Visitors have accessed this post 412 times.
பாகம் 5
வேகமாக ஐஸ்வர்யாவின் வீட்டிற்குள் நுழைந்த ரஞ்சிதாவை பார்த்த ஐஸ்வர்யாவின் பாட்டி பார்வதி. “என்ன கல்யாணப் பொண்ணே ஏ இவ்வளவு வேகோ பாத்து பொறுமையா வா” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
பாட்டியின் புன்னகை நிறைந்த முகத்தை பார்த்தவுடன் ரஞ்சிதாவின் மனநிலையும் மாறியது. “அதுக்குள்ள ஒங்களுக்கு நியூஸ் வந்திருச்சா” ரஞ்சிதாவின் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்த ஐஸ்வர்யாவின் அம்மா திலகவதி “அதா அவங்க வீட்லயே ஒரு ஸ்பைய வச்சுருக்காங்களே யாரு வீட்ல என்ன நடந்தாலூ அத அப்படியே போட்டு கொடுத்துட்டுதா மறு வேல பாப்பா ஓ ஃபிரண்டு” என்று கூறிக் கொண்டே ரஞ்சிதாவிடம் வந்தார்.
“ஏ பேத்தி டிடெக்டிவ் வேல பாக்குறது யாருக்குமே புடிக்க மாட்டேங்குது ஒரு நாள் இல்லனா ஒரு நாள் பார் அவ பெரிய டிடெக்டிவா வருவா” , “இப்படியே சொல்லி சொல்லி நீங்க அவ்வளவு உசுப்பேத்தி விடுறனால தா அவ வர வர கொஞ்சோ கூட சொன்னபடியே கேக்க மாட்டேங்கிறா காலைல விடிஞ்சா போதூ பக்கத்து வீட்டுக்காரங்க எதித்த வீட்டுக்காரங்க ஏ பக்கத்து தெருக்காரவங்க கூட வந்து ஓ பொண்ணு அப்படி செய்றா இப்படி செய்றானு ஒரே கம்ப்ளைன்ட் தா” என்று புலம்ப ஆரம்பித்தாள் திலகவதி.
“ஏ மருமக அவ புராணத்தப் பாட ஆரம்பிச்சுட்டா நீ போய் ஓ ஃபிரண்ட பாரு” என்று பார்வதி பாட்டி கூற ரஞ்சிதா ஐஸ்வர்யாவின் ஆறைக்குச் சென்றாள். கைப்பையில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ரஞ்சிதாவைப் பார்த்தவுடன் “ஹாய் டி” என்றாள். அதற்கு பதிலாக லேசாக புன்னகைத்த ரஞ்சிதா மேலே எதுவும் கூறாமல் அமைதியாக நாற்காலியில் அமர்ந்தாள்.
“என்ன ஆச்சு காலைலயே ரொம்ப டல்லா இருக்க” , “ஒன்னூ இல்ல” , “நீ ஒன்னு இல்லன்னு சொல்ற தோரணையப் பாத்தாலே என்னமோ நிறைய விஷயோ இருக்குற மாதிரி தெரியிதே” , “அது எதுவுமே ஒனக்குத் தெரியாதா?” , “அத சரி பண்றதுக்குத் தான இப்ப போறோ இந்த ஒலகத்துல தீர்க்க முடியாத பிரச்சன எதுவுமே கெடையாது டேக் இட் ஈஸி ஐஸ்வர்யா இருக்க பயமேன் “.
எப்போதும் தான் கூறும் இந்த வாக்கியத்தை கேட்டவுடன் சூழ்நிலை மறந்து வாய்விட்டு சிரிக்கும் தன் தோழி இன்று அமைதியாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவுடன் ரஞ்சிதா இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட ஐஸ்வர்யா “என்னாச்சு அந்தக் கண்ணே ஏதாவது சொன்னானா” , “காலைல வாட்சப் மெசேஜ் அனுப்புனா” , “என்னன்னு” , “கல்யாணத்துக்கு ரெடியாயிட்ட போலன்னு கேட்ருந்தா”
“அதுக்கு நீ ரிப்ளே ஏதாவது அனுப்பினியா” , இல்லை என்பதைப் போல் தலையாட்டினாள் ரஞ்சிதா “நல்லது எதுவா இருந்தாலூ நேராப் பார்த்து பேசிப்போ இன்னைக்கி நா அவனுக்கு கொடுக்குற டோஸ்ல இனி எந்த ஜென்மத்திலயூ அவே ஓ வீட்டு பக்கோ கூட தல வச்சு படுக்க மாட்டா”.
“பிரச்சன எதுவூ வேணான்டி இன்னைக்கு நா அவனுக்கு தெளிவா புரிய வைக்கப் போறே” , “என்ன சொன்னாலூ புரியாம இருக்குற அவனுக்கு இப்ப மட்டூ என்னத்த சொல்லி புரிய வைக்கப் போற” , “நா அதுக்கு ஒரு ஐடியா பண்ணி வச்சிருக்கே” , “நீ ஏதோ பக்காவா பிளான் பண்ணிட்டு வந்துருக்கன்னு மட்டூ எனக்கு நல்லா தெரியிது சரி வா எதா இருந்தாலூ போய் பாத்துக்கலா” அறையை விட்டு வெளியே வந்த தோழிகள் இருவரும் பாட்டி அம்மா இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினர்.
ஊரின் மையப் பகுதியில் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்த உணவகத்தின் வாசலில் இருந்த வாகனம் நிறுத்துமிடத்தில் தங்களுடைய வண்டியை நிறுத்திவிட்டு தோழிகள் இருவரும் உணவகத்திற்குள் நுழைந்து அமர்வதற்கு ஏதேனும் வெற்று இருக்கைகள் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தனர்.
தொலைவில் ஒருவன் இவர்களைப் பார்த்து “ரஞ்சிதா நா இங்க இருக்கே” என்று கையை அசைத்து கூப்பிட்டான். “என்னடி நமக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ணீட்டு இருக்கா” என்று ரஞ்சிதா ஐஸ்வர்யாவிடம் வினாவ “காதலிக்கிறப்போ வெயிட் பண்ண வைக்கிறவனூ கழட்டி விடுறப்போ வந்து வெயிட் பண்றவனுந்தா இந்த ஊர்ல அதிகமா இருக்கானுங்க இவனும் அந்த லிஸ்ட்ல தா இருக்கா போல” என்று ஐஸ்வர்யா ரஞ்சிதாவின் காதருகில் முனுமுனுத்தாள்.
பேசிக்கொண்டே பொடி நடையாக இருவரும் அவனின் அருகில் வந்தனர். “ஒட்காருங்க என்ன ஆர்டர் பண்ணட்டூ” , “நாங்க ஒன்னு ஓ கூட சாப்ட வரல இனிமே இவகிட்ட எந்த பிரச்சனையூ பண்ணாதன்னு சொல்லிட்டு போகலான்தா வந்தோ” என்று கோபமாக ஐஸ்வர்யா அதனை அதட்டினாள்.
“ஏ மேடம் எதுவே பேச மாட்டாங்களோ அவங்க தான என்ன காதலிச்சாங்க” என்று அந்தக் கண்ணன் ரஞ்சிதாவைப் பார்த்து நக்கலாக கேட்டவுடன் “ஆமாண்டா நாந்தா உன்ன காதலிச்சே இப்போ அதுக்கு என்னங்குறே நா ஆரம்பத்துலே சொன்னேன்ல ஏ அப்பாவுக்கு எதிரா நா எதுவுமே செய்ய மாட்டே என்ன காதலிக்கிறேன்னு ஏ பின்னாடி சுத்தாதன்னு சொன்னேன்ல என் அப்பா சம்மதம் இல்லாம உன்ன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னேன்ல அப்போ எல்லாத்துக்கூ பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டீட்டு இப்போ வந்து என்ன கேள்வி கேக்குற” என்று பொரிந்து தள்ளினாள் ரஞ்சிதா.
“இது எல்லாத்தையூ முன்னாடியே நீ ஏகிட்ட சொன்ன ஓகே . ஆனா நீ என்ன உண்மையா காதலிச்சிருந்தா நீ என்ன பண்ணி இருக்கணூ நேரா… அப்பாகிட்ட போயி அப்பா நா கண்ணனதா காதலிக்கிறே அவனத் தவிர நா வேற யாரையூ கல்யாணோ பண்ணிக்க மாட்டே எவ்வளவு வருஷோ ஆனாலூ எனக்காக அவே காத்திருப்பா அவனுக்காக நா காத்துகிட்ருப்பே நீங்க எப்ப சரீனு சொல்றீங்களோ அப்ப நாங்க ரெண்டு பேரூ கல்யாணோ பண்ணிக்கிறோ அப்படின்னு பேசி அவர கன்வின்ஸ் பண்ணி இருக்கணூ ஆனா நீ என்ன பண்ண ஒன்னோட அப்பா ஒரு பணக்கார மாப்பிள்ளய பாத்தவ்னே என்ன கழட்டி விட்டுட்டு அவன கல்யாணோ பண்ணிக்க ஓகேன்னு சொல்லிட்ட அப்போ நீ என்ன உண்மையா காதலிக்கவே இல்ல இத்தன நாளா நீ நடிச்சு என்ன ஏமாத்தீட்டு இருந்திருக்க” .
இதைக் கேட்டவுடன் ரஞ்சிதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது அதை வெளியே வராமல் தடுத்த ரஞ்சிதா “நா ஒன்ன உண்மையாதா காதலிச்சே கண்ணா ஆனா ஏ அப்பாவ மீறி என்னால எதுவுமே செய்ய முடியாது” , “எதுவுமே செய்ய முடியாதுன்னா என்ன அர்த்தோ ஓ அப்பா பாத்த மாப்பிள்ள கிட்ட நீ என்னதா காதலிக்கிறன்னு ஒன்னால சொல்ல முடியாதா?” , “முடியூ” என்று ரஞ்சிதா சொன்னவுடன் கண்ணனுடன் சேர்ந்து ஐஸ்வர்யாவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
“கண்டிப்பா சொல்ல முடியூ இப்பவே இங்கயே சொல்றே பாரு” என்று கண்ணனைப் பார்த்து கூறிவிட்டு வேகமாக வலது பக்கமாக நடந்தாள் அங்கே தன்னுடைய வேலையை முடித்து விட்டு வீரராகவன் அவனுடைய அசிஸ்டன்ட்டுடன் இந்த உணவகத்தை விட்டு வெளியே செல்ல நடந்து வந்து கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஐஸ்வர்யாவும் நிலைமையை உணர்ந்து கொண்டு வேகமாக ரஞ்சிதாவின் பின்னால் ஓடினாள்.
வீரராகவனை நெருங்கிய ரஞ்சிதாவை வேகமாக வந்த ஐஸ்வர்யா தடுத்து நிறுத்தப் பார்த்தாள். அவளை விளக்க முடியாத ரஞ்சிதா சத்தமாக “மிஸ்டர் வீரராகவன்!” என்று அழைத்தாள் பொது இடத்தில் தன் பெயரைக் கூறி சத்தமாக அழைப்பவர் யார்? என்று கண்களில் கோபக்கனல் பறக்க திரும்பிப் பார்த்தான் வீரராகவன். ரஞ்சிதாவிடம் ஓடி வந்த வீரராகவனுடைய உதவியாளர் “நீ யாருமா ?எதுக்குமா சார பேர் சொல்லி கூப்டுட்டு இருக்க?” என்று அவளை அதட்டினார். அங்கே கோபம் குறையாது இருவரையும் நோக்கி வந்த வீரராகவன் “யார் நீங்க? பப்ளிக்ல எதுக்காக என்ன பேர் சொல்லி கூப்புட்றீங்க?” என்று சற்று கடினமான குரலில் கேட்டான்
“நா ஒங்ககிட்ட கொஞ்சோ தனியா பேசணூ” என்று தன்னை தடுத்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவையும் மீறி வீரிடம் கூறினாள் ரஞ்சிதா. “நீ ஏகிட்ட தனியா பேச என்ன இருக்கு யார் நீ?”|என்று சற்று கடுமையைக் கேட்டான் வீர். இதைக் கேட்டு ரஞ்சிதா சற்று அதிர்ந்தாலும் பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ஒங்கம்மா நேத்து என்னதா பொண்ணு பாத்துட்டு வந்தாங்க” என்று கூறினாள் . “ஓ” என்று நிதானத்திற்கு வந்தவன் “சரி வாங்க பேசலா” என்று ஓரத்தில் ஆளற்று இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.
அவன் பின்னாலே சென்ற ரஞ்சிதாவின் கைகளைப் பிடித்த ஐஸ்வர்யா “ஏய் என்ன பண்றன்னு தெரிஞ்சுதா பண்ணீட்டு இருக்கியா” என்று பதட்டத்துடன் கேட்க “எல்லா தெரிஞ்சுதா பண்ணீட்டு இருக்கே என்ன தடுக்காத விடு” என்று ஐஸ்வர்யா சிறைப்பிடித்து வைத்திருந்த தன் கரங்களை விடுவித்துக் கொண்டு வீர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றாள் ரஞ்சிதா.
“ஒக்காருங்க” என்று ரஞ்சிதாவிடம் தனக்கு எதிரில் இருந்த நாற்காலியை கை காட்டினான் வீர். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள் ரஞ்சிதா. “என்னமோ ஏகிட்ட தனியா பேசணும்னு சொன்னீங்க என்னன்னு சொல்லுங்க” , திரும்பி கண்ணனைப் பார்த்த ரஞ்சிதா அவனை சுட்டிக்காட்டி “நா அவனதா ஒரு வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தே ஆனா எனக்கு ஏ லவ்வ விட ஏ அப்பா தா முக்கியோ அதனால அந்தப் பையன நா பிரேக் அப் பண்ணீட்டே இப்போ என்ன கல்யாணோ பண்ணிக்க ஒங்களுக்கு சம்மதமா” என்று கடகடவென கூறி முடித்தாள் ரஞ்சிதா.