்னர் எதுவும் பேசாமல் மாடிப் படிகளில் ஏறத் தொடங்கினார் செல்வராகவன்.  “சாப்டுபோங்க” என்று செல்வி அவசரமாக அவரை அழைத்தார்.

அவரோ “எனக்கு பசிக்கல” என்று பதிலளித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை தாழிட்டு மெத்தை மேல் கிடந்த தன்னுடைய தலையணையை எடுத்து மார்போடு அணைத்தார். மூடியிருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam