Visitors have accessed this post 404 times.

நானே வருவேன் – பகுதி 9

Visitors have accessed this post 404 times.

 பாகம் 9

செல்வராகவன், செல்வி, வீரராகவன் மூவரும் சேர்ந்து ஒன்றாக இரவு உணவை உன்னு கொண்டிருந்தனர். செல்வி செல்வராகவனைப் பார்த்தார். அவர் உணவை நன்றாக ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்தாக வீரராகவனைப் பார்த்தார் சாப்பிடுவதை ஏதோ ஒரு வேலையை செய்வதுபோல் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உன்னு கொண்டிருந்தான்.

‘இவங்க ரெண்டு பேரூ சாப்புட்றதுக்கு மட்டுந்தா வாயத் தொறப்பாங்களே தவிர ஏ கிட்ட ஒரு வார்த்த கூட பேச மாட்டாங்க’ என்று மனதுக்குள் வேதனை பட்டுக்கொண்டார் . “தம்பி உனக்கு வாட்ஸ் அப்ல பொண்ணோட போட்டோவ அனுப்ப சொல்லிருந்தே பாத்தியா? ” .

“நான் அந்த பொண்ண நேர்லே பாத்துடேம்மா” ,  “அந்த பொண்ணதா ஒனக்கு தெரியாதே அப்றோ எப்டி நேர்ல பாத்த” ,  “எனக்கு தா அந்தப் பொண்ண தெரியல ஆனா அந்த பொண்ணுக்கு என்ன நல்லா தெரிஞ்சிருக்கு” ,  “கண்டிப்பா தெரிஞ்சிருக்கூ நாந்தா ஏற்கனவே ஓ போட்டோவ கொடுத்துட்டு வந்தேன்ல”.

“நேர்ல பாத்தல்ல பொண்ணு எப்படி இருந்தா? நல்லா இருந்தாளா? ஒனக்கு புடிச்சிருக்கா?” ,   “நல்லாதா.. இருந்தாங்க” ,  “என்னது இருந்தாங்களா? என்னடா கட்டிக்க போற பொண்ண பக்கத்து வீட்டு பொண்ண சொல்ற மாதிரி சொல்ற உரிமையா இருந்தானு சொல்லுடா” .

“சரிமா நல்லா தா இருந்தா”  ,  “இப்பதா நீ ஏ புள்ள ஓ கிட்ட வந்து ஏதாவது பேசுனாளா” “ம்..”  ,  “என்ன சொன்னா?” “ஒரு பையன பத்தி சொன்னா” ,  “என்ன பையனா! யாருடா அந்த பையே? ” ,   “அந்த பொண்ணோட லவ்வரா” ,  “என்னது லவ்வரா?  இந்த புரோக்கர நம்புனாலே இப்படித்தா ஒழுங்கா விசாரிக்கவே மாட்டாங்க இப்பவே போன் பண்ணி அந்த ஆள நல்லா கிழி கிழினு கிழிக்கிறே” .

“எதுக்குமா” ,  “என்ன எதுக்குமா? ஏற்கனவே ஒரு பையன லவ் பண்ற பொண்ண நம்ம கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து நாளைக்கே அவ விட்டுட்டு ஓடிப்போயிட்டா என்ன பண்றது நம்ம குடும்ப மானோ என்னாகுறது? ” ,  “அப்படியெல்லா எதுவு ஆகாதும்மா” ,  “இந்த பொண்ணு அந்த பையன பிரேக் அப் பண்ணீட்டா” ,  “அதையூ பண்ணீட்டாளா நேர்ல பாக்குறப்போ நல்லா அடக்க ஒடுக்கமா இருந்தா இப்படிபட்ட வேலயெல்லா பண்ணுவான்னு எனக்குத் தெரியாம போச்சே” என புலம்ப ஆரம்பித்தார் செல்வி.

“லவ் பண்றது ஒன்னூ அவ்ளோ பெரிய குத்தமில்லமா” என்று செல்வராகவன் தன் கருத்தை இடையில் திணித்தார். “ஒங்களுக்கு குத்தமில்லங்க நீங்க ஆம்பள எத்தன லவ் பண்ணாலூ ஊர் ஒலகோ ஒங்கள எந்த கேள்வியூ கேக்காது ஆனா நா பொம்பளயாச்சே இந்த பொண்ண கல்யாணம் பண்ணி நாளக்கி ஏதாவது பிரச்சன வந்துச்சின்னா சொந்தக்காரங்க எல்லா சுத்தி நின்னு ஏண்டி ஒனக்கு கண்ணு இல்லையாடி இப்படி ஏற்கனவே ஒருத்தன லவ் பண்ண பொண்ணப் போயி பையனுக்கு கட்டி வச்சிருக்கியயேடீனு என்னதா கேள்வி கேப்பாங்க” என்று தன்னுடைய புலம்பலைத் தொடர்ந்தாள்.

வீரராகவன் இப்போது என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அம்மா இல்லை என்பதை புரிந்து கொண்டு கை கழுவி விட்டு எழுந்து சென்றான். “எதா இருந்தாலு காலைல பாத்துக்கலா இப்ப பேசாம சாப்டு” ,  “நா பொலம்புனா ஒங்களுக்கு என்ன? லவ்வா லவ்வு பொல்லாத லவ்வு கட்ன பொண்டாட்டி மேல வராத லவ்வு எவளோ ஒருத்திய பாத்த உடனே வந்துருதாக்கூ” .

செல்வி கூறிய இந்த வார்த்தைகளை கேட்ட உடன் செல்வராகவன் சாப்பிடாமல் கைகழுவி விட்டு தன் அறைக்குள் சென்று தன்னுடைய தலையணையை கட்டியணைத்துக் கொண்டு மெத்தையில் படுத்தார். இருள் சூழ்ந்த அந்த அறையில் செல்வராகவனின் தலையை கண்ணாடிப் பொன் வளையல்கள் அணிந்த இரண்டு கைகள் தடவிக் கொடுக்கத் தொடங்கின.

இந்த கலவரத்தால் செல்விக்கும் சாப்பிட பிடிக்காமல் போக மீதமான உணவை எடுத்து வீட்டின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த உணவுப் பெட்டியில் வைத்துவிட்டு அறைக்குள் வந்தவள் மெத்தையில் படுத்திருக்கும் தன் கணவனுடைய தலையை ரத்தம் வடியும் இரண்டு கைகள் தடவிக் கொடுப்பதைப் பார்த்து பயத்தில் அலறி மயங்கி விழுந்தாள்.

செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்து பார்த்த வீரராகவன் தரையில் மயங்கிக் கிடக்கும் தன் அன்னையை பார்த்தவுடன் பதறிப் போய் “அப்பா! சீக்கிரமா வாங்கப்பா” என்று கத்தினான்.

தன்னிலை மறந்து கண்ணை மூடி படுத்திருந்த செல்வராகவன் அவருடைய மகனின் அலறல் சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வேகமாக வந்தார். அங்கே மயங்கி நிலையில் இருந்த தன் மனைவியை மகன் உலுக்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்த அவரும் பதறிப்போய் “அம்மாக்கு என்னாச்சுப்பா? ஏ இப்டி மயங்கி கெடக்குறா? ”  ,   “தெரியலப்பா அலறல் சத்தோ கேட்டு நா வெளிய வந்து பாத்தே அம்மா தரைல மயங்கி கெடக்குறாங்க சீக்கிரமா போய் டாக்டருக்கு போன் பண்ணி வர சொல்லுங்கப்பா” .

“இரு கொஞ்சோ பதறாம இரு நா போய் ஃபர்ஸ்ட் தண்ணி எடுத்துட்டு வர்ரே” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றவர் கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தார். அதைத் திறந்து செல்வியின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க மயக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்த செல்வி எதிரில் செல்வராகவனைக் கண்டதும் பயப்படத் தொடங்கினார்.

“என்னாச்சும்மா ஏ இப்டி பயப்பட்றிங்க?” ,  ” உங்க தலய தடவிக்கிட்டு இருந்தது அவளோட கை தான? அது அவளோட கை தான? சொல்லுங்க? அவளோட கை தான? அவ திரும்ப வந்துட்டாளா? ” பயத்தில் கத்தினால் செல்வி.

“என்னாச்சும்மா? ஏம்மா இப்படி பயப்படுறீங்க? யாருமா திரும்பி வந்துட்டா? ” நடப்பது எதுவும் தெரியாமல் கேள்விக்கு மேல் கேள்விகளை அடுக்கினான் வீரராகவன்.

“அது ஒன்னுமில்ல பா ஏதாவது சீரியலப் பாத்து ஒங்கம்மா பொலம்பீட்டு இருப்பா நீ வா நம்ம மொதல்ல உள்ள போலா ” ,  செல்வராகவன் செல்வியை தூக்க “நா வரமாட்டே நா உள்ள வரமாட்டே அந்த ரூமுக்குள்ள அவ இருக்கா! “

“செல்வி அங்க யாருமே இல்ல நீ ஏ இப்படி பயந்துட்டு இருக்க உன்னால பாரு வீரூ ஒன்ன நெனச்சு பயந்துட்டு இருக்கா நாந்தா ஓ கூட இருக்கேன்ல யாரூ ஒன்ன எதுவு பண்ண மாட்டாங்க நீ கொஞ்ச நேரோ தூங்கி ரெஸ்ட் எடுத்தா எல்லா சரியாப் போய்டூ” என்று கைத்தாங்கலாக பயப்படும் தன் மனைவியை அறைக்குள் கூட்டிச் சென்று படுக்க வைத்து மருந்துக் குப்பியில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்தார்.

பயத்துடன் அவரை ஏறிட்டுப் பார்த்த செல்வியை “பயப்படாம படு நிம்மதியா தூங்குனா எல்லா சரியாய்டூ” செல்வராகவனின் கண்கள் செல்விக்கு ஏதோ ஒன்றை உணர்த்த அந்த மாத்திரையை விழுங்கி விட்டு அமைதியாக படுத்துக்கொண்டார். அவருக்கு போர்வையை போர்த்தி விட்டு அறையின் கதவை சாத்திவிட்டு வெளியே வந்தார் செல்வராகவன்.

“என்னப்பா திடீர்னு அம்மா ஏ இப்படி நடந்துக்குறாங்க” ,  ” இருட்டுல எதையோ பாத்து பயந்திருப்பா போலருக்கு” ,  “டாக்டர் கிட்ட கூட்டிட்டு போலாமாப்பா?” ,  “அதெல்லா ஒன்னூ வேணாம் பா நல்லா நிம்மதியா தூங்கி எந்திரிச்சா எல்லாமே சரியாய்டூ இன்னைக்கு ஆபீஸ்லயும் ஒனக்கு ஒரே டென்ஷன் பத்தாததுக்கு இப்போ வீட்லயூ நீ போய் நிம்மதியா தூங்கி எந்திரி காலைல பாக்கலா” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் சில வினாடிகள் அங்கேயே நின்ற வீரராகவன் திரும்பி தன்னுடைய அறைக்குச் சென்று உறங்கினான். சில மணி நேரங்கள் கழித்து வீரராகவன் அறையைத் திறந்து உள்ளே வந்த அவனுடைய அப்பா அவன் தூங்குகிறானா என்பதை உறுதி செய்து கொண்டு மீண்டும் சத்தம் இல்லாமல் அறைக் கதவை மூடிவிட்டு உப்பரிகையில் வந்து நின்று நிலாவற்ற வேற்று வானத்தை ஒரு வெறுமையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

அவருக்குப் பின்னால் ஒரு உருவம் நின்று அவரை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam